-கருவாபுரிச் சிறுவன்
மாணிக்கவாசகரின் திருவாசகத்தையும் வரதுங்கராம பாண்டியரின் திருக்கருவை அந்தாதியையும் ஒப்பிடும் திரு. கருவாபுரிச் சிறுவனின் இலக்கியச்சுவை மிகு கட்டுரை இது....

‘மாதங்களில் நான் மார்கழி’ என்றார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு அதிகாலைப்பொழுது மார்கழி மாதம். இம் மாதத்தில் தான் மாணிக்கவாசகர் பாடியருளிய திருவெம்பாவையும், திருப்பள்ளி எழுச்சியும், ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையும் திருவீதிகளில் அடியார் பெருமக்களால் ஆண்டாண்டு காலமாக பாடப்பெற்று வருகின்றன. சைவக் கோயில்களில் திருவாதிரை திருவிழாவும், வைணவக்கோயில்களில் வைகுண்ட ஏகாதசியும் வெகுச்சிறப்பாக இன்றும் கொண்டாடப்பெற்று வருகின்றன.
இம்மாதத்தில் தான் வாயிலாய நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் குருபூஜையும், தொண்டரடிப் பொடியாழ்வார் திருநட்சத்திரமும் வருகிறது.
தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் அருகிலுள்ள திருக்கருவைப்பதியை அரசாளும் மன்னர் வரதுங்கராம பாண்டியரின் ‘அந்தியோட்டி கிரியா வைபவம்’ தனுர் மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அமாவாசைக்கு முதல் நாள் ஆண்டுதோறும் சைவப்பெருமக்களால் கொண்டாடப்படுகிறது. இம்மண்ணிற்குக் கிடைத்த கொடுப்பினை அது. அப்பெருமானால் அருளிச் செய்யப்பட்ட திருக்கருவை அந்தாதியில் இருந்து ஒரு சில பாடல்களை மட்டும் சிந்தனை செய்து உய்வு பெற வழி தேடிக் கொள்வோமாக.
வான்கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங் கனித் தீஞ்சுவை கலந்துஎன்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!
-வள்ளல் பெருமான் (ஆளுடைய அடிகள் அருள் மாலை: 3)
‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ என்று மெய்யடியார்களின் உரைப்புக்கும் உறுதியாக விளங்கும் சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறையாக மிளிர்வது மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம்.
வள்ளுவர் நுால் அன்பர் மொழிவாசகம் தொல்காப்பியமே
தெள்ளு பரிமேலழகன் செய்தவுரை - தெள்ளிய சீர்த்
தொண்டர் புராணம் தொகு சித்தி ஓராறும்
தண்டமிழ் மேலாறு தரம்
-தனிப்பாடல்
என சிறந்த தமிழ் நூற்களை வரிசைப்படுத்தி இவ்வரிசையில் திருக்குறளுக்கு அடுத்த படியாக திருவாசகத்தைக் கூறும் கொற்றன்குடி உமாபதி சிவாசாரிய சுவாமிகளின் திருவாக்கினை ஈண்டு சிந்தித்தல் அவசியம்.
தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவைத்
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம் என்று உணர்
-நல்வழி: 40
என்று ஒளவைப் பிராட்டியாரும் திருவாசகத்தின் மேன்மையை உணர்த்துகிறார். பதி, பசு, பாசம் ஆகியவற்றின் இயல்புகளை விளக்கும் நுால்கள் வேறு வேறு ஆயினும், அவை யாவும் ஒரே தன்மையை உடையன. அவற்றை உணர்ந்து கொள் என கட்டளையிடும் பாங்கு சிந்தனைக்கு வலுசேர்க்கும்.
போதலர்ந்து தேன் சொரியும் பொன்னம் பலத்திலுறை வாதவூ ரெங்கோமான் வாசகத்தை - ஓதிப் பிறவிப் பிணி நீக்கப் பேரின்ப வெள்ளச் செறிவுக்குள் செல்வர் சிறந்து.
உலகில் தோன்றிய ஆன்மாக்களுக்கு பிறவி நீக்கம் வேண்டுமா… திருவாசகத்தை ஓதினால் போதும் என்கிறது மேற்கண்ட பழம் பாடல்.
எது சிறந்த வாசகம்? பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கிய புனிதன் மொழிந்த வாசகமே வாசகம். அழகிய திருச்சிற்றம்பலமுடையார் தம் கைப்பட எழுத திருவாதவூரர் சொன்ன வாசகமே சிறந்த வாசகம் என்கிறார் கற்பனைக் களஞ்சியம் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.
திருவாசகத்தின் சிறப்புகளை எழுத்துக்களினால் எழுதிக் காட்ட முடியாது. அதனை உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து படிக்கும் போது பேரின்ப உணர்வு உள்ளத்தில் உருவாகும் என்பது அனுபவித்தவர்களின் தலைச்சிறந்த உபதேசமாகும்.
அத்தகைய திருவாசகத்திற்கு நிகரானதாகக் கருதப்படும் சைவத்தமிழ் அறிஞர்களால் கொண்டாடப்பெறும் ‘குட்டித் திருவாசகம்’ பற்றி கோடிட்டுக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.
வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப் பறவை சாதிகளும் வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே! -ஆளுடைய அடிகள் அருள் மாலை: 5
ஒப்பீட்டு அறிமுகம்:
- இவ்வுலகிற்கு திருவாசகம் என்னும் அருள் கொடையை வழங்கியவர் மாணிக்கவாசகர் என்னும் அமைச்சர்.
- குட்டித்திருவாசகம் என்னும் திருக்கொடையை வழங்கியவர் வரதுங்கராம பாண்டியர் என்னும் மன்னர் பிரான்.
- இருவரும் புவியரசுடன் கூடிய இறையருளை முழுமையாகப் பெற்ற கவியரசர்கள் ஆவார்கள்.
- சிவபெருமானே முழுமுதற் தெய்வம் என்று முழங்கிய முதல்வர்கள்.
- சைவ சமயமே சமயம். மற்ற சமயங்கள் எல்லாம் இதனுள் அடக்கம் என்பதை உணர்த்திய அருளாளர்கள்.
- மாணிக்கவாசகர், வரதுங்கராம பாண்டியர் ஆகிய இருவரின் காலமும் இத்தகையது தான் என்று தமிழ் இலக்கியம் கூறினாலும் இன்றுவரை அறிஞர்கள் யாவரும் அறுதியிட்டு கூறியதில்லை.
- இருவரும் சிவபெருமான் வலியத்தடுத்தாண்டார் என்ற செய்தியை தன் படைப்புகளில் பதிவு செய்ய தவறியதே இல்லை.
- வேதங்களில் சாரங்ளையும், ஆகமத்தின் அடிச்சுவடுகளையும், திருமுறைகளின் ஒப்புமைகளையும், சாஸ்திர பிழிவுகளையும், புராண வரலாற்று செய்திகளையும், மானுடர்களுக்கான அறிவுரைகளையும் இவர்களது திருநூல்களில் இலங்குவதை காணலாம்.
- வினைப்பயனின் காரணமாக உயிர்கள் படும் துன்பதை தன் மேல் சுமத்திக் கொண்டு பரம்பொருளை புகழ்ந்து பாடும் பாக்கள் ஏராளம். தாரளம்.
பரம்பொருளின் திருவருள் திறனைப் பெற்றாலும் தன்னை மெய்யடியார்களின் கடைக்கோடி வரிசையில் வைத்து தன்னைத்தானே தரம் தாழ்த்திக் கொண்டு கடையவனாக காட்டும் பாங்கு, அதாவது பணிவான நிலை அவர்கள் நமக்கு சுட்டிக்காட்டும் மேன்மையான வாழ்க்கைக்கல்விக்கான மூலதனம்.
ஈர அன்பிற்கு இலக்கணமாகி முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆளுமைப்பதவி கிடைப்பினும் உனது திருவடியைத்தவிர வேறு ஒன்றும் வேண்டாம் என்கிற விரத மாண்பு ஒழுக்கங்களில் தலை சிறந்தவாக திகழ்கிறது.
நிலையாமைச் செய்திகளை சொல்லும் இவர்கள், நிலையில்லாத காலத்தில் நிலைத்து, நிமலனின் பாதத்தைப் பற்றி, நிலைத்து நிற்கிறார்கள்.
பாண்டியரின் படைப்புகள்:
கரிவலம் வந்த நல்லுார், பால்வண்ண நாதரை ஆத்மார்த்த நாயகனாக கொண்ட வரதுங்கராம பாண்டிய மன்னர் பிரான் அருளிச் செய்த திருநூல்கள் நான்கு.
ஒன்று பிரமோத்திர காண்டம். அது சைவ சமயத்திற்கு பொதுவாகவும் மற்றவருக்கு சிறப்பாகவும் திகழ்கிறது.
திருக்கருவை யந்தாதிகள் என வழங்கப்படும் மற்ற மூன்றும் பால்வண்ண நாதருக்கு சிறப்பானவை; சைவ தமிழ் இலக்கியத்திற்கு பொதுவானவை. மொத்தத்தில் திருக்கருவை வாழ் மக்களுக்கு மாணிக்க கற்கள் பதிக்கப்பட்ட மகுடம்.
பரம்பொருளின் பாத மலரை அலங்கரிக்கும் வாடாத பாமாலைகளான இந்நூற்கள் யாவும் பக்திச்சுவை, சொற்சுவை, கருத்துச்செறிவோடு திகழ்பவை.
சிவபரத்துவம், சைவ மகத்துவம் இவ்விரண்டினையும் நூலின் முதற்செய்யுளில் இருந்து கடைசி செய்யுள் வரையிலும் நிரம்பி இருப்பதைக் காணலாம்.
மாணிக்க வாசக சுவாமிகளின் திருவாசகத்திற்கும் வரதுங்கராம பாண்டிய மன்னர் பிரானின் திருக்கருவை அந்தாதிகளுக்கும் ஒப்புமை உள்ளது என்பதை ஒரு சில பாடல்கள் மூலம் சிந்தனை செய்வதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கம்.
ஆயிரம் திருநாமங்கள்:
நலமுடன் வாழ்வதற்கு நாம் திருக்கோயிலுக்குச் சென்று சன்னிதியில் சுவாமியின் பெயரிலேயோ, நம் பெயரிலேயோ அர்ச்சனை செய்வதுண்டு. அதை ஆத்ம திருப்திக்காக அங்கிருக்கும் குருக்களிடம் சொல்லுவோம். அதை அவர்கள் ஆண்டவரின் சன்னிதிக்குச் சென்று செய்து நமக்கு விபூதி, குங்குமம், திருமண், மஞ்சள் காப்பு போன்ற பிரசாதத்தினை வழங்குவார்கள்.
இதுதான் காலங்காலமாக நடந்துவரும் பக்தர்களுக்குரிய பூஜை முறை.
முன்பெல்லாம் அர்ச்சனை டிக்கெட்டில் ஸ்தானீகர் பங்கு இவ்வளவு என ஒரு குறிப்பு இருக்கும். அப்பங்கு கோயிலுக்கு வழிவழியாக இப்பூஜைப் பணியை ஆசார சீலத்துடன் செய்து வரும் சிவாசாரியர், குருக்கள், பட்டர்களுக்கு கொடுக்கும் முறை அது.
ஆனால் நாத்திக நிர்வாகத்தின் கீழுள்ள மதச்சார்ப்பற்ற அரசு என சொல்லிக்கொள்ளும் அறநிலையத் துறையின் அதிகார அலட்சியப் போக்கினால் கரிவலம் வந்த நல்லுார் பால்வண்ணநாத சுவாமி கோயிலில் பரம்பரை பரம்பரையாகப் பணிசெய்யும் சிவாசாரியர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தில் இருந்து முறையாக தர வேண்டிய பல ஆண்டுக்குரிய பங்கு பணம் பல லட்சம் மதிப்புடைய பங்குத்தொகையை அவர்கள் இன்று வரை தருவதற்கு தயாராக இல்லை. அவர்களின் வாழ்வியல் சிரமங்களைத் தீர்த்து வைக்க யாவரும் முன்வர வில்லை. என்ன காரணம் என்பதை பால்வண்ண நாதரே அறிவார்.
சாதாரண ஒரு கிராமத்து ஒரு அர்ச்சகரின் பல ஆண்டுக்குரிய நிலுவை பங்குப் பணமே பல லட்ச ரூபாய் என்றால் மற்ற கோயில்களின் அர்ச்சகரின் பணம் எவ்வளவு என்பதை தங்களின் கவனத்திற்கே விட்டு விடுகிறோம்.
அப்படிப் பட்ட திட்டம் ஒன்றே கிடையாது என மமதையில் பல ஆண்டுகாலமாக குருக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் அறநிலையத் துறை நிர்வாகம் திருந்தட்டும்! சரி, அது ஒரு புறம் இருக்கட்டும்.
காலம் வரும் போது அது பற்றி இன்னும் விரிவாக சிந்திப்போம்.
சிவபூஜை:
பிரம்மன் முதல் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் உட்பட பிபீலிகள் வரையுள்ள எல்லா உயிர்களும் சிவபூஜை செய்வதற்கு உரிமை உண்டு. அதனால் இவ்வுலகில் எங்கும் வழிபடப்பட்ட சிவலிங்கம் கிடைக்கிறது.
எல்லா பூஜைகளிலும் சிவபூஜை மேன்மையானது என்பதை உணர்ந்த மகாவிஷ்ணு ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு ஆயிரம் முறை சிவநாமத்தினைச் சொல்லி சிவ பூஜை செய்தார். அப்போது அதில் ஒரு பூ குறைந்து விட சற்றும் தாமதிக்காமல் தன் கண்ணையே பூவாகப் பயன்படுத்தி சிவபூஜை செய்தார் என்கிறது சிவமகாபுராணம். அப்பூஜையின் நிகழ்வினை நாம் உய்யும் பொருட்டு மாணிக்கவாசக சுவாமிகள் நினைவூட்டுகிறார்.
பங்கயம் ஆயிரம் பூவிலினோர் பூக்குறையத்
தங்கண் இடந்தரன் சேவடி மேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரம் மாற் கருளியவாறு
எங்கும் பரவி நாம் தோணோக்கம் ஆடாமோ.
-திருத்தோள்நோக்கம்: 10
சிவ சகஸ்ர நாமம், அம்பிகைக்கு லலிதா சகஸ்ர நாமம், மகாவிஷ்ணுவிற்கு விஷ்ணு சகஸ்ர நாமம் என வழிபடும் தெய்வங்களுக்கு ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி தன் பொருட்டும், பிறர் பொருட்டும் பூஜிப்பவர்கள் சிவாசாரிய பெருமக்கள்.
அது இன்று நேற்று அல்ல… மாணிக்கவாசக சுவாமிகள் காலத்தில் இருந்தே ஆயிரம் திருநாமங்களை சொல்லி வழிபடும் முறை இருந்து வருகிறது என்பதை ‘தெள்ளேணம்’ பாடலில் தெளிவு படுத்துகிறார்.
திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.
-திருத்தெள்ளேணம்: 1
பரம்பொருளின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி வழிபட்டால் வற்றாத செல்வங்களை அருளுவார். தீராத நோய்களைத் தீர்த்து வைப்பார். அவரைப் போற்றி வழிபட வேண்டும் அவரே அடியார்களுக்குரிய மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகியவர் என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள்.
அப்பாடலை முழுவதுமாக நாமும் ஒரு தரம் வாயாரப் பாடுவோமா?
பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை
பிரிவிலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
தீராநோய் தீர்த்தருளவல்லான் தன்னை
திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
-திருப்புள்ளிருக்கு வேளூர் திருத்தாண்டகம்: 8
பேராயிரமுடையப் பெம்மான் போற்றி
-போற்றித் திருஅகவல்: 200
சைவத் திருமுறைகளில் தோய்ந்தவர், மாணிக்கவாசகரின் மகத்துவம் தெரிந்தவர். திருநாவுக்கரசரின் திருவருள் திறனை நன்கு அனுபவித்தவர். இருவருமே பல இடங்களில் பரம்பொருளுக்கு ஆயிரம் திருநாமம் உண்டு என்பதை பாடிப் பரவுயுள்ளார்கள். அவ்வழியே வந்த நம் மன்னர் வரதுங்கரும் தன்னுடைய அந்தாதி முதற்பாடலில்….
(மங்கலமொழி வகுத்துக் கூறும் மரபு ஆதலால் ‘சீர்’ என்னும் மங்கலமொழியால் தொடங்கப்பட்டுள்ளது இவ்வந்தாதி)
சீரார் கமலச் சேவடி என்சிந்தை இருத்தி, உனதுதிருப்
பேரா யிரமும் எடுத்தோதிப்‘பெம்மான்! கருவை எம்மான்!’ என்(று)
ஆரா அமுதம் உண்டவர்போல் அனந்தா னந்தத் தகம்நெகிழ
ஆரா இன்பம் அறிவித்தாய்:அறியேன் இதற்கோர் வரலாறே.
-திருக்கருவை பதிற்றுப்பத்து அந்தாதி: 1
திருக்கருவையில் எழுந்தருளியிருக்கும் இறைவா! எம் தலைவா! அழகான உனது சிவந்த திருவடியை என் உள்ளத்தில் பதித்து உனது ஆயிரம் திருநாமங்களையும் எடுத்துக் கூறுவதால் தெவிட்டாத அமுதம் உண்டவர் போல அளவில்லாத ஆனந்தத்திலே திளைக்கிறேன். இவ்வருட்செயலுக்கு ஆனதொரு காரணம் யாதோ, இன்று வரை அடியேன் அறியேன் என்கிறார் வரதுங்கர்.
திராவிட மாபாஷ்ய கர்த்தா ஸ்ரீமத் சிவஞான யோகிகளும் ஓரிடத்தில் ‘ஆயிரம் பெயருடைய நின் பெருமை ஐய! என் மொழிக்கு அடங்குமோ’ என்கிறார்.
திருவாசகத்தின் எதிரொலியாக எழுந்தது ‘குட்டித் திருவாசகம்’ என்னும் திருக்கருவை அந்தாதிப்பாடல்கள்.
திருப்பெருந்துறையில் அருள் பெற்ற திருவாதவூரர் முதன்முதலில் திருவாய் மலர்ந்தது சிவபுராணம். இது 95 அடிகளை கொண்டது. இலக்கணப்படி கலிவெண்பா வகையை சார்ந்தது. வாழ்க, வெல்க, போற்றி என மங்கள வாக்கியங்களை தன்னகத்தே கொண்டது. இதில் ஒரு சூசகத்தையும் பொதித்த வைத்துள்ளார் மாணிக்கவாசகப் பெருமான்.
தேவார மூவர் அருளிய நமசிவாய பதிகத்தினைப் போன்று சிவபுராணமும் அளப்பரிய மகிமை மிக்கது எனப் போற்றுவர் ஹிந்து மதத்தினர்.
சிவபுராணத்திலுள்ள குறிப்பிட்ட வரிகளை சுவடிகளில் எழுதிய பின்னரே ஸ்ரீமத் சிவஞான யோகிகள் சிவஞான போதத்திற்கு விரிவுரை எழுதத் தொடங்கினார் என்பது யோகிகள் நமக்கு சொல்லித்தரும் பால பாடம்.
வடலுார் ராமலிங்க சுவாமிகள், சென்னை- திருவெற்றியூரில் வாழ்ந்த போது திருவீதிகளில் எங்கேனும் திருவாசகத்தின் திருப்பாடல் வரிகளை (சிவபுராணம்) செவிமடுக்க நேர்ந்தால் அப்படியே நின்று விடுவார் என்ற கர்ண பரம்பரைச் செய்தியும் உண்டு.
திருவாசகத்திற்கு மட்டும் அல்லாது சிவபுராணத்திற்கு மட்டும் தனிப்பட்ட முறையில் பலரும், மெய்யுணர்வு பெற்று யாவரும் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் உரை எழுதியுள்ளார்கள்.
கோயில்களில் நடைபெறும் பிரதோஷ காலங்களில் சந்திரசேகர் சுவாமி வீதி வலம் வரும் போது அடியார்களால் பாடப்படும் ஒரு பனுவல் இது.
அச்சிவபுராணத்தினை தோத்திரம், முகவுரை, பிறப்பு, ஞானகுரு, ஐந்தொழில், அருள், துதி, விண்ணப்பம் என எட்டாக வகைப்படுத்தி ஞானநிலையில் உள்ளவர்கள் விளக்கம் சொல்வார்கள். அவ்விண்ணப்பத்தில்,
அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்…
என்ற வரிகள் இடம் பெறும். இதை அப்படியே எடுத்தாண்டு ‘அடியேனை வலிய தடுத்தாண்ட கருவைப் பெருமான் வேண்டிய பதவி தருவான், இன்பங்களை அளிப்பான், கண்பதற்கு அறியான் அப்படி பட்டவனை களா மரத்தின் கீழ் கண்டேன்’ என வியந்து பாடுகிறார் வரதுங்கர்.
குருவாய் வரும் களாஈசனை நாமும் வாழ்நாளில் ஒரு முறையேனும் தரிசிக்கச் செல்வோமா…
ஆண்ட குரவன் ஆவானை,
அல்லற் பிறவி அறுப்பானை,
வேண்டும் பதவி தருவானை,
வெளிவீட் டின்பம் அளிப்பானைத்,
தூண்டல் செய்யா மணிவிளக்கைத்,
தொழில்மூன் றியற்றும் தொல்லோனைக்,
காண்டற்(கு) அரிய பேரொளியைக்
களாவின் நிழற்கீழ்க் கண்டேனே.
-திருக்கருவை பதிற்றுப்பத்து அந்தாதி:7
வேனில் வேள் மலர்க் கணைக்கும்
வெள் நகைச் செவ்வாய்க் கரிய
பாணல் ஆர் கண்ணியர்க்கும்
பதைத்து உருகும் பாழ் நெஞ்சே
ஊன் எலாம் நின்று உருகப்
புகுந்து ஆண்டான் இன்று போய்
வான் உளான் காணாய் நீ
மாளா வாழ்கின்றாயே!
-திருச்சதகம்: 19
இப்பாடலின் முதலிரண்டு அடிகள், மனித மனத்தின் இயல்பைக் கூறுகின்றன. பசி, தாகம் போன்ற இயற்கை உணர்ச்சிகளைப் போலல்லாமல் பாலுணர்ச்சி மிக ஆழமானதாகும். பசி உணவைப் பெற்றவுடன் அந்த நேரத்திற்கு அடங்கிவிடுதல் கண்கூடு. அவ்வாறின்றி பாலுணர்ச்சி எந்த நிலையிலும் அடங்காததாய் மேலும் மேலும் விரிவதாய் இருப்பதை உளவியலாளர் எடுத்துக் கூறுவர்.
வயது முதிர்ந்த நிலையிலும் இது மீதூர்ந்து நிற்குமென்பது விசுவாமித்திரன், யயாதி முதலியோர் கதைகளால் நன்கு அறியப்படும்.
எண்பது வயதைக் கடந்த அப்பர் பெருமான் எதிரே, திருப்புகலூரில், அரம்பை ஊர்வசி முதலானவர்கள் வந்து நடனம் ஆடினபோதும் பெருமானுடைய மனத்தில் எவ்விதச் சலனமும் ஏற்படவில்லை என்கிறது பெரிய புராணம்.
சராசரி மனிதர்களுக்குப் பாழ் நெஞ்சு பதைத்து உருகுவதற்குக் காரணமாய் இருப்பது மகளிர்மேல் கொண்ட காம இச்சையேயாகும். அந்த இச்சை உள்ளே புகுந்தவுடன் நெஞ்சு பதைத்து உருகிற்று என்கிறார்.
இது போன்ற ஆன்மாக்களின் குற்றங்களை தன் மேல் சுமத்திக் கொண்டு பாடுவது அருளாளர்களின் இயல்பு. அதற்கு என்ன வரதுங்க ராம பாண்டியாரும் விதிவிலக்கா என்ன! அந்த மாணிக்கவாசகரின் திருச்சதக அடிச்சுவட்டை எவ்வளவு அழகாகப் பின்பற்றியுள்ளார் பாருங்களேன்.
வேனிற் சிலைவேள் தொடுகணைக்கும்
விளங்கும் மகளிர் உளம்கவற்றும்
பானற் கொடிய விழிவலைக்கும்
பற்றாய் வருந்தி, அனுதினமும்
ஈனத் துயரக் கடல் அழுந்தும்எனையும்
பொருளா அடிமைகொண்ட
ஞானத் துருவே! தமிழ்க்கருவை
நம்பா! பொதுவில் நடித்தோனே!
-திருக்கருவை பதிற்றுப்பத்து அந்தாதி: 4
கொள்ளேன் புரந்தரன் மால் அயன்
வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு
அல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருவருளாலே
இருக்கப்பெறின் இறைவா!
உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது
எங்கள் உத்தமனே!
-திருச்சதகம்: 2
பொருள்: இந்திரன் முதலியோரின் பதங்கள் வேண்டேன். அடியார்களுடன் சேர்ந்திருப்பதாயின் நரகத்திலும் இருப்பேன்.
ஆன்மிகத்தில் முன்னேறுபவர்கள், தாம் செல்லும் வழியில் செல்பவர்களின் நட்பையே விரும்ப வேண்டும் என்பதை மிகப் பழங்காலந்தொட்டே ஹிந்து மதத்தினர் அறிந்திருந்தனர். புத்ததேவன் ‘சங்கம் சரணம் கச்சாமி’ என்று சொல்வதும், ‘நல்லார் இணக்கமும் நின் பூசை நேசமும்’ (திருவேகம்ப மாலை-5) என்று பட்டினத்தார் சொல்வதும், ‘துரும்பனேன் என்னினுங் கைவிடுதல் நீதியோ தொண்டரொடு கூட்டு கண்டாய்’ (சுகவாரி-7) என்ற தாயுமானவர் வாக்கினையும், நின்னையன்றி பிற தெய்வங்களை நினைத்தும் பாரேன் என்ற மாணிக்க வாசகரின் வாக்கினை மீண்டும் நாமெல்லாம் உய்யும் பொருட்டு நினைவு படுத்துகிறார் வரதுங்கர்…
சுடரே! வலியத் தடுத்தாண்டதுணையே!
பிறவித் தொடுகுழிவீழ்
இடரே யகலக் களாநீழல்இருந்த
கோவே! எம்பெருமான்!
உடலே ஓம்பித் திரியும் எனை
உன்னை நினைக்கப் பணித்த
அருட்கடலே! உனையன் றொருதெய்வம்
காண வழுத்தக் கடவேனோ!
-திருக்கருவை பதிற்றுப்பத்து அந்தாதி: 3
இப்பாடலைப் பாடி பால்வண்ண நாதர் பாத கமலங்களைப் பற்றுவோம்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூல தேவரின் திருவாக்கு, ஒன்றே நினைந்திருமின் என்ற திருஞான சம்பந்தரின் பெருவாக்கு போன்றவற்றை நினைத்தவாறே பற்ற வேண்டும். அப்போது தான் நம் செய்த பாதகங்கள் குறையுமன்றோ! என நமக்காக பரிந்து பேசும் வரதுங்க ராம பாண்டிய மன்னரின் திருவடியை சிக்கென பிடித்துக் கொள்வோம்.
ஹர ஹர நம பார்வதி பதியே!
ஹர ஹர மகா தேவா!
சித்ஸ பேச சிவசிதம்பரம்!
பணிவான வேண்டுகோள்:
திருக்கருவை அந்தாதிகளை இயற்றிய ஆசிரியர் வரதுங்கராம பாண்டியரே. சைவத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அப்பெயர் திரிந்து காணப்படுகிறது. அதற்கு ஆக்கப்பூர்வமான, ஆணித்தரமான சான்றாதாரங்களுடன் கூடிய கட்டுரை ‘கருவையந்தாதிகளும் அதன் ஆசிரியர் வரலாற்றுத்திரிபுகளும்’ என்ற தலைப்பில் இத்தளத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் படித்து அறிந்துணர்க.
தமிழ் அறிஞர்கள், இலக்கியவாதிகள், சைவ அன்பர்கள் பலரும் வேண்டுமென்றே ஆசிரியர் திரிபினை பாராமுகமாக இருந்து வருகிறார்கள். எப்படியாயினும் யாவரும் நம்மவர்களே! வாழ்க! அவரது பணி. வளர்க அவரது தொண்டு.
நிறைவாக,
முழுக்க முழுக்க சைவ அருளாளர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி எழுந்த திருக்கருவை யந்தாதிகளை படிப்பவர்கள் உள்ளம் பண்படும். கேட்பவர்கள் உள்ளம் திடம்படும். சிந்தித்து உணர்பவர்கள் உள்ளம் சிவபெருமான் பால் உருகி ஒன்றச் செய்யும்.
மாணிக்க வாசகசுவாமிகள், மணிவாசகரின் திருவடியை தன் இருதயத்தில் இருத்திய வரதுங்கராம பாண்டியரின் துதியையும் சிந்தித்து இக்கட்டுரையை நிறைவு செய்வோமாக.
பெருந்துறையில் சிவபெருமான் அருளுதலும்
பெருங்கருணைப் பெற்றி நோக்கிக்
கரைந்துகரைந் திருகண்ணீர் மழைவாரத்
துரியநிலை கடந்து போந்து,
திருந்து பெருஞ் சிவபோகக் கொழுந்தேறல்
வாய்மடுத்துத் தேக்கிச் செம்மாந்,
திருந்தருளும் பெருங்கீர்த்தி வாதவூர்
அடிகளடி யிணைகள் போற்றி போற்றி.
-சிவஞான யோகிகள் (பாயிரம் – காஞ்சி புராணம்)
கரிவலம் மாநகருக்கு இறைவன் களவில் அமர்
பால்வண்ணக் கடவுள் செம்பொற்
திருவடி சூடிய முடியான் பர ராசர் முடி
தோய்ந்து சிவந்த தாளா
அரிய தமிழ்க் குரை யாணி அதிவீரராமன்
முன்னோன் அவனி காக்கும்
மருவலர் கோளரிஞான வரதுங்கன்
அடியை நிதம் வணங்குவாமே.
-நெற்குன்றநகர் சொ.முத்துவீரப்பக்கவிராயர் \
(பாயிரம் - திருக்கருவை தல புராணம்)
$$$