சுவாமி விவேகானந்தரும் பசும்பொன் தேவர்பிரானும்- 1 

 -கருவாபுரிச் சிறுவன்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை விரைவில் (அக். 30) நிகழ உள்ள நிலையில், அவரையும், சுவாமி விவேகானந்தரையும் ஒப்பிட்டு திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள கட்டுரையின் முதல்பகுதி இது...
பசும்பொன் தேவர் திருமகனார் (தோற்றம்: 1908 அக். 30- மறைவு: 1963 அக். 30)

அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதும் என்று 
          அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த  
          ஆறுமோர் நான்குமோர் ஒன்றினையும்
படியா இவை கற்று வல்ல அடியார் 
           பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே 
குடியாகி வானோர்க்கும் ஓர் கோவுமாகிக் 
          குல வேந்தராய் விண் முழுது ஆள்பவரே.

     -சுந்தரமூர்த்தி நாயனார் 

சிறுவனின் பதிலும் பதறிய பிரசங்கியும்

திருப்பரங்குன்றம் வீதியில் ஒரு மாற்று மத பிரசங்கி…  “ஏ… பாவிகளே! இங்கே நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். இங்கு  நான் நின்று கொண்டிருப்பதும் ஒரு கல் தான். இங்கே அருகில் குவிந்து கிடப்பதும் ஒரு கல் தான். நீங்கள் வணங்கும் ஆலயத்தில் உள்ளே  இருப்பதும் கல் தான்” என அவர் பேசிக்கொண்டிருந்தார். 

செவ்வேள் பரமன், பரங்குன்றப்பதி, திருமுருகாற்றுப் படையுடனே வருஞ் சேவகன், முருகா என மொழிந்தவருக்கும் உள்ளங்குளிர உவந்துடனே அருளும் அழகன்,  தெய்வசேனா வள்ளி மணாள வள்ளலை  தரிசனம் செய்ய வேகமாக நடந்து சென்ற சிறுவன் ஒருவன்  செவிகளில் அவ்வார்த்தை விழவே, பிரசங்கியை சுற்றி நின்ற  ஒரு சிலரை விலக்கி அவர் முன் போய் நின்றான். 

பேசி முடித்த  அவரிடம் வினவினான்…

“ஐயா, வணக்கம்… உங்களுக்கு தாய் இருக்கிறாரா…?”  

“ஆம் இருக்கிறாள்”.

“உங்களுடன் பிறந்தவர்கள்…?”

“ஒரு சகோதரி இருக்கிறாள்”.

“உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா..?”

“ம் ஆகிவிட்டதே… சிறுவனே! நீ கேட்கும் கேள்விகளும்  இங்கு நடக்கும் இப்பிரசங்கத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா..?” என பதற்றத்துடன் கேட்டார் அவர். 

“பொறுங்கள் ஐயா, உங்கள் தாயும் பெண் தான். உங்கள் மனைவியும் பெண் தான். உங்கள் சகோதரியும் பெண் தான். ஆனால் நீங்கள் மூவரிடமும் எப்படி பழகியுள்ளீர்கள், பழகுகிறீர்கள்  என்பது உங்களுக்கு தெரியாதா என்ன…  அதைப் போலத் தான் நீங்கள் கூறிய செய்தியும்…. பெயர் என்னவோ கல் தான். அது  இருக்கும் இடத்திற்கு தகுந்தாற் போல அதன் நிலை மாறுபடும். ஒன்று காலில் மிதிபடும். மற்றொன்று கோயில் கருவறையில் பூஜிக்கப்படும். வேறொன்று கோபுரக் கலசத்தினை தாங்கி நிற்கும்” என்றான் சிறுவன். 

திக்குமுக்காடி பதில் சொல்லத் தெரியாமல் விழித்தார் பிரசங்கி. பின்னர் அவர் எங்கு சென்றார் என இன்று வரை தெரியவில்லை. அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல…  அவர் தான் ஹிந்து மதத்தின் காவலனாய் அன்றும் இன்றும் என்றும் விளங்கும் லட்சோப லட்ச மக்களின் இதயத் தெய்வமாய் திகழும்  பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் அவர்கள்.  

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு  திருஆல வாயான் திருநீறே.

     -திருஞானசம்பந்த நாயனார் அருளிய திருநீற்றுப்பதிகம் - 3

சிவத்தொண்டரும் திருத்தொண்டரும்

 நாகர்கோயில் ஆறுமுக நாவலர் சிறந்த சிவபக்தர். திருவாவடுதுறை, மதுரை ஆதினங்களில்  வித்துவானாகத் தொண்டாற்றியவர். தொண்டன் என்னும் இதழினை நடத்தி மாற்று மதத்தில் அறியாமையால் இணைந்த அன்பர்களை தாய் மதம் திரும்பச்செய்து நல்வாழ்வு கொடுத்த நல்லவர். தமிழக அரசு அறநிலையத் துறை தேர்விற்கு அடிப்படை பாடத்திட்டத்தில் வைக்கப்பட்ட  ‘சைவமும் வைணவமும்,  ஹிந்து மதம்  இணைப்பு விளக்கம்’ ஆகிய இரு நூற்களையும் தொகுத்து உபகாரம் செய்த பெரியார் அவர். 

ஒரு சமயம் தூத்துக்குடி, வடக்கன் குளத்தில் உள்ள விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தாயிற்று அங்கு வசிக்கும்  மாற்று மதத்தினர் இடையூறு செய்தனர். தகவலை அறிந்த ஆறுமுக நாவலர் வடக்கன் குளம் வந்தார். இதற்கு நிரந்தரத் தீர்வு தர வல்லவர் தேவர் பிரான் ஒருவரே என்பதை அறிந்து பெருமானை வரவழைத்தார்.  பிறகு  என்ன… தேவர் பிரான் வருகிறார்கள் என்பதை அறிந்த மாற்று மதத்தினர் எத்திசை பக்கம் போய் பதுங்க ஓடி ஒழிந்தார்கள் என்பது தேவர்பிரானின் வரலாற்றில் படிக்கப்பட வேண்டிய செய்தி. 

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும் 
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும் 
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும் 
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்

      -ஞானக்கூத்தர் 

வள்ளிமணாளனின் பரமபக்தரும் வள்ளலாரும் 

‘தேசியமும் தெய்வீகமும் எனது  இரு கண்கள்’ என வாழ்ந்து காட்டியவர்களில் நம் மனக்கண்முன் உடனே நினைவுக்கு  வந்த நிற்பவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரவர்கள் ஆவார்கள். 

திருஞானசம்பந்த நாயனார் புராணத்தில் தெய்வச்சேக்கிழார் சுவாமிகள்  ‘துாய திருநீற்றின்  நெறி திசையனைத்தும் விளங்க அவதாரம் செய்தவர்’  எனப் புகழாரம் சூட்டுவார். அப்புகழுக்குரிய பெருமானால் ஸ்தாபிக்கப்பெற்ற  ஆதினத்தின் முதன்மைச் சீடர்களில் தேவர் அவர்களும் ஒருவர் ஆவார். 

‘வட மொழியும் தென் மொழியும் ஆனவன் காண்’ என்ற அப்பர் சுவாமிகளின் தேவார வாக்கினை சிரமேற்கொண்டு, சுமார் மூன்று மணி நேரம் சொற்பொழிவு செய்து ஞான விசாரங்களை இந்த உலகிற்கு ஒழிவு மறைவு இல்லாமல் வழங்கிய  ஒப்பற்ற பெருந்தகையாளரவர்கள்.

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே 
            அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
          அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
          அன்பெனும் உயிரொளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
          அன்புரு வாம்பர சிவமே.

       -வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் 

திருவருட்பாவிலும் பற்றுக் கொண்ட பரமயோகியாக வாழ்ந்து காட்டியவர் தேவர் அவர்கள்.  ஒரு சமயம் ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் தலைமையில் ஓர்  ஆன்மிகக் கூட்டம். தேவர்பிரானும் சிறப்புரை ஆற்றுகிறார். இவர்களைக் கண்ட உழுவலன்பர் ஒருவர் மேடைக்கு வந்து ஓமந்துாராரிடம்  ஏதோ ஒரு செய்தியைச் சொல்ல, அவர் சிறப்புரையாற்றிக் கொண்டிருக்கும் தேவர்பிரானிடம் தெரிவித்து விடுங்கள் எனச் சொல்லி அவையடக்கமாக  அமர்ந்து கொண்டார். 

விஷயத்தின் சாரத்தைத் தெரிந்து கொண்ட தேவர்பிரான்…  “வடலுார் ராமலிங்க சுவாமிகளின் திருப்பாடல்களை இந்த அன்பர் புத்தகமாக வெளியிட பதிப்பித்துக் கொண்டு இருக்கிறார். நல்ல விஷயம். ஆக்கப்பூர்வமான பணி.  அதில் குறிப்பிட்ட பாடல்கள் அடங்கிய சுவடிகளை வடலுார்  ராமலிங்க சுவாமிகளின் உறவினர் என்ற பெயரில்  ஒருவர் வைத்துக்கொண்டு  அன்பருக்கு  காண்பிக்க மறுக்கிறார். நல்லது.  இந்த கூட்டத்தின் வாயிலாக   அவர்களுக்கு  ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்…. இப்போது அடியேன் பாராயணம் செய்யும் ராமலிங்க சுவாமியின் பாடல்களும் தங்களது கைவசம் உள்ள  ஓலைச்சுவடியில் உள்ள அந்தப் பாடல்களும்  ஒன்று போல இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்” என பாடல்களை மேடையிலேயே பாடிக் காட்டினார். 

கடைசிப் பாடலை பாடி முடிப்பதற்குள் தேவர்பிரான்  திருவடியில் ஓலைச்சுவடியைக் கொண்டுவந்து சேர்ப்பித்து மன்னிப்பு கேட்டார் அந்த நபர்.  

என்னே!  தேவர் பிரானின் சொல்லாற்றல் என துணிந்து போற்றினர்.  

அவரின் மனோ சக்தியை கண்டு யாவரும் வியந்தனர். 

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே!

      -திருஞானசம்பந்த நாயனார் அருளிய திருநீற்றுப்பதிகம் - 4 

***

ஆசிரியர் சிவத்தொண்டர்  மா.பட்டமுத்து அவர்கள்  “சங்கரன்கோவில் முப்பிடாதி அம்மன் கோயில் திடலில் தேவரவர்கள் பேசுவதை  சிறுவயதில் கேட்டு இருக்கிறேன். அவர்களுடைய நெற்றி நிறைய திருநீற்று ஒளி எப்போதும் துலங்கும். கர்ஜனைக் குரலில் மேற்கோள் எல்லாம் தேவாரம், திருவாசகம், பகவத்கீதை, உபநிடதம்,சித்தர் பாடல்களில் இருந்து எடுத்துச் சொல்வார்கள்” என எங்களுக்கு  சமய வகுப்புகளில்  திருநீற்றுச் சிறப்பினைச் சொல்லும் போது  இச்செய்தியைக் கேட்ட ஞாபகம். 

சிறுவயதில் வீடுகளிலும், அருகிலுள்ள கிராமங்களுக்கும் தினமணி, தினமலர் நாளிதழ் கொடுக்கும்  சிறு வேலையைச் செய்ததுண்டு.  அப்போது பலருடைய வீடுகளில், பொதுச்சாவடிகளிலும்  சாதி வித்தியாசம் பார்க்காமல் நின்ற கோலத்தில் தேவரவர்களின் புகைப்படம் மாட்டியிருப்பதையும் பார்த்திருக்கிறேன். சமரசஞானியின் படம் பலருடைய  இல்லத்தை அலங்கரித்தது. 

அனைத்து மத, சமூகத்தினரும் போற்றும் ஒரு ஒப்பற்ற தலைவர் பசும்பொன் தேவரவர்கள். அந்த தேசியத்தலைவரின் வழிகாட்டுதலில் வாழ்ந்து வரும்  தேவர்  சமுதாயத்தினர் மட்டுமின்றி அன்னார் மீது பற்று கொண்ட பல சமூகத்தினர்கள்  மாலுமி இழந்த கப்பல் போல  பரிதவிக்கிறார்கள். அத்தகைய கப்பல் மீண்டும் கரைக்கு வர வேண்டும். சமரச சன்மார்க்க ஞானியின் உபதேசம் அனைவருடைய உள்ளத்தையும் அலங்கரிக்க வேண்டும் என்பதே ஆன்மிக அன்பர்களின் உள்ளக்கிடக்கை. 

உக்கிரபாண்டியத் தேவரின் திருமகனார் பசும்பொன் தேவர்பிரான்  ஆத்மார்த்தமாக பரம்பரையாக பூஜித்த மகாமேருவினைப்போலவே  திருக்கருவையம்பதியில்  குடி கொண்டிருக்கும் தவத்திரு பொதி சுவாமிகளின் அதிஸ்டானத்தில் அதைப் போலவே மகாமேரு மூர்த்தம் (சிலாரூபம்) பிரதிஷ்டை செய்து இருப்பர் என சொல்லுவதில் மகிழ்ச்சி. 

கருவையம்பதியில் வாழ்ந்து கருணையின் வடிவமாகி 
பெருமனை தனைத் துறந்து பெறற்கருந் தவங்களாற்றி 
இருவினை வென்றே என்றும் இன்பமாய் சமாதி கொண்ட
பொருவில் பொதிச்சுவாமி பூங்கழல் போற்றி போற்றி

    -குருபூஜை அழைப்பிதழில்  இடம் பெறும்  சுவாமிகள் ஸ்துதி  

வெற்றித் திருநாள் 

வீரமறவர்களின் வெற்றித்திருநாள் விவேக மாந்தர்களின் விஜயத்திருநாள்  தேவரவர்களின் ஜெயந்தித் திருநாள்  (அக். 30) விரைவில் வருகிறது. இந்நாளினை முன்னிட்டு  அவர்களைப் பற்றி சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்பாக ஒ.பி. வாசுதேவன் என்னும் அன்பர் எழுதிய கட்டுரையின் சாரம்சத்தை  மீண்டும் சிந்திப்பதில் ஆனந்தம்…  

***

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவனடி சேரா தார்

    -திருக்குறள்: 10 

மனிதப்பிறவியின் நோக்கம் மீண்டும் பிறவா நிலையை அடைவதே. அதற்கான முறையை ஆன்மிகம் அழகாக எடுத்து இயம்புகிறது. 

ஒரு நல் ஆத்ம சாதகன் உலகில் எங்கு பிறந்தாலும், எந்த நாட்டில் வளர்ந்தாலும், எத்தனை பிறவி எடுத்தாலும் எந்த மதம், எந்த மொழிக்குரியவனாக இருந்தாலும், பரம்பொருளின் திருவடியை அவன் அடைவதே ஆன்மிகத்தின் முக்கியக் குறிக்கோள். 

வங்காளத்தில் பிறந்த சுவாமி விவேகானந்தர் வேதாந்த மார்க்கத்தில் திளைத்து அன்று அமெரிக்காவிலுள்ள  சிகாகோ நகர் சென்று ஹிந்து மதம் தான் உலகில் சிறந்த மதம்  என்பதை எடுத்துரைத்து,  “எனக்கு ஏற்பட்ட இத்தகைய புகழுக்கு காரணம் அடியேன் அல்ல…  ராமநாதபுரம் ஸ்ரீமான் பாஸ்கர சேதுபதி அவர்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் தீர்க்கும் முகத்தானாக மீண்டும் ஒரு பிறவி எடுக்க வேண்டும்” என வேண்டிக் கொள்கிறார். 

தமிழகம் திரும்பிய சுவாமி விவேகானந்தர் இங்குள்ள திருக்கோயில்களையும் வழிபாட்டு நெறி முறைகளையும் சித்தாந்த மார்க்கங்களையும் கண்டுணர்ந்த  பிறகு தமிழகத்தில் பிறக்க வேண்டும் என மீண்டும் வேண்டிக் கொள்கிறார்.

ராமேஸ்வரத்தில் நடந்த எழுச்சியுரையில்  திருநீற்றின் மகிமையைப்  பற்றி அதிகமாக  அவர் பேசவில்லை. அதைக் கண்ணுற்ற சாது ஒருவர் ”நரேந்திரா! நீ திருநீற்றின் அருமை பெருமையை நன்கு உணரவில்லை. அடுத்த பிறவியில் இங்கு  பிறந்து இமைப்பொழுதும் திருநீறு அணிந்து இத்தமிழக மண்ணுக்கும் இத்தேசத்திற்கும் பெருந்தொண்டுகள் செய்வாய்” என வரமளித்துச் சென்று விடுகிறார்.

அப்போதெல்லாம் காசி ராமேஸ்வர யாத்திரை செல்பவர்கள் பசும்பொன் வழியாகச் செல்வார்கள். அவர்களை இன்முகத்துடன் வரவேற்று, வேண்டிய உதவிகளை திருமதி இந்திராணி அம்மையார் செய்வார்கள். அதன் பயனாக, ஒரு நாள் “ நீ செய்த தவத்தின் பயனாக சிவசூரியன் போல ஒரு தெய்விகக் குழந்தையை உம் மணி வயிற்றில் பெறுவாய்” என ஆசியளித்து திருநீறு தந்து மறைந்து விடுகிறார் முனிவர் ஒருவர். 

சுவாமி விவேகானந்தரின் வேண்டுதல், முனிவரின் வரம், திருநீற்றின் சிறப்பு, உக்கிரபாண்டியரின் தவப்பயன் எல்லாம் ஒன்று சேர்ந்து இவ்வுலகம் நன்றாய் வாழ… இப்பூவுலகில் ஒரு அருந்தவப் புதல்வர் அக்டோபர் 30ஆம் நாள் அவதாரம் செய்கிறார் அவர் யார் என அடியேன் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

ஹர ஹர நம பார்வதி பதியே... 
            ஹர ஹர மகாதேவா... 
சித்சபேசா சிவசிதம்பரம் 
         தென்னாட்டுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! 

தாயும் சேயும்

அந்தக் கல்விச் சாலையில் மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்த மாணவர்களிடம், வகுப்புக்கு வந்த ஆசிரியர் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என கேட்டார். அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை சொன்னார்கள். ஒரே ஒரு மாணவன் மட்டும் நான் குதிரை வண்டிக்காரனாக  விரும்புகிறேன் என்றான். அனைவரும் சிரித்தார்கள். 

வீட்டிற்கு வந்த அவன் நடந்த சம்பவத்தை அப்படியே தன் அன்னையிடம்  மழலை மொழியில் விவரித்தான். 

அதற்கு அந்த புண்ணியவதி, “என் செல்லமகனே! என் வயிற்றில் பால் வார்த்தாய் கண்ணே! நீ சரியாகத் தானடா சொல்லியிருக்கிறாய்! அங்கே பார்! நமது பூஜையறையில்  உள்ள ஒரு படம். நமது வீட்டில் உள்ளவர்கள் பரம்பரை பரம்பரையாக உன் அப்பா, தாத்தா, அவர்களுடைய தாத்தா என பூஜித்த படம் அது. .  அதிலுள்ள  குதிரை வண்டிக்காரனைப் போல (அதில் சாட்டையைச் சுழற்றிய ஸ்ரீ கிருஷ்ணருடன் பாண்டுவின்  மைந்தன் அர்ஜூனனும், பின்புலத்தில் தேரில் பூட்டிய  பரிகள் வீராவேசமாகக் கிளர்ந்து நிற்கும் காட்சி)  இவ்வுலகிற்கு நீயும்  பெரிய உபதேசியாக வர வேண்டும் என் கண்ணே!” எனச் சொல்லி உச்சி முகர்ந்தாள் அந்த சிறுவனுடைய தாய். அவனே பின்னாளில் இவ்வுலகத்திலுள்ள அனைவராலும் போற்றி கொண்டாடப்படும்  சுவாமி விவேகானந்தர் ஆவார்.    

பரித்ராணாய சாதுானாம் விநாசாய சதுஷ்க்ருதாம்/
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே//

      (பகவத்கீதை: அத்தியாயம் 4, வசனம் 8)

எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து தலை துாக்குகிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் யுகம் யுகமாக என்பது  பகவான் ஸ்ரீ கிருஷ்ணபகவானின் திருவாக்கு.

எல்லாம் வல்ல பரம்பொருளே  காலச் சூழலுக்கு ஏற்றாற்போல பாரதத்தின் கீழ்த்திசையில் விவேகானந்தராகவும்  தென்திசையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராகவும்  அவதரித்து இருக்கிறார். அவர்களுக்குள் உள்ள ஒற்றுமை என்னென்ன  என்பதை தெரிந்து கொள்வதே இச்சிந்தனையின் முதன்மை நோக்கமாகும். 

(தொடர்கிறது)

$$$

One thought on “சுவாமி விவேகானந்தரும் பசும்பொன் தேவர்பிரானும்- 1 

Leave a comment