-ஆசிரியர் குழு
திரு. பிரசாந்த் போலே எழுதிய அந்த 15 நாட்கள் என்னும் இந்த நூல், நாடு விடுதலை அடைவதற்கு முந்தைய 15 நாட்களில் நிகழ்ந்த சில சம்பவங்களை தொகுத்திருக்கிறது.இந்நூலின் முன்னுரை இங்கு நூல் அறிமுகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது...

தன்னை அறியாதவனை சரித்திரம் தனது காலடியில் நசுக்கிக் கொன்றுவிடும் என்று கூறுவதுண்டு. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், சரித்திரத் தழும்புகளுடன் தான் வாழ்கிறோம்; சரித்திரத்தை உருவாக்கிக் கொண்டும் இருக்கிறோம். ஆனால் சிலர், சரித்திரத்தை நினைவுபடுத்தினால், ஐயகோ என்று ஓலமிடுகிறார்கள்; அந்த சரித்திரத்தின் படிப்பினைகளை எதிர்காலத் தலைமுறைக்கு சொல்லிவிடக் கூடாது என்று பரிதவிக்கிறார்கள்.
ஆனால், சரித்திரம் நிலையானது. நாம் கடந்துவந்த பாதை அது. அப்போது நாம் பெற்ற அனுபவங்கள் நமக்கு என்றும் வழித்துணையாக இருக்க வேண்டியவை. அந்த சரித்திரத்தின் பக்கங்களில் இன்பமும் துன்பமும் மாறி மாறி இடம் பெறலாம். அதுவே உலக நியதி. எனவே, நடந்த வரலாற்றை உள்ளது உள்ளபடி உய்த்துணர்வது நம் அனைவரின் கடமை.
அந்த வகையில் பாரத வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாள் 1947 ஆகஸ்ட் 15. அன்றுதான், ஆங்கிலேய ஆதிக்கத்திடமிருந்து இந்தியா விடுதலை பெற்றது. எனவே அதனை நாம் கொண்டாடி மகிழ்கிறோம். ஆனால்…
அதே நாளில் நமது நாடு மத அடிப்படையில் இரண்டாகப் பிளக்கப்பட்டதும், அதன் காரணமாகத் துண்டாடப்பட்ட நிலப்பகுதிகளில் ரத்த ஆறு ஓடியதும், இன்றைய தலைமுறையினர் அறியாத துயரங்கள். உண்மையில் இந்தப் பிரிவினைக்கான விதை 1930களிலேயே விதைக்கப்பட்டு, முஸ்லிம் லீக் கட்சியாலும், ஆங்கிலேய அரசாலும் வளர்க்கப்பட்டது. அதன் கொடூர முகத்தை 1946 ஆகஸ்டிலேயே ‘நேரடி நடவடிக்கை’ என்ற பெயரில் முஸ்லிம் லீக் நடத்திய கலவர வன்முறைகளில் நாடு கண்டிருந்தது. எனவேதான், பிரிவினைவாதிகளிடம் தேசத் தலைவர்கள் மண்டியிட்டனர்.
மத அடிப்படையில் பிரிந்திருந்தாலும், ஹிந்துக்களும் முஸ்லிம்களும் பாரதத்தின் குடிமக்களாக ஒன்றுபட்டு வாழ்ந்த அனுபவம் நம்மிடம் உண்டு. 1905இல் நிகழ்ந்த வங்கப் பிரிவினையை எதிர்த்து இரு சமூகங்களும் ஒன்று திரண்டதால் தான் அந்தப் பிரிவினை யோசனையை ஆங்கிலேய வைஸ்ராயான கர்சன் கைவிட்டார் என்பதும் சரித்திரம். ஆனால், அடுத்த 41 ஆண்டுகளில் (1946) அதே வங்கத்தில்தான் ரத்த ஆறு ஓடியது; ஒரே நாளில் பல்லாயிரக் கணக்கான ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதன் விளைவாகவே பாரதத்தை இந்தியா- பாகிஸ்தான் என்ற இருவேறு தேசங்களாகப் பிளக்க காங்கிரஸ் கட்சியும் மகாத்மா காந்தியும் ஒப்புக்கொண்டனர்.
இந்தப் பிரிவினையின் விளைவாக, மேற்கு பஞ்சாப், சிந்து மாகாணம், வடமேற்கு எல்லைப்புற மாகாணம், கிழக்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் பல தலைமுறைகளாக வாழ்ந்துவந்த லட்சக் கணக்கான ஹிந்துக்களும் சீக்கியர்களும் சொல்லொனாக் கொடுமைகளுக்கு ஆளாயினர். அவர்கள் அப்போதுதான் விடுதலை அடைந்த இந்தியாவுக்கு அகதிகளாக துரத்தப்பட்டனர்; அவர்களது குடும்பங்கள் சிதைக்கப்பட்டன; சொத்துகள் பிடுங்கப்பட்டன. இவை அனைத்தும் இஸ்லாம் என்ற மதத்தின் பெயரில் நடத்தப்பட்டன.
இஸ்லாமியர்களுக்கென்று மதரீதியாக தனி நாடு (பாகிஸ்தான்) அமைந்தபோதும், இந்தியாவில் இருந்த முஸ்லிம் மக்கள் விரும்பினால் இங்கேயே இருக்கலாம் என்று பெருந்தன்மையுடன் அன்றைய சுதந்திர இந்திய அரசு அறிவித்தது; அதனை ஹிந்துக்களும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டனர். இதுவும் சரித்திரம்.
சுதந்திரம் பெற்ற பாகிஸ்தானில் அப்போது கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்), மேற்கு பாகிஸ்தான் (இன்றைய பாகிஸ்தான்) என்ற இரு பகுதிகள் இருந்தன). அப்பகுதிகளில் வாழ்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்களின் நிலைமை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. தேசப் பிரிவினையை அவர்கள் ஆதரிக்கவில்லை. என்றபோதும் அவர்கள் மீது பிரிவினை வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. அதன் விளைவாக அவர்கள் அடைந்த இன்னல்கள் நமது சரித்திரத்தின் பக்கங்களில் பூசி மெழுகப்பட்டுள்ளன.
எனவேதான், அன்றைய காலகட்டத்தில் நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நாட்களில், பிளவுபடாத பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவிய இருண்ட காட்சிகளை ஒளிவு மறைவின்றிப் பதிவு செய்திருக்கிறார் இந்நூலாசிரியர் பிரசாந்த் போலே. குறிப்பாக 1947 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 15 வரை, அவரது வரலாற்றுப் பயணம், திகிலூட்டும் திரைக்கதை போலப் பயணிக்கிறது.
தில்லி, லாகூர், கராச்சி, கொல்கத்தா, டாக்கா, ஸ்ரீநகர், மும்பை, ஹைதராபாத், பெஷாவர் – என பல்வேறு நகரங்களின் நிலவரமும், அங்கு வாழ்ந்த மக்களின் மனநிலையும், அப்போது நாட்டை வழிநடத்திய தலைவர்களின் நிலைப்பாடுகளும் இந்த நூலில் பதிவாகி இருக்கின்றன. அன்றைய பத்திரிகைச் செய்திகளையே ஆவணமாகக் கொண்டு இந்த மறைக்கப்பட்ட வரலாற்றைத் தொகுத்திருக்கிறார் பிரசாந்த் போலே.
மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல், ஜவஹர்லால் நேரு, குருஜி கோல்வல்கர், முகமது அலி ஜின்னா, டாக்டர் பீமாராவ் அம்பேத்கர், மவுன்ட் பேட்டன், ஷேக் அப்துல்லா, வீர சாவர்க்கர் – என பல தலைவர்களின் செயல்பாடுகள் சுதந்திரத்துக்கு முந்தைய 15 நாட்களில் எவ்வாறு இருந்தன என்பதையும் இந்நூல் பதிவு செய்திருக்கிறது.
கையறுநிலையில் தவித்த மகாத்மா காந்தியையும், அதிகாரமேடை நோக்கி விரைந்த நேருவையும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக நாம் காண்கிறோம்; அதேபோல பிரிவினை நாயகனாகப் பெருமிதம் பொங்கிய ஜின்னாவையும், பிளக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த ஹிந்துக்களின் நலனுக்காகப் போராடிய கோல்வல்கரையும் நாம் காண்கிறோம். லாகூரிலும் கராச்சியிலும் டாக்காவிலும் இருந்த காங்கிரஸ் தலைவர்களின் பரிதாப நிலையையும், தில்லியிலும் சென்னையிலும் மும்பையிலும் இருந்த காங்கிரஸ் தலைவர்களின் கொண்டாட்ட நிலையையும் ஒருசேர இந்த சரித்திரம் பதிவு செய்திருக்கிறது.
ஒருபுறம், சுதந்திர கோலாகலம். மறுபுறம் குற்றுயிரும் குலையுயிருமாக அகதிகளாக பாகிஸ்தானில் வேட்டையாடப்பட்ட ஹிந்துக்கள். தேசம் பிளக்கப்பட்டு தானமாக வழங்கப்பட்ட மாகாணங்களில் வாழ்ந்த பல கோடி ஹிந்துக்களின் வாழ்க்கையை அடமானம் வைத்து, சுதந்திர இந்தியா ஆகஸ்ட் 15இல் பிறந்தது. அதனை இந்தியாவின் பிற மாகாணங்கள் கொண்டாடி மகிழ்ந்தன. இது விதியின் பிழையா, நமது தலைவர்களின் பிழையா? அல்லது சமுதாயப் பிழையா?
சரித்திரம் தயவு தாட்சண்யமற்றது. தன்னை மறப்பவர்களுக்கு சரித்திரம் பாடம் கற்பித்துக் கொண்டே இருக்கும். சுதந்திர இந்தியாவில் இந்த உண்மையை நாம் முற்றாக உணர்ந்திருக்கிறோமா?
‘அந்த 15 நாட்கள்’ நூல் வெறும் சரித்திர நிகழ்வுகளின் தொகுப்பு மட்டுமல்ல, இது நமது வாழ்க்கையோடு விதி விளையாடும் நர்த்தனத்தின் முன்னோட்டம். சரித்திரத் தவறுகளிலிருந்து பாடம் கற்பதே, நமது வருங்காலத் தலைமுறையினரைக் காக்கும் கேடயமாக இருக்கும்.
நாடெங்கும் நிலையற்ற அரசியல் சூழலை உருவாக்கும் சதிகள் தற்போது வேகமெடுத்திருக்கின்றன. 1947க்கு முந்தைய அதே பிரிவினைச் சிந்தனையை சிறுபான்மையினரான முஸ்லிம்களிடம் பரப்பும் பணி அதிவிரைவாக நடைபெறுவதையும் நாம் காண்கிறோம். நாட்டின் சில பகுதிகளில் ஹிந்துக்களின் மக்கள் தொகை குறைந்து வருவது, அன்றைய லாகூர், கராச்சி, டாக்கா நகரங்களை நினைவூட்டுகிறது. இவை எதுவும் நல்லதற்கல்ல.
எனவே, நாட்டு நலனையும் எதிர்கால நலனையும் குறித்து சிந்திப்பவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. முந்தைய கசப்பான அனுபவங்களை நினைவுகூர்வது, இன்றைய சூழலில் நமக்கு புதிய திசைகளை அளிக்கக் கூடும். அந்த வகையில், தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஒரு கண் திறப்பாக இந்நூல் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
$$$
அந்த 15 நாட்கள்:
பிரசாந்த் போள்
விலை: ரூ. 200-
வெளியீடு:
விஜயபாரதம் பிரசுரம்,
31, எம்.வி.நாயுடு தெரு,
பஞ்சவடி, சேத்துப்பட்டு,
சென்னை- 600 031.
தொடர்புக்கு: +91 89391 49466