இலக்கியத்தில் ஒரு இணுக்கு…

-குமார் ஷோபனா

கோவையைச் சேர்ந்தவரும் பெங்களூரில் விளம்பரவியல் ஆலோசகராக (பிராண்ட் கன்சல்டன்ட்) பணியாற்றுபவருமான திரு. குமார் ஷோபனா, இலக்கியங்களில் மூழ்கி முத்தெடுப்பவர். அவரது சிறு பதிவு இது...

நம்ம ஆத்தா ஔவையார் சில சமயம் செருப்பால் அடித்த மாதிரி தயவு தாட்சண்யம் இல்லாமல் கருத்துக்களைச் சொல்லி விடுவார்!

ஒரு சபை நடுவே நின்று நீட்டிய ஓலையை வாசிக்கத் தெரியாத, ஒரு குறிப்பறிய வக்கில்லாத ஒருவன் எப்படி மற்ற எல்லா மரங்களை விட மேன்மையான மரமாக இருப்பான் என்று ஒரு மூதுரை பாடலில் இப்படி சொல்லி இருக்கிறார்:

கவையாகிக் கொம்பாகிக் காட்டு அகத்தே நிற்கும்
அவை அல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே 
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய 
மாட்டாதவன் நல் மரம்!

கச்சிதமாக 31 பாடல்களை நெத்தியடியாக வெண்பா  பாணியில் மூதுரையில் கொடுத்திருக்கிறார் ஆத்தா ஔவையார்.

மரம் போல நிற்கும் தத்தியைப் பற்றி எழுதி இருந்தாலும், இப்போது விஷயம் அதுவல்ல.

வேறு என்ன?

இதில் ‘கவையாகிக் கொம்பாகிக் காட்டு அகத்தே நிற்கும் மரம்’ என்று பாடுகின்றாரே!  அது என்ன கவை, கொம்பு?

சொல்கிறேன்….

  • அடிமரத்திலிருந்து பிரியும் பெரும் பிரிவு –  கவை.
  • கவையில் இருந்து பிரிவது கொம்பு.
  • கொம்பில் இருந்து பிரிவது கிளை. 
  • கிளையில் இருந்து பிரிவது சினை.
  • சினையில் இருந்து பிரிவது போத்து.
  • போத்தில் இருந்து பிரிவது குச்சு.
  • குச்சில் இருந்து பிரிவது இணுக்கு.

இவற்றில் கவை, சினை தவிர மற்ற ஐந்து வார்த்தைகளும் (கொம்பு, கிளை, போத்து, குச்சு, இணுக்கு) கொங்கு மண்டலத்தில் இன்னும் உபயோகத்தில் உள்ளன.

$$$

Leave a comment