-பா.இந்துவன்
தமிழகத்தில் ஹிந்து சமயம் குறித்த போலி கருத்துருவாக்கங்கள் ஹிந்து எதிரிகளால் தொடர்ந்து புனையப்படுகின்றன. அதற்கு எதிராக, வலுவான சிந்தனைகளை முன்வைப்போரில் திரு. பா.இந்துவன் ஒருவர். இவரது முகநூல் பதிவு இது….

தமிழகத்தில் நடக்கும் மதப்பெயர் தொடர்பான அரசியல் என்பது மிக விசித்திரமானது. ‘ஹிந்து’ என்ற பெயரை எடுத்துக்கொண்டால் பத்தாம் நூற்றாண்டிற்கு முன்பு மதம் சார்ந்த பெயராக யாரும் இதனைப் பயன்படுத்தியதில்லை. அதற்காக பத்தாம் நூற்றாண்டிற்கு முன்பு ஹிந்து என்ற வார்த்தையே இல்லை என்பது முட்டாள்தனமான வாதமாகும்.
இன்றைய பாரத நிலப்பரப்பைக் குறிக்க ஹிந்து என்ற சொல்லாடல் 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பது வரலாற்று உண்மை. அதேபோல பக்தி இலக்கிய காலத்திற்கு முன்பு சைவம், வைணவம் என்ற சமயப்பெயர்கள் இல்லை. அதற்காக சிவ வழிபாடு, திருமால் வழிபாடு இருந்ததில்லை என்பதெல்லாம் அறிவீனர்களின் வாதங்களாகவே இருக்கும்.
பக்தி இலக்கிய காலத்திற்கு முன்பு சிவ வழிபாடும் இருந்தது, திருமால் வழிபாடும் இருந்தது. இவை பொதுவாக வேதங்களை ஏற்ற சமயங்களாகவே இருந்திருக்க வேண்டும் என்பது எனது பார்வை. என்னிடம் ஹிந்துக்களின் புனித நூல் எதுவெனக்கேட்டால் நிச்சயமாக பகவத் கீதையை சொல்ல மாட்டேன். மேலும் சிவகீதையையோ/ சிவபுராணத்தையோ கூட முன்மொழியும் எண்ணமில்லை. சைவம், வைணவம் போன்ற சமயப்பெயர்கள் தோன்றும் காலத்திற்கு முன்பாக வேதங்களே நமக்குப் பொதுவாக இருந்திருக்க வேண்டும். அதையே புனித நூலாகக் குறிப்பிடுவதும் சரியாக இருக்கும்.
ஆனால் இன்றைக்கு இருக்கும் வேதங்களும் அன்றைய காலத்தில் இருந்த வேதமும் ஒன்றா? எழுதாக் கிளவியான வேதம் எழுத்துரு பெற்று இத்தனை ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கும்போது மாற்றங்கள் அடைந்திருக்குமா? இன்றைய காலத்தில் அவற்றை அப்படியே ஏற்க வேண்டுமா? என்பதெல்லாம் ஆய்வுக்குரிது.
சோழர்கால கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் ராஜராஜ சோழனை சிவனுடனும், திருமாலுடனும், இந்திரனுடனும் ஒப்பிட்டுப் பேசுவதைப் போலவே, சைவம், வைணவம் போன்ற சமயப்பெயர்கள் தோன்றுவதற்கு முன்பே சங்க காலத்திலிருந்த நமது அரசர்களை பல தெய்வங்களுடன் ஒப்பிட்டுப் பாடிய பாடல்கள் ஏராளமானவை. ஒ
ஒருமுறை பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப் புகழ்ந்து பாடிய மருதன் இளநாகனார் என்ற புலவர் பாண்டியனை சிவன், திருமால், பலராமன், முருகனின் வீரத்துடன் ஒப்பிட்டுப் பேசுகிறார். அந்தப் பாடலின் சில வரிகள் இவை….
ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்,
கடல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும்
மணிமயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என
ஞாலம் காக்கும் கால முன்பின்
தோலா நல்இசை நால்வர் உள்ளும்
கூற்றுஒத் தீயே மாற்றருஞ் சீற்றம்;
வலிஒத் தீயே வாலி யோனைப்;
புகழ்ஒத் தீயே இகழுநர் அடுநனை;
முருகுஒத் தீயே முன்னியது முடித்தலின்…
–புறநானூறு- 56. (காலம்: பொ.யு.மு. 300)
இதன் பொருள்:
காளைக்கொடியை வெற்றியின் அடையாளமாக உயர்த்திப் பிடித்து, நெருப்புப் போல் ஒளிவிடும் சடையோடும், ஒப்பற்ற கணிச்சி என்னும் ஆயுதத்தோடும், நீலநிறக் கழுத்தோடும் காட்சி அளிப்பவன் சிவபெருமான். கடலில் வளரும் முறுக்கிய சங்கு போன்ற வெண்ணிற மேனியும், கொல்லுதலை விரும்பும் கலப்பையும், பனைக்கொடியும் உடையவன் பலராமன். கழுவப்பட்ட அழகிய நீலமணி போன்ற உடலும், வானளாவ உயர்ந்த கருடக் கொடியும் கொண்டு வெற்றியை விரும்புபவன் திருமால். நீலமணி போன்ற நிறத்தையுடைய மயிற்கொடியும், உறுதியான வெற்றியும், மயிலை ஊர்தியாகவும் (வாகனமாகவும்) கொண்ட ஓளிபொருந்தியவன் முருகன். இந்நான்கு கடவுளரும் உலகம் காக்கும் வலிமையும் அழியாத புகழும் உடையவர்கள். இந்த நால்வருள்ளும், உன்னுடைய நீங்காத சினத்தால் நீ அழிக்கும் கடவுளாகிய சிவனுக்கு ஒப்பானவன்; வலிமையில் பலராமனுக்கு ஒப்பானவன்; புகழில் பகைவரைக் கொல்லும் திருமாலுக்கு ஒப்பானவன்; நினைப்பதை முடிப்பதில் முருகனுக்கு ஒப்பானவன்!
இவ்வாறு சங்க காலத்திலேயே சிவன், திருமால், முருகன் போன்ற தெய்வங்கள் ஒருமித்து குறிப்பிடப்படுவதாலும் அக்காலத்தில் சைவம், வைணவம் என்ற தனித்த சித்தாந்த சமயங்கள் இல்லாத காரணத்தாலும் சிவன், திருமால் போன்ற தெய்வங்களை இன்று தனித்தனி கூண்டுகளில் அடைக்க வேண்டும் என்று கூறுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அப்படி அடைக்க முயற்சித்தால் சித்தாந்த முரண்பாடுகளின் அளவு அதிகரிக்குமே அன்றி இதற்கு தீர்வு என்பதே இல்லை.
இதன் காரணமாக நடந்த மோதல்களை வரலாற்றில் நாம் ஏராளமாகக் கண்டுள்ளோம்.
வேதங்களைப் பொதுவாக ஏற்ற அனைத்து இந்திய சமயங்களையும் ‘ஹிந்து’ என்ற பண்பாட்டு கலாச்சாரங்களை தாங்கி நிற்கும் பெயரில் அழைப்பதில் யாதொரு பிழையும் இருக்க முடியாது. இன்றைய சூழலில் ஹிந்து, இந்தியா போன்ற பெயர்கள் நமது அடையாளத்திற்கு மிகவும் அவசியமானதே!
$$$