ஒரே நாடு ஒரே தேர்தல் – தேவையா? (பகுதி-1)

-திருநின்றவூர் ரவிகுமார்

நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்ட மன்றங்களுக்கும் ஒரெ தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று ராம்நாத் கோவிந்த் குழு தனது ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் வழங்கி உள்ளது. இது குறித்து ஒரு முழுமையான பார்வை இங்கே (இது பகுதி-1)….

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுத்து, கவனத்தில் கொண்டு வாக்களிப்பதில்லை. கோஷங்கள் அல்லது பஞ்ச் வசனங்கள் (வராரு… தராரு…; கட்டா கட்….; மீண்டும்…. வேண்டும் ….) மக்களை ஈர்க்கின்றன.

ஆட்சிக்கு வந்த பிறகு ஆளும் கட்சிகள் – இந்த வாக்குறுதிக்கு எத்தனை சதவீதம் வாக்குகள் வந்தன என்று எப்படி சொல்ல முடியும்; சொன்னோம்.. எப்போ என்று சொன்னோமா – என்றெல்லாம் மழுப்பி திசை திருப்புவதைக் காண்கிறோம். அதுமட்டுமல்ல, இலவச பேருந்து பயணத்தை நாங்கள் கேட்டோமா… எங்களை ஏன் அவமானப் படுத்துகிறீர்கள்? என்று கர்நாடக பெண்களின் ஆவேசக் குரலை இந்தியா டுடே தொலைக்காட்சி மூலம் நாடே கேட்டது.

சொன்னதைச் செய்வோம்…

இதனிடையே, ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையை அரசியல் நோக்கர்கள் மட்டுமன்றி  அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்றால் அது பாஜக தான். மோடி பிரதமர் ஆன பிறகு என்றல்ல, அதற்கு முன்பிருந்தே இப்படித்தான்.

வாஜ்பாய் தலைமையிலான பதின்மூன்று மாத கால ஆட்சியில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது.  ‘பாரதத்தை அணு ஆயுத நாடாக மாற்றுவோம்’ என்று பாஜக தேர்தல் அறிக்கையில் இருந்த விஷயம் அது. உள்கட்டமைப்பை உருவாக்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதி, வழமையான சொல்லாடல் என்று பலரும் கருதினர்; ஆனால் அது தங்க நாற்கரச் சாலையாக வெளிப்பட்டது.

சொன்னதைச் செய்வோம் என்பதை பாஜக செயலில் நிரூபித்ததால் பயந்து போன கூட்டணிக் கட்சிகள்  ‘குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை’ என்ற பெயரில் ராமர் கோயில் நிர்மாணம், 370 வது சட்டப்பிரிவு நீக்கம், மதச்சார்பற்ற பொது சிவில் சட்டம் போன்றவை கூடாது என்று பாஜகவின் தேச நலம் சார்ந்த கொள்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டனர். ஆனால், பாஜக தன் கொள்கைகளை கைவிடவில்லை.

மோடி தலைமையிலான ஆட்சியின் போது ராமர் பிறந்த இடத்தில் பிரம்மாண்டமான கோயில் எழுந்துள்ளது. 370 சட்டப் பிரிவு ரத்தாகியுள்ளது. இரண்டையும் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. உச்ச நீதிமன்றம் அடிக்கடி வலியுறுத்தும் மதச்சார்பற்ற பொது சிவில் சட்டத்திற்கும் வித்திடப்பட்டுள்ளது. அதேபோல் 2024 தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட  ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறைப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியைச் செயல்படுத்தத் துவங்கி, வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதற்கான சட்ட வரைவு முன்வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஒரே தேர்தல் புதிதா?

நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் – ஒரே நாளில் அல்ல – தேர்தல் என்பது புதிய விஷயம் அல்ல. 1952 முதல் 1967 வரை நான்கு தேர்தல்கள் அப்படித் தான் நடந்துள்ளன. 1967இல் 520 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 3,563 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அதுதான் கடைசியாக நடந்த  ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’.

விடுதலை வாங்கிக் கொடுத்த கட்சி என்ற பதாகையுடன் முதலிரண்டு தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று மத்தியிலும் எல்லா மாநிலங்களிலும் ஆட்சி அமைத்தது. மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே கட்சி என்றால் வேகமான வளர்ச்சி என்பதற்குப் பதிலாக, எங்களை விட்டால் வேறு யார் என்ற காங்கிரசின் அலட்சியப் போக்கிற்கும், மாநில நலன்கள் புறக்கணிப்புக்கும், நிர்வாகச் சீர்கேட்டிற்கும், உட்கட்சிப் பூசலுக்கும், அதிகாரப் போட்டிக்கும் வழி வகுத்தது.

1962 இல் சீனாவுடனான போரில் தோல்வி, நேருவின் மரணம், 1966 இல் ரஷ்யாவில் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் (மர்ம) மரணம், இரண்டாம் நிலையில் இருந்த மொரார்ஜி தேசாயை பின்னுக்குத் தள்ளி , 1966 ஜனவரியில் வாரிசு அரசியல் மூலம், பிரதமரான இந்திரா காந்தி என, தோல்விகள், குழப்பங்கள் இடையே 1967 தேர்தல் நடந்து முடிந்தது.

முடிவுக்கு வித்து

1967 இல் நடந்த பொதுத் தேர்தல் பல வினோதங்களைக் கண்டது . 2014 இல் ‘காங்கிரசை ஓரங்கட்டு, தேசத்தைக் காப்பாற்று’ என்ற பாஜகவின் கோஷம் நாடு முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது. பாஜகவை ஆட்சியில் அமர்த்த மட்டுமல்ல, காங்கிரசை ஒடுக்கவும், மக்களை முடிவெடுக்க வைத்தது. ஆனால் அந்த கோஷம் புதிதல்ல. 1964 இல் சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சியைத் தொடங்கிய ராம் மனோகர் லோகியா எழுப்பிய கோஷம் அது.  ‘காங்கிரசை ஓரம் கட்டுவோம்’ என்று சொல்லித் தான் அவர் கட்சியை ஆரம்பித்தார்.

சோஷியலிசம் அல்ல முதலாளித்துவமே சரி என்று சொல்லி சுதந்திரா கட்சியைத் தொடங்கிய ராஜாஜியும் , சோஷலிசம் பேசிய ராம் மனோகர் லோகியாவும், லோகியாவால் ஹிந்து மதவெறி, பிராமண மேட்டிமை என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்ட ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் கரமான ஜன சங்கமும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு, பல மாநிலங்களைக் கைப்பற்றிய வினோதம் 1967இல் நடந்தது.

தேர்தலுக்கு முன்பு காங்கிரசிலிருந்து வெளியே வந்து தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி சார்பாக முதல்வர் பதவி (மேற்கு வங்கம்- அஜய்குமார் முகர்ஜி) , வெற்றி பெற்ற ஒரே ஒரு உறுப்பினர் முதல்வரானது  (மகாமாயா பிரசாத் சின்ஹா- பிஹார்), காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற பிறகு அதிலிருந்து விலகி எதிர்க்கட்சி சார்பாக முதல்வர் ஆனவர்கள் (ராவ் விரேந்திர சிங்- ஹரியானா, சௌத்ரி சரண் சிங்- உத்தரப் பிரதேசம்), காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகாமல் போட்டி வேட்பாளராக நின்று தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எதிர்க்கட்சி சார்பில் முதல்வரானவர் (கோவிந்த் நாராயணன் சிங் – மத்திய பிரதேசம்), எதிர்க்கட்சிகளின் ஆட்சி (கேரளம் -சங்கரன் நம்பூதிரிபாத் ; தமிழகம் – சி.என்.அண்ணாதுரை; ஒரிசா- ராஜேந்திர நாராயணன் சிங் தியோ – சுதந்திரக் கட்சி) என காங்கிரசுக்கு பல பின்னடைவுகளும், அவற்றை விஞ்சும் காங்கிரஸாரின் கேலிக்கூத்துகளும் அரங்கேறின.

வாரிசு அரசியலுக்கு வித்திட்ட தமிழர் – கூடுதல் தகவல்கள்

பண்டித நேருவின் மறைவுக்கு பின் சாஸ்திரியின் அமைச்சரவையில் இந்திரா காந்தி செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால்  நான்காம் கட்ட நிலையில் இருந்த அவர் மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன்ராம் போன்ற மூத்த அமைச்சர்களை ஓரம் கட்டி பிரதமராக முக்கிய காரணம் தமிழகத்தைச் சேர்ந்த காமராஜ் என்று காங்கிரஸ்காரர்கள் கூறுகின்றனர்; எழுதி வைத்துள்ளனர்.

பின்னாளில் அவரே இந்திரா  அம்மையாரின் உண்மை முகத்தைக் கண்டு வெறுத்துப் போய் பழைய காங்கிரசை புதுப்பித்தார். அது மட்டுமன்றி அவரது பழைய காங்கிரஸ் கட்சி ஜன சங்கத்துடன் (இன்றைய பாஜக) கூட்டணி வைத்து இந்திரா காந்திக்கு எதிராக தேர்தலை சந்தித்தது என்ற உண்மை தமிழகத்தில் பலரும் அறியாதது.

காமராஜரின் சீடர் என்று சொல்லிக்கொண்ட கருப்பையா மூப்பனார் இந்திரா காங்கிரஸில் அகில இந்திய தலைவராகத் தொடர்ந்தார்; இந்திராவுக்கு பிறகு அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமராக உறுதுணையாக இருந்தார். தனியாக மாநிலக் கட்சி ஆரம்பித்த போதும் வாஜ்பாய் அரசை ஆதரிக்க மறுத்தார் மூப்பனார். (காண்க – துக்ளக் கட்டுரைகள், எஸ். குருமூர்த்தி மற்றும் அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள  ‘சோவின் அரசியல் அனுபவங்கள்’).

அவரது மகன் ஜி.கே.வாசன் பிராயச்சித்தமாக பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு நரேந்திர தாமோதர தாஸ் மோடியை ஆதரிக்கிறார் என்பதும்,  காமராஜ் வழியில் உண்மையாக திரும்பி இருக்கிறார் என்பதும் ஆறுதலான விஷயம்.

நிற்க, காங்கிரஸ் கட்சியில் குழப்பம் அதிகரித்ததுடன், ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ஜாகிர் உசேன் காலமான பிறகு அந்தப் பதவிக்கு காங்கிரஸில் அடிதடி நடந்தது. காமராஜர், மொரார்ஜி தேசாய் தலைமையில் பழைய காங்கிரஸ் எனவும், இந்திரா காங்கிரஸ் எனவும் கட்சி இரண்டாக பிளவு பட்டது.

இடைத் தேர்தல்கள் – காங்கிரஸ் படைத்த சாதனை

இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் பல மாநில அரசுகள் கலைக்கப்பட்டு இடைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 356 சட்டப் பிரிவைப் பயன்படுத்தி அதிக அளவில் ஆட்சியைக் கலைத்த பெருமை காங்கிரசுக்கே உரியது. அந்த சாதனையை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை.

இந்நிலையில் 1970 இல் நாடாளுமன்றத்தைக் கலைத்தார் இந்திரா காந்தி. 1971 இல், சுமார் 16 மாதங்களுக்கு முன்பாக நாடாளுமன்றத்திற்கு தேர்தலை அறிவித்தார். பதவியேற்று சில மாதங்களேயான மாநில அரசுகளுக்கு மீண்டும் தேர்தல் நடத்த முடியாத நிலை, தன் அதிகாரத்தை நிலைநிறுத்த இந்திரா காந்தி அறிவித்த நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியான தேர்தல் போன்றவற்றால்  ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற வழக்கமான முறைமை அவரால் முற்றிலும் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டது.

1967 இல் நடந்த பொதுத் தேர்தல் தான் அந்த முறைமையில் நடந்த கடைசி தேர்தல். காங்கிரஸ் செய்த அட்டூழியங்களில் இந்த தேர்தல் முறைமையை தகர்த்ததும் ஒன்று.

இந்த நிலையில் 2024 இல் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பழைய தேர்தல் முறைமை, அதாவது ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதி இடம்பெற்றது.

ஒரே தேர்தல் – கேட்டது யார்?

356 சட்டப்பிரிவை தவறாகப் பயன்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான். இன்று வரை யாரும் அந்த சாதனையைத் தோற்கடிக்க முடியவில்லை. இனிமேலும் முடியாது. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. இரண்டாவது, ஆனால் முக்கியமானது, 3 5 6 சட்டப்பிரிவைப் பயன்படுத்த மாட்டேன் என்று பிரதமர் மோடி வெளிப்படையாக அறிவித்தது. இதன்மூலம் ஜனநாயகவாதி என்ற பதக்கத்தை தன் மார்பில் அவர் குத்திக் கொண்டார்.

காங்கிரஸ் ஆட்சியில்…

எண்ணற்ற ஆட்சிக் கலைப்புகள், அதனால் தேர்தல் என்று அலுத்துப் போன தேர்தல் ஆணையம், முதன்முதலில் 1983 இல், ஒரே தேர்தல் முறைமை மீண்டும் வேண்டும் என்றது.

இந்திய சட்ட கமிஷனும், 1999 இல்,  ஒரே தேர்தல் முறைமை மீண்டும் வேண்டும் என்றது. அதை மீண்டும் கொண்டு வந்தால் தேர்தல் தொடர்பான வழக்குகள் குறையும் என்று தன்னுடைய 170 வது அறிக்கையில் கூறியது. சட்ட கமிஷன் அரசு சாராத, சுதந்திரமான, நிரந்தர அமைப்பு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

வாஜ்பாய் ஆட்சியில்…

வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியின்போது மேற்கண்டவற்றை உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக இந்திய அரசியல் சாசனத்தின் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்ய முடிவு எடுத்து, அதற்கு ஒரு தேசிய கமிஷனை (National Commission to Review the Working of the Constitution)  அமைத்தது. அந்த கமிஷனும் ஒரே தேர்தல் முறைமை வேண்டும் என வலியுறுத்தியது.

மோடி ஆட்சிக் காலத்தில்…

மோடி அரசின் அமைந்த பிறகு 2015 இல் சட்டம் மற்றும் நீதி துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, ஒரே தேர்தல் முறைமையை பரிசீலனைக்கு  எடுத்துக் கொண்டது. இறுதியில், அதன் அறிக்கையில் தேர்தல் தொடர்பான செலவுகளை கட்டுப்படுத்தவும் நிர்வாகத் திறனை அதிகரிக்கவும் ஒரே தேர்தல் வேண்டுமென்றது.

2017 ஜனவரியில் நிதி ஆயோக் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. ஒரே தேர்தல் என்றால் என்ன, ஏன், எப்படி – ஒரு அலசல் (Analysis of Simultaneous Elections : the What , Why and How) என்ற அந்த அறிக்கையில்,   “எப்போதும் தேர்தல் என்ற மனநிலையில் இருந்து தேசம் விடுபட வேண்டும். அதற்கு மனநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அடுத்த தேர்தலை மட்டுமே மனதில் கொண்டு செயல்படாமல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு நெடுநோக்குடன்,  பலன் தரக்கூடிய வகையில், தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தது.

சட்ட கமிஷன் மீண்டும் 2018 இல் ஒரே தேர்தல் முறைமையை வலியுறுத்தியதுடன் அதனால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிட்டது. அதே வேளையில் இறுதி முடிவு எடுக்கும் முன்பு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி தேர்தல் முறைமையில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளையும் பெற வேண்டுமென்றது.

ராம்நாத் கோவிந்த் கமிட்டி

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒரு சட்ட வல்லுனர். அப்பழுக்கற்ற  நேர்மையாளர் . சிறந்த தேசியவாதி. எவரையும் பாராட்டி ஒரு வார்த்தை கூட சொல்லாத பிரதமர் தேசாயிடம் உதவியாளராக இருந்து, அவரால் பாராட்டப் பெற்ற தகைமையாளர்.

இப்படிப்பட்டவரின் தலைமையில் ஒரே தேர்தல் பற்றிய ஆய்வு செய்ய கமிட்டி அமைத்தது மோடி அரசு. 2023 செப்டம்பர் இரண்டாம் தேதி அமைக்கப்பட்ட அந்த கமிட்டியில் அமித் ஷா (மத்திய உள்துறை அமைச்சர்) , குலாம் நபி ஆசாத் (முன்னாள் மேலவை எதிர்க்கட்சித் தலைவர்) , என்.கே.சிங்  (நிதி கமிஷனின் முன்னாள் தலைவர்), டாக்டர் சுபாஷ் காஷ்யப் (முன்னாள் நாடாளுமன்ற செயலாளர்), ஹரீஷ் சால்வே (மூத்த வழக்கறிஞர்), சஞ்சய் கோத்தாரி (முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர்), சிறப்பு அழைப்பாளராக அர்ஜுன்ராம் மேக்வால் (மத்திய சட்டத்துறை அமைச்சர்),  செயலாளராக டாக்டர் நிதின் சந்திரா ஆகியோர் இருந்தனர்.

191 நாட்கள் தொடர்ந்து பணியாற்றிய அந்த கமிட்டி 2004 மார்ச் 14 ஆம் தேதி 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஜனாதிபதி திரௌபதி முர்மூவிடம் சமர்ப்பித்தது. மத்திய அமைச்சரவை 18 செப்டம்பர் 2024 அந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டது. வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதற்கான சட்டம் முன்வைக்கப்படும் எனத் தெரிகிறது.

யார், யாரிடம் கருத்து கேட்கப்பட்டது?

ராம்நாத் கோவிந்த் கமிட்டி 62 அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டது. 47 கட்சிகள் தங்கள் கருத்துக்களை எழுத்து மூலமாக சமர்ப்பித்தன. அதில் 32 கட்சிகள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்தன. 15 கட்சிகள் எதிர்த்தன. பொதுமக்களிடமிருந்து  21,568  கடிதங்கள் வந்தன. அதில் 80 சதவீதம் ஒரே தேர்தலை ஆதரித்தனர்.

நீதித்துறை

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளான தீபக் மிஸ்ரா, ரஞ்ஜன் கோகோய், எஸ்.ஏ.பாப்டே , உதய் லலித் ஆகியோரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. அவர்கள் அனைவரும் ஒரே தேர்தலை ஆதரித்தனர்.

உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக இருந்தவர்களில் 12 பேர்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. அதில் ஒன்பது பேர்கள் ஆதரித்தனர்; மூவர் எதிர்த்தனர்.

தேர்தல் ஆணையம் & சட்ட ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையராக இருந்தவர்களில் நான்கு பேர்களும், மாநில தலைமை தேர்தல் ஆணையராக இருந்தவர்களில் எட்டு பேர்களும், சட்ட ஆணையத்தின் தலைவரும், ராம்நாத் கோவிந்த் கமிட்டியின் முன்பு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

தொழில் துறையினர்

சி.ஐ.ஐ. , பிக்கி , அசோசெம் போன்ற தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினர்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டன.

அவர்கள் அடிக்கடி தேர்தல் வருவதால் பணவீக்கம் அதிகரிக்கிறது; பொருளாதார வளர்ச்சி தாமதப்படுகிறது. கல்வித் துறைக்கு ஏற்படும் பாதிப்புகள், சமூகநலப் பணிகளுக்கான நிதி குறைகிறது; சமூக நல்லிணக்கம் பாதிக்கிறது, இந்நிலை மாற ஒரே தேர்தல் அவசியம் என்று தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

(தொடர்கிறது)

$$$

One thought on “ஒரே நாடு ஒரே தேர்தல் – தேவையா? (பகுதி-1)

Leave a comment