-திருநின்றவூர் ரவிகுமார்

(1915, டிச. 11- 1996 ஜூலை 17)
உலகின் மிகப் பெரிய தன்னார்வலர் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்று அழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம். அதன் மூன்றாவது தலைவராக இருந்தவர் பாளாசாகேப் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மதுகர் தத்தாத்ரேய தேவரஸ். ஆர்.எஸ்.எஸ்.ஸை ஆரம்பித்த டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரால் ஈர்க்கப்பட்டு மிகச் சிறிய வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்தவர் பாளாசாகேப் தேவரஸ்; அவரால் பயிற்றுவிக்கப்பட்டவர்.
1943-இல் புனேவில் நடந்த ஆர்.எஸ்.எஸ். முகாமில் அப்போதைய தலைவராக இருந்த ஸ்ரீகுருஜி கோல்வல்கர், ஊழியர்களிடையே பாளாசாகேப் தேவரஸை சுட்டிக்காட்டி, ‘’உங்களில் பலர் பரமபூஜனீய டாக்டர் ஹெட்கேவாரை நேரில் பார்த்திருக்க மாட்டீர்கள். ஸ்ரீ பாளாசாகேப் தேவரஸைப் பார்த்துக் கொள்ளுங்கள். இவரிடம் நீங்கள் டாக்டர்ஜியைக் காணலாம். இவர் டாக்டர்ஜியின் மறுவடிவம்’’ என்று கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்.ஸினால் முழுமையாக வடிவமைக்கப்பட்டது தேவரஸின் ஆளுமை. அதேபோல ஆர்.எஸ்.எஸ்ஸின் முகத்தை மாற்றி அமைத்தவர் பாளாசாகேப் தேவரஸ். ஆர்.எஸ்.எஸ். என்றால் சீருடை அணிந்து ‘லெஃப்ட், ரைட்’ என்று சீராக அணிவகுத்துச் செல்பவர்கள் மட்டுமே என்ற எண்ணத்தை மாற்றி, ஆர்.எஸ்.எஸ். என்றால் தன்னலமற்ற சேவைக்குத் தயாரானவர்கள். Ready for Selfless Service என்று சர்வோதயத் தலைவரான திரு. பிரபாகர் ராவ் பாராட்டும் படியாக ஆர்.எஸ்.எஸ்ஸின் தோற்றத்தை, வெளிப்பாட்டை மாற்றியமைத்தவர் பாளாசாகேப் தேவரஸ்.
“ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் ஷாகா காரியங்களில் (சங்க கிளையின் தினசரி செயல்பாடுகள்) மட்டுமே ஈடுபட்டு பட்டுப்புழுக்களாக அடைபட்டுவிடக் கூடாது. அவர்கள் சமூக மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து தாம் விரும்பும் மாற்றத்தைக் கொண்டுவர சமூக நற்செயல்களில் ஈடுபடவேண்டும்” என அவர் கூறினார். அவர் தலைமையிலிருந்த போதுதான் அகில இந்திய சமூக சேவை அமைப்பான ‘சேவா பாரதி’ துவங்கப்பட்டது. ரத்ததான வங்கிகள் துவங்கப்பட்டு, ரத்த தானம் ஊக்குவிக்கப்பட்டது, கண்தானம், தேகதானம், உறுப்புகள் தானம் ஆகியவை, ஸ்வயம்சேவகர்கள் குடும்பம் குடும்பமாக ஈடுபடும் வகையில் செயல்வடிவம் பெற்றன. மலைவாழ் மக்களின் நல்வாழ்வுக்காக வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற சேவை அமைப்பு 1978-இல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த மாற்றத்தின் விளைவுகளை, 1979-இல் ஆந்திராவில் வீசிய புயலின் போது நாடு கண்டது. அழுகி நாறும் பிணங்களை அகற்ற யாரும் முன்வராதபோது, வெறும் கைக்குட்டையால் மூக்கை மூடிக்கொண்டு அவற்றை அகற்றிய ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களைக் கண்டு நாடே வியந்து பாராட்டியது. 1982-இல் ராஜஸ்தானில் வெள்ளம், அஸ்ஸாமில் வெள்ளம் வந்தபோதும், சுனாமியில் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட பேரழிவின்போதும், அண்மையில் அமர்நாத்தில் பூகம்பத்தின்போதும் ஆர்.எஸ்.எஸ்ஸின் சேவையை நாடே போற்றியது. இவை அனைத்திற்கும் வித்திட்டவர் பாளாசாகேப் தேவரஸ்.
சமூக நல்லிணக்கம்
உலகிலுள்ள எல்லா சமுதாயங்களும் காலத்திற்கு ஏற்பவும் வரலாற்றுக் காரணங்களுக்காகவும் தங்களுக்கே உரிய வகையில் சமூகக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்கின்றன. இந்து சமுதாயத்திலுள்ள ஜாதி முறைமையானது இக்காலத்திற்கு சற்றும் பொருத்தமற்றதாக இருக்கிறது என்று நவீன காலத்தைச் சேர்ந்த வீர சாவர்க்கர், டாக்டர் அம்பேத்கர், டாக்டர் ஹெட்கேவர், மகாத்மா காந்தி போன்ற பெரியவர்கள் கருதினர். சுவாமி விவேகானந்தர் இதே கருத்தைக் கூறினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ சங்கரர் போன்றவர்களும் இதே கருத்தை வலியுறுத்தி, சமூக நல்லிணக்கத்திற்காகச் செயல்பட்டனர்.
டாக்டர் ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ்.ஸைத் துவங்கியபோது அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த சிறுவர்களும் ஒன்றாகச் சேர்ந்து விளையாட, சேர்ந்து பாடல்களைப் பாட, பழகும் விதமாகவே ஆர்.எஸ்.எஸ்.ஸின் தினசரி செயல்பாட்டை (ஷாகா) வடிவமைத்தார். எந்தவிதமான தம்பட்டமும் அடிக்காமல், இயல்பாக, சகஜமாக சமூக நல்லிணக்கம் உண்டாகும் விதமாகவே தினசரி ஷாகாவின் செயல்வடிவம் இன்று வரையிலும் தொடர்கிறது.
இதனால் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் கணக்கற்றவை. ஜாதி வேறுபாடுகள் அதிகமாக பின்பற்றப்படும் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்தே இரண்டு சிறந்த உதாரணங்களை சுட்டிக்காட்ட முடியும். ஒன்று ரமேஷ் பதங்கே. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இவர் சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ். தொடர்பாக தன் வாழ்க்கையும் சிந்தனையும் மாற்றி அமைக்கப்பட்டதை விளக்கமாக, ‘மனுவாதமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் – எனது அனுபவம்’ என்ற நூலில் விவரித்துள்ளார். இன்றும் அவர் சங்க வட்டாரத்தில் சிறந்த அறிஞராக, தலித் சிந்தனையாளராக, மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.
மற்றொரு உதாரணம், பாளாசாகேப் தேவரஸ். அவரது பெற்றோர் பழைய ஆச்சாரத்தில் அழுத்தமான பிடிப்புக் கொண்டிருந்தவர்கள். ஆயினும் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுடனும் நன்றாக பழகுவார்கள். ஆனால் ஒன்றாகச் சாப்பிடுவது என்றால், அதுவும் அந்தக் காலத்தில்? தேவரஸே அதுபற்றிக் கூறும்போது, ‘‘நான் என் அம்மாவிடம் சொன்னேன். வருகின்ற ஸ்வயம்சேவகர் (ஆர்.எஸ்.எஸ். தொண்டர்) எந்த ஜாதியானாலும் என்னுடன் உட்காருவார்; ஒன்றாகத் தான் சாப்பிடுவோம். சாப்பிட்ட பிறகு அவரை தட்டு கழுவவிடுவது நன்றாக இருக்காது. எல்லாருடைய தட்டையும் நீயே எடுத்து கழுவிவிட வேண்டும். இதற்கு சம்மதமானால்தான் என் நண்பர்களைச் சாப்பிடக் கூப்பிடுவேன் என்றேன். என் அம்மா இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டதுடன், தயக்கமின்றிச் செயல்படுத்தினார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூக சமத்துவத்தையும் சமூக நீதியையும் பத்து வயதிலேயே தன் வாழ்வில் நடைமுறைப்படுத்திக் காட்டிய பாளாசாகேப் தேவரஸ், தான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் தலைவரான பிறகு 1974-இல் மே மாதம் 8-ஆம் தேதி புனே நகரில் நடந்த வசந்த வியாக்யான மாலா என்ற நிகழ்ச்சியில், ‘தீண்டாமை பாவம் இல்லை என்றால் உலகில் வேறெதுவும் பாவமில்லை’ என்று பிரகடனம் செய்தார். ‘தீண்டாமை முழுமையாக ஒழிய வேண்டும்; வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் ஒழிய வேண்டும்’ என்ற அவரது அந்த அறிவிப்பால், ஆர்.எஸ்.எஸ். நால்வகை வர்ணமுறையை, ஜாதி முறைமையை வலியுறுத்தும் பழமைவாத அமைப்பு என்று அவதூறு செய்துவந்த சங்க விரோதிகள் வாயடைத்துப் போயினர். அவர்களின் துஷ்பிரசாரத்தால் திகைத்து, அவர்களுக்கு பதில் சொல்வதற்கே தங்கள் சக்தியைச் செலவிட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், அதன்பிறகு தெளிவும் புத்துணர்வும் பெற்று தங்கள் தேசபக்தப் பணியில் வீறுடன் செயல்பட்டனர்.
பாளாசாகேப் ஆர்.எஸ்.எஸ்ஸில் நடைமுறையில் இருந்த விஷயத்திற்கு தத்துவ பின்னணியை விளக்கினார். சமூக செயல்வடிவம் கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆறாவது தலைவராக உள்ள மதிப்பிற்குரிய டாக்டர் மோகன் பாகவத் அவர்கள், ‘கோயில், நீர் நிலை, மயானம் ஆகிய மூன்றும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்; என்று அறைகூவல் விடுத்திருக்கிறார். அதன்மூலம் பாளாசாகேப் தேவரஸ் அளித்த சமூக சமத்துவத்தை, சமூக நீதியை மேலும் கூர்மையாக்கியுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில்… பாகிஸ்தானின் தூண்டுதலால் சீக்கியர்கள் சிலர் ‘காலிஸ்தான்’ என்ற தனி நாடு கோரி தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டனர். சீக்கிய சமயமே இஸ்லாமியர்களின் தாக்குதலிலிருந்து இந்துக்களைக் காக்கத்தான் பிறந்தது. இப்படியிருக்க இந்துஸ்தானிலிருந்து பஞ்சாப் பிரியக் கோருவதும் அதற்கு பாகிஸ்தான் உதவி பெறுவதும் மிகப் பெரிய முரண்பாடு. காலிஸ்தான் தீவிரவாதிகள், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்திய ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை பஞ்சாபில் படுகொலை செய்வது 1980-களில் இயல்பாகிப் போனது. இந்நிலையில் ‘சீக்கியர்களும் இந்துக்களும் சகோதரர்களே’ என்று ஒருமைப்பாட்டை வலியுறுத்தியது ஆர்.எஸ்.எஸ். அதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ராஷ்ட்ரீய சிக் சங்கடன் (தேசிய சீக்கியர் சங்கம்). பாளாசாகேப்பின் முயற்சியால் துவங்கப்பட்ட இந்த அமைப்பின் நோக்கம், செயல்பாடுகளைப் பற்றி, அவரிடமே விவாதித்துத் தெரிந்துகொண்ட அப்போதைய ஜனாதிபதி கியானி ஜெயில் சிங் அந்த அமைப்பின் புரவலரானார்! ஜனாதிபதி மாளிகையிலேயே அந்த அமைப்பின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்துள்ளது. -பேராசிரியர் ராஜேந்திர சிங் (ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர்)
சுய மாற்றமும் சமூக மாற்றமும்
ஆர்.எஸ்.எஸ்.ஸிலும் அதன்மூலம் சமுதாயத்திலும் மாற்றத்திற்கு வித்திட்டவர் பாளாசாகேப் தேவரஸ். எல்லா மாற்றங்களும் தனிநபரிடமிருந்தே துவங்குகின்றன என்பதை புரிந்து வைத்திருந்தவர். ஆர்.எஸ்.எஸ்.ஸின் பொதுச் செயலாளராக இருந்தபோது ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அவர் ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்திலிருந்து மாடிப்படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார். அவருடன் சங்கப் பொறுப்பாளர்கள் இருவர் படி இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அருகிலிருந்த அறையில் ஒரு மூத்த ஊழியர் யாரிடமோ, தனக்கு மிகவும் வயதாகிவிட்டது, இந்த வயதில் தன்னை மாற்றிக்கொள்ள முடியாது என்று சத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த வார்த்தை காதில் கேட்டவுடன் தேவரஸ் சட்டென்று நின்று, திரும்பி அவரைப் பார்த்து, ‘சங்க ஊழியரான நீ சாகும்வரை மாறித்தான் ஆகவேண்டும்’ என்று உறுதியான குரலில் சொல்லிவிட்டுச் சென்றார்.
சொல்வது எளியது, சொல்லியபடி செய்வது அரியது என்கிறார் வள்ளுவர். பாளாசாகேப் அரிய மனிதர். அவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் சடங்குகளிலோ வழிபாடுகளிலோ அவருக்கு சற்றும் ஈடுபாடு கிடையாது. தலைவர் பொறுப்புக்கு வருவதற்கு முன் அவர், படித்த- நவீன அறிவு ஜீவிகளுக்கு உரியதாகச் சொல்லப்படும் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். உலகியலில் முழுமையான நம்பிக்கை கொண்டவராக உலகாயதக் கண்ணோட்டம் கொண்டவராக அனைவராலும் அறியப்பட்டிருந்தார். கதாகாலட்சேபம், கோயில் திருவிழாக்கள், யாகம், யக்ஞம், துறவிகளைச் சந்திப்பது போன்ற விஷயங்களுக்கு அவர் வாழ்வில் இடம் கொடுத்ததில்லை. எதற்கும் வேத, புராண கருத்துக்களை நாடாமல் இன்றைய யதார்த்தத்தின் அடிப்படையில் சிந்தனை செய்து வந்தார். அதன்படியே செயல்பட்டார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவராக அவர் ஆனபோது அவருக்கு வயது ஐம்பத்தெட்டு. தலைவரான பிறகு இவரும் முந்தைய தலைவர் குருஜி கோல்வல்கர் போலவே பூஜை முதலியவற்றில் ஈடுபடுபவர் என்று எதிர்பார்த்து, அவருடைய சுற்றுப்பயணத்தின்போது பல ஊர்களிலிருந்து அனுஷ்டானத்திற்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென கேட்கத் துவங்கினார்கள். அவர்களின் மனதைப் புரிந்துகொண்ட பாளாசாகேப், நீராடிய பிறகு ஊதுபத்தி ஏற்றி வைத்து பகவத்கீதையின் ஒரு அத்தியாயத்தை வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளத் துவங்கினார். இந்த மாறுதல் மிக சகஜமாக நடந்தது. அவருடன் நெருக்கமாகப் பழகியவர்களுக்கும் இது வெகு நாட்களுக்குப் பிறகுதான் கண்ணில் பட்டது.
தினமும் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் கொண்டவர் பாளாசாகேப். அவர் உடல்நிலை சரியில்லாதபோதும், மற்றவரை வாசிக்கச் சொல்லிக் கேட்பார். அதில் வெளியாகும் சமூகப் பிரச்னைகள் குறித்து அதிக அக்கறை காட்டுவார். சமுதாயத்தில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது தொடர்பான செய்திகளைக் கேட்டு மனம் மகிழ்வார்.
நாகபுரியில் ராஷ்ட்ர சேவிகா சமிதி சார்பில் 29-30 பெண்களுக்கு உபநயனம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது. தேவரஸுக்கும் அழைப்பு வந்தது. அவர் உடல்நிலை சரியில்லாதபோதும் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு சென்று அகல்யாதேவி கோயிலில் நடந்த அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய டாக்டர் ஷ்யாமலதா பிஷிக்கரிடமிருந்து உபநயன நிகழ்ச்சியைப் பற்றியும் அதில் செய்யப்படும் பஞ்ச தீக்ஷா பற்றியும் சொல்லித் தரப்படும் மந்திரங்கள் பற்றியும் விரிவாகக் கேட்டறிந்தார்.
அந்த நிகழ்ச்சி நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன் சங்கராச்சாரியார் ஒருவர் பெண்களைப் பற்றிக் கூறியிருந்த கருத்துக்கள் கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருந்தன. வாதப் பிரதிவாதங்களால் சூழல் சூடேறி இருந்தது. இந்நிலையில் பெண்களுக்கான உபநயன நிகழ்ச்சியை சமிதியே நடத்துவதையும், அதில் பாளாசாகேப் கலந்து கொள்வதையும் கண்ட பத்திரிகையாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். சங்கராச்சாரியார் கூற்றுப் பற்றிக் கேட்டனர். ‘நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். இதன் அர்த்தத்தை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இதைத் தவிர நான் வேறெதுவும் சொல்வதற்கில்லை’ என்றார். அவர் எப்படிப்பட்டவர், எப்படிச் சிந்திக்கின்றார், என்ன சொல்ல வருகிறார் என்பதை அந்த இரண்டு வாக்கியத்திலேயே அனைவரும் புரிந்து கொண்டனர்.
அடுத்த நாள் கட்சிப் பணிக்காக நாகபுரி வந்த பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானி, பாளாசாகேப் ஊரில் இருப்பதை அறிந்து அவரைப் பார்க்க வந்தார். அவரிடமும் தேவரஸ் முந்தைய நாள் நிகழ்ச்சியின் புகைப்படங்களைக் காட்டி அந்த புதிய சமூக முயற்சியை எடுத்துக் கூறினார்.
பாளாசாகேப் தேவரஸ் வாழ்நாள் பிரம்மச்சாரி. ஒட்டுமொத்த தேசத்தையே தன் குடும்பமாகக் கருதியவர். ராஷ்டிர சேவிகா சமிதி, தில்லி கமலாநகரில் நடத்திய பயிற்சி முகாம் ஒன்றில் நிறைவுரை ஆற்ற அவரை அழைத்திருந்தனர். பத்திரிகையாளர்களும் அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் அவர் அரசியல் பற்றியோ பல்வேறு சமூகப் பிரச்னைகள் பற்றியோ பேசவில்லை.
‘ஆர்.எஸ்.எஸ். போல சமிதியின் வேலை வேகமாக வளரவில்லை. சமிதி வேலையைச் செய்ய போதுமான ஆட்கள் (பெண்கள்) கிடைக்காததே அதற்குக் காரணம். திருமணத்திற்குப் பின் பெண்களுக்கு வேலைப் பளு அதிகரித்து வருவதால் அவர்களால் சமூக சேவைக்காக சிறிதளவே நேரம் செலவிட முடிகிறது. இந்நிலை மாற வேண்டும். மாறினால் சமிதி வளர்ச்சி அடையும்’ என்று தேவரஸ் பேசினார்.
செய்தியாளர்களுக்கு ‘ருசி’யான செய்தி எதுவும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்தனர். சங்க ஆதரவு செய்தியாளர் ஒருவர் அவர் பேச்சைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டு இரண்டு பாரா செய்தியை எழுதி அவரிடமே காட்டி, இதுதானே நீங்கள் சொன்னது என்று கேட்டார். அதை வாங்கி படித்த பாளாசாகேப், புன்முறுவலுடன் அவரைப் பார்த்து, ‘இது சரிதான். ஆனால் இதில் நான் திருமணத்திற்கு எதிரானவன் என்ற தொனி உள்ளது. அது சரியல்ல. நான் திருமணத்திற்கு எதிரானவன் அல்ல. திருமண பந்தத்தின் மூலம் ஏற்படும் குடும்ப அமைப்புதான் இந்த சமுதாயத்தின் அடிப்படை. எனவே குடும்ப வாழ்வு சீர்கெடாமல், அதே வேளையில் பெண்கள் அதிகமான நேரம் சமூகசேவைப் பணியில் ஈடுபட வழிவகைகளைக் கண்டறிய வேண்டும். அதுதான் பெண்களுக்கும், சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும்’ என்று தான் சொன்னதை விளக்கினார்.
பெண்களைப் பற்றி மட்டுமல்ல, ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தொடர்வதா வேண்டாமா, மைனாரிட்டி கமிஷன் அமைப்பதா- மனித உரிமை கமிஷன் அமைப்பதா, சீக்கியர்கள் தனி மதத்தைச் சேர்ந்தவர்களா இல்லை- இந்து மதத்தின் ஒரு அங்கமா, வங்க தேசத்திலிருந்து வருபவர்கள் அகதிகளா -ஊடுருவல் காரர்களா, இலங்கை பிரச்னையில் நமது நிலை எப்படி இருக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு சமூக, தேசப் பிரச்னைகளுக்கு பாளாசாகேப் தேவரஸ் அளித்த சீரிய கண்ணோட்டம் பலராலும் பாராட்டப்பட்டது.
மகத்தான தலைவர்
மகாத்மா காந்தி கொலையில் அரசியல் உள்நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ்.ஸைத் தொடர்புபடுத்தி தடை செய்தது நேருவின் அரசு. குருஜி கோல்வல்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாளாசாகேப் தேவரஸும் இதர தலைவர்களும் தலைமறைவாகி மாபெரும் சத்தியாகிரக போராட்டத்தை நாடு முழுக்க நடத்தினர். அதனால் மிரண்ட நேரு அரசு, மன்னிப்புக் கடிதம் எழுதினால் தடையை நீக்குவதாக பேரம் பேசியது. சங்க பொதுச்செயலாளராக இருந்த பாளாசாகேப் தேவரஸ், போராட்டத்தை தொடர்ந்து நடத்த ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு வலிமை உண்டு; மக்கள் ஆதரவும் உண்டு என்று அரசுக்கு தெளிவுபடுத்தினார். அந்த வார்த்தைகளின் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட சர்தார் படேல், ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்கி, காங்கிரஸ் கட்சியை அப்போது காப்பாற்றினார்.
நேருவின் மகள் இந்திரா காந்தியின் ஆட்சியின்போது நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அப்போது சிறையில் அடைக்கப்பட்ட தேவரஸ், சிறையில் இருந்தபடியே அகில இந்திய அளவில் இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தி ஜனநாயகத்தை மீட்டெடுத்தார். ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீங்கியது. தடை நீங்கியதும் ‘நெருக்கடி நிலையை அமல்படுத்தி கஷ்டங்களைக் கொடுத்த இந்திரா காந்தி செயலை மன்னிப்போம், மறப்போம்’ என்றார் தேவரஸ். ஆட்சி மாற்றம் வந்தது. மாற்றம் வந்த பிறகு ஒருமுறை மத்திய அமைச்சராக இருந்த சௌத்ரி சரண்சிங்கைச் சந்தித்தார். அப்போது சரண்சிங் ‘நான் எந்தக் காலத்திலும் இந்திரா காந்தியை மன்னிக்கவே மாட்டேன்’ என்று கூறினார். அதற்கு தேவரஸ், “நீங்கள் ஆட்சியாளர்கள் (அதாவது அரசியல்வாதிகள்). நாங்கள் சமூகசேவகர்கள். மக்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களான எங்களால் அப்படிப் பேச முடியாது’’ என்றார். சரண்சிங் பின்னாளில் என்ன செய்தார் என்பதை நாடறியும். தேவரஸின் தலைமைப் பண்பையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.
$$$