-கருவாபுரிச் சிறுவன்
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்! தீபாவளி என்றாலே பட்டாசும் மத்தாப்பும் அளிக்கும் குதூகலம் தான் நினைவுக்கு வரும். இதனை மந்தமாக்க அண்மைக்காலமாக சில முயற்சிகள் நடைபெற்று வருவதை அறிவோம். இந்நிலையில், பட்டாசு வெடிக்கும் பாரம்பரியத்தின் சிறப்பு குறித்து பழமையான ஓவிய ஆதாரத்துடன் இக்கட்டுரையை வழங்கி இருக்கிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன்….

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை,
போகமும் திருவும் புணர்ப்பானை,
பின்னை என் பிழையைப் பொறுப்பானை,
பிழை எலாம் தவிரப் பணிப்பானை,
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா
எம்மானை, எளி வந்த பிரானை,
அன்னம் வைகும் வயல்பழனத்து அணி
ஆரூரானை, மறக்கலும் ஆமே?
-சுந்தர மூர்த்தி சுவாமிகள்
பல ஆண்டுகளுக்கு முன்பு மாற்று சமயத்தவரிடம் போரிட்டு விஜய நகர நாயக்க மன்னர்கள் ஹிந்துக் கோயில்களை மீட்டார்கள். அவர்களில் ஒருவரான மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் மீண்டும் ஹிந்து மதம் மறுமலர்ச்சி அடைந்தது. கோயில்களில் ஆகமம் முறைப்படி உற்ஸவங்களும், பெருந்திருவிழாக்களும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டன. அதனோடு தீபாவளிப் பண்டிகையும் பிரபலமானது.
விஜய நகர நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மீண்டும் கலை, பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம், ஓவியம், இலக்கியங்கள் யாவும் புத்தொளி பெற்றன.
ஹிந்து மதச்சிறப்புகளை இன்றளவும் பழமை மாறாமல் சொல்லும் ஆயிரக்கணக்கான கோயில்களில் சட்டென்று நினைவுக்கு வரும் சிதம்பரம் நடராஜர் கோயில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், கோயம்புத்துார் பேரூர் பட்டீஸ்வரர் கோயில், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயில், திண்டுக்கல் அபிராமியம்பிகை கோயில், மதுரை மீனாட்சியம்பிகை கோயில், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்,சங்கரன் கோவில் கோமதியம்பிகை கோயில், சுசீந்தரம் தாணுமாலய சுவாமி கோயில் போன்றவை யாவும் முதன்மையானவை.
தமிழகத்திலுள்ள பாரம்பரிய பழமையான கோயில்களில் மேல்தள உட்புறங்கள், மதிற்சுவர்கள், தூண்கள், மண்டபங்களில் அக்கோயிலின் புராண வரலாறு, கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களைப் பற்றியும் மக்கள் தெரிந்து கொள்ள கண்கவர் ஓவியங்களாக வரைந்து வர்ணம் தீட்டி வைத்துள்ளார்கள்.
இவை யாவும் வரலாற்றுக் கலைப் பொக்கிஷங்கள்; பாதுகாக்கப்பட வேண்டியவை.
ஹிந்து மக்களின் திருவிழாக்கள்
ஹிந்து மக்கள் தங்களது மகிழ்ச்சியை மற்றவர்களுடன் வெளிப்படுத்தும் திருநாட்கள் ஆண்டு முழுவதும் கொண்டாட்டம் நிறைந்தவை. அவற்றுள் குறிப்பாக, சித்திரை தமிழ்ப்புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், ஆவணி விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி நவராத்திரி, திருக்கார்த்திகை தீபம்,மார்கழி வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் – இந்த வரிசையில் இடம் பெறுவது ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் வரும் தீபாவளி திருநாள்.
இன்றைய நாளில் ஏழை- பணக்காரர், உயர்வு- தாழ்வு என எந்த வேறுபாடும் இல்லாமல் குடும்பத்துடன் மகிழ்ச்சியோடு இந்த தேசம் முழுவதும் கொண்டாடப்படும் ஒளி பொருந்திய திருநாள் தீபாவளி.
இன்றைய நாளில்…
- ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரமாக வாழ்த்துச் சொல்லுதல்,
- கங்கா ஸ்நானம் செய்தல்,
- புத்தாடை அணிதல்,
- வீட்டிலும் திருக்கோயிலிலும் வழிபாடு செய்தல்,
- முன்னோர்களை நினைத்தல்,
- விதவிதமான பட்சணங்கள் செய்து பகிர்ந்து சாப்பிடுதல்,
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் வயது வேறுபாடின்றி பட்டாசு வெடித்து மகிழுதல்,
- கந்த சஷ்டி பெருந்திருவிழாவிற்கு தயாராதல்,
- சைவ சித்தாந்தக் குரவர்களில் ஒருவரான மெய்கண்ட தேவருக்கு விழா எடுத்துத் போற்றுதல்,
இவை யாவும் காலங்காலமாக தொன்று தொட்டு வரும் நிகழ்வுகள்.
ஆனால் கடந்த 20 ஆண்டிற்கும் மேலாக தீபாவளியன்று ஹிந்து மக்கள் மீதுள்ள ‘அதீத அக்கறை’யில் பட்டாசு வெடிப்பது குறித்து அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் காட்டும் பேரார்வம் அனைவருக்கும் தெரியும். அதை இங்கு சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை.
(கடந்த ஓராண்டிற்கும் மேலாக நடைபெறும் ரஷ்யா – உக்ரைன் போரில் காற்று மாசு படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது).
சித்தம் தெளிவீர்காள்,
அத்தன் ஆரூரைப்
பத்தி மலர்தூவ,
முத்தி யாகுமே.
-திருஞானசம்பந்த நாயனார்


சான்று காட்டும் ஓவியங்கள்
அறுபத்து மூவர் நாயன்மார்களின் வரலாற்றினை சுந்தர மூர்த்தி சுவாமிகள் மூலம் முதன்முதலில் இவ்வுலகம் தெரிந்து கொள்ள மூல காரணமாய் இருந்தது திருவாரூர் தியாராஜர் கோயிலில் தான்.
அதைப் போலவே பட்டாசு வெடித்து வாண வேடிக்கை நிகழ்த்தி திருவிழா, பண்டிகையைக் கொண்டாடுவது பாரம்பரிய முறை என்பதை முதன் முதலில் ஆதாரமான சாட்சியாக, ஆவணமான காட்சியாக இன்று நமக்குத் தெரிவிப்பதும் திருவாரூர் தியாகராஜர் கோயில் தான்.


ஆருரா! தியாகேசா... ஐயாரப்பா... திருவடி போற்றி!
திருமூலட்டானே போற்றி போற்றி!
ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்றயலார் தங்கள்
காட்சியின் மூன்றில் ஒன்றும் காட்டு வாய் என்ன...
(தடுத்தாட் கொண்ட புராணம் - 56)
ஒரு விஷயத்தை நிரூபிக்க…
1. நடப்பு என்னும் வழக்கமான நடைமுறையில் இருக்க வேண்டும்,
2. அது பற்றி ஆவணத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும்.
3. யாராவது இது உண்மை தான், கண்ணால் பார்த்தேன் என சாட்சி சொல்ல வேண்டும்.
-என மூன்று விதமான வழி முறைகளைக் கையாள வேண்டும் என்கிறார் தெய்வச்சேக்கிழார் சுவாமிகள்
திருவாரூர் கோயில் வரலாற்றினைச் சொல்லும் ஓவியங்கள் இங்குள்ள தேவாசிரிய மண்டபத்தில் வரையப்பட்டுள்ளன.
அவற்றில் சில ஓவியங்களில் காணப்படும் காட்சிகள்….
- ஊர்வலத்திற்கு முன்பு ஒரு மரம் போன்ற வாணம் ஒளி முத்துக்களை உதிர்க்கிறது.
- ஒருவர் ஏந்தியுள்ள நீளக்கோலின் உச்சியில் சக்கர வாணம் சுழல்கிறது.
- சிலர் பிடித்துள்ள வாணங்கள் நெருப்புப் பொறிகளை உமிழ்கிறது.
- தரையில் சுழல்கிற வாணம் தரைச்சக்கரமாக மிளிர்கிறது.
- ஒருவர் தரையில் ஒரு வாணத்தை நட்டு அதனைக் கொளுத்த அதிலிருந்து பல வாணங்கள் மேலே ராக்கெட் போல சென்று சீறிப் பாய்கின்றன.
தீபாவளியின் போது எத்தகைய வெடிகளும் வாணங்களும் தற்போது வெடிக்கப் பெறுகிறதோ அத்தனை வாண வெடிகளையும் திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில் உள்ள ஓவியங்களில் இன்றும் காண முடிகிறது.
கோயில் திருவிழா மட்டுமல்ல… ஹிந்து மத பண்டிகைகளில் பெரும்பாலும் பட்டாசு வாண வெடிகள் வெடித்து விமர்சையாகக் கொண்டாடும் பழக்கம், நேற்று இன்று அல்ல, பல தலை முறைகளுக்கு முன்பிருந்தே மக்களிடம் புழக்கத்தில் உள்ளது என்பதற்குச் சான்றாக இவ்வோவியங்கள் மிளிர்கின்றன.
இன்று ஹிந்துக்களுக்கு எதிராகச் செயல்படும் அந்நியர்களை ஆட்டம் காணச் செய்யும் ஆதாரத்தை வண்ண ஓவியங்களாக தந்துள்ளது திருவாரூர் தியாகராஜர் கோயில் தேவாசிரிய மண்டபம்.
இந்த ஓவியங்கள் தீட்டப்பட்ட காலம் குறைந்தது 400 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்கிறார்கள் விஷயும் தெரிந்த தமிழ் இலக்கிய, சைவ- வைணவ வரலாற்று அறிஞர்கள்
தீபாவளியன்று ஹிந்து மக்கள் தடையின்றி பட்டாசு வெடித்து மகிழ சிவபெருமானாகிய சுவாமி தியாகராஜரே காலத்திற்குத் தேவையான அடையாளத்தைக் காட்டியுள்ளார்.
பழமைக்கும் புதுமைக்கும் இருப்பிடமான பல சைவ – வைணவக் கோயில்களில் இது போன்ற பாரம்பரிய ஓவியங்கள் பல, வரலாற்றைச் சொல்லும் விதமாகத் தீட்டப்பட்டுள்ளன.
அவை யாவும் அப்படியே காலத்தால் பேணிப் பாதுகாக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
முறையாக யாரிடம் விண்ணப்பிக்க வேண்டுமோ அவர்களிடம் நம் விருப்ப விண்ணப்பத்தை சமர்ப்பிப்போம்.
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இயற்றிய பாடல் ஒன்றைப் பாடி கங்காஸ்நான சிந்தனையை நிறைவு செய்வோம்.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை!
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை!
(எல்லாரும்....)
இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்
கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்!
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த
நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்!
(எல்லாரும்....)
பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்!
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்!
(எல்லாரும்....)
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை!
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!
(எல்லாரும்....)
வந்தே மாதரம்! வாழ்க பாரதம்!
வாழ்க மணித்திருநாடு!
$$$
One thought on “வாண வேடிக்கை ஹிந்துக்களின் பாரம்பரியம்”