-கோவை பி.பிரகாஷ், கே.அண்ணாமலை, காலச்சக்கரம் நரசிம்மா
ஜம்மு காஷ்மீரைக் காக்க உயிர் நீத்த, அசோக் சக்ரா விருது பெற்ற தமிழகத்தைச் சார்ந்த ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ‘அமரன்’ திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படம் குறித்த மூன்று பார்வைகள் இங்கே…

1. அற்புதமான அமர காவியம்…
-கோவை பிரகாஷ்
(பகுதி- 1)
கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் எடுத்த படமாயிற்றே என ஒரு தயக்கத்துடன் சென்றிருந்தேன். மேலும் ஐயங்காரான முகுந்த் வரதராஜனின் பிராமண அடையாளத்தை மறைத்து எடுத்துள்ளார்கள் என்பது மட்டும் முன்கூட்டியே பலர் சொல்லித் தெரிந்திருந்தது.
மற்றபடி ஒரு சில திராவிட மாடல் கருத்துக்களை நுணுக்கமாகத் திணித்து படத்தை எடுத்திருப்பார்கள் என்கிற ஒரு எதிர்மறை எதிர்பார்ப்போடு சென்றிருந்தேன். ஆனால் திரைப்படம் ஒரு அமரகாவியமாக இருக்கும் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
ஒரு அமர் ஜவானின் சுயசரிதம் எப்படி பயணிக்க வேண்டுமோ அப்படியே, எந்த செயற்கைத்தனமோ, சினிமாத்தனமோ இல்லாமல் பயணிக்கிறது திரைக்கதை.
காஷ்மீருக்கு கதாநாயகியை வரவழைத்து டூயட் பாட வைத்திருப்பார்களோ, மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ரொமான்டிக் பாடல்களோடு கதாபாத்திரத்தை சிதைத்திருப்பார்களோ என்றெல்லாம் ஒரு தயக்கத்தோடு தான் பார்க்கத் தொடங்கினேன்.
படம் தொடங்கி முதல் அரை மணி நேரத்திலேயே இது ஒரு வேறு லெவல் படம் என்பது புரியத் தொடங்கியது. அத்தனை அழகான நகர்வுகள். ராணுவத்திற்குள் நடக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன நிகழ்வுகளையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்திய ராணுவத்திற்குள் இருக்கும் குழு மனப்பான்மை, உறவுகள், பாச நேசங்கள் எல்லாம் அற்புதம்.
வீட்டில் தன் மகளுடன் இருக்கும், ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்று பாடிய அந்த உண்மையான நிகழ்வை, பின்னால் ராணுவ கவச வண்டியில் இயக்குநர் கொண்டு வந்திருப்பது அசத்தியது.
படத்தில் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அருமை. அதிலும் அந்த நடிப்பு ராட்சஸி சாய் பல்லவியின் யதார்த்தமான முகபாவங்களும், உடல் மொழியும் அத்தனை நுணுக்கமாகவும், அசத்தலாகவும் இருந்தன. உண்மையில் படத்தின் பெயரை ‘மிஸ்ஸர்ஸ் மேஜர்’ என்று வைத்திருந்தாலும் தகும். மேஜரின் தாயாக நடித்துள்ளவரும் சிறப்பாக நடித்துள்ளார்.
சிவ கார்த்திகேயனைப் பொருத்தவரை ஓகே என்று சொல்லலாம். குருதிப்புனல் காலத்து கமலஹாசன் செய்ய வேண்டிய பாத்திரமிது.
படத்தின் நிஜ ஹீரோ, அதன் திரைக்கதை. ஒரு ராணுவ வீரனின் வாழ்வு எத்தனை சவாலானது என பொதுமக்களுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்கிறது இந்தப் படம்.
இருவரும் காதலிக்கும் போது தங்கள் பெற்றோர்களின் சம்மதத்தை மெல்ல மெல்லப் பெறுவதும், விடுப்பு எடுத்து எல்லையில் இருந்து வந்து மொட்டை மாடியில் மேஜர் ரகசியமாக வந்து தன் குழந்தையைக் கொஞ்சுவதும், சாய்பல்லவி தன் கணவர் வந்திருப்பதைக் கண்டு ஆனந்த அதிர்ச்சியில் லயிப்பதும், சென்னை புறநகரில் ஒரு அடுக்குமாடி வீட்டுக்கடன் பெற அத்தனை சவாலையும் ஒரு ராணுவ மேஜர் எதிர்கொள்வதும் என… ஒவ்வொரு காட்சிகளும் ‘குணா’ பட பாணியில் ‘கவிதை… கவிதை’.
படம் முழுவதும் காணக் காண கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. இவ்வளவு எமோஷனலாக இருக்கக் கூடாது என்று மனதைத் தேற்றிக் கொண்டாலும் இயலவில்லை. படம் பார்த்து முடிந்த நிலையில், எங்கேனும் ஒரு ராணுவ வீரனைப் பார்த்தால் சாஷ்டாங்கமாக விழுந்து சேவிக்க வேண்டும் எனத் தோன்றியது.
கதாநாயகனை உள்ளது உள்ளபடி ஒரு பிராமணனாகக் காட்டா விட்டால் என்ன, ஒரு இந்திய ராணுவ மேஜரின் வாழ்க்கையை, இந்திய ராணுவத்தின் பெருமையை அத்தனை அற்புதமாகக் காட்டியுள்ளதே படம், அது போதாதா என்றே தோன்றியது. அந்த வகையில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அவர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்.
இந்தப் படத்தைப் பார்த்ததும், தலைவிரித்து ஆடிய அத்தனை தீவிரவாதத்தையும் இன்று அடக்கி, ஒடுக்கி காஷ்மீரில் அமைதியைக் கொண்டு வந்துள்ள மாமனிதன் மோடி அவர்களுக்கு இரு கரம் கூப்பி நன்றி கூறாமல் இருக்க முடியவில்லை.
இந்த படத்தை மட்டும் பார்க்காமல் விட்டு விடாதீர்கள்.
மீண்டும் சொல்கிறேன். அமரன் ஒரு அமரகாவியம்.
***
(பகுதி-2)
குறைகள் இல்லாமல் இல்லை…
அமரன் திரைப்படம் குறித்து நேற்று அடியேனின் விமர்சனத்தை பதிவு செய்திருந்தேன். இந்தப் படத்தில் முகுந்த் வரதராஜனின் பிராமண அடையாளத்தை மிஷநரி கமலஹாசனும், படத்தை வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் பிக்சர்ஸும் – தாங்கள் ஏற்படுத்தியுள்ள பிராமண சமூகத்திற்கு எதிரான நரேட்டிவ் பாழாகி விடக் கூடாது என்ப்தற்காக – மூடி மறைத்திருந்தாலும், இந்தப் படத்தை நிச்சயம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டியது என குறிப்பிட்டிருந்தேன்.
படத்தில் வேறு சில தவறுகளும் உள்ளன.
படத்தில் முகுந்த் வரதராஜன் கேரக்டர் தன் காதலியிடம் “என் குடும்பத்தில் யாருமே ராணுவப் பின்னணி கொண்டவர்கள் இல்லை. ஸ்கூல்ல நடந்த ராணுவ அணிவகுப்பைப் பார்த்து தான் அதுமேல ஒரு ஆர்வம் எனக்கு உருவாச்சு” எனக் குறிப்பிடுவார். ஆனால் உண்மையில் முகுந்தின் தாத்தா ராகவாச்சாரி ராணுவத்தில் சேவை ஆற்றியவர், அவரின் இரு தாய்மாமன்களும் ராணுவத்தில் சேவையாற்றியவர்கள். அதுதான் அவருக்கு ராணுவத்தில் சேவையாற்றத் தூண்டுகோலாக இருந்தது. இந்த உண்மைகளைக் குறிப்பிட்டால் பிராமண சமூகத்தில் மிகப் பலர் ராணுவ அதிகாரிகளாக உள்ளார்களே? என பொதுமக்கள் உணர்ந்து, தாங்கள் கோழைகள், சுயநலவாதிகள் என உருவாக்கி வைத்துள்ள நரேட்டிவ் சிதைந்துவிடுமே என மிஷநரி கமலஹாசனும், அவரின் திமுக கூட்டாளி உதயநிதியும் நினைத்திருக்கலாம்.
அதை விட கொடுமை,மேஜர் முகுந்த் வரதராஜன் மேலதிகாரிகளுக்கு கீழ்ப்படியாமல் தன்னிச்சையாக அதுவும் ‘எமோஷனலாக’ முடிவெடுத்து எதையும் செய்பவர் என்பது போலவும், அதனால் சக ராணுவ வீரர்கள் உயிரிழப்பது போலவும் காட்சிகள் உள்ளன. ஒரு மேஜர் அந்தஸ்தில் உள்ள ஒரு இந்திய ராணுவ அதிகாரி, நிச்சயமாக எமோஷனலாக, சினிமாத்தனமாக, முடிவுகளை எடுக்க மாட்டார். ஆய்ந்து, ஆராய்ந்து, நிதர்சனத்தோடு செயல்படுபவராகவே இருப்திருப்பார். இது அமரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் character assassination என்று கூட குறிப்பிடுவேன்.
இதற்கெல்லாம் தாம்பரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரியான வரதராஜன் அவர்கள் வாய் திறக்க வேண்டும். Biopic என்று கூறிவிட்டு தங்கள் நரேட்டிவை திணிப்பதை அவர் அனுமதிக்கக் கூடாது. இல்லையென்றால் இது அமரர் முகுந்த் வரதராஜனுக்கு செய்யும் துரோகமாகும்.
மற்றபடி மீண்டும் சொல்கிறேன், இந்தப் படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு அமர காவியமே.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.
$$$

2. A good tribute to all men in Uniform
-K.Annaamalai IPS
Happened to watch the movie ‘Amaran’. This is a very important one in many aspects
The bravery, courage and the integrity that our men in uniform display.
The vivid portrayal of the cost a family pays when our nation’s best sacrifices themselves to protect the rest of us.
Why some will always be very special than the rest of us – because they wear their uniform with pride and willingly go into harm’s way
The emotional toil and pain – the family of an army man will carry but with pride.
Major. Mukund Varadharajan’s life is an inspiring story for the ages. His ultimate sacrifice for our nation in 2014 made all of us to feel that we had lost something within us, as I distinctly remember those emotional moments as I was in my Khaki then.
Fabulous directing by Rajkumar Periyasamy, extraordinary portrayal by Siva Kartikeyan, who has turned a huge page in his acting career, a character unlike any by Sai Pallavi, gripping music, a camera that was both sensitive and gritty. Special thanks to Kamal Haasan avl for producing this movie.
I feel this is a tribute to all men in Uniform – serving and the ones we had lost.
Long live our Indian Armed Forces, and we say it with pride—you are THE BEST.
Thank you, team Amaran, for this extraordinary movie.
$$$

3. எனது பெருமை மிகு மாணவன்
–காலச்சக்கரம் நரசிம்மா
(பகுதி – 1)
“எதற்காக பத்திரிகைத் துறையை தேர்ந்தெடுத்தீர்கள்?”
2002 மெட்ராஸ் கிருத்துவ கல்லூரியில், நான் வகுப்புகள் நடத்திய ஜர்னலிசம், மாஸ் கம்யூனிகேஷன் மாணவர்களைக் கேட்டேன். பலரும் பலவித பதில்களைக் கூறினர்.
பெரும்பாலான மாணவர்கள், “மேல்படிப்பு என்ன படிப்பது என்று தெரியவில்லை. முடிவு எடுக்கும் வரையில், ஏதாவது படிக்கலாமே என்று இந்த வகுப்பில் சேர்ந்தோம்”- என்றனர்.
19 வயது முகுந்த் வரதராஜன் கூறிய பதில் வித்தியாசமாக இருந்தது.
“ராணுவத்தில் சேர வேண்டும் என்பது எனது கனவு. ஒரு வேளை அந்தக் கனவு நிறைவேறாமல், என்னால் நாட்டை வெளியிலிருந்து காக்க முடியாவிட்டாலும், ஒரு பத்திரிகையாளனாக உள்ளே இருந்து மக்களை காக்கலாமே”- என்றார்.
அப்போது நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. எனது மாணவன் அமரகாவியத்தின் நாயகனாக திகழ்ந்து, பாரதத்தின் தங்கத் தாரகையாக ஜொலிக்கப் போகிறான் என்று.
நல்ல வேளையாக அவர் பத்திரிகையாளனாகத் திகழவில்லை. அப்படித் திகழ்ந்திருந்தால், அவரால் தியாகம் செய்திருக்க முடியாது. நான் உட்பட, எந்த பத்திரிகையாளன் நாட்டுக்காக தியாகம் செய்திருக்கிறான்?
இன்று இரவு, கர்வத்துடனும், பெருமையுடனும், நெஞ்சம் நிமிர்த்தி, பீடு நடைபோட்டு, எனது மாணவன் முகுந்தனின் வீர சரிதம் காண திரையரங்கம் செல்கிறேன்.
***
(பகுதி 2)
வரம் தந்த முகுந்தன்…
அன்றொருநாள் தசாவதார கமல்,
‘முகுந்தா முகுந்தா வரம் தா’
என்று பாடி ஆடியதற்கு, முகுந்த்
தனது தியாக காதையைத் தந்தானே.
ஊடகம் பேசிய என் மாணாக்கனின்
வாழ்க்கை சரிதத்தைத் தான்,
பூடகம் பேசும் தமிழ்த் திரையில்
தியாகத்தின் வடிவாய் நான் கண்டேனே.
‘அமுக்கினார், பிதுக்கினார்’ என
சாதியப் புலம்பல் இல்லாமல்,
தேசப் பணியை முன்னிறுத்தி,
அருமையான ஓர் அமர காவியம்.
வன்அரசியலும், சமூக அவலங்களும்
கோலிவுட் திரைக்கு ஆகாரமாகி விட,
இனி படங்கள் காண மாட்டேன் என்ற
என்னை பரவசப்படுத்திய அமரன் படம்.
மிடுக்கான என் முகுந்தன் முகத்தை,
சிவனின் வடிவில் கண்டேனே!
செவிலி ரோமியோவாகத் திகழ்ந்த ரெமோ,
மேஜர் முகுந்தாக திறனுடன் உயர்ந்தாரே.
அந்தோ முகுந்த் பயின்ற கிருத்துவ கல்லூரியில்,
இந்துவுடன் காதல் மட்டும் பேசவில்லை.
இந்தியாவுடன் நேசம் கூட பேசினார்.
ஆசான் நான் உள்ளேன், அதற்கு ஆதாரம்.
காதல் அமர காவியத்தின் கடைக்கால்!
பெரிதுபடுத்த வேண்டாம் அச்செயலை.
கதையின் நாயகி பல்லவி என்பதால்,
காதலுக்கு மரியாதை செய்திருக்கிறார்கள்.
அய்யப்ப பக்தனாக கதை காட்ட,
நான் அய்யங்கார் என்பது தெரிந்து,
யானும் அஃதே! ஆயினும் இறைஞ்சுவது
பாரத மாதாவை – என்றான்
மார்பில் நூல் ஆடவில்லை எனும்
சர்ச்சை தேவையில்லை.
புரட்சி பாரதி உட்பட போர்க்கள
பார்ப்பனருக்கு, நூல் ஒரு LoC.
கேமராவும் பின்னணியும் நல்விதம்.
தாய் கீதாவாக நடித்த பெண் அற்புதம்.
நைனா என்னும் செல்லச் சொல்,
தந்தை- தனயன் நட்பைக் காட்டியது.
நாயகன் -நாயகியைத் தவிர
தெரிந்த ஒரு முகம் இல்லை படத்தில்!
அதுவே கதைக்கு வலு சேர்த்தது.
யாருமே சோடை எங்கும் போகவில்லை.
முகுந்த் எனது மாணவன் என்பதால்
நீர் கண்களை திரை மூடியது.
ஆம்புஷ் காட்சியில் மரணித்த சிப்பாய்,
பெயர் நரசிம்மா! பரவசம் கொண்டேன்.
மொத்தத்தில் முகுந்தாயணம் அற்புதம்.
மய்யத்தார் எல்லைக்குச் சென்றது நன்றே.
எல்லை மீறாமல், மெய்
வரலாற்றை திரிக்காமல் செப்பியதும் நன்றே.
இறுதியில் முகுந்தனின் நிஜ வாழ்வை,
சிறுகதையாகக் கூறிய விதம் அழகு.
அமர காவிய நாயகன் காதையில்,
ருசிகர சம்பவங்கள் அதிகம் உண்டு.
கூமுட்டை அரசியலில், நடிகர்கள் மோத,
சீரழியும் இளைஞருக்கு ஒரு தக்க ப(பா)டம்.
தமிழ் பேசும் குடும்பத்து முகுந்தன்.
தமிழரின் சுயமரியாதையை மீட்டுள்ளான்.
தமிழ்நாடு சினிமா நாடு என்றவர்கள்
இனி முகுந்தன் நாடு என்று பேசுவார்கள்.
இனி அவன் போல தேசபணி செய்ய
ஆர்வம் ஊற்றாகக் கிளம்பும், காளையருக்கு!
அசோக சக்கரத்தான் அற்புத வாழ்வில்
இந்த காலச்சக்கரத்துக்கும் இடமுண்டு.
போதனை செய்ய வந்த எனக்கு,
பாடங்கள் பல கற்பித்தவன்.
பீஷ்மனாக கணைமஞ்சத்தில்
குற்றுயிராய்க் கிடப்பதை விட
வியூகத்தை உடைத்த அபிமன்யுவாய்
வாராமல் செல்வதும் அமரத்துவமே!
‘நான் அளித்த பிறப்புக்கு, உன் சாதனை
என்ன?’ – என இறைவன் கேட்டால்,
‘நீ வீர சொர்க்கம் அளித்த முகுந்தனுக்கு
ஆசானாகத் திகழ்ந்து மட்டுமே’ என்பேன்.
சபாஷ்! அமரன் படக் குழுவினரே!
நேர்த்தியான ஒரு படம்
விருது உண்டு நிச்சயம்!
உமது படம் கோலிவுட்டின் பொக்கிஷம்!
- நன்றி: திரு. காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் முகநூல் பதிவு.
$$$

4. மேஜர் முகுந்த் வரதராஜன் யார்?
–ஆசிரியர் குழு
உலகம் முழுவதும் பீடுநடையிடும் ‘அமரன்’ திரைப்படம், தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. ஜம்மு – காஷ்மீரில் நடந்த ஒரு தாக்குதலில் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தமிழ்நாட்டில் இருந்து அசோக் சக்ரா விருது பெற்ற நான்கு பேரில் ஒருவர்.
சென்னை, தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் வீர மரணஃம் அடைந்தார் இந்த மோதலில் இவருடன் மேலும் ஒரு ராணுவ வீரரும் வீர மரணம் அடைந்தார்; மூன்று தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
சென்னை ஆவடிக்கு அருகில் உள்ள பருத்திப்பட்டுதான் முகுந்த் வரதராஜனின் பூர்வீக ஊர். இங்கிருந்த ஆர்.வரதராஜன் – கீதா தம்பதிக்கு 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி பிறந்தார் முகுந்த். இதற்குப் பிறகு, இவர்களது குடும்பம் தாம்பரத்திற்கு இடம்பெயர்ந்தது. வரதராஜன் ஒரு பொதுத் துறை வங்கியில் பணியாற்றிவந்தார்.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயாவில் இளங்கலை வணிகவியல் படிப்பை முடித்த முகுந்த், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இதழியலில் பட்டயப் படிப்பையும் முடித்தார். இதற்குப் பிறகு சென்னை ஆஃபீசர்ஸ் டிரெய்னிங் அகாதெமியில் இணைந்து, 2006 ஆம் ஆண்டில் லெப்டினென்டாக (Lieutenant) 22வது ராஜ்புத் ரெஜிமென்டில் இணைந்தார்.
மத்தியப் பிரதேசத்தின் மோ -வில் உள்ள காலாட்படை பள்ளியிலு,ம் ஐக்கிய நாடுகள் சபையின் படையில் இந்தியாவின் சார்பாக இணைந்து லெபனானிலும் இவர் பணியாற்றியிருக்கிறார். 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் ராஷ்ட்ரீய ரைஃபிள்சில் இணைக்கப்பட்டு, காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பணியாற்றிவந்தார் முகுந்த்.
2009 ஆம் ஆண்டில் இந்து ரெபக்கா வர்கீஸ் என்பவரை காதல் மணம் செய்தார் முகுந்த். இவர் மரணமடையும்போது, இவர்களது மகள் அஸ்ரேயாவுக்கு 3 வயதே ஆகியிருந்தது.
மேஜர் முகுந்த் வரதராஜன் இடம்பெற்றிருந்த இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைஃபிள்சின் (Rashtriya Rifles) 44வது பிரிவு, 2014 ஆம் ஆண்டில் ஜம்மு – காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. 2012ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தப் பிரிவில் இணைந்திருந்த முகுந்த் வரதராஜன் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், எதிர் ஊடுருவல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார்.
மேஜர் முகுந்த் வரதராஜன் கொல்லப்பட்ட தாக்குதலில் என்ன நடந்தது என்பதை விரிவாகவே விவரிக்கிறது, வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கான இணையதளமான ஹானர் பாயிண்ட். அதில் கூறியிருப்பது:
“ஏப்ரல் 25ஆம் தேதி சோபியான் மாவட்டத்தில் இருந்த காஸிபத்ரி கிராமத்தில் ஜெய்ஷ் – ஏ – முகமது இயக்கத்தின் கமாண்டரான அல்டாப் வானி உள்ளிட்ட சில பயங்கரவாதிகள் இருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைத்தன. முகுந்த் வரதராஜன் தலைமையிலான அணி அவர்களை வளைத்துப் பிடித்து தாக்க முடிவுசெய்தது. தகவல் கிடைத்த 30 நிமிடத்திற்குள், சம்பந்தப்பட்ட இடத்தை முகுந்த் தலைமையிலான அணியினர் வந்தடைந்தனர். 24 மணி நேரத்திற்கு முன்பாக, இந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தேர்தல் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டிருந்ததோடு, ஐந்து பேர் படுகாயமடைந்திருந்தனர்…
பயங்கரவாதிகள் இருந்த வீட்டை முகுந்த் வரதராஜன் தலைமையிலான அணி முற்றுகையிட்டது. விரைவிலேயே இருதரப்பிலும் மோதல் வெடித்தது. அது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இந்த நடவடிக்கையின் போது முகுந்த் வரதராஜனுக்கு 2 இடங்களில் குண்டு காயங்கள் ஏற்பட்டிருந்தன. விரைவிலேயே அவர் ஸ்ரீ நகரில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே ஒரு ராணுவ மருத்துவ அதிகாரியின் கரங்களில் உயிரிழந்தார் மேஜர் முகுந்த்…
-என்று கூறுகிறது அந்த இணையதளம்…
மேஜர் முகுந்த் வரதராஜன் மரணமடைந்தபோது அவருக்கு வயது வெறும் 31தான். ஏப்ரல் 12ஆம் தேதி முகுந்த்தின் பிறந்த நாளுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துச் சொன்ன நிலையில், இரு வாரங்களுக்குள் இப்படி ஒரு துயரச் செய்தியை அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்திருக்கவில்லை.
முகுந்த் வரதராஜனின் மரணம் குறித்த செய்தி சென்னைக்கு வந்து சேர்ந்தவுடன் அவரது வீடு இருந்த கிழக்கு தாம்பரம் பகுதியே சோகத்தில் மூழ்கியது. அவரது வீட்டின் முன் பொதுமக்கள், உறவினர்கள், ஊடகத்தினர் குவிய ஆரம்பித்தனர். இத்தனை சோகத்தையும் தாண்டி, தனக்கு ஆறுதல் சொல்ல வந்தவர்களை மிகுந்த அமைதியுடன் எதிர்கொண்டார் முகுந்த்தின் தந்தையான வரதராஜன்.
அவரது உடல் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, ஆஃபீசர்ஸ் டிரெய்னிங் அகாதெமியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதற்குப் பிறகு மறுநாள் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்திய அரசு இவருக்கு அமைதிக் காலத்தில் வழங்கப்படும் உயரிய ராணுவ விருதான ‘அசோக் சக்ரா’ விருதை 2014இல் அறிவித்தது. தமிழ்நாட்டில் இருந்து இந்த விருதைப் பெற்ற நான்காவது நபர் முகுந்த் வரதராஜன்.
மேஜர் முகுந்துடன் இதே மோதலில் கொல்லப்பட்ட விக்ரம் சிங்கிற்கு, மூன்றாவது உயரிய ராணுவ விருதான சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.
$$$
4 thoughts on “அமரன்: தமிழில் ஒரு திரைக்காவியம்”