-திருநின்றவூர் ரவிகுமார்

அயர்லாந்தைச் சார்ந்த மார்கரெட் எலிசபெத் நோபில் (1867-1911) சுவாமி விவேகானந்தரின் சீடராகிய பின் சகோதரி நிவேதிதையாக அறியப்படுவது யாவரும் அறிந்ததே.
கிறிஸ்தவப் பாதிரியாரின் மகளாகப் பிறந்த அவர் இயல்பிலேயே சேவை மனப்பான்மை கொண்டவராகவும், இறையியல் நாட்டமும் தேடுதலும் கொண்டவராகவும் இருந்தார். இளம் வயதில் தந்தையை இழந்த அவர், லண்டன் மாநகரில் ஒரு பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார். கல்வித்துறையில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்ட அவர், அதுபற்றி நாளேடுகளிலும் பருவ இதழ்களிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
சீசேம் கிளப் (Sesame Club) என்ற பெயரில் ஆன்மிகத் தேடலும் அறிவுத் தேடலும் கொண்டவர்களுக்கான ஓர் அறிஞர் கழகத்தை அவரும் அவரது நண்பர்களும் தொடங்கி நடத்திவந்தனர். ஜார்ஜ் பெர்னாட்ஷா, ஹக்லீ, கீட்ஸ் போன்றவர்களும் மேலும் பல அறிஞர்கள் அந்த அமைப்பில் உரையாற்றி உள்ளனர்.
தேடல் கொண்ட அவரது உள்ளம் கிறிஸ்தவ சமயத்தின் போதாமையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த வேளையில்தான், அதாவது கல்வியாளராக, பத்திரிகையாளராக, அறிவு தாகம் கொண்டவராக லண்டன் மாநகரில் அவர் அறியப்பட்டிருந்த 28 வயதில், சுவாமி விவேகானந்தரை (1895) சந்தித்தார்.
அந்தச் சந்திப்பின் விளைவாக அவரது தேடல்களுக்கு விடையும் வாழ்வுக்கு சரியான திசையும் கிடைத்தது. சுவாமிஜியை தனது குருவாக ஏற்று, அவரது பணியைச் செய்ய பாரதம் வந்தார்; ‘சகோதரி நிவேதிதை’ என்று பெயர் சூட்டப்பட்டார். நிவேதிதை என்றால் அர்ப்பணிக்கப்பட்டவர் என்று பொருள். சுவாமிஜியால் பாரத அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட அவர், பெயருக்கு ஏற்றபடியே வாழ்ந்தார்.
சுவாமிஜி அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் மட்டும் அல்லர். சுயமறதியில் ஆழ்ந்து, சோம்பிக் கிடந்த பாரதத்துக்கு அடி கொடுத்து விழிப்புறச் செய்தவர். அவரது ஆண்மையுறுத்தும் செய்தியால் வீறு கொண்டது பாரதம்; அரசியல் விடுதலைக்கும் வழிகண்டது. ‘பாரதத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் சுவாமி விவேகானந்தரைப் படியுங்கள்’ என்று ராஜாஜியின் வாக்கியம் மிகப் பொருத்தமானது. சுவாமிஜியின் பேச்சுக்கள் இளைஞர்களை மட்டுமல்ல, அவரைவிட வயதில் மூத்தவரான அறிவியலாளர் ஜெகதீச சந்திர போஸையும் வசீகரித்தது வியப்பில்லை.
வங்கம் கண்ட விஞ்ஞானி ஜெகதீச சந்திர போஸ் (1858-1937) பரித்பூரில் (இன்று பங்களாதேஷில் உள்ளது) பிறந்தார். அவரது தந்தை பகவான் சந்திர போஸ். ஒரு ஐ.சி.எஸ். அதிகாரி. மாவட்ட துணை நீதிபதியாகவும் துணை ஆணையராகவும் இன்னும் பல பதவிகளில் திறம்பட பணியாற்றியவர். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டதாரியான ஜெகதீசர் தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற தனது ஐ.சி.எஸ். கனவைக் கைவிட்டு மருத்துவம் படிக்க லண்டன் சென்றார். ஆய்வகங்களில் பிராணிகளை வெட்டும்போது ஏற்படும் ரத்த வீச்சத்தால் அருவருப்படைந்து மருத்துவத்தை விட்டு, இயற்பியலும் இயற்கையியலும் கற்றார்; முனைவர் பட்டமும் பெற்றார்.
அவரது மேதமையைப் புரிந்துகொண்ட அப்போதைய வைஸ்ராயாக இருந்த ரிப்பன் பிரபு அவரை கல்லூரிப் பேராசிரியராக, ஆங்கிலேயர்களுக்கு இணையான ஊதியமும் மதிப்பும் கொண்டவராக (இம்பீரியல் எஜுகேஷன் சர்வீஸ்) நியமிக்கப் பரிந்துரைத்தார். ஆனால் அந்தப் பரிந்துரையை அவருக்குக் கீழ் பணிபுரிந்த கல்வித் துறை அதிகாரியான சர் ஆல்பிரட் குரோப்ட் என்ற ஆங்கிலேயர் ஏற்காமல், போஸை சற்றுத் தாழ்வான பதவியில் (புரவின்ஷியல் எஜுகேஷன் சர்வீஸ் (Provincial Education Service) பணி அமர்த்தினார்.
அதை ஏற்க மறுத்து டாக்டர் போஸ் பணியில் சேராமல் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மருத்துவராக இருந்த டாக்டர் மகேந்திரலால் சர்க்கார் துவங்கிய இந்திய அறிவியல் வளர்ச்சி கழகத்தில் (Indian Association for the Cultivation of Science) பெயரளவில் ஒரு சிறு தொகை ஊதியமாகப் பெற்றுக்கொண்டு பணியில் அமர்ந்தார்.
விஷயம் வைஸ்ராய் ரிப்பன் பிரபுவின் காதுக்கு எட்டி, அவர் ஆங்கில கல்வி அதிகாரியைக் கடிந்துவிட்டார்; ஜெகதீசருக்கு மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியர் (R.E.S.) பதவியில் பணி அமர்த்தினார். ஆனால் ஊதியம் கிடைத்த போதுதான் தெரிந்தது, பதவிக்குரிய ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்குதான் அவருக்கு வழங்கப்பட்டதென்பது.
ஆனால் இம்முறை ஜெகதீசர் பணியிலிருந்து விலகாமல், எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக ஊதியம் பெற மறுத்து, ஊதியமில்லாமல் பணிபுரிந்தார். இவ்வாறு மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஊதிய பிரச்னை தீர்க்கப்பட்டு மொத்தமாக வழங்கப்பட்டாலும் கல்லூரி நிர்வாகம் அவரது ஆய்வுப் பணிக்கு எல்லாவிதமான முட்டுக்கட்டையும் போட்டது.
வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்ட காலத்தில் அவருக்கு எல்லாவிதமான உதவிகளையும் கிடைக்கச் செய்தார் சகோதரி நிவேதிதை. ஆய்வுப் பணியிலும், அதற்கான கருவிகளும் கிடைக்காமல் கஷ்டப்பட்டபோதும், அதற்கான கருவிகளை உருவாக்கவும் போதிய நிதி வசதியை ஏற்படுத்தி தந்தார் அவர். இதைப் பற்றி டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுள்ள சர் வில்லியம் ஹண்டர், ஜெகதீசர் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியது மட்டுமன்றி அதை நிறுவுவதற்கான கருவிகளையும் தானே உருவாக்கி, இரு மடங்கான பணியாற்றியுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெகதீசர் மின்காந்த அலைகளை (ரேடியோ வேவ்) பயன்படுத்துவது (தூரத்திலுள்ள மணியை ஒலிக்க செய்து) குறித்து கொல்கத்தா துணை ஆளுநர் முன்பு நகர அரங்கில் நிரூபித்தார். ஆனால் அதற்கான காப்பு உரிமையைப் பெற மறுத்தார். தனது அறிவியல் கண்டுபிடிப்புகளை யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், காப்புரிமை பெறுவது என்பதே தவறானது என்றும் அவர் கருத்துக் கொண்டிருந்தார். அதனால் ரேடியோ அலைகளை அவர் கண்டுபிடித்து நிரூபித்திருந்தாலும், அவருக்கு இரண்டாண்டுகள் கழித்து இத்தாலியரான மார்கோணி காப்புரிமை பெற்று உலகப் புகழ் பெற்றார். ஆனால் ஜெகதீசரின் கருத்து காலத்துக்கு ஒவ்வாது என்பதை அவருக்குப் புரிய வைத்தார் சகோதரி நிவேதிதை. அதனால்தான் நீண்ட மின் அலைகளைக் குறுக்கிட்டு அதன் அளவைக் குறைத்து அதிக பலன் பெறும் (Semi conductor) என்ற அவரது புரட்சிகரமான கண்டுபிடிப்புக்கு காப்புரிமை (US75584A) பெற்று, காப்புரிமை பெற்ற முதல் இந்திய அறிவியலாளராக ஜெகதீஸர் அறியப்படுகிறார்.
‘கிரெஸ்கோ கிராப்’ என்ற கருவியை உருவாக்கி, அதன்மூலம் தாவரங்களுக்கு உயிரும் உணர்வும் உண்டு என்பதை உலகிற்கு அவர் நிரூபித்தார். ஆனால் பொறாமை கொண்ட ஆங்கிலேய அறிவியலாளர்கள் இருவர், ஜெகதீசர் இயற்பியல் கொள்கைகளை உயிரியலில் பயன்படுத்தி ஏமாற்றுகிறார் என்றனர். அந்த வேளையில் ஜெகதீசருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருக்க வேண்டியிருந்தது. இரண்டு மாத ஓய்வுக்குப் பிறகு அவர் மீண்டு வந்து உயிரியல் கொள்கைப் படியும் அவரது முடிவுகள் சரியானதுதான் ஏற்று நிரூபித்தார்.
பொதுவாக அறிவியல் என்பது திறந்த மனதுடன் புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பது. மேலும் சரியான விஷயங்களைக் கண்டுபிடித்தவுடன் பழையவற்றைப் புறந்தள்ளுவது என்பார்கள். ஆனால் சமயம் சார்ந்த மூட நம்பிக்கைகளைப் போலவே அறிவியலிலும் மூட நம்பிக்கைகளும் குறுகிய மனப்பாண்மைகளும் உண்டு என்று சுவாமி விவேகானந்தர் கூறுவார். அவரது கூற்றை ஆங்கிலேய அறிவியலாளர்கள் நிரூபித்தனர்.

பாரதத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டும், பணிபுரிய வேண்டுமென்ற சுவாமிஜியின் அறிவுரைக்கு ஏற்ப பெண்கள் கல்வி, அரசியல் விழிப்புணர்வு, அறிவியல் வளர்ச்சி என்று பணிபுரிந்த சகோதரி நிவேதிதை ஜெகதீசருக்கு உதவி புரிந்தார். அவருக்கு பணக்கஷ்டமும் பணிச்சுமையும் மனத்தளர்வும் ஏற்பட்ட போதெல்லாம் அவருக்கு சகோதரி நிவேதிதை உதவியும் ஊக்கமும் அளித்தார். அவரது நான்கு நூல்களையும் (சுமார் 2,500 பக்கங்கள்) ஆயிரம் அறிவியல் ஆய்வு வரைபடங்களையும் சகோதரி நிவேதிதையே சரிபார்த்து வெளியிடச் செய்தார். ஆனால் சகோதரி நிவேதிதையின் உதவியையும் ஊக்கத்தையும் பெற்றுக் கொண்ட ஜெகதீசர் அவருடன் கருத்து முரண்பாடுகளைக் கொண்டிருந்தார். அதனை சகோதரி நிவேதிதை தன் அன்பால் வென்றுதுதான் சுவாரசியமானது.
ஜெகதீசருடன் பழகி, பணிபுரிந்த பத்து ஆண்டுக் காலத்தில் இந்த மாற்றத்தை சகோதரி நிவேதிதை ஏற்படுத்தினார்.
ஜெகதீச சந்திர போஸ் பிரம்ம சமாஜக் கருத்துக்களில் தீவரம் கொண்டவர். பிரம்ம சமாஜம் வங்கத்தில் தோன்றியதாக இருந்தாலும் அது உருவ வழிபாட்டை- குறிப்பாக அன்னை காளியை வழிபடுவதை- ஏற்கவில்லை. அதேபோல் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரையும் அது ஏற்றுக்கொள்ளவில்லை; மாறாக தூஷித்தது. அதனாலேயே சுவாமி விவேகானந்தரை பிரம்ம சமாஜத்தினர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எதிர்த்தனர்.
ஜெகதீசர், சுவாமிஜியின் பாரதத்தை ஆண்மையுறச் செய்யும் பேச்சுகளாலும் பணிகளாலும் கவரப்பட்ட போதிலும் காளியை வழிபடுவது, பரமஹம்சரைத் தன் குருவாக என்று வணங்குவது ஆகியவற்றால், அவரிடமிருந்து மனதளவில் விலகியே இருந்தார்.
சகோதரி நிவேதிதை சுவாமிஜிக்கும் ஜெகதீசருக்கும் பாலமாகச் செயல்பட்டார். 1900 அக்டோபரில் பாரிஸ் நகரில் நடந்த இயற்பியலாளர்களின் சர்வதேச மாநாட்டில் ஜெகதீசர் கலந்து கொண்டபோது சுவாமிஜியும் பார்வையாளராக அதில் கலந்து கொண்டார். ஜெகதீசரின் வெற்றியையும் புகழையும் பாரதத்தின் வெற்றியாக வங்கத்தின் வெற்றியாகக் கண்டு அவர் மகிழ்ந்தார்; ஜெகதீசரின் குடும்பத்தினருடன் பழகினார்; அவரது வீட்டிற்கும் சகோதரி நிவேதிதையுடன் சென்று உணவருந்தியுள்ளார்.
சகோதரி நிவேதிதையை ‘மிஸ் நோபில்’ என்று அழைப்பதை ஜெகதீசர் விரும்பினார். சகோதரி நிவேதிதையாக (பெண் துறவியாக) அழைப்பது மனிதத் தன்மைக்கு சற்றுக் குறைவானது என அவர் கருதினார். அதேபோல, சுவாமிஜி ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பின்பற்றும் புதியதொரு சமயப் பிரிவையே உருவாக்கிவிட்டார் என்றும் அவர் கருதினார்.
ஆனால் பாரதத்தில் சகோதரி நிவேதிதை ஆற்றிய முதல் உரையே அன்னை காளியைப் பற்றித்தான். இந்து மதத்தில் பல்வேறு சமயப் பிரிவுகளிடையே இருந்த மோதல்களை மாற்றி காலத்திற்கு ஏற்ப சமய சமரசம் ஏன்ற கோட்பாட்டை முன்வைத்த ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை அவதார புருஷராகவே சகோதரி நிவேதிதையும் கருதினார்.
கருத்து மாறுபாடு கொண்டிருந்தாலும், சகோதரி நிவேதிதை ஜெகதீசரிடம் அன்பு காட்டினார். அவருடைய எளிமையும் வெளிப்படையான தன்மையும் நிவேதிதைக்கு மிகவும் பிடித்திருந்தது. அறிவியல் துறையில் ஜெகதீசரை பலரும் மதிக்காதபோது அவரது மேன்மையைப் புரிந்துகொண்டு அவருக்கு எல்லா வகையிலும் உதவினார். ஜெகதீசர் லண்டன் சென்றபோது நிவேதிதையின் வீட்டில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது. ஜெகதீசரை அவர் பைரன் (Bairn) என்றே கடிதங்களில் குறிப்பிடுவார். ஸ்கார்ட்லாந்து மொழியில் அதற்கு குழந்தை என்று பொருள். ஜெகதீசரை விட பத்தாண்டுகள் இளையவராக இருந்தபோதிலும் நிவேதிதை அவரை தாயன்புடன் பரிந்துதவினார் என்பதையே இது காட்டுகிறது.
அன்பினாலே ஜெகதீசரை வென்று, தன்னை (பெண் துறவியை) மதிக்கவும், சுவாமி விவேகானந்தரை வணங்கவும் வைத்தார். ஜெகதீசருக்கு சரியான வழிகாட்டுதல்களையும் அவர் வழங்கினார் என்பதை ஜெகதீசரே தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கொல்கத்தாவில் தான் நிறுவிய போஸ் ஆய்வு கழகத்தைத் (Bose Research Institution) துவங்குவதற்கு சகோதரி நிவேதிதையே முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலரும் ஜெகதீசரைப் பற்றி அறியாதபோது அவரைப் பற்றி வெளிநாடுகளிலும் பாரதத்தின் சென்னை, மும்பை, தில்லி, காசி போன்ற பகுதிகளிலும் சகோதரி நிவேதிதை அவரைப் பற்றி உரை நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டும், செய்திதாள்களில் எழுதியும் அவரை முன்னிலைப்படுத்தினார்.
அன்பினாலே ஜெகதீசரை மாற்றி சரியான வழியில் கொண்டுவந்த சகோதரி நிவேதிதை, டார்ஜிலிங்கில் உள்ள ஜெகதீசரின் மாளிகையில் 1911 அக்டோபர் மாதம் 13ம் தேதி தன்னுடைய 44வது வயதில் இயற்கை எய்தினார்.
சகோதரி நிவேதிதையை, “அவள் வெளியேயும் உள்ளேயும் வெள்ளை நிறத்தவள்” என்று அவரது உயர்ந்த உள்ளத்தை பற்றி அன்னை சாரதாதேவி குறிப்பிட்டுள்ளார். சகோதரி நிவேதிதை இயற்கை எய்திய செய்தியைக் கேள்விப்பட்ட அன்னை மாளாத் துயரடைந்தார். அப்போது அவர் குறிப்பிட்ட கருத்துகள் நிவேதிதையின் மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. அவை:
“நிவேதிதையைப் பாருங்கள். மேற்கத்திய நாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வந்து மகிழ்ச்சியுடன் சேவை புரிந்தாள். எவ்வளவோ அவமதிப்பையும் கொடுமைகளையும் கஷ்டங்களையும் ஏற்றுக்கொண்டு நம் பெண்களுக்கு கல்வியறிவு கொடுத்தாள். அவளை பலர் வீட்டுக்குள்ளே அனுமதிக்கவில்லை, அனுமதித்தவர்களும் அவள் போனவுடன் அந்த இடத்தை கங்கை நீர் கொண்டு கழுவினர். எல்லாவற்றையும் பார்த்தும் அவற்றைப் பொருட்படுத்தாமல் இன்முகத்துடன் சேவை புரிந்தாள். எனது மகள் நிவேதிதை இந்துப் பெண்களுக்கு கல்வி கொடுக்கும் பணியை தன் தோள்களில் ஏற்றுச் செயல்பட்டதற்கு காரணம் அவளது குருவான நரேன் (சுவாமி விவேகானந்தர்) அதைச் செய்யுமாறு அவளுக்கு சொன்னதுதான். அதற்காகவே அங்கிருந்து இங்குவந்து எண்ணற்ற உடல், மன கஷ்டங்களை ஏற்று சேவை செய்தாள். இதுபோன்ற சூழ்நிலையில் நம் நாட்டுப் பெண்கள் தங்கள் குருவுக்காக இவ்வளவு தியாகங்களைச் செய்வார்களா? ‘எங்களுக்கு கவலையில்லை’ என்று குருவையே அலட்சியப்படுத்திச் சென்றுவிடுவார்கள். நிவேதிதையைப் போல எப்படி, எப்போது, யார் மூலம் பணி செய்வார்கள் என்பதை தாகூர் (ஸ்ரீ ராமகிருஷ்ணர்) போன்றவர்களாலேயே தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியும். நிவேதிதையின் தியாகம் அவ்வளவு மகத்தானது”
-என்று குறிப்பிட்டுள்ளார்.
பெயருக்கு ஏற்ப அர்ப்பணமான வாழ்க்கை வாழ்ந்த சகோதரி நிவேதிதையின் கல்லறையில், “தன்னையே பாரத அன்னைக்கு அர்ப்பணித்த சகோதரி நிவேதிதை இங்கு துயில்கிறாள்” என்று பொறித்து வைத்துள்ளது பொருத்தமானதே.
$$$