-கருவாபுரிச் சிறுவன்
தமிழகத்தில் ஓதுவார்கள் இல்லாத திருக்கோயில்களில் முறைப்படி அவர்களை நிரந்தரமாக நியமனம் செய்து தமிழ் வளர்க்கப்பட வேண்டும். அவர்களுடைய பணியை அறிந்துணர்ந்து போற்றிச் செய்ய வேண்டும்; திருக்கோயிலில் உள்ள ஆன்மிக புத்தக நிலையங்களில் விற்பனையாளர்கள் வேலைகளைச் செய்யவும், அர்ச்சனை டிக்கட் கிழித்துக் கொடுக்கவும் ஓதுவார்களை கட்டாயப்படுத்தக் கூடாது, நிர்பந்தப்படுத்தக் கூடாது. இவற்றை அறநிலையத் துறையினருக்கு வலியுறுத்தி, அவர்கள் இறைவன் திருச்சன்னிதி முன் விண்ணப்பிக்கும் திருமுறைகள் அதீத மகத்துவம் மிகுந்தது என்பதை கோடிட்டுக் காட்ட எழுந்ததே இக்கட்டுரை...

தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும், முதலை
உண்ட பாலகனை அழைத்ததும், என்புபெண்ணுருவாக்
கண்டதும், மறைக்கதவினைத் திறந்ததும், கன்னித்
தண்தமிழ்ச் சொலோ! மறுபுலச்சொற்களோ! சாற்றீர்.
-திருவிளையாடல் புராண ஆசிரியர் பரஞ்ஜோதி முனிவர்
காலந்தோறும் தமிழைப் பேணிக் காத்து வளர்த்து தமிழன்னைக்கு வாழ்நாள் முழுவதும் தன் பணியாகிய தமிழ் பணியை செவ்வனே செய்து வருபவர்கள்; ‘என்கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற திருநாவுக்கரசு நாயனாரின் திருவாக்கிற்கும், ‘பாடும் பணியே பணியாய் அருள்வாய்’ என்ற அருணகிரிநாத சுவாமிகளின் அனுபூதி வரிகளுக்கும் இலக்கணமானவர்கள் – இவர்களை சைவசமயத்தில் தேசிகர், திருமுறைவாணர்கள், ஓதுவார்கள் என்றும், வைணவத்தில் அரையர்கள் என்றும் அழைப்பர்.
தமிழகத்தில் ஓதுவார்கள் இல்லாத திருக்கோயில்களில் முறைப்படி அவர்களை நிரந்தரமாக நியமனம் செய்து தமிழ் வளர்க்கப்பட வேண்டும். அவர்களுடைய பணியை அறிந்துணர்ந்து போற்றிச் செய்ய வேண்டும்; திருக்கோயிலில் உள்ள ஆன்மிக புத்தக நிலையங்களில் விற்பனையாளர்கள் வேலைகளைச் செய்யவும், அர்ச்சனை டிக்கட் கிழித்துக் கொடுக்கவும் ஓதுவார்களை கட்டாயப்படுத்தக் கூடாது, நிர்பந்தப்படுத்தக் கூடாது. இவற்றை அறநிலையத் துறையினருக்கு வலியுறுத்தி, அவர்கள் இறைவன் திருச்சன்னிதி முன் விண்ணப்பிக்கும் திருமுறைகள் அதீத மகத்துவம் மிகுந்தது என்பதை கோடிட்டுக் காட்ட எழுந்ததே இக்கட்டுரையின் நோக்கம்.
திருமுறையே சைவநெறிக்கருவூலம் தென் தமிழின் தேன் பாகாகும் திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான் செவிமடுத்த செந்தமிழ் வேதம் திருமுறையே நடராஜன் கரம் வருந்த எழுதியருள் தெய்வ நூலாம் திருமுறையே சொக்கேசன் மதி மலியாய் மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால்.
ஞானத் திறவுகோல்
ஞானத் திறவுகோலான நமது திருமுறைகள், சைவ ஆன்மாக்களுக்கு கோயில் எனப்படும் சிதம்பரம் தலத்திலுள்ள சிறப்பு மிக்க தனிப்பாடல்களில் பிரதானமானவை. சர்வலோக நாயகனாகிய சிவபெருமான் எங்கும் நீக்கமற நிறைந்து அகமும் புறமும் வீற்றிருந்து உயிர்களுக்கு திருவருள் செய்கிறார் என்பது நம்முடைய அருளாளர்கள் கண்ட உண்மை.
ஞான அருளாளர்கள் அருளிச் செய்த பாடல்கள் அடங்கிய தொகுப்பாகிய திருநூற்களை பன்னிரு திருமுறை என்றும், பதினான்கு சாஸ்திரம் என்றும் முன்னோர் வகைப்படுத்தியுள்ளார்கள். இவ்விரு தோத்திர, சாத்திர நுாற்களின் அடியொற்றி வந்த ஏனைய ஞான நூற்களை இதன் பின்னே வைத்து அழகுபடுத்தி அணியும் செய்தார்கள். இவற்றையெல்லாம் ஞான திருஷ்டியால் அறிந்த தாண்டகவேந்தர் அப்பர் சுவாமிகள் சிவபிரானை ‘சாத்திரமும் தோத்திரமும் ஆனார் தாமே’ என்று ஓரிடத்தில் போற்றுகின்றார். ஆக பன்னிரு திருமுறைகளும் பதினான்கு சாத்திரங்களும் சிவபெருமான் வடிவங்கள், அவை யாவும் சிவவாக்கே ஆகும். “அப்பர் சொல்லியாச்சுன்னா அதற்கு அப்பீல் ஏது?” என தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவின் உபன்யாசம் செய்ததை நினைவுகூர்ந்து மகிழலாம்.
திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் திருவருளாலும், நம்பியாண்டார் நம்பிகள் குருவருளாலும், கலியுகத்தில் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு தில்லைக்கூத்தன் வளாகத்தில் கிடைக்கப்பெற்றவை சைவத்திருமுறைகள். பொ.யு.பி. 985 – 1014 காலங்களில் உலகம் முழுதும் சைவ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய சோழ மாமன்னன் ராஜராஜனால் திருமுறைகள் நமக்கு கிடைக்கப்பெற்றன என்பதை யாவரும் அறிவர். திருமுறைகள் கிடைக்கப்பெற்ற வரலாற்றை சந்தானக் குரவர்களில் ஒருவராகிய உமாபதி சிவம் அருளிய திருமுறை கண்ட புராணத்தின் வழியே படித்துணரலாம்.
சுவாமி முன் திருப்பதிய விண்ணப்பம்
திருச்சி மாவட்டம், அல்லுார் கிராமத்து பசுபதீஸ்வரர் கோயிலில் சோழர் குடியில் சோழசிகாமணி என்னும் முதல் பராந்தகரது ஆட்சிக் காலத்தில் இக்கல்வெட்டுகள் செதுக்கப்பட்டன. திருப்பதியம் பாடும் அடிகள்மார் மூவருக்கு அரசன் கட்டளைப்படி நிலத்தை தேவதானமாக விட்ட இக்கல்வெட்டின் மூலத்தை திருந்திய முறையில் காணலாம்.
“ஸ்வஸதி ஸ்ரீ மதுரையும் ஈழமுங் கொண்ட கோப்பரகேசரி பன்மற்கு, யாண்டு சக ஆவது...... அகமமுடையார், வீரசோழ இளங்கோவேளாயின ஒற்றி மதுராந்தகன் இருநிலம் வேலியும் குடிநீக்கிய தேவதானமாகச் செய்து கொடுத்தோம். இந்நிலம் வேலிக்கும் நிபந்தம் அடைத்த பரிசாவது திருஅமுதுக்குப் பத்தெட்டுக்குத்தல் சூல நாழியால் அரிசி ஐஞ்ஞாழியால் நெல்லு குறுணி நானாழி உரியும், நெய்அமுதுக்கும், கறி அமுதுக்கும் தயிரமுதுக்கும், அடைக்காய் கானபடி ஓராட்டை நாளைக்கு நெல் அறுபதின் கலத்தால் நிலம் ஐந்தரையும் திருப்பதியம் பாடும் அடிகள் மார் மூவருக்கு நிலம் ஐந்தரையுமாக நிலம் வேலியும் குடி நீக்கிய தேவதானமாக... என்று ஸ்ரீ முகம் வந்ததைத் தொழுது தலைமேல் கொண்டு அறையோலை செய்து கொடுத்தோம். அல்லுார் ஊரோம் இது பன்மாஹேஸ்வரர் ரட்சை...”
-என்கிற கல்வெட்டுச் செய்தியின் மூலமாக முதன்முதலில் சிவபெருமான் திருச்சன்னிதியில் மூவர் முதலிகள் பாடிய தேவாரம் ஓதுவதையே ‘திருப்பதியம் விண்ணப்பித்தல்’ என்கிற ஓதும் பணியாக சிறப்புற நடைபெற்றது என்பதை அறியலாம்.
காலந்தோறும் இவர்களுக்கு மன்னர்கள் ஆட்சிக்காலம் முதல் திருமலை நாயக்கர்கள் காலம் வரையிலும் மானியங்கள், நிவந்தங்கள், காணியாட்சி முறைமைகள் போன்றவை யாவும் வழங்கப்பட்டுள்ளன என்பது வெள்ளிடைமலை போல விளங்கும் தெளிவு.
தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் பணியைப் போற்றியும் ஏற்றியும் யானை மீது எழுந்தருளச் செய்து, கவரி வீசி பெரும்பேறு பெற்ற சோழ மன்னன் ஆட்சிக் காலத்திலேயே, ஒவ்வொரு திருமுறைகளில் இருந்தும் ஒரு பதிகம் வீதம், அவையே குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஒரு பதிகத்திற்கு ஒரு பாடல் வீதம் பன்னிரு பாடல்களும் திருக்கோயில்களில் விண்ணப்பம் செய்யப்பட்டு இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.
தேவாரம் என்னும் திருநாமம் வழக்கு:
திருஞானசம்பந்த நாயனார் அருளிய முதல், இரண்டு, மூன்று ஆகிய திருமுறைகளை ‘திருக்கடைக்காப்பு’ என்றும், திருநாவுக்கரசு நாயனார் அருளிய நான்கு, ஐந்து, ஆறு ஆகிய திருமுறைகளை ‘தேவாரம்’ என்றும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறையை ‘திருப்பாட்டு’ என்றும் வரலாற்று ஆசிரியர்கள் ஆங்காங்கு பதிவு செய்துள்ளனர். மூவர் பாடிய பாடல்களாகிய ஏழு திருமுறைகளையும் தேவனாகிய சிவபெருமான் உவந்து ஏற்றுக் கொள்ளுவதாலும், இதைப் பாடுவோர்கள் விரும்பி இறைவனுக்கு ஆரம் போல சூட்டி மகிழ்வதாலும், இது பொதுப்பெயராக அமைந்துள்ளதாலும், மூவர் பனுவல்களை ‘தேவாரம்’ என அழைக்கலாயினர்.
11, 12 நுாற்றாண்டுகளில் சிவபாதசேகரம் தாங்கிய சோழ மன்னர்கள் சிவவழிபாட்டினை தேவாரம் என்ற சொற்றொடருக்கு உரியதாக கல்வெட்டுகளில் பதிவு செய்துள்ளார்கள் என தி.வை.சதாசிவ பண்டாரத்தாரின் ஆய்ந்த முடிவினை இவ்விடத்தில் சிரமேற் கொள்வது சாலச் சிறந்ததாகும்.
இருப்பினும், 13 ஆம் நுாற்றாண்டில் இசை உலகில் சீர்மையான புரட்சிகளுக்கு வித்திட்ட அறிஞர் சாரங்கதேவர் என்பவர், தாம் இயற்றிய ‘சங்கீத ரத்னாகரம்’ என்னும் வடமொழி நுாலில் மூவர் தேவாரங்களுக்குரிய பண்களைக் குறிப்பிடும் போது ‘தேவார வர்த்ததீ’ என்ற சொல்லினைப் பயன்படுத்தியுள்ளார் என்பது இங்கு கூர்ந்து நோக்கத்தக்கதாகும்.
14ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த இளஞ்சூரியர், முதுசூரியர் என அழைக்கப்பெற்ற இரட்டைப்புலவர்கள் பாடிய பாக்கள் யாவும் சத்தியவரிகள்; நிச்சயம் பலிக்கும். அலைபாயும் மனது உள்ளன்போடு அதைக் கேட்டால் அங்கு நிசப்தம் நிலவி நிம்மதியுண்டாகும். தமிழக பிருத்வித் தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதருக்கு இவர்கள் உலா ஒன்றினை இயற்றியுள்ளார்கள். அதில் வரும் ஒரு கண்ணியில் சமயக்குரவர்களைப் போற்றும் விதமாக,
மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும் தேவாரஞ் செய்த திருப்பாட்டும்…
-என்ற குறிப்பு இடம் பெறுகிறது.
இரட்டையர் காலத்திற்குப் பின் 16ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த சைவ எல்லப்ப நாவலர் சிறந்த சிவபக்தர்; சைவ சமயத்தில் தீரம் மிக்கவர்; நெஞ்சுரம் கொண்டவர்; தருமை ஞானப்பண்ணையில் வளர்ந்த ஞானக்கன்றாய்த் திகழ்பவர். இவர் இயற்றிய தலபுராணங்கள் தனித்துவம் மிகுந்தவை. இப்பெருமகனார் சைவ உலகில் அக்கினித்தலமாய் மிளிரும் திருவண்ணாமலை அண்ணலை ‘அருணைக் கலம்பகம்’ என்ற திருநுால் வாயிலாக போற்றிப் பணிகிறார் அதில் எடுத்த எடுப்பிலேயே,
வாய்மை வைத்த சீர்த்திருத்த தேவாரமும் திருவாசகமும் உய்வைத் தரச் செய்த நால்வர் பொற்றாள் எம்முயிர்த்துணையே!
-என்ற வரிகள் வைரகீரிடத்தில் பதித்த முத்துகளாய் மிளிர்கின்றன.
மேலும், தனிமனிதன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டி, மூவசைகளிலும் எப்படி நெறிப்படுத்த வேண்டும் என்கிற வழிமுறையை நமக்கு அறிவுறுத்திச் சொன்ன சிவஞானக்கொழுந்தாகிய தாயுமான சுவாமிகள் 18ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் (1705- 1742) வாழ்ந்தவர். அப்பெருமகனார் ஓரிடத்தில்,
தேவரெலாம் தொழச்சிவந்த செந்நாள் முக்கண் செங்கரும்பே! மொழிக்கு மொழி தித்திப்பாக மூவர் சொல்லும் தமிழ் கேட்கும் திருச் செவிக்கே மூடனேன் புலம்புய சொல் முற்றுமோ தான்.
மேற்கண்ட ஞானிகளான இரட்டைப்புலவர்கள், சைவஎல்லப்ப நாவலர், தாயுமான சுவாமிகளின் துணை கொண்டு முதல் ஏழு திருமுறை ஆசிரியர்களான மூவர் முதலிய பெருமக்களின் திருப்பனுவல்கள் யாவும் ஒரே பெயரான தேவாரம் என்ற சிறப்பு அடைமொழிச் சொல்லால் அழைக்கப்பட்டு மக்களிடையே ஏற்பட்ட வழக்கம் பழக்கமான போது, பஞ்ச புராணம் பாடும் மரபு பொலிக! பொலிக! பொலிக! என தோற்றம் பெற்றது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
பஞ்ச புராணத்தைத் தோற்றுவித்த முறை:
தேவாரம் பாடப்பெற்ற காலம் முதல் அந்தந்த திருக்கோயில்களுக்குரிய திருமுறைகள் திருமுறைவாணர்களால் ஓதப்பெற்றன என்பதை ‘திருப்பதியம் விண்ணப்பித்தல்’ என்ற கல்வெட்டுவழி அறியலாம். அதில் தேவாரம் பாடுவோருக்கு சோழ மன்னன் மானியம் அளித்துள்ளார் என்ற கூடுதலான குறிப்பும் கிடைக்கின்றன.
திருமுறை அடைவு ஏற்பட்ட பிறகு திருமுறைக்கு ஒரு பாடல் வீதம் அல்லது குறிப்பிட்ட திருமுறை பதிகப்பாடல்கள் வீதம் பன்னிரு திருமுறைகளிலும் பாடப் பெற்றிருக்க வேண்டும்.
தமிழக, தமிழ் இலக்கிய வரலாறுகள் நமக்கு சரிவர முழுமையாக கிடைக்கப் பெறாமல் போன காரணத்தினால், திருமுறைகள் பற்றிய தொடர்ச்சியான பதிவு நமக்கு கிட்டாமல் போய்விட்டன. எப்படி இருப்பினும் திருப்பதியம் விண்ணப்பித்தலே பஞ்ச புராணம் பாடும் மரபிற்கு தோற்றுவாயாக அமைந்து என அறுதியிட்டுக் கூறலாம்.
பன்னிரு திருமுறைகளில் உள்ள தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் என்கிற திருநுாற்களில் இருந்து ஒவ்வொரு பாடல்கள் வீதம் இறைவனார் சன்னிதியில் நான்கு வேதாகம ஸ்துதிகளுக்குப் பிறகு தமிழ் தோத்திரங்களான இவற்றை மனம் மொழி மெய்களால் ஒன்றி கண்ணீர் மல்கவும், மயிர் கூச்செரியவும் ஓதுவதே, ‘பஞ்ச புராணம்’.
பஞ்ச புராணம் பாடுவதற்கான முதன்மை செய்திகள்:
தேவாரத்தில் தொடங்கி புராணத்தில் நிறைவு பெறுவதால் இவை பஞ்சபுராணம் என பெயர் பெற்றன என்று தமிழ் இலக்கிய திறனாய்வாளர் மு.அருணாசலம் பதிவு செய்துள்ளார்.
19 ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த கவிக்கங்கை என்று போற்றப்படும் துறைசை ஆதின வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் பணி சைவ இலக்கிய உலகத்திற்கு மணி மகுடம் போன்றது. 1815 – 1876 வரையிலாக வாழ்ந்த அப்பெருமானார் திருத்தலங்களுக்கு தல புராணம் எழுதும் பணி, தமிழ்ப்பணிகளில் சுத்தத் தங்கமாய் ஜொலிக்கும். அதில் மாயூர புராணம் என்னும் அவருடைய படைப்பு மகத்துவம் நிறைந்தது.
அதில், ‘சிவாலய தரிசன விதி படலம்’ ஆறாம் பாடலில் சிவபெருமான் சன்னிதி முன்னின்று பாட வேண்டிய அருட்பாடல்களைத் தொகுத்து கூறுகிறார்.
நிறையருட் பாடலாகி நிரம்பு தேவாரம் ஆறும் அறை திருவாசகம் சீர் அமை இசைப்பா பல்லாண்டு குறை தவிர் புராணம் இன்ன கொண்டுறத் துதித்தல் செய்து
-என்ற செய்யுளின் வரிகள் வழி, தேவார மூவர் முதலிகள் பாடிய தேவாரம் ஆறும், மாணிக்கவாசகர் தந்த திருவாசகம், திருமாளிகைத்தேவர் முதல் ஒன்பது அருளாளர்கள் அருளிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, அடியார்கள் பெருமையினை பேசும் பெரிய புராணமும் எந்தை சிவபிரான் முன்பு உருக்கமுடன் ஓதத் தகுந்தாகும் என்கிறார்.
ஸ்ரீமான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் காலத்தில் திருக்கோயில்களில் நடைபெற்ற திருமுறைகள் பாடும் மரபினை இங்கு சிந்தனைக்குரியதாக ஆக்குவது சாலச் சிறந்தது. மேலும், பிள்ளையவர்களின் சம காலத்தில் வாழ்ந்த மற்றொரு சைவத்தமிழ் ஆளுமை ஸ்ரீமான் ஆறுமுக நாவலர் ஆவர்.
‘தமிழ் சைவமாகிய இரண்டும் எனது இரு கண்கள் அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதி வரை காத்து சைவர்கள் பயன் கொள்ளச் செய்வதே என் வாழ்நாள் லட்சியம்’ என வாழ்ந்து காட்டியவர் யாழ்ப்பாணம் நாவலர் (1822 – 1879 ) அவர்கள்.
இவரின் பெயரால், திருவருட்பிரகாச வள்ளலார் ராமலிங்கர் செய்த நூலிற்கு ‘மருட்பா’ என சில விஷமிகள் பெயரிட்டு சைவத்திற்கு இழுக்கினை தேடித் தந்தனர் என்பது தனிக்கதை. அச்சமயத்தில் ‘அருட்பா தொகுப்பு’ என்ற பெயரில் ஒரு நுாலினை அச்சிட்டு வெளியீடு செய்கிறார். அதில் துறைசை ஆதின மாணக்கர் ராமசுவாமி பிள்ளை அவர்களின் கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
அதில் ‘தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்தும் சிறப்பாக எடுத்து சிவாலயம் முதலிய இடங்களில் நித்திய நைமித்திய பூஜா காலங்களில் பண்டைய காலம் முதல் தொடங்கி ஒதப்பெற்று வருகின்றன’ என்ற குறிப்பு மீண்டும் நமக்கு பயனளிக்கும் விதமாக அமைந்தது திருவருள் சம்மதமே ஆகும். ஆக பஞ்ச புராணம் பாடும் மரபு சோழர் காலத்தில் தொடங்கப்பட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து 19 ஆம் நுாற்றாண்டில் பூரண நிறைவை எட்டியது.
திருமிகு சி.தம்பையா பிள்ளை என்பவர் பின்னாளில் சுவாமிநாத பண்டிதர் என அழைக்கப்பட்டவர். 1885 ஆம் ஆண்டு ‘திருக்கோவையார் உண்மை’ என்ற நூலினை அச்சிட்டு வெளியீடு செய்துள்ளார். அதில் ‘தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் சைவத்திற்கும், சிவபூஜைக்கும், சிவாலய நித்திய,நைமித்தியத்திற்கும், அடியவர் பூஜைக்கும் நியம மந்திரங்களாகும்’ என்ற தொடரின் வழியே பஞ்ச புராணம் பாடும் மரபு சிறப்பாக ஓதப் பெற்றன என்பது தெளிந்த நீரோடை போல விளங்குகின்றன.
பஞ்ச புராணம் பாடுவோரின் இன்றைய நிலை:
நாட்டின் நிரந்தரமான அழியாத கலைக்காவிய பொக்கிஷங்களாக விளங்கும் திருக்கோயில்கள் இமயம் வரை குமரி வரை எண்ணற்றவை. அரசின் பிடியில் இருக்கும் ஆகமம் சார்ந்த, சாராத கோயில்கள் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டவை. சென்ற நூற்றாண்டு வரை கோயில் என்றால் அங்கு சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், அரையர்கள், அர்ச்சகர்கள், பிராமணர்கள், கொத்தனார், ஆசாரி, தேவர், பலவேலைக் கோனார், மணியம் பிள்ளை, முதலியார், செட்டியார், ஆதிதிராவிடர், வண்ணார், நாவிதர் என தொழிலின் அடிப்படையில் பல சாதியினர் இணைந்து ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் வேற்றுமை கற்பிக்காமல் கோயில்களில் தொண்டு செய்து வாழ்ந்தார்கள்; வாழ்ந்து காட்டினார்கள். ஆனால் இன்றைய நிலையோ வேறு. சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தை ஆண்ட அரசியல் கட்சிகளாலும், போலிப்போராளிகளாலும், போலி அரசியல்வாதிகளாலும் தனக்கு தெரியாத விஷயங்களில் சீர்திருத்தம் என்ற பெயரில் நம் முன்னோர் முறையாக கட்டிக் காத்த முழுமையான விஷயத்தில் தலையிட்டு, சமூகநீதி, பெண்ணுரிமை, சுயமரியாதை என வீண் வார்த்தைகள் பேசி அந்தந்தத் துறைக்கு சம்பந்தம் இல்லாதவரையும், தகுதியே இல்லாதவரையும் தகுதிப்படுத்தி வருகின்றனர்.
இச்செயல் ஏற்புடையது தானா என்பதை இனியேனும் ஆட்சியாளர்கள் பரிசீலனை செய்ய வேண்டும். மேலும், கோயில்களில் ஓதுவார்களை நியமிக்க அறநிலையத் துறை விரும்புவதில்லை. அப்படியே தகுதியுடையவர்கள் (ஒரு சார்புடையவர்கள்) பணி அமர்த்தப்பட்டால் அங்குள்ள கோயில் அலுவலக கணக்கு எழுதவும், புத்தக நிலையங்களில் புத்தகதத்தை விற்கவும், அர்ச்சனை டிக்கட் கொடுக்கவும் உந்தப்படுகிறார்கள். இச் செயலின் அடிப்படையில் ஓதுவார்கள், திருமுறைவாணர்கள், தேசிகர்கள் மீது எந்தளவு மதிப்பும் மரியாதையும் திருக்கோயில் நிர்வாகம் வைத்துள்ளது என்பதை யூகித்துக் கொள்ளலாம்.
வேண்டும் மனநிறைவு:
திருக்கோயில்களில் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக நடைபெறும் யாக சாலையில் ரிக், யஜூர், சாம, அதர்வண வேத தோத்திரங்களுக்குப் பின்னும் திருமுறை இன்னிசை நிகழ்வுகளிலும் பன்னிரு திருமுறைப்பாடல்கள் அல்லது பஞ்ச புராணப் பாடல்களுடன் மங்கல வாழ்த்து பாடி நிறைவு செய்வது மரபு. இருந்தாலும் சற்குரு அருணகிரிநாதர், அபிராமி பட்டர் அருளிய திருப்புகழ், அனுபூதி, அந்தாதிகளுடன் அந்தந்த தலப்பனுவல்களையும் சேர்த்து பாடும் மரபு கடந்த 100 ஆண்டுகளுக்குள் வந்த நடைமுறை வழக்கம் பழக்கமாகி விட்டது.
எப்படியாயினும் ஐந்து என்ற சொல் ஆன்மாக்கள் வாழ்வில் பின்னிப் பிணைந்து காணப்படுவதாலும், ஐந்து என்ற எண் பரம்பொருளின் ரூபலாவண்யம், கருணை, வழிபாடு என்பதிலும் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. அந்த அடிப்படையில் கேட்பவர்களுக்கு மன நிறைவை உண்டாக்கி, படிப்பவருக்கு மேலும் ஆர்வத்தை துாண்டும் வகையில் பஞ்சபுராணம் பாடும் மரபு அமைந்ததுள்ளது என்பது உண்மைச் சைவர்கள் செய்த முன்வினைத்தவத்தின் பயனாகும்.
பூவாரம் அணிந்த பிரான் பொன்னடிக்கீழ் நின்றொளியோம் தேவாரம் பாடில் அவர் செவிக்கின்பம் ஆகாதோ!
என்ற கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்களின் வாக்கினை சிரமேற்கொண்டு நாமும் பஞ்ச புராணம், திருப்புகழ், அபிராமி அந்தாதி தலப்பனுவல்களைப் பாடி இந்த சிவச்சிந்தனையை நிறைவு செய்வோமாக.
திருச்சிற்றம்பலம்!
***

தேவாரம்
படைக்கலமாக உன்நாமத்து எழுத்து
அஞ்சு என்நாவில் கொண்டேன்
இடைக்கலம் அல்லேன் எழுபிறப்பும்
உனக்கு ஆட் செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது
வணங்கி துாநீறு அணிந்துன்
அடைக்கலம் கண்டாய் அணி
தில்லைச் சிற்றம்பலத்து அரனே.
-திருநாவுக்கரசு சுவாமிகள்
திருவாசகம்
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்ட பின்
என்னப்பன் என் ஒப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்றவான் கருணைச்
சுண்ணப் பொன்னீற்றற்கே சென்றுாதாய் கோத்தும்பீ!
–மாணிக்கவாசக சுவாமிகள்
திருவிசைப்பா
நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே
ஐயா நீ உலாப் போந்த அன்று முதல் இன்றுவரை
கையாறத் தொழுது அருவி கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள் கோடைத் திரை லோக்கிய சுந்தரனே.
-கருவூர்த்தேவ நாயனார்
திருப்பல்லாண்டு
சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த துாய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண்டில் சிதையும் சிலதேவர் சிறு நெறி சேராமே
வில்லாண்ட கனக்திரள் மேருவிடங்கன் விடைப்பாகன்
பல்லாண்டு என்னும் பதம் கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே
-சேந்தனார்
பெரிய புராணம்
கைகளும் தலைமீது ஏறக் கண்ணில் ஆனந்த வெள்ளம்
மெய்யெலாம் பொழிய வேதமுதல்வரைப் பணிந்து போற்றி
ஐயனே! அடியனேனை அஞ்சல் என்று அருள்வல்ல
மெய்யனே என்று வீடல் ஆலவாய் விளம்பல் உற்றார்.
-தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்
திருப்புகழ்
வசம் மிக வேற்றி மறவாதே
மனது துயராற்றில் உழலாதே
இசை பயில் சடாட்சரம் ஆதாலே
இகபர செளபாக்கியம் அருள்வாயே
பசுபதி சிவாக்யம் உணர்வோனே
பழனிமலை வீற்றருளும் வேலா
அசுரர் கிளை வாட்டி மிக வாழ
அமரர் சிறை மீட்ட பெருமாளே
–அருணகிரிநாத சுவாமிகள்
அபிராமி அந்தாதி
நன்றே வருகினும் தீதே விளைகினும் நானறிவது
ஒன்றேயுமில்லை உனக்கேபரம் எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனதென்று அளித்துவிட்டேன் அழியாத குணக்குன்றே
அருட் கடலே! இமவான் பெற்ற கோமளமே!
-அபிராமி பட்டர்
குட்டித் திருவாசகம்
மாலுண்டு நெஞ்சே வருந்துவதென் பால்வண்ணன்
காலுண்டு அலர் சொரியக் கையுண்டு – நுாலுண்டு
வாழ்த்திட நாவுண்டு வரதன் களாவுண்டு
தாழ்த்திடவும் உண்டோ தலை-வரதுங்கர்
வாழ்த்து
கந்த புராணம்
ஆறிரு தடந்தோள் வாழ்க! அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறு செய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க! யானை தன் அணங்கு வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீரடியார் எல்லாம்.
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க!
நான்மறை அறங்கள்ஓங்க நற்றவம் வேள்வி மல்க!
மேன்மை சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்!
-கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள்
$$$