சிங்கப்பாதை- நூல் அறிமுகம்

-திருநின்றவூர் ரவிகுமார்

சும்மா வரவில்லை சுதந்திரம்.. அஹிம்ஸைப் போராட்டம் மட்டுமல்ல, ஆயுதம் ஏந்திய போராட்டமும் தான் நமது சுந்தந்திரத்திற்குக் காரணம் என்ற உண்மையை விளக்குகிறது இந்நூல்...

கத்தியின்றி ரத்தம் இன்றி எந்த நாடும் சுதந்திரம் பெற்றதாக வரலாறு இல்லை. ஆனால் இந்தியா அகிம்சை வழியில் ரத்தம் சிந்தாமல் விடுதலை பெற்றதாக ஒரு பிம்பம் இந்த நாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சாதாரண ஜனங்களையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் மகாத்மா காந்திஜி. ஆனால் அவர் பிறப்பதற்கு (1869-1948) முன்பே 1857 இல் அகில இந்திய அளவில் ஆங்கிலேயருக்கு எதிரான முதல் சுதந்திர போராட்டம் தொடங்கிவிட்டது. அதற்கும் முன்பே தென்னிந்தியாவில் ஆங்காங்கே தனித்தனியாக போராட்டங்கள் நடந்தன. அவை எல்லாவற்றிலும் ரத்தக்கறை உள்ளது. எண்ணற்றோர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.

ஆங்கிலேயர்கள் வெளியேறக் காரணமென அவர்கள் கூறியது, பம்பாயில் கடற்படையில் இருந்த இந்திய வீரர்களின் ஆயுத கலகமும் சுபாஷ் சந்திர போஸ் வழிநடத்திய இந்திய தேசிய ராணுவ தாக்குதலும் தான். காந்திஜி உயிருடன் இருந்தபோதே ஹைதராபாதும், அவரது மறைவுக்குப் பின் கோவாவும் இந்தியாவில் இணைந்தது துப்பாக்கியின் வலிமையால் தான்.

இதற்காக ஆயுதம் ஏந்திப் போரிட்ட வீரர்களின் தியாக வரலாற்றை சுருக்கமாக கூறிச் செல்கிறது இந்நூல்.  பலரும் அறியாத தியாகிகள் அவர்கள். ராஜாஜியின் வேதாரண்ய உப்பு சத்தியாகிரகம் பற்றிப் பேசப்படும் தமிழ்நாட்டில், காங்கிரஸ் போராட்டத்தினால் உப்பளம் அதிகாரியான லோன் என்ற ஆங்கிலேயனை பொதுமக்கள் வெட்டிக் கொன்ற வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. இருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படக் காரணமான சம்பவம் இது. அதுபற்றி இந்நூலில் உள்ளது.

இப்படி மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட பல ஆயுதப் போராளிகளின் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் அதே வேளையில், அகிம்சை போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல் எழுதப்பட்டுள்ளது இந்த நூலின் சிறப்பு.

***

நூல் குறித்த விவரம்:

நூல்: சிங்கப்பாதை
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடியவர்களின் வீர வரலாறு.
ஆசிரியர்: பி.ஆர்.ராமச்சந்திரன்
வெளியீடு: சுவாசம் பதிப்பகம், பொன்மார், சென்னை - 127
256 பக்கங்கள்; விலை : ரூ. 290/-
தொடர்புக்கு: +91-81480 66645.

$$$

Leave a comment