-ச.சண்முகநாதன்
பெங்களூரில் பணியாற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநரான திரு. ச.சண்முகநாதன், கம்பனிலும் பக்தி இலக்கியங்களிலும் தோய்ந்தவர். அவரது சுவையான பதிவு இது...

நாலாயிர திவ்ய பிரபந்தம் நம்முடைய மூச்சுக்காற்றில் கலந்துவிட்டதாகவே எண்ணுகிறேன், தினமும் சொல்கிறோமோ இல்லையோ, 100 பாசுரமாவது தெரிகிறதோ இல்லையோ, ஏதோ ஒரு வகையில் நம்மை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது ஆழ்வார் தமிழ்.
பெருமாள் கோயில்களில் இருக்கும் தூண்களுக்கிடையில் கண்ணுக்குத் தெரியாத தூண்களாக ஆழ்வார் தமிழ் தாங்கி வருகிறது.
பிரபந்தம் அள்ளித்தரும் தகவல்கள் ஒன்றிரண்டல்ல. கம்பனுக்கு முன்காலத்தவர் ஆழ்வார்கள். ஆழ்வார்களின் ராமாயணத்தை, கம்பனின் தாக்கம் இல்லாமல் படிப்பது அலாதியானது.
பக்தி எனும் தமிழ் கரை புரண்டோடும் பிரபந்தத்தில்.
குலசேகர ஆழ்வார், திருவேங்கடத்தானிடம் ‘உன் கோயில் வாசலில் என்னை படியாகப் பிறக்கச்செய் இறைவா’ என்று பொருள் படும்படி “படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!” என்று பாடியதை’ பார்க்கும் பொழுது, நம் உயிர் உள்ளுக்குள்ளே கரைவது தெரிகிறது.
சாமானியனுக்கு பிரபந்தம் தெரியாமல் இருக்கலாம், ஆனால் பிரபந்தத்தின் சாரம் அனைவரின் ஆன்மாவிலும் இருக்கிறது.
சமீபத்தில் பிரபந்தம் வாசித்துக்கொண்டிருந்த பொழுது ஒரு விஷயம் கண்ணைக் கவர்ந்தது. ராமன் போரில் வென்று விடுகிறான், ராவணன் தோற்கிறான். ராவணனின் படை வீரர்கள் தோற்றவுடன், வெற்றி கொண்ட அணியின் முன் சென்று ‘குழமணி தூரம்’ என்றொரு கூத்து ஆட்டம் ஆடுகிறார்கள்.
“வென்றி தந்தோம் மானம் வேண்டோம்; தானம் எமக்கு ஆக
இன்று தம்மின் எங்கள் வாழ்நாள் எம் பெருமான்-தமர்காள்
நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மைக் கொல்லாதே
குன்று போல ஆடுகின்றோம் குழமணிதூரமே”
-திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழி-5)
(நாலாயிர திவ்ய பிரபந்தம்:பாசுரம்- 1871)
“வெற்றி உங்களுடையது, எங்கள் அகங்காரம் அழிந்தது. இனி எங்கள் ஆயுளை எங்களுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும். உங்கள் கண்கள் ஆசை தீர, தோற்றவர்கள் ஆடும் குழமணி தூரம் ஆட்டம் ஆடுகிறோம். பார்த்து மகிழுங்கள்”.
குழமணி தூரம் என்பது ஒரு கூத்து வகை. ‘வென்றிக்கூத்து’ என்பது வென்றவர்கள் தேர்த் தட்டின் மீது நின்றாடும் கூத்து. போர்த்தலைவர்களெல்லாம், வெற்றியைக் கொண்டாட, கைகோர்த்து நின்றாடும் கூத்து இது. ‘குழமணி தூரம்’ என்பது வென்றவர் தம்மீது இரங்குமாறு தோற்றவர் ஆடும் கூத்து. இது தலைகீழாக நின்று ஆடும் ஆட்டம்.
இதைத்தான் ஆழ்வார் 10 பாடல்களில் பாடியுள்ளார். “நீர் எம்மைக் கொல்லாதே, குன்று போல ஆடுகின்றோம் குழமணிதூரமே”.
இந்த கூத்து வகைகளை ‘நாடகத் தமிழ்’ என்ற நூலில் பம்மல் சம்பந்த முதலியார் விரிவாக எழுதியிருக்கிறார். வெவ்வேறு தமிழ் இலக்கியங்களில் கூத்துவகை பாடப் பட்டிருக்கிறது. பிரபந்தத்தில் இதைக் கண்ட பொழுது இன்னும் கொஞ்சம் சுவையாகிறது இலக்கியம்.
பிரபந்தம் எனும் அமிர்தக் கடல்.
$$$