-ரெங்கையா முருகன்
வேதாந்தத்தை தமிழில் வழங்கும், நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெளியான நூல் குறித்து அறிமுகம் செய்கிறார், நூலகரும், எழுத்தாளருமான திரு. ரெங்கையா முருகன்....

நூல்: மோட்சசாதன விளக்கம்
ஆசிரியர்: காஞ்சிபுரம் நிச்சல – இராமநந்த ஸ்வாமிகள்
பதிப்பு வருடம்: 1906
வெளியீடு: மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம்.
பொருள்: தமிழ் வேதாந்த கலைக்களஞ்சியம்
வேதத்தைவிட்ட வறமில்லை வேதத்தின்
ஓதத் தகுமற மெல்லா முள தர்க்க,
வாதத்தை விட்டு மதிஞர் வளமுள்ள,
வேதத்தை யோதியே வீடு பெற்றார்களே.
-திருமந்திரம்.
தமிழில் சைவ சித்தாந்தம், வைணவம் போன்ற தத்துவங்களுக்கு கலைக்களஞ்சியம் இருப்பது போல தமிழில் வேதாந்தத்திற்கு முக்கிய கலைக்களஞ்சியம் ‘மோட்ச சாதன விளக்கம்’.
இந்த கலைக் களஞ்சியம் வசன வினா – விடை வடிவில் படைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலைக் களஞ்சியத்தை தொகுத்தவர் நிச்சல இராமநந்த சுவாமிகள் என்ற அடையாளப் பெயரால் வழங்கப்பட்ட, காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு எனும் பெரும் வித்வான். இவர் திருவருட்பிரகாச வள்ளலார் மரபில் வந்தவர்.
இந்தக் கலைக்களஞ்சியத்தில் மேற்கோள் நூல்களாக, சமஸ்கிருத உபநிடதங்கள் 57 நூல்களும், கீதை வகையில் 10 நூல்களும், புராண வகையில் 18 நூல்களும், இதர சமஸ்கிருத நூல்களுள் 26 நூல்களும், தமிழ் தத்துவ சமய நூல்களுள் 149 நூல்களும் உள்ளன. மொத்தத்தில் 260 நூல்களின் சாராம்சங்கள் அடங்கியுள்ளது.
மோட்ச சாதன விளக்கத்தில் 279 ஞானசாதன விசயங்கள் மேற்கண்ட நூல்கள் மூலம் விளக்கப்படுகிறது.
குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் நடைபெறும் ஆரோக்கியமான வாத- விவாத மரபின் அடிப்படையில் வினா – விடை வடிவில் அலசப்படுகிறது.
இந்த நூலில் சம்வாதங்கள் உள்ளன.
- வாதம் என்பது உண்மையை உணரும் வேட்கையையுடைய குரு- சீட வாதம்.
- யுக்தி பிரமாணங்களில் வல்ல பண்டிதர்களின் வாதம் சொற்ப வாதம்.
- சான்றுகள் இல்லாத மூர்க்க வாதம் விதண்டாவாதம்.
-என, வாத- விவாதம் குறித்த பொருளடைவு இந்த நூலில் அடங்கியுள்ளது.
ஒவ்வொரு ஞான சாதன வினாக்களுக்கும் சான்றுகளாக திருவாசகம், திருமந்திரம், கைவல்ய நவநீதம், தேவாரம், திவ்ய பிரபந்தம், திருக்குறள் ஆகிய நூல்களிலிருந்து தக்க சான்றுகளுடன் எளிதாக வாசித்து உணரும் வகையில் விளக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு ‘சாதி’ குறித்த விளக்கம்:
சீடர்: சாதி என்பதென்ன?
குரு: சாதியென்பது தொன்றுதொட்டு ஸ்தூல தேகத்தில் கன்மபேதத்தால் பிராமணன், சத்திரியன் என்று கற்பிக்கப்பட்டு வந்ததோர் தன்மையாம். ஆனால் சூக்கும தேகத்திற்கும் காரண தேகத்திற்கும் எக்காலத்தும் சாதி என்பது இல்லை
-என்று கூறிவிட்டு, சூதசங்கிதை, சிவவாக்கியர், அதிரகசியம், திருவாசகம் போன்ற நூல்களிலிருந்து குறிப்பிட்ட பாடல்களை தொகுத்து விளக்குகிறது.
சாதி சண்டாளன், கரும சண்டாளன் பற்றி விளக்கும் போது “சாதி சண் டாளன் கதிபெருந் தருமம் வழுவலிற் கன்ம சண் டாளன் ஒதிய வழிக ளொன்றினுங் கதிதா னுற்றிடா ரென்பதுண் மையதே” என்ற சிவஞான நியம நூலின் வெண்பா வழியாக விளக்கப்படுகிறது.
குரு சீடர் இலக்கணம், சரியை, கிரியை, யோகம், கர்மம்,பக்தி,துறவு இலக்கணம், நிர்க்குணபூசை, தத்துவ போதம், சமாதி இலக்கணம், தத்துவ ஞானம் பலன், சாதி சங்கற்பத்தினை விடுதல் போன்ற ஏராளமான விசயங்களை, பல தத்துவ நூல்களில் இருந்து மணி போல கோர்த்து விளக்கமும் அளிக்கப்படுகிறது.
இந்த நூல் இலக்கண இலக்கிய தர்க்க வேதாந்த போதகாசிரியர் கோ.வடிவேலு செட்டியார் அவர்களால் பார்வையிடப்பட்டது. ஏற்கனவே செட்டியார் தர்மராஜ் தீட்சிதர் எழுதிய வேதாந்த பரிபாஷை நூலினை தமிழில் ஆக்கித் தந்தவர் என்பது தெரிந்துகொள்ள வேண்டிய கூடுதல் தகவல்.
இந்த நூலினை வரவேற்று அபிப்பிராயம் தெரிவித்த பண்டிதர்கள் மகாவித்துவான் கா.நமச்சிவாய முதலியார், ம.தி.பாநுகவி, புதுவை பராங்குசநாவலர், அத்வைத சண்டமாருதம் விச்சூர் முத்துக்குமாரசுவாமி முதலியார், பொதிகை சித்தர் மரபு ல.நாராயணசாமி நாயகர், தண்டரை சுப்பராய ஆச்சாரி மற்றும் பலர்.
தமிழ் வழியில் வேதாந்தம் பயில்வோர்களுக்கு இந்த நூல் மிகச்சிறந்த கை விளக்கு.
1906 ஆம் ஆண்டு இந்த நூல் மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடத்தாரால் பதிப்பிக்கப்பட்ட வெளியாகிய ஆகச் சிறந்த வேதாந்த கலைக் களஞ்சியம் இன்று வரை மீள் பதிப்பு வரவில்லை.
$$$