-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #33

33. ஆக்கிரமிக்கும் வெங்காயத் தாமரைகள்
கதிரவன் மிகுந்த நம்பிக்கையுடன்
கடல் நீரை நன்னீராக்கி எழுப்புகிறது.
மரங்களில் இருந்து எழும் குளுமை
மிகுந்த எதிர்பார்ப்புடன் குளிர்வித்து மேகமாக்குகிறது.
நல் மேய்ப்பன் தன் மந்தையைப்
புல்வெளிகள் நோக்கி ஆற்றுப்படுத்துவதுபோல
மேகங்களை நன்னிலம் நோக்கி
மேய்த்துக் கொண்டுவருகிறது காற்று.
ஒரு நகரத்தைக் கண்டதும்
அதில் ஓடும் நதியைக் கண்டதும்
கன்றுக்குச் சொரியும் தாய் மடிபோல
தடையற்றுப் பொழிகின்றன மழை மேகங்கள்.
பாவம்…
அந்த நகரம் குப்பை மேடாகிவிட்டிருப்பதும்,
நதி சாக்கடையாகிப் போயிருப்பதும்,
கதிரவனுக்கும் தெரியவில்லை…
காடுகளுக்கும் தெரியவில்லை..
காற்றுக்கும் தெரியவில்லை…
கார் மேகங்களுக்கும் தெரியவில்லை!
அன்புக்கே அடைக்கும் தாழ் கிடையாது.
பேரன்புக்கு எப்படி இருக்கும்?
சாக்கடை என்பது தெரியாமல்
ததும்பத் ததும்பப் பொழிகிறது.
*
அனைத்து வீட்டுக் கழிவுகளும் சேர்ந்துதான்
இந்த நதி சாக்கடை ஆகியிருக்கிறது.
இன்று நகரை இணைப்பது
குறுக்கும் மறுக்குமாக ஓடும்
நவீனச் சாக்கடைகள் மட்டுமே.
நினைத்துப் பாருங்கள்
உங்கள் ரத்த நாளங்களில்
அசுத்த நீரே அலை புரண்டு ஓடுவதை…
ஆனால், வீட்டுக் கால்வாய்களால் மட்டுமே
விஷமாகிவிடுவதில்லை ஒரு நதி.
மேலைத் தொழிற்சாலைகளின்
முழுக்கழிவும் கலந்துதான் நஞ்சாகிறது மகாநதி.
மக்காத மேலைக்குப்பைகளின் மேடே மாநகரம்.
நவீனச் சாக்கடைகள் சங்கமித்து ஓடுவதே
இன்று நம் நதி.
பெருமழைகள் நதியில் பெய்தால் நன்னீர் பெருகும்.
சாக்கடையில் பெய்தால் சாக்கடைதானே பெருகும்?
சாக்கடை சிறிதாக இருந்தால்
வீட்டுக் கழிவு வெளியேறும்;
சாக்கடை பெருகினால்
ஊர் கழிவே உள்ளே வரும்.
நாற்றத்துக்குப் பழகிய நாசிக்கு
நன்னீரையும் தெரியாது…
சாக்கடையையும் தெரியாது.
விஷயம் என்னவென்றால்
இன்று சாக்கடையாக இருக்கும் இடத்தில்
நாளை விஷ வாயு உற்பத்தியாகும்.
வீட்டுச் சாக்கடையில் உருவாகும் விஷ வாயுவையே
வீட்டில் உள்ளவர்களால் தாங்க முடியாது.
நகரத்துச் சாக்கடை நதியில்
நாளை உருவாகப் போகும் விஷவாயுப் புயலை
யாரால் தாங்க முடியும்?
எதனால் தடுக்க முடியும்?
இமயத்தின் பனி உருகி
அத்தனை மாநிலத்துக் கழிவுகளையும் அடித்துக்கொண்டு
ஆழ்கடலில் கொண்டு தள்ளினால்தான்
அழிவில் இருந்து தப்ப முடியும்.
ஆம்-
தேசத்து நதிகளை இணைத்தாலே
தனித்துத் தேங்கும் சாக்கடைக் குட்டைகளை அப்புறப்படுத்த முடியும்.
ஆண்டவா!
அடுத்துப் பாயும் நீரோட்டம்
அதுவாகவே இருக்கட்டும்!
*
மா நகரங்களின் நிலை இதுவென்றால்,
நீர்பிடிப்புப் பகுதிகளின் நிலை அதைவிட மோசம்.
அங்கு படர்ந்திருக்கிறது
பச்சைப் பசுமையாக நீலப் பூக்கள் மின்னும் நீர்த்தாவரம்.
(நீரில் வளர்வதால் நீர்த்தாவரம் என்றுதான்
சொல்லியாக வேண்டியிருக்கிறது.
உண்மையில் அது நீரை உறிஞ்சி அழிக்கும் தாவரம்).
அந்த நீலப் பூவில் தேனில்லை என்பதோ,
அந்தப் பச்சைப் பசுமை என்பது
காயோ கனியோ கதிர்மணியோ அற்ற
அயல் தேசத்துச் செடி ஒன்றின்
அபாயப் பரவல் என்பதோ யாருக்கும் புரியவில்லை.
புற்று நோய்போல் பற்றிப் படர்ந்து கொண்டிருக்கிறது
வேர் பிடிப்பில்லாத வெங்காயத் தாமரை!
பொருத்தமான பெயர்தான் இல்லையா?
வெங்காயம் போல இருக்கும் –
ஆனால் வெங்காயம் அல்ல.
தாமரை போல் மிதக்கும் –
ஆனால் தாமரை அல்ல.
ஒன்றைப் போலவே இருக்கும்
ஆனால் அந்த ஒன்றே அல்ல.
அகராதியில் அதை க்ரிப்டோ என்றழைப்பார்கள்.
ஆலய நந்தவனங்களுக்கும்
பொற்றாமரைக் குளங்களுக்கும்
ஆநிரைகளின் மேய்ச்சல் நிலங்களுக்கும்
அத்தனை பேருக்குமான வயல்வெளிகளுக்கும்
பாய வேண்டிய நீரை அடைத்தபடி
அது வளர்கிறது.
மழைப்பிடிப்புப் பகுதியில்
பரந்து விரிந்து கிடக்கும் நீர்நிலைமேல்
படர்ந்துகிடக்கும் வெங்காயத் தாமரை
சத்தமின்றி உறிஞ்சுகிறது
அடுத்தடுத்துப் பெய்யும் அத்தனை மழைகளையும்.
ஒரு துறவி…
ஒரு கர்ம யோகி…
ஒரு ஞானி…
தன் வாழ்வை முழுமையாக வாழ்ந்து
பூத உடலை ஒரு உலர்ந்த சருகாகப்
புவியில் விட்டுச் செல்வதுபோல
அந்த மழை மேகம்
அத்தனை மன நிறைவுடன்
40க்கு 40 என முழுமையாகப்
பொழிந்துவிட்டுச் சென்றிருக்கிறது.
நீரின் மேல் மிதக்கும் எண்ணெய்ப்படலத்தில்
வானவில் போல் வண்ணங்கள் மின்னுவதைப் பார்த்திருப்பீர்கள்…
அதை ரசிக்கக்கூடச் செய்திருப்பீர்கள்.
ஆனால்,
நீர் வாழ் உயிரினங்கள் அனைத்தையும்
மூச்சு முட்டி அழியச் செய்ய
அந்த மெல்லிய சிறுபான்மைப்படலமே போதும்.
அது உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
பரந்து விரிந்த நதிமேல் மிதக்கும் வெங்காயத் தாமரையின்
போலி நீலப் பூக்கள் மென் காற்றில் அசைந்தாடுவது
விஷப்படலம் ஒன்று அலைவுறுவது போலவேதான் இருக்கிறது.
அதுவும் புரிந்திருக்கவில்லை
ஆனால்,
புரிந்துகொண்டாக வேண்டும்.
இப்போது புரிந்துகொள்ளவிட்டால்
எப்போதுமே புரிந்துகொள்ள முடியாது.
இதைப் புரிந்துகொள்ளாவிட்டால்
எதைப் புரிந்துகொண்டும் பலனில்லை.
$$$