திருவெண்ணீறும்  தேசியத் தலைவர்களும் 

-கருவாபுரிச் சிறுவன்

உலக வாழ்வின் பரிபூரணத்துவத்தை நினைவுபடுத்துவது திருநீறு. இதனை நெற்றியில் கம்பீரமாக அணிந்து வழிகாட்டிய அன்மைக்கால சான்றோர் பெருமக்கள் சிலர் குறித்து கட்டுரை தீட்டி மகிழ்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை 
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே 

      -திருமூல தேவ நாயனார்  

சைவர்களின்  அடையாளம்

இவ்வுலகளாவிய பார்வையில் ஹிந்து மதத்தின் பெரும் பிரிவுகளில் ஒன்றான சைவ சமயத்தின் கர்த்தா சிவபெருமான். 

சிவபெருமானை திரிகரண சுத்தியோடு வழிபடுபவர்கள் சிவனடியார்கள்.  இவர்கள்  கழுத்தில் அணிந்திருக்கும் திருக்கண்மணியாகிய  ருத்திராக்கமாலை,  நெற்றி நிறைய பூசியிருக்கும் திருநீறு இவற்றை வைத்து  இவர்கள் சைவர்கள் என மற்றவர்கள் குறிப்பால் உணர்ந்து கொள்ளச் செய்யும் புறத்தோற்ற  அடையாளம் இது.  

அகத்தோற்ற அடையாளமாக  உள்ளத்தால் உள்ளபடி உச்சரிக்கும் ஐந்தெழுத்து  மந்திரம் என ஆன்றோர்கள் வழிவழியாக கூறியுள்ளார்கள். 

‘ஒரு அரசன் தன்னாட்டின் முத்திரையை வைத்திருக்கும் சேவகனை  தன்னைச் சார்ந்தவர் என உடனே அடையாளம் கண்டு  கொள்வான். அதைப்போல சிவபெருமானும், சிவனடியார்களும் பார்த்தவுடன் இவன் நம்மைச் சார்ந்தவன் என சட்டென்று அடையாளம் காட்டக்கூடிய  முத்திரைக் குறியீடு ஒன்று உண்டு என்றால் அது திருநீறு’ என  தென்காசி திருத்தலத்தினை  தலைமையிடமாகக் கொண்டு நல்லாட்சி புரிந்த அதிவீர ராம பாண்டியர் அவரது கூர்ம புராணத்தில் குறிப்பிடுகிறார்.

‘நீறில்லா நெற்றி பாழ்’ என்பார் ஒளவைபிராட்டியார்.  துருநீரினை  போக்குவது திருநீறு என்பது முன்னோர் வாக்கு. 

வீட்டை  விட்டு வெளியூருக்கு புதிதாக படிக்கவும், வேலைக்கும் செல்பவர்களுக்கும், திருமணமாகி இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்  பிள்ளைகளுக்கும், பெரியவர்கள் திருநீறு அணிவித்து  வழியனுப்பி வைக்கும் முறை இன்னும் நற்குடும்பங்களில் வழக்கத்தில் உள்ளது.

திருநீறு இட்டு யார் கெட்டார், திருநீறு இடாமல் யார் வாழ்ந்தார் என்ற சொல்லாடல்கள் இன்றும் கிராமப்பகுதி மக்களிடையே பேச்சு வழக்கில் காணப்படுகிறது.  ஆக, திருநீறு இன்று ஹிந்து மக்களின் வாழ்வியலில் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. 

இதற்கு மூலகாரண கார்த்தா  சைவ  சமயத்தின் நாயன்மார்கள் வரிசையில் முதன்மையாக இருக்கும்  திருஞான சம்பந்த சுவாமிகளே ஆவார்கள். 

தெய்வப்பாவை பரப்பிய திருநீறு 

பாண்டிய நாடாகிய மதுரையம்பதியில்   சைவ மறுமலர்ச்சியை மீண்டும் ஏற்படுத்த  வேண்டும் என பாண்டி மாதேவியும், குலச்சிறையாரும் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு விண்ணப்பம் செய்கிறார்கள். ஏற்கனவே, சமணர்களின் அட்டூழியத்தை  அறிந்துணர்ந்த ஆளுடைய அரச பெருமான் தற்போது அங்கு தணித்துச்  செல்லலாமே எனச் சொல்ல, அதைக்கேட்ட ஞானக்கன்று  ஒரு பொது பதிகத்தினை அருளிச் சுரந்து  அதன் வாயிலாக  திருநாவுக்கரசருக்கு பதில் சொல்லுகிறார். 

அந்த பதில்  நமக்கெல்லாம் கிடைத்த பெரும் பேறு. அது தான்  ‘கோளறு பதிகம்’ என்பதை  யாவரும் அறிவர்.

எப்போதுமே பெரியவர்களாயினும், அருளாளர்களாயினும், முனிவர்களாயினும், ஞானிகளாயினும் ஒன்றை சொன்னால் அதன்படியே  நடப்பார்கள். 

இவ்வுலகத்திலுள்ள ஊனர்களுக்கும், ஈனர்களுக்கும் புரியும்படி நடத்தியும் காண்பிப்பார்கள்.  மதுரையம்பதியில் ஆளுடையப்பிள்ளையார் என்ன நிகழ்த்தப் போகிறார் என்பதை திருமறைக்காட்டில் வைத்தே கோளறு பதிகம் பத்தாவது பாடலில் அந்த வெற்றிச் செய்தியை  சொல்லுகிறார். முதலில் அத்தேவாரப் பாடல்…

கொத்தலர் குழலியோடு விசயற்கு
              நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியு(ம்)நாகம் முடிமேல் அணிந்தென் 
             உளமே புகுந்த அதனால்
புத்தரோடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் 
             திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
            அடியார் அவர்க்கு மிகவே!

சமணர்களுடன் வாது செய்ய திருவுள்ளம்

நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்ந்து மக்கள் நலன் கருதி செயல்படுபவரே  நல்ல தலைவர். நல்ல தலைவர்களுக்கு எல்லாம் முன்னோடி நம் திருஞான சம்பந்த சுவாமிகளே ஆவார். 

மூவேந்தர்கள் ஆட்சி செய்த இந்த  புண்ணிய பூமியை தமிழ்நாடு என முதன்முதலில் பெயரிட்டு வெளியுலகிற்கு பிரகடனப்படுத்தியவர் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் ஆவார்கள்.  

இந்த பூவுலகில் சிறிது ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்த  சிலரும், போலி நாத்திகக் கூட்டமும்  நாங்கள் தான் தமிழ்நாடு என்ற பெயர் வைத்தோம் என பல ஆண்டுகளாக பகுமானம் செய்து வருகிறார்கள். அதுவல்ல உண்மை. இதை ஏன் அடியேன் பதிவிடுகிறேன்  என்றால் நாத்திக்க் கொள்கைக்கே நாத்திகர்கள் இன்று வரை உண்மையாக இல்லை. இனிமேலும் அவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம் தான். நிற்க.

மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
         வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
         தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே
         இருந்தமிழ்நாடு உற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப்
        போற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே.

       -மங்கையர்கரசியார் புராணம்: 1

-என சோழ தேசத்தில் இருந்து பாண்டிய நாட்டிற்கு மாட்டுப்பொண்ணாக வந்தவளை போற்றுவார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.  

அவள் தன் குடிப்பெருமை, புகுந்த வீட்டு அருமை,  நாட்டின் நிலைப்பாடு  எல்லாம் தெரிந்தவள். 

மணமேற்குடி குலச்சிறையார் என்ற முன்னவனை  நல்லமைச்சராக  இருத்திக் கொண்டவள். 

அவள்  நின்றசீர் நெடுமாற மன்னனின் மனைவி. தர்மபத்தினி. பதியினைப் போற்றுபவள். 

பாண்டிமாதேவியானவள் தன்மார்பிலும்  திருநீற்றினை அணிந்திருந்தாள் என மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை என்ற தேவாரப்பதிகத்தில்  குறிப்பு கொடுக்கிறார் திருஞானசம்பந்த நாயனார். 

தாயன்புக்கு நிகராகுமா?  

சிவாலயங்களில் கோஷ்டத்திலும், உட்பிரகாரத்திலும் அல்லது அதற்கு அடுத்த பிரகாரத்திலும் வரிசையாக அந்தணர் முதல்  நந்தனார், ஆதி சைவர்கள் முதல் ஆதி திராவிடர்கள், உயர்ந்தவர் முதல் தாழ்ந்தவர், ஏழை முதல் பணக்காரர் வரை பாகுபாடு இல்லாமல் ஒரே வரிசையில் சற்க்குருநாதர்களான நாயன்மார்களை  வரிசைப்படுத்தி இருப்பார்கள். 

அவர்களில் ஒருவர் மட்டும் அமர்ந்த கோலத்தில் இருப்பார். ஏனென்றால் அவர்கள்  சிவபெருமானின் தாயார். அன்னை  என்கிற காரணத்தினால் தான் அவர்கள் மட்டும் அமர்ந்த கோலத்தில்  காட்சி தருகிறார்கள் என பெரியோர்கள் சொல்வதுண்டு. 

ஏன் தெரியுமா… நம் முன்னோர்கள் காரைக்கால் அம்மையை  மட்டும்  அமர்ந்த கோலத்தில் வடித்தார்கள். அதற்கான  விடையை அன்னையே தருகிறாள். 

குழந்தைகளைக் கொஞ்சும் போது  ‘என்னைப் பெத்தவளே! பெத்தவனே!’ என தாய் கொஞ்சுவதுண்டு. அதற்காக தாயை  குழந்தையா பெத்தது? அப்படி இல்லை தானே?  மேலும்,  ஊருக்குப் போகும் போது அன்னை  சொல்லுவாள்.   “பஸ்சில் சென்டர் சீட்டில் உட்கார்ந்து கொள். வேலைக்கு போயிட்டு சீக்கிரமா வீட்டுக்கு வந்துடு. டயத்துக் சாப்பிடு. சனிக்கிழமையான தலைக்கு எண்ணெய் வைத்துக் கொள். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்காதே”  என பிள்ளைகளுக்கு  எவ்வளவு வயதானாலும் அறிவுரை சொல்லிக் கொண்டே  இருப்பாள் பெற்றவள். 

பேரண்டமாகிய இந்த உலகத்தைப் படைத்துக் காக்கும் சிவபெருமான் ஆதியானவன். 

உலகமெல்லாம் தோன்றுவதற்கு முன்னும் இருந்தவன். பின்னும் இருப்பவன்.  எல்லா உயிர்களையும் தோற்றுவிப்பவன். எல்லாவற்றிற்கும் கர்த்தா அவரே. 

அவருக்கு  அன்னையான   காரைக்கால் அம்மையார், தன்பிள்ளை நலனில் வருத்தப்படாமல் இருப்பாரா….  அவர்  நடனமாடும் போது அவரது  அடி, முடி, கை முதலியன ஏழு உலகங்களையும் கடந்தும் செல்கின்றன. இறைவன் அடியும், முடியும், மேலும், கீழும் உழன்று தாக்கி, அரங்கு ஆற்றாது என்று கூறுவதன் வாயிலாக மகனின்  ஆற்றலை வியந்து பார்க்கும் அன்னை   “ஆடுப்பா… கை, காலைக்கொண்டு எங்கயாச்சும் இடிச்சுக்கிடாதப்பா” என சொல்லும் தொனியில்  அப்பாடலின்   பொருள் அமைந்திருக்கும். அதில்  தாயின் பரிவு, தயை , அன்பு, கருணை தென்படும் என தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் தன்னுரை ஒன்றில் குறிப்பிடுவார்கள். 

தாயன்புக்கு நிகர் தாயன்பு தான். சிந்திக்க இதோ அந்தப் பாடல்…

அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள்
முடிபேரில் மாமுகடு பேரும் - கடகம்
மறிந்தாடு கை பேரில் வான்திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றா தரங்கு 

     -அற்புதத் திருவந்தாதி: 77

அந்த திருவாலங்காட்டுப் பதியில் பரம்பொருளின்  திருக்காட்சியினைக்  கண்ட அம்மை உயிர்களாகிய  நமக்காக கேட்ட வரங்கள்:  

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும்போது உன்னடியின் கீழ்இருக்க என்றார்.

     -காரைக்கால் அம்மையார் புராணம்:60

இவ்வரங்களைக்  கேட்ட அன்னை,  தான் செல்வது திருக்கயிலாயம் எனத் தெரிந்ததும் தன் பிள்ளை வசிக்கும்  இடத்தை காலால் மிதிக்க அஞ்சி  தலையால் நடந்து சென்றாள்.  

அந்த காரைக்கால் அம்மையார் தரிசனம் செய்த ஸ்தலம்  எனத் தெரிந்த ஆளுடைய பிள்ளையார் திருவாலங்காட்டுப் பதியினை காலால் மிதிக்க அஞ்சி ஊரின் எல்லையின் இருந்தவாறே  திருப்பதிகம் பாடினார். 

அடியார்களின் அருமை பெருமைகளை உலகறியச் செய்த திருத்தொண்டர் தொகை  உருவாகக் காரணமாக இருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள்  திருஞானசம்பந்தர் அவதாரம் செய்த சீர்காழிப் பதியினை மிதிக்க அஞ்சுகிறார். 

பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி
உள்ளும் நான் மிதியேன் என்று ஊர் எல்லை புறம் வணங்கி
வள்ளலார் வலமாக வரும் பொழுது மங்கை இடம்
கொள்ளும் மால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள

மண்டிய பேர் அன்பினால் வன் தொண்டர் நின்று இறைஞ்சி
தெண் திரை வேலையில் மிதந்த திரு தோணி புர தாரை
கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்றிருந்தபடி என்று
பண் தரும் இன்னிசை பயின்ற திருப்பதிகம் பாடினார்...

     -தடுத்தாட் கொண்ட புராணம்: 112,113

என்ற பாடல்களைப் பாராயணம் செய்பவர்களுக்கு  திருஞானசம்பந்த நாயனார், சுந்தரமூர்த்தி சுவாமிகள், தெய்வச்சேக்கிழார் சுவாமிகள் மற்றும் திருத்தோணியப்பரின்  திருவருள் கிடைக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை. 

இந்த  நுட்பத்தை யெல்லாம் அறிந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பெரிய புராணத்தின் சிறப்பினையும்,  திருஞானசம்பந்த  நாயனாரையும்  போற்றும் விதமாக  ‘பிள்ளை பாதி புராணம் பாதி’ என அடைமொழி கொடுத்து புகழாரம் சூட்டியுள்ளார். 

சிவஞானயோகிகள்  வாக்கில் திருநீறு 

சைவ சமயத்தின் இருகண்களெனப் போற்றப்படுவது   பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சாத்திரங்களுமாகும்.  சைவ சித்தாந்தத்தில் கொள்ளப்படும் பொருள் மூன்று. அவை பதி, பசு, பாசம். 

பதி – கடவுள்,

பசு – உயிர், 

பாசம் – உயிரைப் பிணிக்கும் கட்டு.

பதிப்பொருள் (கடவுள்) ஒன்று, உயிர்கள் எண்ணற்றவை.

பாசம் – ஆணவம், கன்மம், மாயை. இம்மூன்று பொருள்களும் தனித்தனியானவை. பதியாகிய கடவுள் என்றும் உள்ளது போல மற்ற இரண்டும் என்றும் உள்ள பொருள்கள்.

இந்த முப்பொருள்களில் எந்த ஒன்றும் ஒருகாலத்தும் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றவில்லை. எனவே இம்மூன்றையும் அநாதி நித்தப் பொருள் என்பர். 

இந்த மூன்று பொருள்களைப் பற்றிய அடிப்படைக் கொள்கை ‘இல்லது தோன்றாது உள்ளது அழியாது’ என்பதாகும். இதனை சற்காரியவாதம் என்பர். அதாவது மூன்று பொருள்களும்  என்றும் உள்ளவை. அதனால் தோன்றியுள்ளன. அவை என்றும் உள்ளவை ஆதலால் அவை அழிவதுமில்லை. இந்த மூன்று பொருள்களில்தான் ஏனைய பொருள்கள் தோன்றி ஒடுங்குகின்றன. 

இம்மூன்று பொருள்களின் இயல்புகளே இலக்கணமாக வகுக்கப் பெறும். அது பொது இலக்கணம், சிறப்பு இலக்கணம் என்றும் இரண்டு வகை. 

பொது இலக்கணத்தைத் தடத்த இலக்கணம் என்றும், சிறப்பு இலக்கணத்தைச் சொரூப இலக்கணம் என்றும் கூறுவர். 

இவ்விரண்டு இலக்கணங்களை விளக்குகின்ற பொழுது சைவ சித்தாந்தத் தத்துவக் கொள்கைகள் வரையறுக்கப் படுகின்றன. 

இக்கொள்கைகளை கூறும் சைவ சித்தாந்த நுாற்கள் பதினான்கிலும் தலையானது  ‘சிவஞானபோதம்’.  இதனை அருளிச் செய்தவர் மெய்கண்ட தேவ நாயனார். 

இதற்கு அரும்பெரும் உரையை அருளிச் செய்தவர் நம் சிவஞான யோகிகள். அதுவே திராவிட மாபாஷ்யம் என்பன.  

அதில் ஏழாம் திருமுறையை அருளிச் செய்த சுந்தரமூர்த்தி நாயனார் உட்பட திருமுறைகள், புராணங்களில் இருந்து  சித்தாந்தக் கருத்துகளோடு யாவற்றிற்கும் மேற்கோள் காட்டுகிறார்கள்.  

அப்பெருமானாராகிய  சிவஞான யோகிகள் மிகவும் மேம்பட்ட உயர்ந்த நிலையில்  சைவ சமயச் சின்னங்களைப் போற்றியுள்ளார்கள் என்பதை காஞ்சிபுராண பாயிரப்பாடல் படம் பிடித்து காண்பிக்கிறது. 

பேயன்ன புறச்சமயப் பிணக்கு நூல் 
          வழியனைத்தும் பிழையே யன்றி 
வாயன்மை தெளிந்து சைவ சித்தாந்த 
           வழி தேறி அதீத வாழ்வில் 
போயண்மி அஞ்செ ழுத்தும் திருநீறும் 
          கண்டிகையும் பொருளாக் கொண்ட 
நாயன்மார் திருக்கூட்டம் பணிந்திறைஞ்சும் 
          பெரும் பேறு நான் பெற்றேனால் 

      -காஞ்சிபுராணம்: 18

ஸ்ரீமான் பாண்டித்துரை தேவரவர்கள்

திருமுறை, சித்தாந்தம், புராணம், தல வரலாறு, சைவ சிற்றிலக்கியங்கள், சங்க, நீதி நுாற்களில் மீது அதீத காதல் கொண்டவர் பாண்டித்துரை தேவரவர்கள்.   

மதுரையம்பதியில் நான்காம் தமிழ் சங்கம் அமைத்தவர் பாண்டித்துரையவர்கள்.  சைவர்களின் குலதெய்வமான சிவஞான யோகிகள் மீது பேரன்பு கொண்ட பெருந்தகையார். சிவஞான யோகிகள் அருளிய திருநுாற்கள்  அச்சாக்கம் பெறுவதற்கு பேருதவி செய்தவர்கள். 

சிவஞான யோகிகள் மீது பாண்டித்துரை தேவரவர்கள் சில தனிப்பாடல்களும், ஒரு  இரட்டை மணி மாலையும் இயற்றியுள்ளார்கள். சித்திரை ஆயில்யத்தன்று விக்கிரம சிங்க புரத்தில் நடைபெறும் சிவஞான யோகிகளின்  குருபூஜை தரிசனத்திற்கு   செல்வார்கள். 

அப்போது  ‘கும்பிடு நமஸ்காரம்’ என்னும் குட்டிக்கரணம் அடித்து கொண்டே ஊர் எல்லையில் இருந்து சன்னிதி வரை காலால் அம்மண்ணினை மிதிக்காமல் சென்று தரிசனம் செய்வார்கள்  என்றால் அவரின் பக்திக்கு எல்லையேதும் உண்டா… 

அவர்  டென்னிஸ் விளையாடும் பழக்கம் உடையவர். அப்போதும் கூட தன் நெற்றியில் அணிந்திருந்த விபூதி வியர்வை பட்டு அழிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருப்பார்கள். எப்போதும் ஒரு விபூதிப் பையினை தன்னோடு வைத்திருப்பார்கள். நெற்றியில் அணிந்திருக்கும் திருநீறு அழிந்தால் எடுத்து உடனே பூசிக்கொள்வார்கள்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பெருமானே, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களுக்கு கப்பல் வாங்க அன்று 1 லட்ச ரூபாய் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. (இன்றைய மதிப்பில் அது எவ்வளவு மதிப்பு பெறும்  என்பதை யூகிக்க)

ஒரு சைவன் எப்படி இருக்க வேண்டும்,  வாழ வேண்டும் என்பதற்கு சான்று பாண்டித்துரை தேவரவர்கள்.

எங்கள் மகாராஜா வரதுங்கராம பாண்டியர், கரிவலம் வந்த நல்லுாரில்  பார்க்கும் இடங்கள் எல்லாம்  சிவலிங்கமாக தோன்றவே, தன் அரண்மனையை அருகிலுள்ள சோலை நகர் என்னும் சோலைசேரியில் அமைத்துக் கொண்டார். 

அரண்மனையில் இருந்து எங்கள் தலைவன்  பால்வண்ண நாதரை தரிசனம் செய்ய வரும் அவர் குறிப்பிட்ட எல்லையில்  இருந்து படுத்துருண்டு  கொண்டே வருவார். அதனால் அவ்விடத்திற்கு  படுக்கைகுடி என்றும், பின்னாளில் அது திரிந்து  பருவக்குடியாக மாறியது என்றும்  செவிவழிச் செய்தி ஒன்று உண்டு.  

(கரிவலம் வந்த நல்லுாருக்கு  வடக்கே அது 3 கி.மீ. தொலைவில் உள்ளது)

கண்கொண்டு பார்த்த இடம் தோறும் தோன்றும் கருவைப்பிரான் 
விண் கொண்ட திங்கள் குடி கொண்ட வேணியும் வெண்ணகையும்
பண் கொண்ட வேதப்பவளச் செவ்வாயும் பணைப்புயமும்
தண் கொண்ட கொன்றைத் திருமார்பும் தாமரைத் தாள்களுமே!

     -திருக்கருவைக் கலித்துறையந்தாதி: 14

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை:

உரையாசிரியர்கள், தமிழ்மொழிக்குச் செய்துள்ள தொண்டு மலையினும் மாணப் பெரிது. தமிழகம், வேற்று இனத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து, நிலைகுலைந்து, தமிழ் மக்கள் தம் பண்பாட்டை மறந்த

போதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கி, தமிழ்மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. 

வேற்றுமொழியும் நாகரிகமும் தமிழ்மண்ணில் புகுந்து, கால் கொண்டு தமிழ்ப்பண்பை மறக்கச் செய்த போதெல்லாம் உரையாசிரியர்கள், அதனை  நினைவூட்டி, தமிழ் மக்களைத் தடுத்து ஆட்கொண்டனர். தமிழ்மொழியின் காலங் கடந்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாய் இருப்பவர்கள் உரையாசிரியர்களே. இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழியை வரம்பினை கட்டிக் காத்தும், இலக்கியக் கருத்துக்களை விளக்கிக் காலந்தோறும் பண்பாட்டை வளர்த்தும் தமிழினத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும் என்பதை இவ்விடத்தில் நினைவில் கொள்வோம். 

சைவ உலகில் அருண்நந்தி சிவாசாரிய சுவாமிகள் அருளிய சிவஞான சித்தியாருக்கு  மறைஞான தேசிகர், சிவவாக்கிர யோகிகள், ஞானப்பிரகாசர், சிவஞான யோகிகள், நிரம்பழகிய தேசிகர், சுப்ரமணிய தேசிகர்  ஆகியோரின் உரைகள் மிகச்சிறப்புடையவை என பேசப்படும். 

அதைப் போல் சிவஞான போதத்திற்கு சிவஞான யோகிகளுக்குப் பின்னர் வந்தோர்  பலரும் பல தலைப்புகளில் உரை எழுதியுள்ளார்கள். அவர்களுள்  காசிவாசி செந்தில் நாதய்யர், துாத்துக்குடி பொ.முத்தையா பிள்ளை, காஞ்சிபுரம் வச்சிரவேலு முதலியார். அருணை வடிவேலு முதலியார், ஆலால சுந்தரம் பிள்ளை, சபா.சிவப்பிரகாசம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார்  இன்னும் பலரும் உள்ளடங்குவார்கள். இவர்கள் செய்த சிவப்பணிகள் யாவும்  தமிழ் சைவ  உலகிற்கு கிடைத்த பெரும் பொக்கிஷம். அது சைவர்களின் ஞானப்பட்டயம். தமிழர்களுக்கு கிடைத்த வைரக்கிரீடம் என்று சொன்னால் அது மிகையல்ல. 

ஆங்கில அரசு கொடுத்த கடுமையான நெருக்கடிக்கு இடையிலும், சுதந்திரம் ஒன்றையே குறிக்கோள் என தேசப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டாலும் சிவப்பணியில் தொய்வில்லாமல் தன் ஆன்மாவை சுத்தி செய்து கொண்டவர்  வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள். 

‘சித்தாந்தம் படிப்பது இரும்புக்கடலையை வறுப்பதற்கு சமம்’ என்ற ஒரு சொல்லாட்சியைப்  பொய்யாக்கி அக்காலத்தில் தீரமுடன்  சிவஞான போதத்திற்கு புத்துரை செய்து அதை  அரங்கேற்றமும் செய்தார்கள்  என்றால்  வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களின் உறுதிப்பாடு என்னே! என்னே!   

கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் 
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும்.   (கந்தன்).

மனம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியை பெருக்குதடா 
தினம் தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடுடா 
தீர்ந்திடும் அச்சமெல்லாம் தெய்வம் துணை காட்டுமாடா.   (கந்தன்)

-என்ற  டி.எம்.சௌந்தர்ராஜன்  பாடிய தெய்வ இசைப் பாடல் நமக்கு அவரின் தீரத்திற்கான விளக்கத்தை சொல்லாமல் சொல்லுகிறதே. 

சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார்: 

தமிழறிஞர், வழக்கறிஞர், சைவ வித்துவமணி, திருத்தொண்டர் புராணமணி போன்ற பட்டங்களுக்கு சொந்தக்காரர் சிவக்கவிமணி சி.கே.எஸ். 

சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வகையில் அயராது உழைத்த சிவக்கவிமணி பல நூல்களை இயற்றியவர்கள். 

முதன்முதலில் பெரியபுராணம் முழுமைக்குமான உரை கண்டவர் என்னும் பெருமைக்குரியவர் சிவக்கவிமணியே யாவார். இவருடைய படைப்புகளில் சிறந்ததாகப் போற்றப்படுவது பெரிய புராண உரை என்பது அறிஞர்களின் கருத்தாகும். இதனை,

போற்றுந்திருத் தொண்டர் புராணத்தின் பேருரையை
வேற்றுமை இன்றி விரித்துரைத்தான் நீற்றணிசெய்
கோவையுறை சுப்ரமணிக் கோமான் குறுமுனியாத்
தேவைநிகர் அண்ணல் சிறந்து.

-என்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், திருநீற்றினை அணிந்தவர் என அவரை சிறப்பித்துப் பாடியுள்ளார்கள்.

சிவக்கவிமணியவர்கள் எந்நேரமும் தன் நெற்றியில் திருநீற்றுடன் காணப்படும் சிவச்செல்வர்.

கோயம்புத்துார்  நகரசபை உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும்,  சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி ஆணையாளராகவும் பணியாற்றியவர். தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையின் தலைவராக மூன்றாண்டுகள் பணியாற்றினார்.  தன் வரலாற்றை ‘ஒரு பித்தனின் சுயசரிதம்’ என்னும் தலைப்பில் நூலாக்கம் செய்துள்ளார்கள். 

வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள்  சிறையில் இருந்த போது அவருக்காக  ஆங்கில அரசினை எதிர்த்து வாதாடி விடுதலை  பெக் காரணமாய் இருந்தவர்கள் சி.கே.சுப்பிரமணிய முதலியாரவர்கள் ஆவார்கள். 

பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக் கோவையில் நல்லொழுக்கங்களுக்கு காரணம் எட்டு என்பார். 

நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோ
டின்னாத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோ
டொப்புர வாற்ற வறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும்! 

பிறர் செய்த நன்றியை மறவாமை, 
பொறுமை,
இன்சொல் இயம்புதல்,
எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாமல் இருத்தல்,
கல்வி,
உலத்தோடு ஒட்டி வாழுதல்,
இயல்பான ஞானம்,
நல்லோர் நட்பு 

-இவை நல்லொழுக்கங்களுக்கு வித்தாகும். யாராக இருந்தாலும் இந்த எட்டுக்குணங்கள் ஒருவருக்கு இருக்குமேயானால் அவர்கள் இப்பூவுலகில் சிறந்து விளங்குவார்கள் என்பது முன்னோர்கள் கண்ட நியதி. 

நன்றியறிதல் என்னும் பழக்கம் கட்டாயம் எவ்வுயிராயினும் அவசியம், அத்தியாவசியமானதும் கூட. (சமூக வலைத் தளங்களில் விலங்குகளும் பறவைகளும் நன்றியறிதலோடு செயல் படுவதை விடியோவில் தினம் தினம் பார்க்கிறோமே)

ஆனால் மனிதர்களிடம் இக்காலங்களில் நன்றியறிதலுக்கு அர்த்தமில்லாமல் போகிறது என்பதை நுணுகி கவனிப்பவர்கள்  உணரலாம்.  

எல்லா பாவத்திற்கும் கழுவாய் உண்டு. ஆனால் நன்றி மறந்த பாவத்திற்கு கழுவாயே இல்லை என்பார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். 

திருவள்ளவ தேவ நாயனார் அருளிய நன்றியறிதல் அதிகாரத்தில் உள்ள  ஒரு திருக்குறளை  வைத்துக் கொண்டு பல மணிநேரம் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நன்றியுணர்வு  பற்றி பேசலாம் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. 

தன்னோடு சம காலத்தில் பழகி இத்தேசம் விடுதலை  அடைய வேண்டும் என்ற சுதந்திர வேள்வியில் தன்னோடு ஈடுபட்ட  எட்டையபுரம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், வத்தலக்குண்டு சுப்பிரமணிய சிவம், சி.கே.சுப்பிரமணிய முதலியார் ஆகியோரின் பெயர்கள் ஒன்று போல் இருப்பதை உணர்ந்த வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள், தன்னுடைய மகனுக்கு சுப்பிரமணியன் என பெயர் சூட்டினார்கள் என்றால், அவரது  நன்றி உணர்வு குன்றின் மீதிட்ட திருகார்த்திகை தீபத்திற்கு நிகராகும்.

கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன் 
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால்
திருவாய் பொலியச் சிவாயநம வென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதரிப்புலியூர் அரனே.

       -திருநாவுக்கரசு நாயனார் 

நிறைவாக,

அருளாளர்களான  நாயன்மார்களிடம்  இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளம். தாரளமாய் உள்ளன.  அவற்றினைக் கற்றுக் கொண்டு வாழ்வியலில் கடைப்பிடித்த பெரியவர்கள் தன் சந்ததிகளும் வழிவழியாக  சொல்லிக் கொடுத்தார்கள். 

காலச்சூழல் மாறவே அப்பழக்கம் சிதைவுற்றது.  ஆனால் தேசத்தின் மீதும், தெய்வீகத்தின் மீதும் பற்று கொண்டவர்கள், நாயன்மார்கள் அடிச்சுவட்டில் வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட குடும்பப் பின்னணியில் இருந்து இத் தேசம் காக்கவும், தெய்விகத்தைப் போற்றவும் திருநீறு அணிந்துவந்து தலைவர்கள் பலருள்…

  • நான்காம் தமிழ்சங்கம் நிறுவிய பாண்டித்துரை தேவரவர்கள்
  • கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள்
  • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரவர்கள்
  • சி.கே.சுப்பிரமணிய முதலியாரவர்கள் 

-போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்

இவர்கள் இத்தேசத்திற்குச் செய்த தொண்டு அளப்பரியது. அவற்றில் சிலவற்றை இக்கட்டுரையின் வாயிலாக சிந்தித்ததில்  மகிழ்ச்சி.

பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த தேசியத் தலைவர்களின் தேசத்தொண்டினை நாடியவர்கள் அறிவார்கள். இந்த நாடும் அறியும். ஆனால் அவர்களின் ஆன்மிக தொண்டினை கடைக்கோடியில் இருக்கும் அன்பர்கள்  வரை கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பது தற்காலத்தின் கட்டாயம். 

சைவ ஆதினத் தலைவர்கள், தம்பிரான் சுவாமிகள், சைவ சபைகள், கழகங்கள், தன்னலமற்ற தன்னார்வக்குழுக்கள், ஆன்மநேய தனிநபர்கள் இன்னும் கூடுதலாக முன்னெடுக்க  வேண்டும் என்கிற விண்ணப்பத்தினை இந்நேரத்தில் அனைவரின் திருவடியில் பணிந்து சமர்ப்பிக்கிறோம்.  

அன்பர்கள் பலருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்  உணரவும் செய்வார்கள். இதுவே நம் அவர்களுக்கு  செய்யும் உண்மையான கடப்பாடு.  

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்பிரானைப் போல, வள்ளல் பாண்டித்துரை தேவரவர்களைப் போல, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையைப் போல, சி.கே.சுப்பிரமணிய முதலியாரைப் போல இனி எவரும்  பிறக்கப் போவதில்லை. உண்மை தானே!   ஆனால் ஒன்றை மட்டும் முயற்சித்தால் செய்யலாம். 

அது அவர்கள் நமக்கு காட்டிச் சென்ற மார்க்கத்தினை  மனதினால், வாக்கினால், உடலினால்  பின்பற்றலாம். அதனால் அவர்கள் செய்த தொண்டின் மகத்துவ சுவாசக்காற்றினை சுதந்திரமாக பின்பற்ற நினைப்பவர்கள் சுவாசிக்கலாம் என்று கூறி, சிவபக்தர்களாகிய அவர்கள் நெற்றி நிறைய திருநீறு பூசி தனிப்பட்ட வாழ்வியலில் தனித்துவமாகவும், பொது வாழ்வில் மகத்துவமாகவும் வாழ்ந்து காட்டினார்கள். அவர்கள் அடியொற்றி வாழ்வதற்கு முயற்சிக்கலாமே.  

வாழும் காலத்தில் நெற்றி நிறைய திருவெண்ணீறு அணிவோம். அதை தொடர்ந்து இயமநியமத்துடன் செய்யும் போது  அது எட்டுத் திக்கிலும் புகழ் பெறச் செய்யும்  என்று கூறி பாண்டித்துரை தேவரவர்கள் சிவஞானயோகிகள் மீது பாடிய  துதியையும்,  தமிழறிஞர் மு.வரதராசன் அவர்கள்  வ.உ.சிதம்பரனார்  மீது இயற்றிய பாடலையும் பாராயணம் செய்து  இச்சிந்தனையை நிறைவு செய்வோமாக.

வள்ளலே வருக! நல்வாழ்வு தருக... 

கலைதேர் நமச்சி வாயகுரு கருணைக்கடலிற் றிளைத்தாடிக்
     கலகப் பாசத் தொடரறுத்துக் காமத்தறியை அறவீழ்த்தி
அலையும் சமயத் தருக்களைக்கீ ழடிவேரொடு மகழ்ந்தெறிந்திட்(டு)
     அருளின் படாத்தை முகமேற்கொண்(டு) ஆதிவேதாகமங்களெனும்
தொலையா மணிக ளிருமருங்குந் தொனிக்கச் சைவ மதம்பொழிந்து
     துங்கமோடு முலகமுற்றுஞ் சுற்றும் வெற்றி வாரணமே
மலையா தருளு முனிவர் சிகா மணியே வருக வருகவே!
     வளமார்துறைசைச் சிவஞான வள்ளால் வருக வருகவே!

-பாண்டித்துரை தேவர்

***

இணையில்லா தியாகியய்யா!

ஒழுக்கத்தின் உரவோய் நாட்டின்
         உரிமைப்போர் நடந்த காலை
எழுச்சியின் தலைமை ஏற்றே
        இணையிலாத் தியாகம் செய்தோய்
மொழிப் பற்றும் நாட்டுப் பற்றும்
         முற்றிலும் ஒன்றி நிற்க
விழிப் பொறி இரண்டும் போல
          விழுப்பமாய்க் கொண்டாய் அய்யா!

பாரதி பெற்ற நண்ப
          பழியிலா வீர வாழ்க்கை
பாரெல்லாம் ஏத்தும் வண்ணம்
           பண்புடன் நடத்தி நின்றோய்
வேருடன் நைந்து வாடி
           வெள்ளையர் ஆட்சி வீழ
நேரிலாப் போர்கள் செய் தாய்
           நித்தமும் நின் பேர் வாழி!

-மு.வரதராசன்

வந்தே மாதரம்! வாழ்க பாரதம்! வாழ்க மணித்திருநாடு!

$$$

Leave a comment