உருவகங்களின் ஊர்வலம் – 9

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில்  சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #9

9. கண்ணீரால் உருப்பெறும் தேவதைக் கதைகள்

நம் தேவதைக் கதை புத்தகத்தில் ஏன்
ஒரு பக்கம் மட்டுமே அச்சாகின்றன?

மாற்றாந்தாயின் கொடுமைப் பக்கங்கள்
உயர் தரத்தில், வழு வழு காகிதத்தில்
வண்ணங்கள் ஜொலிக்க அச்சாகின்றன.
மந்திரக் கோல் தேவதை
நம் எளிமையை, கருணையைப் பார்த்து
தரிசனம் தரும் பக்கம் மட்டும்
அச்சிடப்படுவதே இல்லையா?

அச்சிடப்பட்டும் பின் அடித்து பைண்ட் செய்யப்படாமல்
பிரிண்டிங் ஹவுஸில்
மெள்ளச் சுழலும் மின் விசிறியின் காற்றில்
படபடத்துக் கொண்டிருக்கின்றனவா?

பாசமற்ற சகோதரிகள்
பாடாய்ப் படுத்தும் பக்கமெல்லாம்
அத்தனை அற்புதமாக
பபுளுக்குள் வசனங்கள்
செண்டர் அலைன் செய்யப்பட்டு
செதுக்கிய கல்வெட்டு போல
நம் தலையெழுத்துபோல் அச்சாகின்றன.

பூசணிக்காய் தங்கத் தேராகும்
மாயாஜாலப் பக்கம் மட்டும் ஏன்
பிளேடால் கிழிக்கப்பட்டுவிடுகிறது?

நல்ல வேளையாக
காட்டு வழியில் நம்மைக் கண்டு மையல் கொண்ட கதாநாயகன்
கறுப்பு வெள்ளையிலாவது புன்னகைக்கிறான்.

ஆனால்,
அவனது விழாக்கோல அரண்மனையில்
பாலே நடனம் ஆடும் காட்சிகள்
தலைகீழாக அச்சாகியிருப்பதோடு,
ஆட்டோ ரொட்டேட் ஆப்ஷனும் ஆன் ஆகியிருக்கிறது.
நாம் தலைகீழாக நின்றால் அது நேராக நிற்கிறது..
நாம் நேராக நின்றால் அது தலைகீழாக நிற்கிறது….

கையில் தரப்பட்டிருப்பது
அழகிய தேவதைக் கதைதான் என்பதை
கண நேரம் கூட நினைத்து மகிழ முடியாதபடி
எதனால் … இப்படி… இத்தனை குளறுபடிகள்?
வெள்ளைப் பக்கங்களில்
நாமே நம் கதையின் கோட்டுச் சித்திரத்தைத் தீட்டி
வண்ணமும் கொடுத்துக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பாகப்
பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டுமா?

இத்தனை பக்கங்கள் புரட்டியபின்
அடுத்த பக்கத்தைப் புரட்டுவது
அத்தனை அநிச்சையான செயலாகப் பழகியும்விட்டது.

நாம் தவறவிட்ட மந்திரக் காலணியை
நம் காலில் மாட்டிப் பார்க்கும் பக்கம்
அநேகமாக ஒட்டிக் கொண்டிருக்கும்
இந்த இரட்டைப் பக்கங்களுக்குள்தான் இருக்க வேண்டும்.
ஒரு மெல்லிய, சற்றே கூர்மையான ஸ்கேலினால்
அந்தப் பக்கங்களை
மிக மென்மையாக, மிக நம்பிக்கையுடன்
மிக நளினமாக ஊடறுத்துப் பார்க்கும்போது
பளீரென்ற வெற்றுத்தாள் பளபளக்கிறது
எதிர்பாராத வகையில்- அல்லது
எதிர்பார்த்த வகையில்.

என் புத்தகத்தில் இருப்பவை போலத் தானே
அடுத்தவர் புத்தகத்திலும்
அச்சான பக்கங்களும்
அச்சாகியிருக்க வேண்டிய பக்கங்களும்
அடுத்தடுத்து இருக்கும்?

என்ற நிராதரவின் தளிர் துளிர்த்ததும்
கண்ணில் இருந்து மெள்ளச் சொட்டியது
ஒரு துளிக் கடல்…
நனைந்த தாளில்
மெள்ள மலரத் தொடங்கியது
மந்திரக் காலணி.

எனக்கு மட்டுமே ஏன் என்ற கேவல்
நம் எல்லோருக்கும் ஏன் இப்படி என விரிகையில்,
ஓர் மாய ஓவியம் மலர்கிறது.

ஓர் வாடிய பயிருக்கு ஒருவர்
பூவாளியால் சிறு துளி வார்க்கையில்
ஈருயிரின் வெறுமைப் பக்கத்திலும்
ஒரு மெல்லிய கோட்டுச் சித்திரம் தீட்டப் பெறுகிறது.

காலொடிந்த உயிர் ஒன்றை
தோளில் ஒருவர் சுமக்கையில்
இரண்டின் வெள்ளைப் பக்கத்திலும்
சிறு வண்ணம் தீட்டப் பெறுகிறது.

வாசிப்பவனும் சேர்ந்து எழுதும் தேவதைக் கதையில்
துயருறு ஆன்மாவின் கண்ணீராலன்றோ
உயிர் பெறுகின்றன சித்திரங்கள்!

இந்தக் கையடக்கப் பதிப்பில் சிந்தும்
உங்கள் கண்ணீரில் எவ்வளவு உப்போ,
அத்தனை அடர்த்தியான வண்ணச் சித்திரங்கள்
உங்கள் தேவதைக் கதை புத்தகத்தில் மலரும்.

இன்ப முடிவுகள் கொண்ட தேவதைக் கதைகள் எல்லாம்
வேதனைப் பக்கங்களில் சிந்தும்
கண்ணீரால் முழுமையடைவதென்பது
எத்தனை அழகிய வடிவமைப்பு இல்லையா?

$$$

Leave a comment