நெல்லை அளக்கும் பொழுது…

-கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்

‘கலைமகள்’ மாத இதழின் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் முகநூலில் எழுதிய பதிவு இது... நமது பாரம்பரிய அளவைகள் குறித்த கருவூலப்பதிவாக இங்கு வெளியாகிறது. 

ஆண்டளக்கும் பெருமாள், திருஆதனூர்

நெல்லை அளக்கும் பொழுது அல்லது அரிசியை அளக்கும் பொழுது, ஒன்று, இரண்டு என்று சொல்லி நெல்லைக்காரர்கள் அளப்பதில்லை. அவர்களுடைய குலதெய்வத்தை முதலில் சொல்லி பின்பு அளவு முறை நடைபெறும்.

குறிப்பாக எங்கள் கீழாம்பூர் கிராமத்தில், ‘கல்யாணி, இரண்டு, மூன்று’ என்று சொல்லி அளப்பார்கள். ஆழ்வார்குறிச்சி கிராமத்தில், ‘சைலபதி, இரண்டு, மூன்று’ என்று சொல்லி அளப்பார்கள். பரமகல்யாணி எங்கள் ஊரில் பிறந்த தெய்வம். சைலபதி ஆழ்வார்குறிச்சிk காரர்களுக்கு இஷ்ட தெய்வம் ஆகவும் குல தெய்வமாகவும் இருக்கக்கூடும்.

பெரும்பாலமான மாவட்டங்களில் ‘லாபம், இரண்டு, மூன்று’ என்று எண்ணிய படிதான் அளக்கிறார்கள்.

12 மரக்கால் என்பது 1 கலமாகும். கலமானது ஒரு மேனி என்னும் அளவைக் குறிக்கும்.இது தஞ்சாவூர் அளவு முறை.

ஒரு கோட்டை என்பது 21 மரக்காலாகும். இது  நெல்லை மாவட்டக் கணக்கு. கால் கோட்டை, அரைக் கோட்டை, முக்கால் கோட்டை போன்ற அளவுமுறைகளும் உண்டு.

மரக்கால்

ஒரு மூட்டை என்பது 24 மரக்கால் என்னும் வழக்கு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளதாகும்.

  • கால் மரக்கால் கொண்டது ஒரு நாழி
  • ஒரு மரக்கால் கொண்டது ஒரு குருணி
  • இரண்டு மரக்கால் கொண்டது ஒரு பதக்கு
  • மூணு மரக்கால் கொண்டது முக்குருணி

இப்படி இன்னும் நிறைய அளவுகள் உண்டு. 

  • 1 உழக்கு = 2 ஆழாக்கு = 1/4 படி
  • 2 உழக்கு = 1 உரி
  • 2 உரி = 4 உழக்கு = 8 ஆழாக்கு = 1 படி
  • 1 சேர் = 5 ஆழாக்கு
  • 8 படி = 1 மரக்கால்
  • 96 படி = 1 கலம் = 12 மரக்கால்
  • 2 படி கொண்டது= ஒரு பக்கா.
படி அளவைகள்

மரக்கால் என்பது பண்டைத் தமிழர் பயன்படுத்திய முகத்தலளவைக் கருவியாகும். அம்முகத்தலளவைக் கருவி அம்பணம், குறுணி, வள்ளம் முதலான வேறு பெயர்களிலும் அழைக்கப்பட்டது.

மரக்கால் என்னும் சொல்லுக்கு தமிழ் இலக்கியங்கள் சூட்டிய பெயர்களைக் கீழே காண்போம்:

  • முகத்தலளவைக் கருவி (சீவகசிந்தாமணி – 2486:4),
  • அளவைக்கால் (திவாகரம் -7:183),
  • அம்பணம் (ஐங்குறுநூறு- 43:1),
  • குறுணி (கண்ணுடையம்மன் பள்ளு-10:3), 
  • தூம்பு (சூடாமணி- 7:54),
  • குளகம் (சூடாமணி – 7:54),
  • கச்சம் (சூடாமணி- 7:54),
  • ஒருமரக்கால் விதைப்பாடு (திருநெல்வேலி வழக்கு),
  • உப்பளம் (பிங்கல நிகண்டு- 4:145)
பித்தளை மரக்கால்

ஆரம்பக் காலத்தில் ‘மரக்கால்’ மரத்தால் செய்யப்பட்டு உபயோகிக்கப்பட்டது. பின்னர் உலோகத்திற்கு மாறியது. பெரும்பாலும் இரும்பிலும் பித்தளையிலும் மரக்கால்கள் உருவாக்கப்பட்டன. மரக்கால் அளவையை பாண்டிய மன்னர்கள் தான் கொண்டு வந்தார்கள் என்று ஒரு சாராரும், பல்லவர்களும் சோழர்களும் தான் இதற்கு சொந்தக்காரர்கள் என்று இன்னொரு சாராரும் சொல்வது உண்டு.

மரக்காலை தலையில் வைத்துக்கொண்டு பள்ளிகொண்ட பெருமாள் ஒருவர் இருக்கிறார்.

ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. இத்தலம் கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள ஆதனூரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தரும் பெருமாள் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் என அழைக்கப்படுகிறார்.

கருவறையில் பெருமான், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், தமது நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா மேல் எழ, பள்ளி கொண்ட தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். மரக்காலைத் தலைக்கு வைத்து இடதுகையில் எழுத்தாணியும் ஏடும் கொண்டுள்ளதால் பெருமாளின் இத்தோற்றம், ‘உலகுக்குப் படியளந்த பெருமாள்’ ஓய்வாகப் பள்ளிகொண்ட கோலம் என அழைக்கப்படுகிறது.

$$$

Leave a comment