திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -19

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது பத்தொன்பதாம் திருப்பதி...

19. ஆதிசேஷன் தவமிருந்த திருநாகப்பட்டினம்

குணத்தாலும் முகத்தாலும் அழகைக் கொண்டவனே,
குறையாத சிங்கமென நடந்தவனே,
குன்றாத தங்கமேனி உடையவனே,
கோகுலத்துப் பெண்கள் மனம் கவந்தவனே,
ஆதிசேஷன் படுக்கையில் படுத்தவனே,
பாதிபலம் பகைவரிடம் பெற்றவனே,
ஆதிமூலம் என்றவுடன் காத்தவனே,
ஆண்டவனாய் திருப்பதியில் நிற்பவனே,
அமர்ந்தவனே, நடந்தவனே, கிடந்தவனே!
திருநாகைப்பட்டினத்தில் நின்றவனே!
உயர்ந்தவனே, கீதை உரைத்தவனே – உனை
தினம் காண  வருவேனே திருநாகை கோயிலுக்கே!

நான்கு யுகம் கண்ட தலம். நின்ற, கிடந்த, இருந்த கோலங்களில் பெருமாள் அருள் பாலிக்கிறார். துருவனுக்கு பெருமாள் தனது அழகிய திருக்கோலத்தைக் காட்டி அருளிய தலம் இது. ஆதிசேஷன் தவமிருந்த தலமும் கூட.

மூலவர்:  நீலமேகப் பெருமாள்  (நின்ற கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: சௌந்தர்யவல்லி
உற்சவர்: சௌந்தர்ராஜன் – கஜலட்சுமி
ஆகமம்: பாஞ்சராத்ர ஆகமம்
விமானம்: சௌந்தர்ய விமானம்
தீர்த்தம்: சார புஷ்கரிணி
தல விருட்சம்: மாமரம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

லை 7.30 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை

எப்படிச் செல்வது?

மாயவரத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு பஸ்ஸில் சென்று இறங்கினால் பஸ் நிறுத்தத்திற்கு அருகிலேயே இத்திருத்தலம் உள்ளது.

சேவிப்பதன் பலன்கள்:

நாகதோஷம் உள்ளவர்கள், காலசர்ப தோஷம் உள்ளவர்கள், திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வந்து இப்பெருமாளை தரிசித்து வேண்டிவர, மனம் வேண்டியதைப் பெறலாம். 5, 14, 23, தேதிகளில் பிறந்தவர்களும் 7, 16, 25  தேதிகளில் பிறந்தவர்களும் வந்து தரிசிக்க வேண்டிய கோயில் ஆகும்.

$$$

Leave a comment