திருப்பதி திருமலை பெருமாள் கோயிலே!  

-பி.பிரகாஷ்

சைவர்கள்- வைணவர்களிடையே பூசலை நிகழ்த்த விரும்பிய சிலரால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளுள் ஒன்று, திருப்பதி கோயில் முற்காலத்தில் முருகன் கோயிலாக இருந்தது என்பதாகும். இன்று சைவமும் வைணவமும் ஹிந்து என்ற பெருமதத்தின் கிளைகளாகிவிட்ட காலத்திலும், அவ்வப்போது இந்தப் பூசல் பெரிதுபடுத்தப்படுகிறது. இதற்கு, தெரிந்தோ தெரியாமலோ சைவர்கள் சிலரும் உணர்ச்சிவசப்பட்டு ஆதரவளித்து விடுகின்றனர். அவர்களுக்காகவே, நமது தொன்மையான தமிழ் இலக்கியங்களின் துணைகொண்டு, இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார் ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ என்ற பெயரில் எழுதிவரும் திரு. பி.பிரகாஷ். ‘ரத்தத்தில் முளைத்த என் தேசம்’ என்ற நூலின்மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்த இவரது முகநூல் பதிவு, இங்கு மீள்பதிவாகிறது…

சங்க காலத்திலேயே தமிழகத்தின் வடக்கு எல்லையாக திருமலை இருப்பதை நாம் பார்க்கலாம். பனம்பாரனார் எனும் புலவர் தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும், தெற்கு எல்லையாக குமரிக் கடலையும் குறிக்கிறார்.

“வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து”

    -தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம் 1-3

வேங்கடம் எனத் தெளிவாக வெங்கடேஸ்வரனை அவர் குறிப்பிடுகிறார்.

அடுத்து வரும் சிலப்பதிகாரப் பாடலைப் பாருங்கள்…

“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்,
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு”

    -சிலப்பதிகாரம், வேனிற்காதை 1-2

பொருள்:  வடக்குப்பக்கம் வேங்கட மலையும், தெற்கில் குமரிக் கடலும், எல்லையாகக் கொண்டு, குளிர்ச்சியான  நீரை உடைய மூவேந்தருடைய உயர்ந்த தமிழ்நாடு.

இதில்   ‘நெடியோன்’  என்பது தெள்ளத் தெளிவாக பெருமாளைக் குறிக்கிறது. அதாவது பெருமாளின் குன்றம் எனும் திருமலையை வடக்கு எல்லையாக தமிழகம் கொண்டிருந்ததைக் குறிப்பிடுகிறது.  இதன்மூலம் திருப்பதியில் முருகன் இருந்தார், அது சமணர் கோயில், அதில் யேசு உயிர்த்தெழுந்தார் போன்ற திராவிட உருட்டுகள் பொடிப்பொடியாகின்றன.

புறநானூற்றில் சங்கப் பாடலில் குறுங்கோழியூர் கிழார், மற்றும் மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் ஆகியோர் தமிழக எல்லைகளை இன்னும் விரிவாக கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றனர்:

பாடல்:

தென் குமரி, வட பெருங்கல்,
குண குட கடலா வெல்லை,
குன்று, மலை, காடு, நாடு
ஒன்று பட்டு வழி மொழியக்,
கொடிது கடிந்து, கோல் திருத்தி…

     (புறநானூறு,17:1-5)
தென் குமரி வட பெருங்கல்…
குண குட கடலா வெல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
வெற்ற மொடு வெறுத் தொழுகிய
கொற்ற வர்தங் கோனா குவை…

   (மதுரைக்காஞ்சி:70-74)

இங்கே தென்குமரியை தெற்கு எல்லையாகவும், வடபெருங்கல் அதாவது வடக்கு எல்லையாக வேங்கட மலை. இதில்  ‘குண’ என்பது கிழக்கையும்,  ‘குட’ என்பது மேற்கையும் குறிக்கிறது. ஆக கிழக்கிலும், மேற்கிலும் தமிழகத்தின் எல்லையாக அரபிக் கடலும், வங்காளக் கடலும் இருப்பது தெரிகிறது. இதன்மூலம் இந்த புறநானூறுப் பாடல் காலத்தில், கேரளம் தமிழகப் பகுதியாக இருந்துள்ளது தெரிய வருகிறது.

ஆனால் நன்னூலாரின் ஒரு பாடலில், கிழக்கே கடலும், வடக்கே திருமலையும், தெற்கே குமரியும், மேற்கே  ‘குடகுமலை’ அதாவது மேற்குத் தொடர்ச்சி மலை எல்லையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை இந்தப்பாடல் சேரர்கள் வீழ்ச்சி பெற்ற காலத்தில் (12ஆம் நூற்றாண்டு) எழுதப்பட்டதால், மேற்கு தொடர்ச்சி மலை எல்லையாகக் குறிக்கப்பட்டிருக்கலாம்.

பாடல்:

“குணகடல் குமரி குடகம் வேங்கடம்”

    (நன்னூல், சிறப்புப் பாயிரம்: 8)

அடுத்து, தமிழக எல்லைக்கு அப்பால் தமிழ் அல்லாத வேறுமொழியைப் பேசினார்கள் என்பதைக் குறிப்பிடுகிறது கீழ்வரும் அகநானூறு பாடல்:

வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்,
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர்
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய… 

    (அகநானூறு, 211: 6-10)

இதிலிருந்து புறநானூறு காலத்திலேயே தமிழ் அல்லாத தெலுங்கு மொழி  அங்கு பேசப்பட்டு வந்தது தெரிய வருகிறது.

தெலுங்கு மொழி என்று எப்படி சொல்லலாம் எனக் கேட்டீர்கள் என்றால், இதோ அடுத்து வருகிறது குறுந்தொகை பாட்டு.

இதில் மாமூலனார்,  ‘கட்டி ராஜ்ஜியத்தின்’  வடக்கே வடுகர்கள் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.

“குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்”...

    (குறுந்தொகை - 11:6-7)

பொருள்: சங்ககால வடுகர் குல்லைப் பூவை தலையில் சூடிக் கொள்வார்களாம். அவர்களோடு போரிட்டு வென்ற ‘கட்டி’ என்னும் அரசனின் நாட்டுக்கு அப்பால், தமிழ் அல்லாத வேற்று மொழி பேசும் மக்கள் வாழ்ந்தனராம்.

$$$

Leave a comment