-திருநின்றவூர் ரவிகுமார்

ஜெயமோகன் எழுதிய ‘யானை டாக்டர்’ என்ற சிறுகதை மிகவும் பிரபலம். அதில் யானைகளைப் பற்றி உயர்வாகவும், மனிதனுக்கும் யானைக்கும் இடையே நடக்கும் மோதல்கள் பற்றியும் சொல்லியுள்ளார்.
யானை நுண்ணுணர்வு மிக்க விலங்கு. மகா புத்திசாலியானது. கூட்டமாக, குடும்பமாக வசிப்பவை. யானை கூட்டத்திற்கு தலைமை எப்பொழுதும் ஒரு மூத்த பெண் யானைதான். பார்க்க சலிக்காத விஷயங்களில் ஒன்று யானை என்பார்கள்.
ஆப்பிரிக்க கண்டத்திலும் ஆசிய கண்டத்திலும் யானைகள் அதிகம். ஆனால் இரண்டும் வெவ்வேறு வகைகள். ஆப்பிரிக்க யானைகளை உயிருடன் பிடித்து ,பழக்கி, பயன்படுத்திக் கொண்டதாக தெரியவில்லை. அது வேட்டையாடப்பட்டிருக்கிறது, தந்தங்களுக்காக. ஆனால் இந்தியர்கள் யானைகளைப் பிடித்து, பழக்கி, அதை வேலை செய்ய மட்டுமல்ல, போரிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு பத்மஶ்ரீ விருது பெற்ற பார்வதி பரூவா அப்படி பட்டதொரு உலகில் சிறந்த யானை பிடிப்பு மற்றும் பயிற்சியாளர். சாதாரணமாக ஒரு பாகன் அதிகபட்சமாக 55 கட்டளைகளை யானைக்கு இடமுடியும் என்கிற நிலை உள்ளது. பார்வதி பரூவா 250 கட்டளைகளை இடக் கூடியவர். சீனாவில் சில பகுதிகளில் யானைகள் இருந்தாலும் சீனர்கள் யானைகளைப் பயன்படுத்தியதாகத்தெரியவில்லை.
மனிதர்களுக்குள்ள சிறப்பே அவர்கள் எதையும் தனித்தனியாகப் பெயரிட்டு அடையாளப்படுத்துவது. முதலை வாயிலில் அகப்பட்டு பெருமாளை அழைத்த யானையின் பெயர் ‘கஜேந்திரன்’. இந்திரனின் யானை ‘ஐராவதம்’.
யானைகளுக்கு மட்டுமல்ல, கிளிகளுக்கும் பெயரிட்டுள்ளார்கள். கிளிகளுக்குப் பெயரிட்டது மட்டுமல்ல அது பெருமாளின் பெயரைச் சொல்லி கூவி அழைக்கவும் பயிற்றுவித்தார்கள். நாய்களுக்கும் கூட பெயரிட்டுள்ளோம். அதுவும் தன் பெயர் என தெரிந்துகொண்டு பதில் அளிக்கும். ஆனால் விலங்குகள் தங்களுக்குள் பெயரிட்டு அழைக்குமா?

யானைகள் தங்களுக்குள் பெயர் வைத்துக்கொண்டு அந்த பெயரைச் சொல்லி அழைக்கின்றன என்கிறார் கார்னீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விலங்கியலாளர் மிக்கி பார்டோ. கென்யாவில் யானைக் கூட்டத்தைக் கவனித்து, அதன் பழக்க வழக்கங்களை ஆராய்ந்த குழு இந்தத் தகவலைத் தெரிவிக்கிறது.
மனிதர்களின் கேட்கும் திறனை விடக் குறைவான டெசிபலில் வரும் ஒலியைக் கூட யானைகள் கேட்டுத் தெரிந்து கொள்கின்றன. அதே குறைந்த டெசிபலில் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன என்பது பலரும் அறிந்த விஷயம். ஆனால் பெயரிடுவது என்பது மிகவும் அறிவுள்ள நிலையில் செய்யப்படுகின்ற ஒரு செயல். அதை ஆப்பிரிக்க யானைகள் செய்கின்றன என்பது ஆய்வின் முடிவு. எந்தப் பெயருக்கு (ஒலிக்கு) எந்த யானை பதிலளிக்கிறது என்பதை இப்போது கூர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள். அதற்காக சீரிய ஒலிவாங்கிகளையும் ஒலிப்பதிவு கருவிகளையும் கொண்டு ஆய்வு தொடர்கிறது.
ஆப்பிரிக்க யானைகளைப் போல ஆசிய யானைகளும் பெயரிட்டு அழைக்கின்றனவா? என்ற கேள்விக்கு அந்த அறிஞர், “நான் அந்த யானைகளை ஆராயவில்லை. எனவே எனக்கு அது பற்றி தெரியாது. ஆனால் ஏன் இருக்கக் கூடாது?” என்று பதில் கேள்வி எழுப்பினார்.
ஆசிய யானைகள் தங்களுக்குள் பெயரிட்டுக் கொண்டு அழைப்பது மட்டுமின்றி, நம் (மனிதர்களின்) பேச்சை போலி (மிமிக்ரி ) செய்கின்றன என்கிறார் ஆஸ்திரியாவை சேர்ந்த விலங்கியலாளர் ஏஞ்சலா ஸ்டோகர் (Angela Stoeger). இவர் வியன்னாவில் உள்ள அறிவியல் கழகத்தின் பாலூட்டிகளின் தகவல் தொடர்பு துறையின் தலைவராக (Head of Mammal Communication) உள்ளார். (இப்படி எல்லாம் கல்வி துறைகள் இருக்கின்றன மேலைநாடுகளில்!)

அவர் ஒரு நேர்காணலில், “ஒரு யானை குடும்பம் மற்றொரு யானைக் குடும்பத்துடன் தொடர்பு கொள்கிறது. அத்துடன் குறிப்பிட்ட யானையையும் குறிப்பாக தொடர்பு கொள்கிறது. ஆண் யானைக்கு மத நீர் வழிவதையும் அதற்காக ஜோடிக்கு தகவல் தெரிவிக்கின்றன.”
“யானைகள் மிகவும் புத்திசாலியானவை. அவை தங்களுக்குள் பெயரிட்டுக் கொள்வதும் தகவல் பரிமாறிக் கொள்வதும் மட்டுமன்றி, நம் (மனிதர்களின்) பேச்சை, பறவைகளின் ஒலியை அவை போலி (மிமிக்ரி) செய்கின்றன.”
“நான் கொரியாவில் ஒரு யானையை – அதன் பெயர் கௌஷிக் – பின்தொடர்ந்து ஆய்வு செய்தேன். அது தன் துதிக்கையை வாயில் இட்டுக் கொண்டு மனிதர்களின் பேச்சொலியை எழுப்புவதை பதிவு செய்துள்ளேன். யானையின் துதிக்கையில் 40 ஆயிரம் தசைகள் உள்ளன. அதில் குறிப்பிட்ட தசையை பயன்படுத்தி மனித பேச்சொலியை எழுப்புகிறது கௌஷிக்.“
“இது யானைகள் புத்திசாலிகள் மட்டுமின்றி ஒலியைப் புரிந்து கொள்ளவும், அதை அடையாளப் படுத்தக்கூடிய கவனத்திறன் கொண்டவை என்பதை நிரூபிக்கின்றது.”
”இப்போதெல்லாம் யானைகளின் வழக்கங்கள் மாறிக்கொண்டு வருகின்றன. அவற்றுக்கு ஏகப்பட்ட மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனால் அவற்றின் குரலிலும் அந்த கடுமை எதிரொலிக்கிறது. இதற்குக் காரணம் மனிதர்கள். யானைக் குடும்பம் இடம்பெயரும்போது அவற்றின் குரல் கடுமையாகவும், மிகுந்த அழுத்தத்திற்கு உட்பட்டதை தெரிவிக்கும் விதமாகவும் இருக்கிறது. தங்களது வழக்கமான வசிப்பிடத்திற்கு வந்ததும் அவற்றின் குரல் மீண்டும் சகஜமாக, இயல்பாக மாறிவிடுகிறது.”
“நாங்கள் இந்த ஒலிகளின் பொருளைத் தெரிந்துகொள்ள மேலும் கூர்ந்த கவனத்துடன் ஆராய்ந்து வருகிறோம் . அப்படிப் புரிந்துகொள்ள முடியுமென்றால் மனித – யானை மோதலைத் தவிர்க்க முடியும் என்பது மட்டுமல்ல, இயற்கையைப் பற்றி மேலும் பல அரிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும் என நம்புகிறோம்“’, ” என்கிறார் ஏஞ்சலா ஸ்டோகர்.
இனி பரீட்சை எழுதிய மாணவர்கள் யானைமுகத்தானிடம் தங்கள் தேர்வு எண்ணைச் சொல்லி தேர்ச்சி பெற வேண்டுவதைக் கண்டால், கேலியாக சிரிக்க வேண்டாம்.
$$$