பூரண அகிம்சை அறத்துக்கு எதிரானது, அது ஒரு பாவம்

-வீர சாவர்க்கர்

ஆங்கில வார இதழான ‘ஆர்கனைசர்’ 1965 தீபாவளிச் சிறப்பிதழில், புரட்சியாளரும் விடுதலைப் போராட்ட வீரருமான வீர சாவர்க்கரின் நேர்காணல் வெளியாகி உள்ளது. நமது சரித்திரத் தேர்ச்சிக்காக, அந்த நேர்காணலின் தமிழ் வடிவம் இங்கு வெளியாகிறது....

கேள்வி: உங்கள் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும்போது சிலிர்ப்பூட்டும் நினைவுகளாக நீங்கள் கருதுவது எவற்றை?

சாவர்க்கர்: பழைய நினைவுகள் அவ்வப்போது வந்து என்னை எட்டிப் பார்க்கின்றன. சிலிர்ப்பூட்டும் அந்த நினைவுகளை நான் போற்றிப் பாதுகாத்து வருகிறேன். அவை என்னுடைய அங்கமாக வாழ்நாளின் இறுதிவரை இருக்கும்.

முதலாவதாக நினைவில் நிற்கும் சிலிர்ப்பூட்டும் நிகழ்வு, அதை இப்பொழுதும் துல்லியமாக நினைவுகூர முடிகிறது, கப்பலில் இருந்து தப்பிய பிரம்மிக்கத்தக்க சாகசம். அது இப்படித்தான் நடந்தது. 1910 மார்ச் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாரிஸ் மாநகரில் இருந்து லண்டன் வந்தடைந்தேன். விக்டோரியா ரயில் முனையத்திற்கு நான் வந்தடைந்த உடனேயே லண்டன் காவல் துறையினர் என்னை கைது செய்தனர்.

பம்பாய் அரசு தந்திமூலம் அனுப்பி இருந்த கைது உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டேன். தப்பி ஓடிய குற்றவாளிகள் சட்டம் 1881இன்  அடிப்படையில் அந்தக் கைது நடந்தது.

எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள்:

  1. இந்தியாவின் சக்கரவர்த்திக்கு எதிரான போர் மற்றும் போர் புரியத் தூண்டியது.
  2. பிரிட்டிஷ் இந்தியாவை மேன்மை தங்கிய மன்னர் ஆட்சியில் இருந்து பறிக்க அல்லது ஒரு பகுதியையாவது பறிக்க சதி செய்தது.
  3. நாசிக் கலெக்டராக இருந்த ஜான்சனைக் கொல்ல ஆயுதங்களைத் திரட்டியது; விநியோகித்தது.
  4. லண்டனிலிருந்து போர் புரிய ஆயுதங்களைத் திரட்டியது, லண்டனில் விநியோகித்தது.
  5. 1906 ஜனவரி முதல் இந்தியாவிலும் 1908, 1909 ஆண்டுகளில் லண்டனிலும் பிரிவினைவாத உரை நிகழ்த்தியது.

ஏடனுக்குச் செல்லும்*  ‘எஸ்.எஸ்.மோரியா’ என்ற கப்பலில் பிரிட்டிஷ் கைதியாக ஏற்றப்பட்டேன். தாய்நாட்டை அடைந்ததும் என் விதி எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். எனவே சாவின் கோரப் பற்களில் இருந்து தப்பிக்க முடிவெடுத்தேன்.

என்னுடைய அதிர்ஷ்டம் அந்த கப்பல் பிரெஞ்சு நாட்டில் உள்ள மார்சேயில்ஸ் துறைமுகத்தில் பழுது பார்க்க நிறுத்தப்பட்டது. எப்படியாவது இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கப்பலில் இருந்து தப்பிக்க முடிவெடுத்தேன். கழிப்பறைக்குச் சென்று உட்பக்கம் தாளிட்டேன். வெளியே காவலாளி நின்று கொண்டிருந்தான்.

நான் கழிப்பறையில் வெளிச்சம் வரப் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியை உடைத்து, அந்த துவாரத்தின் வழியே கடலில் குதித்து துறைமுகத்தை நோக்கி நீந்தினேன்.

காவலர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். வீரென்று எனக்கருகில் தோட்டாக்கள் பறந்து வந்தன. நான் நீருக்குள் மூழ்கி அவற்றைத் தவிர்த்தேன்; சாவுக்கு ஆட்டம் காட்டினேன். கடைசியில் துறைமுகத்தை அடைந்து தளத்தில் ஏறினேன்.

பிரெஞ்சு மண்ணில் நின்ற போது சுதந்திர மனிதனாக மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் விதி கருணையற்றும், கொடூரமாகவும் இருந்தது. என்னைத் துரத்தி வந்த பிரிட்டிஷ் காவலர்கள் என்னை மீண்டும் கப்பலுக்கு இழுத்துச் சென்றனர். அந்நிய மண்ணில் அவர்கள் என்னைப் பிடித்தது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது.

மனதில் நிற்கும் இரண்டாவது நிகழ்வு, எனக்கு விதிக்கப்பட்ட இரட்டை வாழ்நாள் தண்டனை. அதன்படி நான் அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையில் ஐம்பது ஆண்டுகள் இருக்க வேண்டும். தீர்ப்பின்படி அந்தமானிலிருந்து 1960 டிசம்பர் 24 ஆம் தேதிதான் நான் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவேன். ஆனால் அந்தமானில் 14 ஆண்டுகள் கழித்த பிறகு என்னை ஹிந்துஸ்தானில் ரத்தினகிரி எல்லைக்குள் 13 ஆண்டுகள் (வீட்டுச் சிறையில்) கழிக்க வைத்தனர்.  மொத்தத்தில், பிரிட்டிஷ் கைதியாக நான் 27 ஆண்டுகள் இருந்தேன்.

மூன்றாவது மறக்க முடியாத நிகழ்வு, அந்தமான் சிறையில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு எனது தேசபக்தி மிக்க தம்பியையும் கண்ணியம் மிக்க என் மனைவியையும் முதல்முறையாகச் சந்தித்தது. என்னை அந்தமான் சிறையில் சந்திக்க அரசு அவர்களுக்கு அனுமதி அளித்தது.

அதை எப்படி வார்த்தையால் விவரிக்க முடியும்? இருந்தாலும், என் மனைவியைப் பார்த்ததும் பேசியதும் எனக்கு பெரிதும் மகிழ்ச்சி அளித்தது. புரட்சியாளியான என்னுடைய வாழ்வின் துன்பங்களையும் துயரங்களையும் மன வேதனைகளையும் பகிர்ந்து கொண்டவள் அவள்.

கேள்வி: உங்கள் காலத்தில் நீங்கள் பெரும் புரட்சியாளராக இருந்தீர்கள். இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் மாபெரும் போராளி நீங்கள். எப்படி ஏன் புரட்சியாளரானீர்கள்?

சாவர்க்கர்: அது இப்படித்தான் நடந்தது. 1897இல் நாட்டில் கடும் பஞ்சமும் பிளேக் தொற்று நோயும் பீடித்திருந்தது. மக்கள் சொல்லாத துன்பம் அனுபவித்தனர். மக்களின் ஆன்மா துயரத்தில் ஆழ்ந்திருந்தது.

மக்கள் துயரத்தைப் போக்க அரசு எதுவும் செய்யவில்லை. நோயும் மரணமும் நாளுக்கு நாள் அதிகரித்தன. ஆங்கிலச் சிப்பாய்களின் அத்துமீறல்களும் நிர்வாக திறனற்ற, கொடுங்கோலனான ராண்ட் என்ற ஆணையரின் செயல்பாடுகளும் பூனாவைச் சேர்ந்த சாபேக்கர் சகோதரர்களுக்கு ஆத்திரமூட்டியது. அவர்கள் ராண்டையும் இன்னொரு ஆங்கிலேயனையும் சுட்டுக் கொன்றனர். சாபேக்கர் சகோதரர்கள் அரசால் தூக்கிலிடப்பட்டனர்.

அவர்கள் தூக்கிலிடப்பட்ட துயரச் செய்தி என்னைத் தூண்டியது. அப்போது எனக்கு 16 வயதுதான். என் மனம் அமைதியிழந்தது. அந்த இளம் வயதிலேயே என்னால் சாபேக்கர் சகோதரர்கள் செய்த செயலின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. அப்பொழுதுதான் என் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராட – தேவைப்பட்டால் சாகவும் – சபதம் எடுத்தேன்.

ஒரு நடுநிசியில் எங்கள் குடும்ப தெய்வமான, ஆயுதமேந்திய துர்க்கையின் முன் நின்று இந்தச் செயலில் ஈடுபட வல்லமை தரும்படி, தெய்வீக ஆசி வேண்டி, சபதம் ஏற்றேன். தேசத்திற்கான என் கடமையைச் செய்யவும், தியாக சீலர்களான சாபேக்கர் சகோதரர்களின் மகத்தான பணியைப் பூர்த்தி செய்யவும், துர்க்கை அன்னையின் முன்பு சபதமேற்றேன். என் நேசத்திற்குரிய தாய்நாட்டை விடுவிக்கவும், பிரிட்டிஷாரை விரட்டவும், நாட்டை மீண்டும் அதன் பெருமை மிக்க – அதுதான் ஹிந்து – இடத்தில் நிலைநிறுத்தவும் நான் சபதம் ஏற்றேன்.

அன்று இப்படித்தான், இதற்காகத்தான் நான் புரட்சியாளரானேன்.

கேள்வி: நம் தேச விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய காரணிகள் எவை?

சாவர்க்கர்: பாரதத்தின் விடுதலைக்கு பல காரணிகள் பங்களித்துள்ளன. ஹிந்துஸ்தானத்தின் சுதந்திரத்திற்கு காங்கிரஸ் மட்டுமே காரணம் என்பது தவறானது. அதேபோல ஒத்துழையாமை, ராட்டை, 1942இல் நடந்த  ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ ஆகியவற்றால்தான் பிரிட்டிஷார் நம் நாட்டை விட்டு வெளியேறினார்கள் என்பதும் பொருளற்ற கூற்று. வேறு சில சக்தி வாய்ந்த – ஆங்கிலேயர்களுக்கு வேறு வழியே தராமல் நிர்பந்தித்த – வலிமையான காரணிகள்தான் இறுதியாக நம் தேசத்தை விடுதலை பெற செய்தன.

முதலாவதாக, ஹிந்துஸ்தானை அடக்கி ஆள்வதற்கு பிரிட்டிஷார்கள் ராணுவத்தையே சார்ந்து இருந்தனர். அந்த ராணுவத்தில் இந்திய அரசியல் புகுந்து விட்டது.

இரண்டாவதாக, ராயல் இந்திய கடற்படையின் கலகமும், அதன் தொடர்ச்சியாக விமானப்படையிலும் கலகம் ஏற்படலாம் என்ற அச்சுறுத்தலும்.

மூன்றாவதாக, நேதாஜி சுபாஷ் போஸூம், இந்திய தேசிய ராணுவத்தின் வீரமிக்க பங்களிப்பும்.

நான்காவதாக, 1857இல் நடந்த சுதந்திரப் போர் ஆங்கில அரசை உலுக்கி விட்டது.

ஐந்தாவதாக, ஆயிரக்கணக்கான புரட்சியாளர்களின் தியாகமும், காங்கிரஸ் மற்றும் இதர கட்சி,  குழுவில் இருந்த தேச பக்தர்களின் பங்களிப்பும்.

எனவே, ஹிந்துஸ்தானில் இருந்த எண்ணற்ற ஆண், பெண்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும், கண்ணீராலும் பெறப்பட்டதே நம் தேச விடுதலை.

கேள்வி: காந்திஜியும் இதர காங்கிரஸ் தலைவர்களும் உங்களை காங்கிரஸில் சேரும்படி எப்போதாவது வற்புறுத்தினார்களா? அப்படியானால், நீங்கள் ஏன் காங்கிரஸில் சேரவில்லை?

சாவர்க்கர்: காந்திஜி கூறிய அகிம்சை கொள்கையை நான் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை. பூரண அகிம்சை என்பது பாவம் மட்டுமல்ல, அது அறநெறிக்கு எதிரானது.

அகிம்சை கொள்கை புரட்சிகரச் செயல்பாடுகளை நீர்த்துப்போகச் செய்வது. ஹிந்துக்களின் இதயத்தையும் எலும்புகளையும் வலுவிழக்கச் செய்வது; எதிரிகளின் எலும்புகளை வலுவாக்குவது.

ஆடுகள் தாவர உணவை மட்டுமே உண்டு வாழ்வதென முடிவெடுக்கலாம், அந்தத் தீர்மானத்தின் புனிதத் தன்மை ஓநாய்களுக்கு பொருட்டே அல்ல. வன்மையான எதிர்ப்பு, ரத்தம் சிந்துதல், பழி வாங்குதல் ஆகியவையே அநீதியைக் களைய இயற்கை ஏற்படுத்தி உள்ள வழிமுறைகள்.

காங்கிரசின் வழிமுறைகள், கொள்கைகள், திட்டங்களுடன் எனக்குள்ள வேறுபாடு அடிப்படையானது. எனவே என்னால் காங்கிரஸில் சேர முடியவில்லை.

1942 இயக்கத்தின் போது  ‘பாரத தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டில் நாங்கள் அசைக்க முடியாதபடி உறுதியாக இருப்போம். தேச விரோத முஸ்லிம் லீகுடன் எந்த விதமான உறவும் கிடையாது’ என்று காங்கிரஸ் உறுதிமொழி கொடுத்திருந்தால் ஹிந்து மகாசபை அத்துடன் இணைந்து இருக்க வாய்ப்பு இருந்த்து. சுதந்திரமான, அகண்ட ஹிந்துஸ்தான் என்ற நம்முடைய கனவை திட்டமிட்ட ரீதியில் சிதைத்தது காங்கிரஸ் தலைமை என்பதை மக்கள் இப்பொழுது புரிந்து கொண்டுள்ளார்கள்.

கேள்வி: நீங்கள் கனவு காணும் இந்தியா எப்படி இருக்கும்?

சாவர்க்கர்: என்னுடைய பாரதம் ஒரு ஜனநாயக நாடாக இருக்கும். அங்கு பல்வேறு மதங்களும், மதப் பிரிவுகளும் இனங்களும் அதன் உட்பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் சமமாக நடத்தப்படுவார்கள். யாரும் யார் மீதும் ஆதிக்கம் செலுத்த அனுமதி கிடையாது.

தேசத்திற்குக் கடமைப்பட்டவராக, அதற்கான பொதுவான கடமைகளை நிறைவேற்றுபவராக எல்லா குடிமக்களும் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் வரை ஒரு சுதந்திரமான குடிமகனாக எவருடைய நியாயமான, சமமான உரிமைகளும் பறிக்கப்படாது. சிந்து முதல் கடல் சூழ்ந்த தென்னகம் வரை, இந்த ஹிந்துக்களின் புனித பூமியான ஹிந்துஸ்தான் உயிரோட்டமுள்ள பிரிக்க முடியாத தேசம்.

ஹிந்து சமுதாயம் ஜாதிப் பிரிவினை அற்றதாக, நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட, நவீன தேசமாக விளங்கும். அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்க்கப்படும். பெரும் நிலஉடமை முறை முற்றிலும் ஒழிக்கப்படும்; எல்லா நிலமும் அரசுக்கே சொந்தம். முக்கியமான தொழில்கள் எல்லாம் தேச உடைமையாக்கப்படும்.

உணவு, உடை, வீடு மற்றும் பாதுகாப்பில் பாரதம் தற்சார்பு கொண்டதாக விளங்கும். நான் கனவு காணும் பாரதம் உலகப் பொதுமையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கும். ஏனெனில் பூமி நம் அனைவருக்கும் பொதுவான தாய். ஆனால் அந்த உலகப் பொதுமையில் பாரதம் தாழ்ந்த நிலையில் இருக்காது.

ராணுவ ரீதியாக வலிமையாக இருக்கும் அகண்ட ஹிந்துஸ்தானத்தின் அயலுறவு கொள்கையானது அமைதியை நாடுவதாக, நடுநிலை வகிப்பதாக இருக்கும். ஹிந்துஸ்தானத்தின் வலிமையான மத்திய அரசு உலக மேன்மைக்காகவும் அமைதிக்காகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்பதாக இருக்கும்.

கேள்வி: நீங்கள் மதவெறியர். எனவேதான் ஹிந்து ராஷ்டிரம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?

சாவர்க்கர்: இந்த விஷயத்தை நாம் தெளிவாகிக் கொள்வோம். ஹிந்து ராஷ்டிரம் பற்றியும் மதவாதம் பற்றியும் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு உள்ளார்கள். சிந்து தொடங்கி கடல் சூழ்ந்த தென்முனை வரை, இந்த பாரத நாட்டை தனது அன்னை பூமியாக, புனித பூமியாக, தன் சமயம் பிறந்த மண்ணாக, தன் நம்பிக்கையின் தொட்டிலாக யார் கருதுகிறார்களோ அவரே ஹிந்து. எனவே வேதத்தைப் பின்பற்றுபவர்கள், புத்த ஜைன சீக்கிய சமயப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், மலைவாழ் பழங்குடியினர் எல்லோரும் ஹிந்துக்களே.

மதத்தால், இனத்தால், மொழியால், கலாச்சாரத்தால் சிறுபான்மையினராக – மற்ற சிறுபான்மையினரில் ஒருவராக – உள்ள பார்சிக்கள் ஏறத்தாழ ஹிந்துக்கள். கிறிஸ்தவர்களும் யூதர்களும் அரசியல் ரீதியாக ஹிந்துக்களுடன் இணைந்து விட்டார்கள். ஹிந்துத்துவத்தின் மையமாக இருப்பது மத நம்பிக்கையோ, சமயக் கோட்பாடோ அல்ல. மாறாக ஹிந்து இனத்தின் ஒட்டுமொத்த சிந்தனைகளும் செயல்பாடுகளுமே ஆகும்.

சிறுபான்மையினர் பிரச்னை என்பது, ஒரே ஒரு சிறுபான்மையினர், அதாவது முஸ்லிம் சிறுபான்மையினர் பிரச்னை மட்டுமே.

ஒரு பொதுவான நிலப்பரப்பில், பொதுவான கலாச்சாரம், மதம், பொதுவான வரலாறும் பாரம்பரியமும், பொதுவான இலக்கியங்களையும் கொண்டு ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கிக் கொள்வதே ஹிந்து ராஷ்டிரமாகும். எனவே ஹிந்துஸ்தான் என்பது ஹிந்து தேசியம். 

என்னை ஹிந்து வெறியன் என்றும் மதவெறியன் என்றும் நினைப்பவர்கள் பிரமையில் – மன நோயில் – பாதிக்கப்பட்டவர்கள். நான் ஹிந்து வெறியனும் அல்ல, மதவெறியனும் அல்ல. என்னால் கழுதைகளை குதிரையாக்க முடியாது.

கேள்வி: இந்தியாவின் தற்போதைய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சாவர்க்கர்: பிரிட்டிஷ் ஆட்சியில் அனுபவித்த துன்பங்கள், துயரங்கள், கொடுமைகளுக்குப் பின்னர், விடுதலை அடைந்த பிறகு கொஞ்சம் அமைதி, கொஞ்சம் வசதிகள், கொஞ்சம் சந்தோஷம் கிடைக்கும் என்று மக்கள் நம்பினார்கள். அவர்களது நம்பிக்கை பொய்த்துப் போனது.

சுதந்திரம் அடைந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்கள் மகிழ்ச்சியற்று, துன்பத்தில் உள்ளார்கள். ஏமாற்றத்தில், மனத்தளர்ச்சியில் இருக்கிறார்கள். மிகப் பெரிய அளவில்  தீட்டப்படும் திட்டங்கள் எதுவும் சாதாரண மக்களைச் சென்றடையவில்லை. அவர்கள் தங்கள் தினசரி வயிற்றுப் பாட்டுக்கே அல்லாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியும் ஆட்சியும் வயதான, களைப்படைந்த, செயல் துடிப்பு செத்துப் போனவர்களால் நிரம்பி உள்ளது. அவர்களால் இந்த நாட்டிற்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. அவர்கள் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, வருங்காலத்தை எதிர்கொள்ள இளம் தலைமுறைக்கு பயிற்சி கூட அளிக்காமல் தடுத்துக் கொண்டுள்ளனர்.

கேள்வி: எதிர்காலம் பற்றி?

சாவர்க்கர்: இந்த நாடு துண்டு துண்டாகச் சிதறிவிடும் என்று நினைப்பது பைத்தியக்காரத்தனம். சந்திரகுப்தர், விக்ரமாதித்யர், சாலிவாகனர், சாணக்கியர், சிவாஜி போன்ற மாபெரும் ஆளுமைகளை உருவாக்கிய நாடு ஒருபொழுதும் சரியாது,  சிதையாது. ஹிந்துஸ்தானத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டு பாரம்பரியத்தில் ஒவ்வொரு பெரும் சிக்கலின் போதும் மாமனிதர் தோன்றி பாரத தேசத்தை வழிநடத்திச் சென்றுள்ளதைப் பார்க்கிறோம். கடந்த காலத்தைப் போலவே வரும் காலத்திலும் தலைவிதியை மாற்றும் மாமனிதர்கள் தோன்றி தாய்நாட்டிற்கு வழிகாட்டுவார்கள்; சேவை செய்வார்கள்; தேவைப்பட்டால் உயிரைத் தரவும் செய்வார்கள்.

கேள்வி: அணுசக்திக் காலத்தில் நாட்டிற்கு ராணுவம் தேவையா?

சாவர்க்கர்: ஆமாம் தேவை. நான் இரண்டு விஷயங்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறேன். ஒன்று, அரசியலை ஹிந்துமயமாக்குவது. இரண்டாவது, தேசத்தை ராணுவமயமாக்குவது.

நீங்கள் வலிமையாக இருந்தால் (ரஷ்ய அதிபர்) குருஷேவைப் போல ஐ.நா.மன்றத்தில் செருப்பைக் கழட்டிக் காட்ட முடியும். ஆனால் நீங்கள் பலவீனமாக இருந்தால் வலிமையான ஆக்கிரமிப்பாளனின் கையில் உங்கள் தலைவிதி மாட்டிக்கொள்ளும்.

கேள்வி: காங்கிரஸ் தேய்ந்து, காணாமல் போய்விடும் என்று வைத்துக் கொள்வோம். அந்தச் சூழ்நிலையில், ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க ஹிந்து பாசிஸ்டுகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே மோதல், போட்டி ஏற்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

சாவர்க்கர்: என்னுடைய சிந்தனையின்படி ஹிந்து ஒருபொழுதும் பாசிஸ்ட் கிடையாது. அவன் எப்போதும் ஜனநாயகவாதிதான். அந்த வார்த்தையின் முழு அர்த்தத்தையும் புரிந்து கொண்டுதான் சொல்கிறேன். அதேபோல, ஒருவகையில் அவன் கம்யூனிஸ்ட். ஹிந்துத்துவ ஒற்றுமையின் அடிப்படைகளை எல்லா ஹிந்துக்களும் புரிந்து கொண்டால் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற மோதல் என்பதே எழாது.

கேள்வி: இறுதியாக, நம்முடைய புரட்சி முற்றுப்பெற்று விட்டதா? அல்லது நாம் இன்னும் பயணிக்க வேண்டியுள்ளதா?

சாவர்க்கர்: விடுதலை பெற்றவுடன் நம்முடைய புரட்சி முடிவடைந்து விட்டது. தேச விடுதலைக்காகப் போராடிய நாங்கள் அனைவரும் தேசம் விடுதலை பெற்றதும், சுதந்திரம் அடைந்தவுடன் இயல்பாகவே மகிழ்ச்சி அடைந்தோம். துப்பாக்கிகள், குண்டுகள், பிஸ்டல்களின் காலம் போய்விட்டது. கஷ்டப்பட்டு அடைந்த விடுதலையை உறுதிப்படுத்த நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டிய காலமிது.

ஆனால், அகண்ட ஹிந்துஸ்தானத்தை – அதன் இயற்கையான எல்லைகள் வரை – அடைய வேண்டும் என்ற நம்முடைய நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. எனக்கு வயதாகி விட்டது. எல்லாவற்றிலுமிருந்து நான் விடைபெற வேண்டிய காலம் வந்துவிட்டது!

என் மனசாட்சியின்படி, என் தேசத்திற்கு நான் சேவை செய்துள்ளேன். என் வாழ்நாளிலேயே, அந்நிய அடிமைத் தளையிலிருந்து என் நாடு விடுதலை பெற்றதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். உலகம் உள்ள வரை இந்த, நம்முடைய பழமையான நாடு, நம்முடைய மகத்தான பாரத தேசம் பெருமையுடன் வாழும்.

  • நன்றி: ஆர்கனைசர் 1965 தீபாவளி சிறப்பிதழ்
  • தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

* இன்று ஏமன் என்று அழைக்கப்படும் நாட்டில் உள்ள துறைமுகம் தான் ஏடன். அன்று அது ஆங்கிலேயர்களின் ஆட்சியின்கீழ் இருந்தது. ஏடனில்தான் முகேஷ் அம்பானி (1957) பிறந்தார்.

வீரசாவர்ர்க்கர் 1966 பிப்ரவரி 26இல் உயிர் துறந்தார். இது பத்திரிகையில் வெளியான அவரது கடைசி நேர்காணல்.

$$$

Leave a comment