உடலுக்கு உழவாரம்… உள்ளத்திற்கு தேவாரம்!

-கருவாபுரிச் சிறுவன்

முன்னோர்கள் உருவாக்கிய கோயில்கள் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்பது வேதாகமத்தினுடைய சிவ வாக்கு. அவற்றிற்கு சிறு சேதாரம் இல்லாமலும், பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் பலரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் உழவாரப்பணி அமைப்பினை உருவாக்கி உண்மை சிவநேயர்கள் தொண்டு செய்து வருகிறார்கள். அவர்களது தொண்டு மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல அங்கயற்கண்ணி  சமேத ஆலவாய் அண்ணல் திருவருள் புரிவதாகுக.
பதிகம் ஏழ்எழுநுாறு பகரும் மாகவியோகி,
         பரசு நாவரசு ஆன பரம காரண ஈசன்
அதிகை மாநகர் மேவி அருளினால், அமண் மூடர்
         அவர் செய் வாதைகள் தீரும் அனகன் வார் கழல் சூடின்,
நிதியராகுவர்; சீர்மை உடையராகுவர்; வாய்மை
         நெறியராகுவர்; பாவம் வெறியராகுவர்; சால
மதியராகுவர்; ஈசன் அடியராகுவர்; வானம்
           உடையராகுவர்; பாரில் மனிதரானவர் தாமே. 

             -நம்பியாண்டார் நம்பிகள்

ஹிந்து மதத்திலுள்ள இரு பெரும் சமயங்களில் முதன்மையானது சைவ சமயம். இச்சமயம் அநாதியானது. இவ்வுலகம் எப்போது தோன்றியதோ அப்போதிருந்தே இச்சமயமானது இருக்கிறது. தொன்மையானது. மற்ற சமயங்களைத் தோற்றுவித்தவர்கள் உண்டு. ஆனால்  சைவ சமயத்தைத் தோற்றுவித்தவர் இவர்தான் என அறுதியிட்டும் உறுதியாகவும் யாராலும் கூற முடியாத தனித்தன்மை வாய்ந்தது. இச்சமயத்தின் ஆசிரியர் பெருமக்களாகிய சமயக்குரவர்கள், நம் நால்வர்களாகிய சற்குருநாதர்கள்.  

சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதில்சார் சிவமாம்
தெய்வத்தின்மேல் தெய்வம்இல்லெனும் நான்மறைச் செம்பொருள்
வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும்
உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம்முயிர்த்துணையே!

-எனத்  அருணைக்கலம்பகத்தில்  சைவ எல்லப்ப நாவலர் ஆச்சாரியார்களின் திருவடியைப்  போற்றித்துதிக்கிறார்.

திருநெல்வேலியில் சுந்தர ஓதுவார் என்னும் பண்ணிசைவாணர் மதிப்பிற்குரிய மறைமலை அடிகளார் காலத்தில் வாழ்ந்தவர்.  ஓதுவார்களுக்கு அம்மூர்த்திகள் ஒரு சிறந்த முன்னுதாரணம் என சங்கரன் கோயில் சைவ சரபம் மா.பட்டமுத்து அவர்கள் ஒரு சொற்பொழிவில் குறிப்பிட்டுள்ளார். அம்மூர்த்திகளே திருமுறை இசை அரங்குகளில்  மேற்கண்ட  ‘நால்வர் பொற்றாள் எம்முயிர்த் துணையே’ என்னும் பாடலைப் பாடிய பிறகு சித்தி விநாயகர் துதியுடன் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கலாம் என்கிற மரபினை உண்டாக்கிய பெருமைக்குரியவர் என திருச்சி முத்துக் கந்தசாமி தேசிகர் அவர்கள் சொல்லியிருக்கிறார்.

சைவத்தமிழ் இலக்கிய வரலாற்றில் தேவாரம் என்ற சொல் பொதுவாகவும், சிறப்பாகவும் 4,5,6 ஆகிய திருமுறைகளில் இடம்பெற்றுள்ளது. இதனை இவ்வுலகிற்கு அளித்தவர்  திருநாவுக்கரசராகிய தாண்டக வேந்தர் ஆவார்கள்.

அனைவரும் வாருங்கள் என யாரையும் கூவி அழைக்கவில்லை, இதைச் செய்யுங்கள் என்று யாருக்கும் உத்தரவு இடவில்லை. வயது முதிர்ந்தாலும், தன்னுடைய உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் அவரே அப்பணியை  செய்தார். தம்பணியை  தாமே செய்தார். அந்தத் தெய்வீகப்பணி தான் உழவாரப் பணி. 

உழவாரத்தின் மூலம் உடல் வலிமை பெறும், அவர்கள் பாடிய தேவாரத்தின் மூலம்  உள்ளம் வலுப்பெறும் என்பதை உணர்ந்த நம்மவர்கள் உழவாரத்தையும் தேவாரத்தையும் தம்மிரு கண்களாகக் கொண்டு வாழ்ந்து காட்டி, வழி நடத்தியும் உள்ளார்கள்.

மருள்நீக்கியாரை திருநாவுக்கரசர் என சிவபெருமான் தம் திருவாயால் அழைத்தும், ஒருநாவுக்கு உரை செய்யாத அடியேனா… திருநாவுக்கரசு என தன்னை தாழ்த்திக் கொண்ட ஒப்பற்ற தலைவர், தன் கைகளில் உழவாரப்படை ஏந்தியவாறும் தேமதுர தேவாரப் பாடல்களைப் பாடியவாறும் சைவ ராஜஸ்தானங்களில் ஒன்றாகிய திருவாரூர் திருவீதிகளில் இந்த உலகம் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக வலம் வந்தார் என்கிறார் நம் தெய்வச்சேக்கிழார் சுவாமிகள்:  

மார்பார பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுர வாக்கில்
சேர்வாகும் திரு வாயில் தீந்தமிழின் மாலைகளும் செம்பொன் தாளே
சார்வான திருமனமும் உழவாரத்தனி படையும் தாமுமாகி
பார் வாழ திரு வீதி பணி செய்து பணிந்து ஏத்தி பரவி செல்வார்.                                                                                      

உழவாரப் பணியினை ஸ்தாபனம் செய்த ஸ்தாபகர்

  • தென்குமரி முதல் திருக்கயிலாயம் வரை சென்று தரிசித்தவர்.
  • சைவ சமயக்குரவர்கள் நால்வரிலும், நடுநாட்டில் திருஅவதாரம் செய்த நாயன்மார்கள் எழுவரிலும்,  வேளாண்மரபில் உதித்த பதின்மூவரிலும், திருமுறை ஆசிரியர்கள் இருபத்தேழு அருளாளர்களிலும் ஒருவராக திகழக்கூடியவர் நம் திருநாவுக்கரசு தேவ நாயனார்.
  • தொண்டே சிவம்… சிவமே தொண்டு என சுழன்று சுழன்று திருப்பணிகள் செய்த சிவத்தொண்டர் அவர்.  
  • சிவபெருமானின் திருவடியை தன் நெஞ்சில் பதித்த அஞ்சா நெஞ்சர் அவர்.
  • ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ என உயிர்களுக்கு உத்தரவாதம் கொடுத்த உத்தமர் அவர்
  • ஆறாம் நுாற்றாண்டில் ஆயிரம் பிறை கண்ட அற்புதர் அவர்.
  • ஆடவல்லானின் ஆதிரை நாளினை அங்குலம் அங்குலமாக படம் பிடித்துக் காட்டிய பரம யோகி அவர்.
  • அற்புதங்கள் பல நிகழ்த்தி ஆதி சிவனின் அருமைகளையும் பெருமைகளையும் பரப்பிய அண்ணல் அவர்.
  • உண்ணா நோன்பினை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்த முதல்வர் அவர்.
  • ஆண்டான் – அடிமை தத்துவத்திற்கு இலக்கணமாகி புரட்சி பல செய்த எழுச்சி நாயகன் அவர்.
  • ஆளுடைய பிள்ளையாரால் அப்பரே என அழைக்கப்பெற்ற அருள்ஞானி அவர்.
  • திருவையாற்றில் கயிலைக்காட்சி கண்ணுற்று திருப்புகழுரில் திருவாளன் திருவடியில் கலந்த தெய்வீக முனிவர் அவர்.
  • நம்பியாண்டார் நம்பி அருளிய திருவேகதாச மாலைக்குரிய மன்னவன் அவர்.
  • சிவபிரானின் திருவடியைப் பணிந்துய்ந்த அறுபத்து மூவர் – ஒன்பது தொகையடியார்களில் இருபத்தொன்றாமவராக வைத்து 429 விருத்தப்பாக்களைப் பாடிய தெய்வச்சேக்கிழாரின் திருவாக்கிற்கு சொந்தக்காரர் அவர். 
  • இன்தமிழுக்கு மன்னவர், கலைமொழிக்கு நாதர், பேதமில்லா ஓருணர்வில் பெரியார், மண்பரவும் பெருங்கீர்த்தி வாகீசராம் நம் திருநாவுக்கரசு சுவாமிகளைப் பற்றி வடமொழியில் உபமன்யு பக்த விலாசம், அகத்திய பக்த விலாசத்தில் பாடப்பட்டிருக்கிறது.
  • மேலும், தெலுங்கில் சிவபக்த லீலாம்ருதத்திலும், கன்னட மொழியில் பசவ புராணம், ரிஷபேந்திர விஜயம், சிவானந்த ரகளெ போன்ற நூற்கள் வாயிலாக திருநாவுக்கரசு பெருமானின் அருள் வரலாற்றினைப் படித்து மகிழலாம்.
புல்லோடும் தழையோடும் பூசிப்பார் தமக்கெதிரே
வல்லோடும் தனத்துமலை மகளோடும் வருவானைச்
சொல்லோடும் பொருளோடும் துணிவோடும் பாடிநெடுங்
கல்லோடு மிதந்தானைக் கருத்தோடும் பணிகுவமால்.
      
       -திருச்சுழியல் ஆராவமுதாசாரியார்

உழவாரப்பணி செய்யலாம்…

ஞானத்தை உணர்ந்தவர்கள் அதை மக்களுக்கு விளக்கும் விதமாக இப்பாரத தேசத்தில் மன்னர்கள் உதவியுடன் மாபெரும் கோயில்களை உருவாக்கினார்கள். சித்தர்களில் ஒருவரான திருமூல தேவநாயனார்  ‘யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம்’ என்ற வாக்கின்படி எல்லோரும் உயர்வை அடைய வேண்டும் என்பதே கோயில்கள் உருவாக்கியதின் முக்கிய நோக்கம்.

எடுத்துக்காட்டாக கோயில் கருவறையில் இருக்கும் சுவாமியின் திருவுருவை ஆன்மாவாக (உயிராக) பாவிப்பர். கருவறையை மனித முகத்தோடு ஒப்பிடுவர்.  இது போன்ற  தத்துவங்கள் நிறைய உள்ளன. அதனால்தான் அண்டத்திலுள்ளது (உலகம்) பிண்டத்திலும்,  பிண்டத்திலுள்ளது (உடல்) அண்டத்திலும் என்கிற சொல்லாட்சி வந்தது. இதை விளக்குவதே கோயில்கள். இன்று வரை கோயில்கள் பாதுகாக்க பட்டு வருவது மிகப்பெரிய விஷயம்.  

கோயில்களில் விண்ணை முட்டி நிற்கும் கோபுரங்கள், மதிற்சுவர்கள், கலைநயமிக்க துாண்கள், புராணச் செய்தி, வரலாறுகளைச் சொல்லும் ஓவியங்கள், தெய்வீக நுட்பத்தோடு உருவாக்கப்பட்ட கோயிலில் விழா காணும் உற்ஸவர்கள் இன்னும் சிறப்புடைய அரிய செய்திகளை சொல்லியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.

சுசீந்திரம் தாணுமாலயர், திருநெல்வேலி காந்திமதியம்பாள், மதுரை மீனாட்சியம்பிகை, தஞ்சை பெருவுடையார், அவிநாசி அவிநாசியப்பர், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் இப்படி தமிழகத்தில் புகழ் பெற்ற கற்கோயில்கள் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டு உள்ளன. இது போன்ற கோயில்களை தற்காலத்தில் மக்களால் உருவாக்க முடியுமா என்றால், அது முடியாது என்பதுதான் உண்மை.

இக்கோயில்களால் அரசுக்கு கிடைக்கப்பெரும் வருமானம் மட்டும் கோடிக்கணக்கு. ஆனால் அவை யாவும் முறையாக அரசு பராமரிக்கிறதா… என்பதுதான் ஹிந்து மக்களின் நீண்ட நாள் ஐயப்பாடு. இது பற்றிய விரிவான கட்டுரை ஒன்றினை சான்றாதாரங்களுடன் மற்றொரு இடத்தில் சிந்திப்போம்.  

முன்னோர்கள் உருவாக்கிய கோயில்கள் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்பது வேதாகமத்தினுடைய சிவ வாக்கு. அவற்றிற்கு சிறு சேதாரம் இல்லாமலும், பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் பலரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் உழவாரப்பணி அமைப்பினை உருவாக்கி உண்மை சிவநேயர்கள் தொண்டு செய்து வருகிறார்கள். அவர்களது தொண்டு மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல அங்கயற்கண்ணி  சமேத ஆலவாய் அண்ணல் திருவருள் புரிவதாகுக.

திருவருள் கிடைக்க தேவாரம் படியுங்கள்

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை
சூழ்த்த மா மலர் துாவி துதியாதே
வீழ்த்த வா வினையேன் நெடுங்காலமே!

விறகில்தீயினன், பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச்சோதியான்;
உறவுகோல் நட்டு, உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே!

-இப்பாடல்களை மீண்டும் மீண்டும் நமக்குள்ளே படிக்க படிக்க அதன் அர்த்தம் நன்றாக தெரிய வரும் போது மிகப்பெரிய மகாலில் சிறந்த உபன்யாசகரிடம் சொற்பொழிவு கேட்டுவிட்டு  வெளிவரும் உணர்வு ஏற்படும்; ஏற்பட வேண்டும். இது போன்ற  எண்ணற்ற தேவாரப் பாடல்களை நமக்கு உபதேசம் செய்து அருளி  நூறு ஆண்டுகள் நிறைவாய் நிம்மதியாக வாழ்வதற்கு  உத்தரவாதம் அளித்துள்ளார் அப்பர் சுவாமிகள்.

உழவாரப்பணி என்றால்…

  • திருக்கோயில்களில் மூலஸ்தான கருவறைக்கு வலப்புற உட்பிரகாரத்தில் சமயக் குரவர்கள், அறுபத்து மூவர் சன்னதிகள் இருக்கும். அதில் புற்களைச் செதுக்கும் கருவியை தோளில் தாங்கி காட்சியளிப்பவரே திருநாவுக்கரசு சுவாமிகள் ஆவார்.
  • திருக்கோயில்களில் கொடியேற்றப்பட்டு நடைபெறும் விழாவில் முதல் நாளில் இவர் வீதி வலம் வந்த பிறகே, ரிஷபம், யானை, சிங்கம், மயில், அன்னம், கிளி போன்ற வாகனத்தில் சுவாமியின் வீதியுலா நடைபெறும்.
  • தமிழக திருக்கோயில்களில் நடைபெற்ற இந்த சம்பிரதாய நடைமுறை வீதியுலாவை வருமானம் இல்லாத கோயில்களில் நிறுத்திய பெருமை (?) தமிழக அரசு ஹிந்து சமய அறநிலையத்துறைக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது. 
  • அகத்துாய்மையோடு புறத்துாய்மையும் (உள்ளம் – உடல்) முக்கியம் என்பதை உணர்த்துவதே உழவாரப்பணியின் குறிக்கோள்.   
  • ஒவ்வொரு ஊரிலும் கோயில் கொண்டிருக்கும் தெய்வத்திற்கு உடலால் செய்யும் இத்தொண்டு மகத்தானது. இதனை விதவிதமாக பலரும் செய்கிறார்கள். அவற்றுள் சில…
  • தீபம் ஏற்றப்படாத கோயில்களுக்கு சென்று சன்னிதியில் தீபமேற்றி சுவாமிக்கு அபிேஷகம் செய்து பலரும் வழிபட வழி வகுத்தல்.
  • சன்னிதியில் இருக்கும் ஒட்டடை, தூசி போன்றவற்றை நீக்கி சுத்தமாக்குதல்.
  • கோயில்களில் பக்தர்கள் நடந்து செல்லும் பாதை, பிரகாரங்களில் உள்ள முட்செடி, களைகளை அகற்றுதல்.
  • மதிற்சுவர், கோபுரம், விமானத்தில் வளர்ந்திருக்கும் மரம், செடி, கொடிகளை அகற்றுதல்; மீண்டும் முளைக்காதவாறு ஏற்பாடு செய்தல்.
  • கோயில்களில் குவிந்திருக்கும் குப்பைகளை முழுவதுமாக அப்புறப்படுத்துதல்.
  • சன்னிதி, சுவர்களில் உள்ள எண்ணெய்ப் பிசுக்களை அகற்றுதல் 
  • கோயில்களில் பயன்படுத்தப்படும் விளக்கு, மணி, செம்பு உள்ளிட்ட அங்குள்ள பித்தளை, தாமிரப் பாத்திரங்களை சுத்தம் செய்து கொடுத்தல்.
  • தூண்களில் கொட்டப்பட்டிருக்கும் திருநீறு, குங்குமம் போன்றவற்றை தூய்மைபடுத்தி அதற்கென தனியிடத்தை அமைத்துக் கொடுத்தல்.
  • சுவாமிக்கு அணிவிக்கப்படும் வஸ்திரங்களை சலவை செய்து கொடுத்தல்.
  • பிரகாரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நந்தவனங்களைப் பராமரித்தல்.
  • சுவாமிக்கு அணிவிக்கும் பூக்களை நந்தவனத்தில் இருந்து பறித்தல்; அதையே மாலையாகத் தொடுத்துக் கொடுத்தல்.
  • சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்த நீர் செல்லும் வழியைச் சரி செய்தல்.
  • கோயிலில் உள்ள தீர்த்தக் கிணற்றினைத் துார்வாருதல்; சுவாமி அபிஷேஷகத்திற்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்தல்
  • வீதியுலாவில் சுவாமி எழுந்தருளி வரும் யானை, மயில், ரிஷபம் போன்ற வாகனங்களைத் துாய்மைப்படுத்திக் கொடுத்தல்
  • விழாக்காலங்களில் சன்னிதியிலுள்ள அர்ச்சகர், இதர பணியாளர்களுக்குத் தேவையான உதவிகளை செய்தல்.
  • பக்தர்களுக்கு தர்ம தரிசனம் செய்ய உதவுதல்; தற்காலிக தண்ணீர்ப் பந்தல், அன்னதானக்கூடம் அமைத்தல்
  • வெளியூரில் இருந்து வரும் அன்பர்களுக்கு சுவாமியின் மகிமை, அத்தலத்தில்  வாழ்ந்த அடியார்களின் பெருமைகள், அவர்கள் ஆற்றிய தொண்டுகள் ஆகியவற்றை எளிய முறையில் எடுத்துச் சொல்லுதல்.
  • அருகில் இருக்கும் கோயில்களின் சிறப்புகளைச் சொல்லி அங்கும் பக்தர்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்தல்.
  • விழாக்காலங்களில் தகவல் உதவி மையம் அமைத்து பொதுமக்களை ஆற்றுப்படுத்துதல்.
  • திருக்கோயில் வரலாறுகளை அனைவரும் தெரிந்து கொள்ளுமாறு, பழமை மாறாமல் புத்தகமாக அச்சிட்டுக் கொடுத்தல்.
  • வெயில், மழை போன்றவற்றில் காய்ந்து, நனைந்து இருக்கும் சிவலிங்கங்களுக்கு மேற்கூரை அமைத்தல்.
  • பழமையான கோயில்களைத் தேடிச் சென்று திருப்பணி செய்தல்; ஒரு வேளை பூஜை முறையையாவது உருவாக்குதல்
  • ‘சிவத்தொண்டே உயிர் மூச்சு’ என வாழ்ந்து பணி செய்பவர்களை உற்சாகப்படுத்துதல்; ஊக்கம் அளித்தல்.  

-இன்னும் மேன்மையான பல பணிகளை உள்ளடக்கியது உழவாரப்பணியாகும்.

திருநீற்றை மெய்யழுத்தி அஞ்செழுத்தை
               நெஞ்சழுத்திச் சிலைக்கை  மார
னுருநீற்றும் பெருமானை யுறவழுத்திச்
              சமணரெனும்  ஒன்னார் மூட்டும்
பொருநீற்றுக் குடவறையும் கடகரியும்
              விடவரவும் புறங்கண்டாழிக்
கருதீத்தங் கடப்பவொரு கற்றோணி
                யுகைத்தானைக் கருத்துள் வைப்பாம்

             -திரிகூடராஜப்பக் கவிராயர்              

அப்பரின் திருவடியே துணை

சிந்தை இடையறா அன்பும் திரு மேனி தன்னில் அசைவும்,
கந்தம் மிகையாம் கருத்தும் கை உழவாரப்படையும்
வந்து இழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திருநீறும்,
அந்தம்இலா திரு வேடத்து அரசின் திருவடியை 

நம்பிக்கையுடன் சிந்தனை செய்து உழவாரப்பணியில் கலந்து கொண்டால் நாளும் நலம் பெறலாம்.

  • உழவாரப்பணியில் கலந்து கொள்பவர்களுக்கு அவர்களது உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறும்.
  • திருக்கோயிலிலுள்ள தெய்வீகசக்தி துளக்கம் அடையும்.
  • தொன்று தொட்டு வரக்கூடிய கர்ம வினை குறைந்து, நல்வினை அதிகரிக்கும்.
  • நாள், நட்சத்திர, கிரக தோஷம் அகலும்.
  • பல பிறவிகளிலும் இப்பிறவியில் செய்த பாவம் தீரும்; புண்ணியம் அதிகரிக்கும்.
  • திருமணமாகாத கன்னியர், இளைஞர்களுக்கு திருமணம் நடக்கும்.
  • தொழில்,வியாபாரம் விருத்தி அடையும்; முன்னேற்றம் காணும்.
  • குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவர்.
  • தீராத நோய், சிக்கலான பிரச்னை தீர வழி கிடைக்கும்.
  • வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவர்களுக்கு ஒரு பிடிப்பை உண்டாக்கும்.
  • உழவாரப்பணியில் கலந்து கொண்டவர்களின் முன்னோர்களில் சாந்தி அடையாதவர்களின் ஆன்மாக்கள் சாந்தி பெறும்.
  • முன்னோர்கள் தெரியாமல் செய்த பாவத்திற்கு சிறந்த பரிகாரம் இது. மேலும் அவர்களது ஆசியையும் பெற வழிகாட்டும்.
  • ஞானிகள், முனிவர்கள், மகான்கள், சித்தர்களின் அருள் கிட்டும்.
  • அறிமுகம் இல்லாதவரின் அறிமுகமும், அவர்களிடம் இயல்பாகப் பழகும் வாய்ப்பும் அமையும்.
  • கோயில் நலனுக்காகப் பாடுபட்டவர்கள் மனதார வாழ்த்துவர்கள். அவர்களது நல்லிணக்கத் தொடர்பு கிடைக்கும்.
  • அங்கு வசிக்கும் மக்களுக்கு கோயில், கடவுள், தெய்வீகம் பற்றிய விழிப்புணர்வு உண்டாகும். அவர்களின் நன்மதிப்பினையும் பெறலாம்.
  • ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்திருக்கும் மூன்றாம் கண் என்கிற ஞானம் விழிப்படையும்.
  • கலந்து கொள்ளும் அனைவருக்கும் அன்பும், அறிவும் அதிகரித்து மன நிம்மதிக்கும் மகிழ்ச்சியான வாழ்விற்கு ஏற்ற வழியை உழவாரப்பணி தரும் என்பதில் சந்தேகம் எதுமில்லை.
கந்தை மிகையாம் கருத்தும் கையுழவாரப் படையும் கவின் வெண்ணீறும்
சிந்தையிடை அறஅன்பும் சிவஞானம் பழுத்தொழுரு செய்ய வாயும்
தந்தையொடு தாயிலான் திருவடிதை வருமனமும் தாரைக்கண்ணும்
நிந்தை அறுமுழுத்துறவும் உடைய பிரான் அடிபணிந்து நீடு வாழ்வாம். 

               -மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

இனிமேல் நாம்  செய்ய  வேண்டியது இது தான்

  • சித்திரை சதய நான்னாளில் சிவாலயம் சென்று திருநாவுக்கரசரின் சன்னிதியில் அவருக்கு விழா எடுப்பவருடன் கலந்துகொண்டு பணி செய்தல்.  
  • நாம் வசிக்கும் இடங்களில், அருகில் இருக்கும் திருக்கோயில்களில் தொடர்ந்து உண்மைத்தொண்டர்கள் நடாத்திக் கொண்டிருக்கும் உழவாரப்பணிகளுக்குச் சென்று ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஈடுபாட்டுடன்  திரிகரணத் துாய்மையுடன், உடல் வலுப்பெற உழவாரப்பணியிலும், உள்ளம் உறுதியடைய தேவாரம் பாடியும் சர்வலோக நாயகனாகிய சிவபெருமானை வழிபாடு செய்தல்.
  • திருக்கோயில் நிர்வாகத்தில் நியமிக்கக் கூடிய பணிகளில் உழவாரம் என்றொரு பணி உண்டு. அதில் எத்தனை பேர் அப்பணிக்கு காலந்தோறும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது பணி அன்று என்ன… தற்போது அப்பணியை இன்று யார் செய்கிறார்கள். இப்போதும் இம்முறை நடை முறையில் உள்ளதா…  என்பதையெல்லாம் முறையாக நீதிமன்றங்கள் மூலம் ஆவணத்தின் வழியாக ஆட்சியில், காட்சியில், சாட்சியின் வழியே  தமிழகத் திருக்கோயில்களில் உழவாரப்பணி செய்யும் நிர்வாகக் குழு அன்பர்கள் அனைவரும் அறிந்து, தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்
         வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தம் சிரத்தின் மேலான்
        ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதி னுள்ளான்
        பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான்
       காளத்தி யான் அவன் என்  கண்ணுளானே!

இடையறாப் பேரன்பும் மழைவாரும்
            இணைவிழியும் உழவாரத்தின்
படையறாத் திருக்கரமும் சிவபெருமான்
            திருவடிக்கே பதித்த நெஞ்சும்
நடையறாப் பெருந்துறவும் வாகீசப்
            பெருந்தகைதன் ஞானப்பாடல்
தொடையறாச் செவ்வாயும் சிவவேடப்
            பொலிவழகும் துதித்து வாழ்வாம்!

நமபார்வதீ பதியே! ஹர ஹர மகாதேவா!
சித்சபேச சிவசிதம்பரம்!

தென்னாட்டுடைய சிவனே போற்றி!
        எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
ஆடக மதுரை அரசே போற்றி!
          கூடல் இலங்கு குருமணி போற்றி!
காவாய் கனகத்திரளே போற்றி!
         கயிலை மலையானே போற்றி போற்றி!

திருச்சிற்றம்பலம்.

வாழ்க பாரதம்!  வாழ்க மணித்திருநாடு!

$$$

Leave a comment