உருவகங்களின் ஊர்வலம் -29

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #29

29. ஏலியன்களைப் புரிந்துகொள்ளாத வெள்ளாடுகள்…

ஏலியன்கள் நம்முடன் வசித்துவருகிறார்கள்.
ஒன்று இரண்டு அல்ல;
ஓராயிரம் ஆண்டுகளாக.
நாம் எல்லாருக்கும் தெரியும்.
ஆனாலும் தெரியாததுபோலவே இருந்து வருகிறோம்.

*

ஏலியன்கள் இரண்டு வகைப்படுவார்கள்.
ஒருவகையினர் ஏலியனாக இருந்தபடியே
நம்மை ஏலியனாக ஆக்குவார்கள்.
இன்னொருவகையினர்
பூவுலகவாசிகள் போல் வேடமிட்டுக்கொண்டே
நம்மை ஏலியனாக ஆக்குவார்கள்.

*

ஆதிகுடிகளின் தேசத்தில்
முதல் வகை ஏலியன்களின் வருகை
மிக மிக மூர்க்கத்தனமாக இருந்தது.
கண்ணில் பட்டவர்களையெல்லாம்
கண்டந்துண்டமாக வெட்டி வீழ்த்தினர்.
வெட்டுக்குத் தப்பியவர்களை
வலுக்கட்டாயமாக ஏலியன்களாக்கினர்.

(விரும்பி ஏலியன்களானதாகச் சொல்லப்படுவதெல்லாம்
புதிய ஏற்பாட்டு வசனங்கள்.
இரண்டாம் வகை ஏலியன்களின்
முதலாம் வருகைக்குப் பின்னான வெளிப்படுத்தல்கள்).

அவர்களுடைய கூம்பு ஒலி பெருக்கியின்
போர்க்கூவல் கேட்ட வெளியெங்கும்
ஒரு பிரமாண்டக் கறுப்பு பர்தா போல
அடர்ந்த இருள் கவிழ்ந்தது.

*

இரண்டாம் வகை ஏலியன்கள்
முதல் வகையைப் போல் மூர்க்கமானவர்கள் அல்ல;
வலிக்காமல்தான் கொல்வார்கள்.
அதாவது,
மயக்க மருந்து கொடுத்துவிட்டுக் கழுத்தை அறுப்பார்கள்.

உங்கள் நோய்களை சொஸ்தப்படுத்துவேன் என்ற
அவர்களின் பிரபல கோஷத்தை நம்பி பூவுலகவாசிகள்
தாமாகவே அந்த அறுவை மேடையில்
நற்சிகிச்சைக் கனவுகளுடன்
நிம்மதியுடன் ஏறிப் படுத்துக் கொள்வதைக் கொஞ்சம்
மனக்கண்ணில் நினைத்துப் பாருங்கள்.

வெட்டிக் கொல்லப்பட்டதைவிட வலிக்கிறதா…
வெட்டிக் கொல்லப்பட்ட காலத்தில்
விரும்பி ஏலியன்களான ’வரலாறு’ படித்துப் பாருங்கள்-
இந்த வலி குறைவாகத் தெரியும்.

முதல் வகை ஏலியன்களின் மூர்க்கங்கள் முடிவற்றவை
அதுபோலவே
இரண்டாம் வகை ஏலியன்களின் தந்திரங்கள் எல்லையற்றவை.

தமது ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த
ஏற்கெனவே வேறு ஏலியன்கள் வந்துபோனதாக
நவீன புராணம் ஒன்றை முதலில் கட்டமைத்தனர்.
அதாவது, சயின்டிஃபிக் ஃபிக்ஷன்.
அதற்கு வரலாறு என்று பெயரும் சூட்டினர்.
(அதாவது ஹிஸ் ஸ்டோரி
அதுவே ஹிஸ்டரி…).

அதன்படி
ஏலியன்களின் ஆதி வருகைக் கோட்பாடு ஒன்றை
உருவாக்கி உலவவிட்டார்கள்.
அதாவது,
பூவுலகின் ஆதி நாகரிகப் பகுதியில்
முன்பே முதல் அலை ஏலியன்கள் வந்து இறங்கி இருப்பதாகவும்,
இப்போது வந்திருக்கும் இவர்களின் முன்னோர்களே அவர்கள் என்றும்
வரலாறு சமைத்தனர்.
பூவுலகவாசிகள் சிலருமே அதை நம்பி விட்டார்கள்
என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

(சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பதுதானே
உலகக் கறுப்பர்களின் உறுதியான நம்பிக்கை?)

எங்கள் ‘முன்னோர்களை’ ஏற்றுக்கொண்டது போல
எங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பூவுலவாசிகளிடமும்,
நம் ‘வேர்களை’ நாம் பலப்படுத்தவேண்டும் என்று ஏலியன்களுக்குள்ளும்,
பழைய ஏற்பாட்டு வசனங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

ஆனால் நாளடைவில்
இது அபத்தமாகப்படவே அல்லது
இப்படியாக ஒரு ‘முன்னேர் ஏலியன்கள்’ நமக்கு அவசியமில்லை;
நாமன்றோ பூவுலகின் ஒரே ரட்சகர்கள் என்று
உருவேற்றிக்கொள்ளத் தொடங்கினர்.

பூவுலகின் வேறு பகுதிகளில்
கால் வைத்த காடுகள், தீவுகள் எல்லாம்
அவர்களின் காலனியானதைத் தொடர்ந்து
நாமே ஆரம்பம்… நாமே முடிவு என்று
புதிய ஏற்பாட்டு வசனங்கள் புகுத்தப்பட்டன.

ஆதி ஏலியன்களின் வருகைக் கோட்பாட்டை
முழுவதும் மறைக்கவும் மறக்கவும் முடியவில்லை
எனவே,
இந்தப் பகுதி பூவுலகவாசிகளிடம்
உங்களுக்குள் ஊடுருவியிருக்கும் ஆதி ஏலியன்களை
அப்புறப்படுத்த நாங்கள் உதவுகிறோம் என்று
நற்செய்திக் கூட்டங்களை ஆரம்பித்தனர்.

அப்படியாக, இரண்டாம் வகை ஏலியன்களின்
முதல் வருகைக்குப் பின்னதாகவே
ஆதி ஏலியன்களின் முதல் வருகை நடந்தேறியது!

கால நதி நேர்கோட்டில் பாய்வதாக யார் சொன்னது?
ஏலியன்களின் டைம் மெஷினில்
அவர்கள் சொல்வதுபோலத்தான் அலைவுறும் கால ஊசல்கள்.
அவர்கள் எதிர்காலத்துக்குத் திரும்பி வருவார்கள்
கடந்த காலத்துக்கு முதலில் இருந்து வருவார்கள்.
அந்த ஃபிக்ஷனல் வரலாறு
அதி சயின்டிஃபிக்கானவை என்பதால்
எல்லாராலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அப்படியாக,
கெட்ட ஏலியன்களிடமிருந்து காக்க வந்திருக்கும்
நல்ல ஏலியன்கள் நாங்கள் என்று களமாடத் தொடங்கினர்.
பூர்வகுடிகளாக இருந்தும் ஏலியன்களாக்கப்பட்டவர்களும்
இன்னபிற பூர்வகுடிப் போர் மறவர்களும்
இரண்டாம் வகை ஏலியன்கள் மீது
இரண்டாம் தாக்குதலை ஆரம்பித்தனர்.

ஏற்கெனவே முதலாம் வகை ஏலியன்களின்
முதுகெலும்பை அவர்கள் கூட்டு சேர்ந்து
முறியடித்துவிட்டிருந்தனர்.

அப்போதுதான் அந்த தந்திரம் அரங்கேறியது.
மூர்க்கத்தனமான ஏலியன் கும்பலும்
அதி தந்திரமான ஏலியன் கும்பலும்
நடுவில் ஒரு கோட்டைக் கிழித்துக்கொண்டு
இதை நீயும் தாண்டக் கூடாது; நானும் தாண்ட மாட்டேன் என
இரு தரப்பு நல ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

அந்த இரண்டு ஏலியன் கும்பலுக்கு இடையிலும்
வேறுவெளியில் வெறித்தனமான சண்டைகள்
நடந்ததுண்டு / நடப்பதுண்டு.

அனுபவங்கள் ஒருவரை நிபுணராக்குவது போல
பூவுலகின் இந்தப் பகுதிக்கு வந்ததும்
இரண்டு கும்பலும் ஒரு கண்ணியவான் ஒப்பந்தம் செய்துகொண்டனர்-உனக்கு வடக்கு
எனக்கு தெற்கு என பங்குபோட்டுக் கொண்டனர்.
உனக்கு வட மேற்கு
எனக்கு வட கிழக்கு என்று வரையறுத்துக்கொண்டனர்.

வடக்கும் தெற்கும் நமக்கு வசமானபின்
வடக்குக்கும் தெற்கும் நாம் மோதிக்கொள்ளலாம் என்று
தத்தமது வன்முறை நூல்கள் மேல்
வாக்குத் தத்தம் செய்துகொண்டனர்.

அடுத்ததாக
முதல் வகை ஏலியன்களும்
இரண்டாம் வகை ஏலியன்களும்
பூர்வகுடிகள் தம்மை எதிர்க்காமலிருக்க வேண்டுமென்றால்
பூர்வகுடிகள் தம்மைத் தாமே எதிர்த்துக்கொண்டாக வேண்டும்
என்று தீர்மானித்தனர்.

இரண்டு ஏலியன்களும்
மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தி,
நல்லெண்ணப் பயணங்கள் மேற்கொண்டு,
குறைந்தபட்ச புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில்
இன்னொரு கையெழுத்திட்டனர்.

இம்முறை பூர்வகுடிகள் சிலரும் அதில் கையெழுத்திட்டனர்.
அப்படியாக,
ஏலியன்களுக்கான போரை
பூர்வகுடிகள் முன்னெடுக்க ஆரம்பித்தனர்.

முன்வரிசையில் நின்று
ஏலியன்களை எதிர்த்த பூர்வகுடி மறவர்களின்
முதுகில் குத்தத் தொடங்கினர்.
பின் வரிசையில் நின்றவர்களில் சிலர்
தர்மப் போராளிகளின் கவசங்கள்
ஏலியன்களின் எந்த ஆயுதத்தையும் தடுக்க முடிந்தவையே
ஆனால்…
முதுகைக் காக்கும் கவசத்தைக் கண்டுபிடிக்க ஒருவராலும்
முடியவே இல்லையே!

அப்படியாக முன் வரிசைப் போராளிகள்
முன்னும் பின்னுமான தாக்குதலில் மாட்டிக்கொண்டனர்.
பூர்வகுடிகளின் பாதுகாப்புக் கவசமாக இருந்து
போரிட்ட அவர்கள்
அடுத்த வரிசைப் பூர்வகுடிகளின் வழியை
அடைத்துக்கொண்டு நிற்பதாகச் சொல்லப்பட்டது.

ஏலியன்கள் தமது சர்ஜ்ஜிகல் ஸ்ட்ரைக்களின் இலக்காக
முன்வரிசைப் போராளிகளைக் குறி வைத்ததென்பது
மாஸ்டர் ஸ்ட்ரோக்காகவே இருந்தது.
ஆனால்,
ஏலியன்களின் அதி துல்லிய லேசர் கதிர்கள்
முன் வரிசைப் போராளிகளை மட்டுமல்ல;
அடுத்த வரிசைகளையும் ஊடுருவித் தாக்கும் என்பது
அங்கிருந்த யாருக்கும் புரியவில்லை.

தாக்க வேண்டியது எங்களை அல்ல என்று தர்மப் போராளிகள்
திரும்பி நின்று சினந்தபோது
திருப்பிப் போட்ட ஆமைபோல
ஏலியன்களின் லேசர் வீச்சுக்கு
எளிதில் இரையாகின அவர்களின் விழுப்புண் தேகங்கள்.

எதிரியைப் பார்த்தபடி எதிர்த்தால் முதுகில் கத்திக் குத்து.
துரோகியைத் திரும்பி நின்று எதிர்த்தால் எதிரியின் லேஸர் வீச்சு.

பூர்வகுடிகளுக்கிடையிலான பூசல்
ஏலியன்களால் எப்படி ஆரம்பிக்கப்பட்டன என்று தெரியுமா?
இதோ பார் உங்கள் தலைகள் உயரத்தில் இருக்கின்றன.
உங்கள் கால்கள் கீழே இருக்கின்றன.
என்று சொல்லித் தலையை வெட்டினார்கள்.
தமது தலையை அங்கு பொருத்தினார்கள்.
சமூக நீதி … சமூக நீதி என்று
உடம்பும் கால்களும் மட்டுமல்ல;
தரையில் உருண்டு கிடந்த தலையுமே
ஜெபிக்க ஆரம்பித்துவிட்டது.
எவ்வளவு எளிய வியூகம் பாருங்கள்.

*

அதன் பின் முதலாம் ஏலியன் கும்பலுக்கும்
பூர்வகுடிகளுக்கும் இடையில் மத்யஸ்தத்தை ஆரம்பித்தனர்.
முதல் அப்பத்தை எடுத்து திராட்சை ரசத்தில் முக்கினர்.
சரிசமாகப் பகிர்ந்து தருகிறேன் என்று சொல்லிப் பிய்த்தனர்.
ஐயகோ இந்தத் துண்டு பெரிதாகிவிட்டதே
அதிகமாக இருக்கும் இதைக் கொஞ்சம் நான் சாப்பிட்டு விடுகிறேன்
அப்பறம் இரண்டும் சமமாகிவிடும் என்று சொல்லி
செல்லக் கடி கடித்து விழுங்கினர்.

இப்போது இரண்டு துண்டையும்
கண்ணளவிலேயே எடைபோட்டுப் பார்த்து
ஐயகோ இந்தத் துண்டு இப்போது மிகவும் சிறிதாகிவிட்டதே;
இதில் கூடுதலாக இருப்பதைக் கொஞ்சம் கடித்து
சமமாக்கித் தருகிறேன்…
சமத்துவமே நம் ஒரே இலக்கு…
சகோதரத்துவமே நம் கை விளக்கு
என்று சொல்லியபடி அந்த அப்பத்துண்டையும்
கொஞ்சம் போல் விழுங்கினார்கள்.

திராட்சை மதுவென்பது
தேவனின் அல்ல; பூர்வகுடிகளின் ரத்தம்.
அப்பம் என்பது கர்த்தரின் அல்ல; புறச்சமயிகளின் மாம்சம்.
பூர்வகுடிகளின் ரத்தம் வற்றிக்கொண்டிருக்கிறது.
புறச்சமயிகளின் மாம்சம் கரைந்துகொண்டிருக்கிறது.
தசம பங்கிடல் இன்னும் முடியவில்லை.

*

முதலில் பூர்வகுடிகளின் தேசமாக இருந்தது.
அதன் பின் முதல் வகை ஏலியன்களின் சுல்தானகமானது.
இப்போது பரலோக சாம்ராஜ்ஜியம் சமீபிக்கவிருக்கிறது.

*

தனக்குத் தானே ஏலியனானவர்களால்
தங்களை எப்படித் தற்காத்துக்கொள்ள முடியும்
தந்திரக்கார ஏலியன்களிடமிருந்து?

தாக்குதலுக்கு அல்ல;
தற்காத்துக் கொள்ளக்கூடத் தந்திரங்கள் அவசியம்.

தந்திரத்தை தர்மத்தால் அல்ல;
தந்திரத்தாலே வீழ்த்த முடியும்.

பூர்வ குடிப் போராளிகள்
ஒரு ஏலியனுடன் கை கோத்துக்கொண்டு
இன்னொரு ஏலியனை வீழ்த்தலாம்.
மான் கூட்டம் ஓநாயோடு கூட்டு வைத்துக்கொண்டு
முதலையை வீழ்த்தலாம்.
அல்லது
முதலையோடு கூட்டு வைத்துக்கொண்டு
ஓநாயை அழிக்கலாம் என்பதுபோன்ற வியூகம்தான் இது.

எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன்தானே?
அல்லது ஓநாயையும் முதலையையும் சண்டைக்கு வா என்று அழைத்துவிட்டு
இரண்டும் தன் மீது பாயும்போது
சட்டென்று விலகிக்கொண்டு
இரண்டையும் அடித்துக்கொண்டு சாக வைக்கலாம்.

ஓநாய்க்குட்டியை முதலையிடம் தூக்கிப் போட்டுவிட்டோ
முதலைக் குட்டியை ஓநாய் மந்தையிடம் பிடித்துக் கொடுத்துவிட்டோ
இரண்டுக்கும் இடையில் மோதலை மூட்டலாம்.

எத்தனையோ வழிகள் இருக்கின்றன
ஆனால்
ஏலியன்களை அழிக்க வேண்டுமென்றால்
முதலில் அவை ஏலியன்கள் என்பது புரிய வேண்டும்.

தோளில் கை போட்டுத் திரிந்தால்
துல்லியத் தாக்குதல்களுக்கு ஆளாகி அழிய வேண்டியதுதான்.

அதைவிட முக்கியமாக
ஏலியன்கள் சிறுபான்மையாக நம் மத்தியில் வாழவில்லை.
சிதறுண்ட நாம்தான் ஏலியன்களின் மத்தியில்
சிறுபான்மையாக வாழ்கிறோம் என்பது புரிந்தாக வேண்டும்.

தன் நிலையே புரியாவிட்டால்
தந்திரங்களைப் புரிந்துகொள்வது எப்போது?

$$$

Leave a comment