ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்? – நூல் அறிமுகம்

-திருநின்றவூர் ரவிகுமார்

அறிவுலகில் நீலகண்ட சாஸ்திரியும் (சோழர்கள்), பொதுவெளியில் கல்கி வார இதழில் தொடராக கிருஷ்ணமூர்த்தியும் (பொன்னியின் செல்வன்), அண்மையில் திரைப்படமாக மணிரத்னமும் (PS I & II),  சோழ வரலாற்றைப் பற்றி தமிழர்களிடையே  கவனத்தை ஈர்த்துள்ளனர்.

சாஸ்திரியின் நூலில் சில விஷயங்கள் தெளிவாக இல்லை. அது அவர் காலத்தின் போதாமையேயன்றி, அவரது போதாமையல்ல. கிருஷ்ணமூர்த்தி அந்தத் தெளிவற்ற இடங்களை தன் கற்பனையால் நிரப்பி நாவலை எழுதினார். அதில் உண்மை எது கற்பனை எது என்பதையும், இக்கால நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாஸ்திரி காலத்தின் போதாமைகளை  நீக்கியும், தெளிவைக் கொண்டு வரும் வரலாற்று ஆய்வைச் செய்துள்ளார் ஜெயஸ்ரீ ஸாரநாதன். 

கணினித் தொழில்நுட்பம் மட்டுமன்றி ஜோதிடம் (முனைவர் பட்டம்), கல்வெட்டியலில் (பட்டயப் படிப்பு) இவர் பெற்ற கல்வி இந்த ஆய்வுக்கு பெரிதும் பயன்பட்டுள்ளது.

அரசன் இறந்த பிறகு அவன் வாரிசாக, மகனோ தம்பியோ, அடுத்த அரசனாக பதவி ஏற்பதென அடுத்தடுத்து தொடர்ச்சியாக வாரிசு அரசு  ஏற்பார்கள் என்பது பொதுப் புத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ளது. இது தவறு. இளவரசு பட்டம் சூட்டப்பட்ட உடனே அவன் நாட்டின் வேறொரு பகுதியில் இருந்து ஆட்சி செய்கிறான். இது இணை ஆட்சி முறை. அரசன் இறந்த பிறகு தலைநகருக்கு வந்து புதிய பெயருடன் பதவி ஏற்கிறான் இளவரசனாக இருந்தவன். ஆனால் அவனின் அரசாட்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது என்ற தெளிவை ஏற்படுத்துகிறார்.

அதேபோல அரசராவது என்பது வாரிசாக வருவது மட்டும் அல்ல என்றும், வாரிசாக இருப்பவரின் தகுதியும் முக்கியம் என்பதை சான்றுகளோடு கூறுகிறார்.

வரலாறு நெடுகிலும், குழப்பமான காலகட்டத்தில்தான் பேரரசுகள் உருவாகி எழுந்துள்ளன. சோழப் பேரரசு உருவான காலகட்டத்தில் இருந்த குழப்பமான சூழ்நிலையில் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டது ஏன்? எப்படி? அவன் வீரபாண்டியனைக் கொல்லக் காரணம் என்ன? என்பதையும், நாவல் மற்றும் திரைப்படத்தில் சொல்லப்பட்டது போல கரிகாலன் தன் தந்தையின் வாழ்நாளிலேயே கொல்லப்படவில்லை. தந்தைக்குப் பின் அரசுப் பட்டம் ஏற்று ஆட்சி செய்தான் என்பதை கல்வெட்டுகளின் சான்றுகளுடன் தெளிவுபடுத்துகிறார் நூலாசிரியர்.

ஆதித்த கரிகாலன் பிராமணர்களால்தான் கொல்லப்பட்டான் என்றொரு கூற்று உள்ளது. கொலையில் பிராமணர்களின் பங்கு எந்த அளவுக்கு உட்பட்டு இருந்தது, அதற்காக அவர்கள் எப்படி தண்டிக்கப்பட்டார்கள் என்பதையும் நூலாசிரியர் சான்றுகளோடு விளக்குகிறார். போகிற போக்கில் பிராமணர்களின் வாழ்வியலையும் அன்று இருந்த நிலையையும் சுட்டிக்காட்டி செல்கிறார்.

வரலாற்று ஆய்வு நூலாக இருந்தாலும் அலுப்பூட்டாமல் ஒரு துப்பறியும் நாவலின் சுவாரசியத்தோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது இதன் சிறப்பு.

***

நூல் விவரம்:
ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?
ஆசிரியர்: ஜெயஸ்ரீ ஸாரநாதன்
வெளியீடு: சுவாசம் பதிப்பகம், பொன்மார், சென்னை -127
பக்கங்கள்: 152; விலை: ரூ. 190/-
தொடர்புக்கு: +91-81480 66645

$$$

Leave a comment