-கருவாபுரிச் சிறுவன்
அப்பர் சுவாமிகள் கூறியபடி, ’என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற குறிக்கோளுடன் சிலர் தன்னலம் இன்றி வாழ்வதால் தான் நமது சமுதாயமும் நாடும் பல இன்னல்களுக்கிடையிலும் உயிர்ப்புடன் விளங்குகின்றன. அத்தகையவர்களை நமது தளத்தில் அவ்வப்போது அறிமுகம் செய்வோம். இன்று நாம் அறிய வேண்டிய அரியவர்: கம்பபாதசேகரன் திரு. இ.சங்கரன்…

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடி கணபதி வர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை இறையே! -ஆளுடையபிள்ளை அருள்வாக்கு
சைவர்களின் குலதெய்வம், சித்தாந்த அடியவர்களின் ஞானபானு, தமிழ் மொழிக்கு பாஷ்யம் இல்லாத குறையை நீக்கி, சந்தானக் குரவர்களில் ஒருவராகிய மெய்க்கண்டதேவ நாயனார் அருளிச்செய்த சிவஞானபோதத்திற்கு பேருரை தந்த பெருந்தகை, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் அவதரித்த சிவஞான யோகிகள் ஆவார்.
இப்பெருமானார் சென்னை, திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள தொட்டிக்கலை செங்கழுநீர் விநாயகர் மீது ஒரு பிள்ளைத் தமிழ் நுாலினை இயற்றி நாம் உய்வு அடையும் பொருட்டு சைவத்தமிழ் இலக்கிய உலகிற்கு அருளிச் செய்துள்ளார். அதிலுள்ள ஒரு பனுவலில்…
உருகும் அடியார் உள்ளூற
உள்ளே ஊறும் தேன் வருக!
உண்ணத் தெவிட்டாச் சிவானந்த
ஒளியே வருக! புலன்வழிபோய்த்
திருகும் உள்ளத்தார் நினைவினுக்கும்
சேயாய் வருக! எமையாண்ட
செல்வா வருக! உமையீன்ற
சிறுவா வருக! இணைவிழியால்
பருகும் அமுதே வருக! உயிர்ப்
பைங்கூழ் தழைக்கக் கருணை மழை
பரப்பும் முகிலே வருக! நறும்
பாகே வருக! வரை கிழித்த
முருகவேட்கு முன் உதித்த
முதல்வா வருக! வருகவே!
மூரிக் கலசைச் செங்கழுநீர் முனியே!
வருக! வருகவே!
-என்று பாடுவார். இந்தத் துதியை சிந்தனை செய்யும் போது விநாயகப் பெருமானின் தீவிர பக்தர்கள் பலரும் நமக்கு நினைவுக்கு வரலாம். நாம் வாழும் காலத்தில் விநாயகருக்காகவே இந்தக்காலத்தில், தன்வாழ்நாளினை அர்பணித்த அன்பரைப் பற்றி இன்று அறிவோம்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!
-திருமூலதேவ நாயனார்
ஹிந்து சமயத்தின் இரு கண்களாகத் திகழ்பவை சைவ, வைணவ சமயங்கள். இச்சமயத்தின் தெய்வங்களான சிவபெருமான், முருகப்பெருமான், அம்பிகை, மகாவிஷ்ணு, சூரிய பகவான் போன்றோரின் அருமைகளையும் பெருமைகளையும் பறைசாற்றும் விதத்தில் பண்டைய நாள் முதல் இன்றுவரை பல நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன; உருவாகிக் கொண்டும் இருக்கின்றன. இவை தவிர, ஆங்காங்கு வாழ்ந்த புலவர்கள், கவிஞர்கள், பலரும் தத்தம் ஊர்களில் எழுந்தருளியுள்ள வழிபடும் தெய்வத்தின் மீது காலந்தோறும் மரபு இலக்கிய நூல்களை அவனருளால் அவன் தாள் வணங்கி இயற்றியுள்ளனர். அதனை தக்கதொரு அடியவரைக் கொண்டு அச்சிட்டு கால ஓட்டத்திற்குத் தகுந்தாற்போல வெளியீடும் செய்துள்ளனர். இத்தகைய பணி போற்றத் தக்கது. இதற்கு எவ்வளவு அதிகப்படியான சன்மானம் கொடுத்தாலும் தகும்.
சங்க இலக்கியங்களை தேடிப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதரைப் போல, தணிகைமணி செங்கல்வராயப்பிள்ளையும் திருப்புகழைத் தேடி பதிப்பித்தவர். முக்கால் நுாற்றாண்டைக் கடந்தும் இவர்களது பணி இன்றும் தமிழ், பக்தி இலக்கிய உலகில் பேசப்படுகிறது. இவர்களைப்போல இலையில் மறைந்த கனி போல பலரும் தொண்டும் மறைந்துள்ளது. அவர்களையும் நாம் தேடி கௌரவப்படுத்தத் தயங்கி விட்டோம். அந்த வரிசையில்… இந்த இருபத்தியோராம் நுாற்றாண்டில் எந்தப் பின்புலமும் இல்லாமல், குருநாதர் திருவாவடுதுறை ஆதீனம் 23வது குருமகா சன்னிதானத்தின் திருவாக்கினை மட்டும் மூலதனமாக வைத்து 200க்கும் மேற்பட்ட விநாயகப் பெருமானுக்குரிய பிரபந்தங்களை கடந்த 10 ஆண்டுகளாக தொகுத்து வைத்துள்ள ‘கம்பபாதசேகரன்’ என்ற இ.சங்கரன் என்னும் அன்பர் நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியவர்; அறிய வேண்டிய அரியவர்.
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டத்தினை பூர்விகமாகக் கொண்டவர் சங்கரன். இவருடைய முன்னோர் நவதிருப்பதிகளில் ஒன்றான காய்சினி வேந்தப் பெருமாள் கோயிலில் பரிசாரகப்பணி செய்தவர்கள். பத்தாம் வகுப்பினை பாதியில் நிறுத்திய இவர் அச்சுக்கோர்க்கும் பணியை அழகாக செய்யும் இயல்பினை உடையவர். வளர்ந்தும் நவீனமாகவும் கணினி மயமாக்கப்பட்ட அச்சுத்துறையில் அச்சுக்கோர்க்கும் பணிக்கும் வேலையில்லாமல் போய் விட்டது.
கம்ப நாட்டாழ்வாரும், திருவள்ளுவதேவ நாயனாரும் தமிழுக்கு கதி என்கிற புகழ்மொழிக்கு இணங்க, திருக்குறள், கம்ப ராமாயணத்தின் மீது தீராக்காதல் கொண்டவர் சங்கரன். அதன்பயனாக நண்பர்கள் சிலரை சேர்த்துக் கொண்டு ஏப். 13., 1973இல் இலக்கியக் குழு ஒன்றைத் தொடங்கி, காரைக்குடி கம்பன் அடிப்பொடியாரை சந்தித்து குழுவிற்கு ‘கம்பன் இலக்கியப்பண்ணை’ என்ற பெயரையும் வாழ்த்தையும் பெற்றார். கம்பர் மீதும் கொண்ட பற்றின் காரணமாக இவருக்கு காரைக்குடி கம்பன் அடிப்பொடியார் வழங்கிய புனைப்பெயர் தான் ‘கம்பபாத சேகரன்’ என்பதாகும்.
விநாயகர் வழிபாடு இவருக்கு மட்டுமல்ல. எல்லோருக்குமான எளிய வழிபாடு. எந்த இடத்திலும் எந்தக்காலத்திலும் நினைந்து செயல்படுத்தக் கூடியது. கம்பபாத சேகரன் அவர்களுக்கு சிறுவயது முதல் விநாயகர் வழிபாட்டில் ஆர்வம் அதிகம். அது பூர்வஜென்ம புண்ணியத்தால் கைகூடியது.
இவரின் குருவின் பெயரான கம்பன் அடிப்பொடியார் பெயரும் (ச.கணேசன்) விநாயகருக்குரியதே. இவை யாவற்றிற்கும் வலிமை சேர்க்கும் வகையில் ஒருசமயம் திருவாவடுதுறை ஆதினம் 23வது சந்நிதானம், சித்தர்கள் வழிபடும் கடவுள் விநாயகர் என்றும், யோக நெறியில் மூலாதாரத்தில் அமர்ந்திருப்பவர் விநாயகர் என்றும் அவரிடம் அருளாசி கூறினார். மேலும் விநாயகரை வழிபடுகிறவர்கள் எதற்கும் கலங்காதவர்கள்; அதிராதவர்கள். இதற்கு சான்று… சிவபெருமானின் புகழ் கூறும் திருமுறைகளில் ஒன்றான மூத்த பிள்ளையார் மும்மணிக்கோவையை இயற்றியவர் அதிராவடிகள். இவையெல்லாம் விநாயகர் மீது பற்றுக் கொண்டு வழிபட மனத்தெளிவை இவருக்கு தந்தது.

23வது சந்நிதானம் உத்தரவின் படி விநாயகருக்குரிய இலக்கியங்களையெல்லாம் (நூல்கள்) கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் தேடித் தொகுத்துள்ளார். இருநூற்றுக்ம் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இவை யாவையும் வகைப்படுத்தி, வரிசைப்படுத்தி ஒரே தொகுப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்பதுதான் இவரது எண்ணம். அதற்கு விநாயகர்தான் வழி செய்ய வேண்டும்.
விநாயகப் பெருமானின் பெருமைகளை பயபத்தியோடும் அன்போடும் பேசுபவர்களுக்கும், அதனை எழுதுபவர்களுக்கும் –
இடரில்லை வறுமை யில்லை இன்னல் நோய் சிறிதுமில்லைத் தொடர்தரு துக்கமில்லைச் சோக மோகங்கள் இல்லை அடர்தரும் பாவமில்லை அரிட்டங்கள் ஏதுமில்லைப் படர்திரு பகைகளில்லை பயமில்லை இடையூறு இல்லை
என விநாயகபுராண ஆசிரியர் ஸ்ரீ கச்சியப்ப முனிவர் பிரானின் திருவாக்கினை நாம் இவ்விடத்தில் ஈண்டு சிந்திக்கத்தக்கது பொருத்தம்.
விநாயகப் பெருமான் மீது தமிழில் அகவல், இரட்டை மணிமாலை, மும்மணிமாலை, நான்மணிமாலை, பஞ்சரத்ன மாலை, பஞ்சகம், சோடச நமகம், எழுகூற்றிருக்கை, சித்திரகவிகள், அந்தாதிகள், பிள்ளைத்தமிழ், துாது, சதகம்,திருப்புகழ், பதிகங்கள்,தாலாட்டு, ஊஞ்சல், நாமாவளி, தோத்திரங்கள் மற்றும் பல வகையான நூல்கள் உள்ளன என கம்பாத சேகரன் அவர்கள் சொல்வது கேட்பவருக்கு வியப்பில் ஆழ்த்தும்.
இவர் இதுவரை, திருவாவடுதுறை ஆதினம் 24வது சன்னிதானத்தின் உதவியோடு குருபூஜை மலராக 40 நூல்களை இலவசமாகவே வெளியிட்டுள்ளார். மேலும், விநாயகர், முருகப்பெருமான், சிவபெருமான், அம்பிகை, சரஸ்வதி, லட்சுமி, பெருமாள், சாஸ்தா, சூரியன் போன்ற தெய்வங்களின் மீது புலவர்கள் பாடிய அரிய 150க்கும் மேற்பட்டவற்றை சிறு சிறு நூல்களாக உருவாக்கி பதிப்பித்து வெளியிட்டுள்ளார் .
ஹிந்து மத பண்டிகைகளான விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, கந்த சஷ்டி, தைப்பொங்கல், பங்குனி உத்திரம், நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் போன்ற விழா நாட்களில் கோயில் சன்னிதியில் வைத்து நூலினை வெளியிடுவதை இவர் வழக்கமாக வைத்துள்ளார். புத்தகங்களை அன்பளிப்பாகவே கொடுக்கிறார். இவரது பணியைப் பற்றி தெரிந்த அன்பர்கள் பலரும் உதவி செய்வதோடு, அகவை முதிர்ந்த தமிழறிஞர் தொகையும் இவரது பணிக்கு உதவியாக உள்ளது.
இதுவரை இவர் சித்தர்கிரி முருகன் பிள்ளைத்தமிழ், நெல்லை பிட்டாபுரத்தம்மை ஆற்றுப்படை, நெல்லை திருப்பணி மாலை உட்பட 15 நூல்களும், பல தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர திருநெல்வேலி்க்கு 100 நூல்களும், திருசெந்துாருக்கு 90 நூல்களும் கன்னியாகுமரிக்கு 40 நூல்களும் பஞ்சபூத தலங்களுக்கு 50க்கு மேற்பட்ட நூல்களின் பட்டியலும் இவரிடம் உள்ளன. இவை யாவும் பதிப்பிக்க வேண்டியவை.

இவரது வாழ்கையில் மறக்கமுடியாத இனிய சம்பவங்கள்:
- முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கம்பன் இலக்கியப் பண்ணைக்கு வாழ்த்து செய்தி அனுப்பியது.
- ரிஷிகேசில் இருந்து காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ருத்திராக்க மாலை அனுப்பியது.
- கம்பன் அடிப்பொடியார் கிடைத்தற்கரிய நுால்களை பதிப்பிக்கும்படி கூறியது.
- வாரியார் சுவாமிகளால் வழங்கப்பட்ட ‘செஞ்சொற் கொண்டல்’ விருது.
- திருவாவடுதுறை ஆதினம் வழங்கிய ‘சிவத்திருத் தொண்டர்’ விருது.
- கடையம் திருவள்ளுவர் கழகம் வழங்கிய ‘பைந்தமிழ்ப் பதிப்பாளர்’ விருது.
- சென்னை கம்பன் கழகம் வழங்கிய ‘கம்பன் பணிச்செம்மல்’ விருது.
-இவை யாவும் மறக்க முடியாத இனிய நினைவுகள் என்கிறார்.
மேலும் காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விழுப்புரம் திருவாமத்துார் தி.செ.முருகதாசர், திருவாவடு துறை ஆதினம் சிவப்பிரகாசர், துாத்துக்குடி பெருங்குளம் செங்கோல் ஆதினம் கல்யாணசுந்தரர், கவியோகி சுத்தானந்த பாரதியார், கம்பன் அடிப்பொடியார், வாரியார் சுவாமிகள், கி.வா.ஜ, திருக்குறள் பீடம் அழகரடிகள் போன்றோரின் அன்பினையும் ஆசியையும் பெற்றவர் இவர்.
இதுபோன்ற தெய்வத் தமிழ்ப் பணியில் ஈடுபடுவோரை வாழ்த்துவது நம் கடமை.
இவரது முகவரி: கம்பபாதசேகரன் இ.சங்கரன், செல்வவிநாயகர் இல்லம், 2-97, ஆனந்தவல்லி அம்மன் கோயில் தெரு, மீனாட்சியம்மன் கோயில் அருகில், ஆரல்வாய் மொழி, வடக்கூர், கன்னியாகுமரி 629 301, அலைபேசி எண்: 94878 02389
$$$