அறிவுப்பயணம் தொடர்கிறது…

-சேக்கிழான்

‘விஜயபாரதம் பிரசுரம்’ வரும் புத்தாண்டன்று சென்னையில் இன்று (14.04.2024) நடத்தவுள்ள ஆண்டுவிழா- பாரதி விருது வழங்கும் விழாவில் ஆண்டு விழா மலர் வெளியிடப்பட உள்ளது. அதில் இடம் பெற்றுள்ள பத்திரிகையாளர் திரு. சேக்கிழான் எழுதிய கட்டுரை இது…


இலக்கியம் மற்றும் எழுத்துலகில் தமிழகத்தின் பங்களிப்பு அளப்பரியது. தமிழ்த் தாத்தா உ.வே.சா., மகாகவி பாரதி முதல், திரு.வி.க., கல்கி கிருஷ்ணமூர்த்தி, கி.வா.ஜகந்நாதன் என நீளும் பல நூறு ஆளுமைகள் எழுத்துப் பணி, பதிப்பகங்கள் ஊடாக மக்களிடம் ஆக்கப்பூர்வமான கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் தேவையினை உணர்த்தும் வகையில் நமக்கெல்லாம் முன்னோடிகளாக இருந்து, இன்றளவும் வழிகாட்டி வருகின்றனர்.

மக்களுக்காக இயங்கும் எந்த அமைப்பும், மக்களைச் சென்று சேர பிரசார சாதனங்கள் இன்றியமையாதவை. அந்த வகையில், நூற்றாண்டு காணும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) பிரசுர வெளியீட்டுத் துறையில், தமிழகத்தின் போர்வாளாக ‘விஜயபாரதம் பிரசுரம்’ இயங்கி வருகிறது.

2019-இல் முறைப்படியான நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டு  ‘விஜயபாரதம் பிரசுரம்’ நேர்த்தியான நூல்களை சிறப்பாக வெளியிட்டு வருகிறது. இந்த நூல் வெளியீட்டு நிறுவனம் உருவாகி வந்த வரலாறு நாம் அறிய வேண்டியதாகும்.

கொள்கை விளக்கப் பத்திரிகைகள்:

1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, ஆரம்பகாலத்தில் பிரசார சாதனங்களில் கவனம் கொடுக்கவில்லை. இயக்கக் கட்டமைப்பில் மட்டுமே அதன் கவனம் ஆரம்பத்தில் இருந்தது. சில நேரங்களில் அரசும், சித்தாந்தரீதியாக சங்கத்தை எதிர்த்தவர்களும் முன்வைத்த விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்க மட்டுமே சிறிய பிரசுரங்களை வெளியிட்டு வந்தனர். அதுவரை கொள்கை விளக்கத்திற்காக சிறு துண்டுப் பிரசுரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன.    

சுதந்திரம் பெற்ற பிறகு கருத்துப் பரவலாக்கத்தில் பத்திரிகைகளின் தேவை உணரப்பட்டது. அதையடுத்து, 1947இல் ஆங்கிலத்தில் ‘ஆர்கனைசர்’ வார இதழும், ஹிந்தியில் ‘பாஞ்சஜன்யா’ வார இதழும் தொடங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, நாட்டின் பிரதான மொழிகள் பலவற்றிலும் சங்கத்தின் சிந்தனையைத் தாங்கி, வார இதழ்கள் தொடங்கப்பட்டன. 

விவேக் (மராத்தி), சாதனா (குஜராத்தி), தியாகபூமி, விஜயபாரதம் (தமிழ்), கேசரி, ஜன்மபூமி (மலையாளம்), விக்ரமா (கன்னடம்), ஜாக்ருதி (தெலுங்கு),  ஸ்வஸ்திகா (வங்கம்), ராஷ்ட்ரதீப் (ஒடியா), ஆலோக் (அஸாமி) போன்ற பிரசார நோக்கிலான பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. இவை அனைத்தும் சங்க (ஆர்.எஸ்.எஸ்.) வட்டாரத்தில் விழிப்புணர்வுப் பத்திரிகைகள் (ஜாக்ரண் பத்ரிகா) என்று அழைக்கப்பட்டன.

தமிழில் ‘தியாக பூமி’க்கு முன்னதாக ‘நன்னெறி’ என்ற சிறு பத்திரிகை சங்க ஆதரவாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது. தியாகபூமியானது 1950இல்  ‘டேப்லாய்டு’ வடிவில் தொடங்கப்பட்டது. இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது (1975) இப்பத்திரிகை அரசால் நிறுத்தப்பட்டது.

சங்கத்தின் தேசிய அளவிலான வளர்ச்சியும் மக்கள் அரங்கில் அதன் செல்வாக்கும் பல்கிப் பெருகியபோது, சித்தாந்தரீதியான நூல்களை வெளியிட வேண்டிய தேவை உணரப்பட்டது. எனினும் தனித்த புத்தக வெளியீட்டு நிறுவனம் தொடங்கப்படவில்லை. ‘ராஷ்ட்ரீய ஸ்வயசேவக சங்கம்’ என்ற பெயரிலேயே அமைப்பிற்குத் தேவையான நூல்கள் வெளியிடப்பட்டு வந்தன.  

‘தியாக பூமி’  வார இதழ் முதலில் மதுரையில் இருந்து 1950இல் வெளியானது. 1960இல் இது சென்னை, சிந்தாதிரிப்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.  இதன் முதல் ஆசிரியராக, காலஞ்சென்ற சங்கப் பிரசாரகர் திரு. சுப்ப ராவ் இருந்தார். அவரை அடுத்து திரு. சி.கனகராஜன் ஆசிரியராகச் செயல்பட்டார். 1973இல் இதன் ஆசிரியராக திரு. எஸ்.எஸ்.மகாதேவன் பொறுப்பேற்றார்.  பழைய அச்சுத் தொழில்நுட்பத்தில் இந்த இதழ் வெளிவந்தது.

1975 ஆம் ஆண்டு நாட்டில் நெருக்கடிநிலை திணிக்கப்பட்டபோது  ‘தியாகபூமி’ தடை செய்யப்பட்டது. அதன் ஆசிரியரும் நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். அதையடுத்து நெருக்கடிநிலை நீக்கப்படும் வரை, தியாகபூமி வெளியாகவில்லை.

1977இல் நெருக்கடிநிலை விலக்கிக் கொள்ளப்பட்டு தேர்தலில் நிகழ்ந்த  ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, மீண்டும் ‘தியாகபூமி’ தொடங்கி சில இதழ்கள் வெளியாகின. அப்போது அதன் ஆசிரியராக ‘ஹண்ட்ரட்ஜி’ என்றழைக்கப்பட்ட திரு. ஸ்ரீநிவாசன் இருந்தார். எனினும் கால மாற்றத்திற்கு ஏற்ற வகையில் புதிய வடிவில் பத்திரிகை வெளிவர வேண்டும் என்று அன்றைய ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன் விளைவாக, 1978 ஜூலையில் (குருபூஜையன்று) ‘விஜயபாரதம்’ வார இதழ் தொடங்கப்பட்டது. அதன் முதல் ஆசிரியராக திரு. ஹண்ட்ரட்ஜி ஸ்ரீநிவாசன் பொறுப்பேற்றார்.

அவரை அடுத்து, திருவாளர்கள் சாது வே.ரங்கராஜன்,  சு.வெங்கட்ராமன்,  சிவராமகிருஷ்ண சர்மா, சுந்தர.ஜோதி (1995 – 2004), சடகோபன் (2004 – 2006), ம.வீரபாகு (2006 – 2020), குரு.சிவகுமார் (2020 – 2022) ஆகியோர் செயல்பட்டனர்.  தற்போது, திரு. பெ.வெள்ளைதுரை இதன் ஆசிரியராகப் பணி புரிகிறார்.

விஜயபாரதம் அலுவலகம், முதலில் சென்னையில் பெரம்பூர், படேல் சாலையில் இயங்கியது. அதையடுத்து ரங்கசாயி தெருவில் இயங்கிய இதன் அலுவலகம், 1995-இல் சேத்துப்பட்டுக்கு இடம் மாறியது. தற்போது (2017 முதல்)  புரசைவாக்கத்தில் இயங்கி வருகிறது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொள்கை வெளியீட்டு சாதனமான ‘விஜயபாரதம்’ மட்டுமல்லாது, சங்க குடும்ப (சங்க பரிவார்) இயக்கங்களின் பத்திரிகைகளும் வெளியாகி வருகின்றன.

ஹிந்து முன்னணியின் ‘பசுத்தாய்’, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ‘ஹிந்து மித்திரன்’, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் ‘மாணவர் சக்தி’, பாஜகவின்  ‘ஒரே நாடு’, பாரதீய மஸ்தூர் சங்கத்தின் ‘பிஎம்எஸ் செய்தி’, சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் ‘சுதேசி செய்தி’ ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

பதிப்பகங்களின் வளர்ச்சி நிலை:

வார, மாத இதழ்கள் மட்டுமல்லாது, சித்தாந்த ரீதியாகவும், தேசியத்தை வலுப்படுத்தும் வகையிலும், அதிக அளவில் நூல்களை வெளியிட வேண்டியதன் தேவை 1990களில் உணரப்பட்டது. உடற்பயிற்சித் துறை (சாரீரிக்), அறிவுத் துறை (பௌத்திக்), சேவைத் துறை (சேவா) ஆகியவற்றுக்கு அடுத்து, பிரசாரத் துறை (பிரஸார்) சங்கத்தில் 1995இல் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நூல் வெளியீடுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

தமிழகத்தில், ஆரம்பத்தில், காலத்தின் தேவைக்கேற்ப, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெயரிலேயே நூல்கள் வெளியிடப்பட்டு வந்தன. பிறகு, தனிநபர்களின் பெயர்களின் நூல்கள் வெளியிடப்பட்டன. (உ.ம்: திரு. இராம.கோபாலன், திரு. நொ.ம.சுகுமாரன், திரு. விஜயராகவலு).

1980களில் பெரம்பூரில் ஜனசேவா பதிப்பகம், கேசவர் பதிப்பகம் ஆகிய பெயர்களில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கு முன் தேசிய சிந்தனைக் கழகம் என்ற பெயரில் தேசியக் கருத்தாக்கம் கொண்ட பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை கங்கா – காவேரி அச்சகம், பாரத் கிராஃபிக்ஸ் ஆகியவை அச்சிட்டன.

1990 முதல் 2019 வரை, சக்தி புத்தக நிலையம் (இயக்க நூல்கள் மட்டும்), சக்தி பதிப்பகம் (இதர நூல்கள்), விஜயபாரதம் பதிப்பகம், சென்னை மீடியா சென்டர் (கருத்தாக்க நூல்கள்) ஆகிய பெயர்களில் நூற்றுக் கணக்கான நூல்கள் வெளியிடப்பட்டன. இதற்கென ‘மாதவ முத்ரா’ என்ற அச்சுப்பணி நிறுவனம் தொடங்கப்பட்டது; அது முதலில் சென்னை – சேத்துப்பட்டில் இயங்கியது; தற்போது புரசைவாக்கத்தில் செயல்படுகிறது.

சங்க துணை அமைப்புகள் தனித் தனியே வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை தனி. அதிலும், ஹிந்து முன்னணி மட்டுமே பிரசார நோக்கில் பல்வேறு தலைப்புகளில் நூற்றுக் கணக்கான நூல்களை வெளியிட்டு வருகிறது. சங்கப் பிரசாரகர் ஏகநாத் ரானடே நிறுவிய விவேகானந்த கேந்திரம், சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளைப் பரப்பும் நூல்களை வெளியிட ‘விவேகானந்த கேந்திரா பிரகாஷன்’ என்ற தனி நிறுவனத்தையே நடத்துகிறது.

மேலும், விஜில், சேவாபாரதி, விஸ்வ ஹிந்து பரிஷத், ஏபிவிபி, பிஎம்எஸ், பாரதீய ஜனதா கட்சி, தர்ம ரக்‌ஷண சமிதி, சென்டர் ஃபார் பாலிஸி ஸ்டடிஸ் (ஆராய்ச்சி அமைப்பு), பாரதீய கிஸான் சங்கம், சுதேசி விழிப்புணர்வு இயக்கம், தேசிய சிந்தனைக் கழகம் ஆகிய அமைப்புகளும் தங்கள் அமைப்புகள் சார்ந்து தேவையான நூல்களை வெளியிட்டு வருகின்றன.

திருவாளர்கள் கேப்டன் எஸ்.பி.குட்டி, ஆர்.பி.வி.எஸ்.மணியன், வி.எஸ்.நரசிம்மன், இராம.கோபாலரத்தினம், டாக்டர் எம்.எல்.ராஜா, பசுத்தாய் கணேசன், ஜடாயு போன்ற ஸ்வயம்சேவகர்கள் தங்கள் தனிப்பட்ட முயற்சியில் பல நூல்களை வெளியிட்டுள்ளனர். சங்க சிந்தனையால் ஊக்கம் பெற்று நடத்தப்படும் கல்வி நிறுவனங்களும் பல நூல்களை வெளியிட்டுள்ளன (உ.ம்: விவேகானந்த வித்யாலயா, திருப்பூர்).

இந்த நிலையில்தான், திட்டமிட்ட ரீதியில் இயங்கும் முழுமையான பதிப்பகத்தின் தேவையை உணர்ந்து, 2019இல் சென்னை, சேத்துப்பட்டில் ‘விஜயபாரதம் பிரசுரம்’ தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் இதுவரை 200க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களை வெளியிட்டிருக்கிறது.

கருத்தாக்கமே அறிவுலகின் ஆயுதம்:

இன்றைய நவீன உலகில் கருத்தாக்கங்களே பிரதான ஆயுதங்களாக மாறியுள்ளன. கருத்தாக்கங்கள் (Narratives) மூலமாக எந்த ஒரு நாட்டையும் வலுப்படுத்த முடியும்; பலவீனப்படுத்தவும் முடியும். எனவேதான், பல்வேறு நாடுகளில் எதிர்மறைக் கருத்தாக்கங்களை வல்லரசு நாடுகள் முன்னெடுக்கின்றன. மேற்கத்திய சிந்தனைகளான முதலாளித்துவம், உலகாயத வாதம், கிறிஸ்தவ விடுதலை இறையியல், உலகளாவிய வஹாபியிஸம் ஆகியவை தங்கள் கருத்துச் செல்வாக்கால் உலகை ஆள முற்படுகின்றன. இந்த சிந்தனைத் தளங்களின் கருத்து மோதல்களே உயிர் குடிக்கும் போர்களாகவும், பயங்கரவாதத் தாக்குதல்களாகவும் உருவெடுப்பதை நாம் காண்கிறோம்.

இந்தக் கருத்தாக்கங்களை உலக நாடுகளில் செயல்படுத்த பல நன்கொடையாளர்கள் (உ.ம்: ஜார்ஜ் சோர்ஸ், ஃபோர்டு ஃபவுண்டேஷன்) பல்லாயிரம் கோடி டாலர்களைச் செலவிடுகின்றனர். ராபர்ட் முர்டோக் போன்ற ஊடகப் பெருந்தலைகள், தனிப்பட்ட நோக்கங்களுடன் கோணலான கருத்தாக்கங்களுடன், பிரம்மாண்டமான ஊடகங்களை நடத்துகின்றனர். நமது நாட்டிலும் கோணல் புத்தியுடன் செயல்படும், இடதுசாரிச் சிந்தனையுடன் கூடிய ஊடகங்களை நாம் அறிவோம்.

வெளிநாடுகளில் இருந்து ஆராய்ச்சி நிதியுதவி, சேவைக்கு உதவி, கல்விக்கு உதவி, தன்னார்வலர்களுக்கு உதவி என்ற பெயர்களில் இவ்வாறு பல கோடி ரூபாய் இந்தியாவுக்குள் பாய்கிறது. அவை, இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான சிந்தனைகளையும் கருத்தாக்கங்களையும் பரப்பவும், மக்களிடையே நிலவும் இணக்கமான பிணைப்பைக் கெடுக்கவும்  பயன்படுகின்றன. ஒரு நாட்டின் அறிவுலகத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டால் அந்த நாட்டை மறைமுகமாக ஆக்கிரமித்து விடலாம் என்பதே இவர்களின் அடிப்படை பாலபாடம்.

தமிழகத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஆரிய- திராவிட இனவாதம், பிராமண வெறுப்பு, ஹிந்திக்கு எதிர்ப்பு போன்ற கருத்தாக்கங்கள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் விதைக்கப்பட்டவையே. அதன் தீய விளைவுகளை இன்றும் நாம் அனுபவித்து வருகிறோம்.

அண்மைக்காலமாக தேசமெங்கும் பரவலாக அறியப்படும் ‘அர்பன் நக்ஸல்’ என்ற சொற்பிரயோகம், இடதுசாரிச் சிந்தனையின் தாக்கத்தால் தேசத்திற்கு எதிரான போராளிகளாக மாறிவிட்ட அறிவுலகினரையே குறிக்கிறது. மஹாராஷ்டிர மாநிலம், பீமா கோரேகானில் 2018இல் நடத்தப்பட்ட கலவரம், தில்லி ஜவஹர்லால் நேரு பlகலைக்கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகத் தொடரும் அமைதியின்மை ஆகியவற்றை, மனம் சீரழிந்த அறிவுலகின் விளைவாகவே கொள்ள வேண்டும்.

எனவே தான், எதிர்மறைச் சிந்தனைகளுக்கு (Negative Narratives) எதிராக, நாட்டு மக்களை ஒன்றிணைக்கும், தேசத்தை வலுப்படுத்தும் நேர்மறையான கருத்தாக்கங்களை (Positive Narratives) பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. இந்த இடத்தில் தான், தேசநலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் ஊடகங்கள், பதிப்பகங்களின் தேவை இன்றியமையாததாகிறது.

விஜயபாரதம் பிரசுரத்தின் திட்டங்கள்:

இந்தத் திசையில் தான்  ‘விஜயபாரதம் பிரசுரம்’ கடந்த ஐந்தாண்டுகளாக இயங்கி வருகிறது; முந்தைய பதிப்புலக அனுபவங்களுடன், நவீனத் தொழில்நுட்ப உதவியுடன், தற்காலத்துக்குத் தேவையான நூல்களை நேர்த்தியாக வெளியிட்டு வருகிறது.

அச்சுப் புத்தகங்களின் அடுத்தகட்ட வளர்ச்சியான மின்னூல்களை (E-Books) வெளியிடுவதிலும் விஜயபாரதம் பிரசுரம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இதுவரை வெளியான சங்க வெளியீடுகள் அனைத்தையும் மின்னூலாக்கவும், தேவையானவற்றை மீண்டும் வெளியிடவும் திட்டமிட்டு விஜயபாரதம் பிரசுரம் செயல்படுகிறது.

மேலும் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் புத்தகக் காட்சிகளில் (Book Fairs) விஜயபாரதம் பிரசுரம் பங்கேற்று மக்களிடையே நேரடியாக நமது நூல்களைக் கொண்டு சேர்க்கும் பணியினை செவ்வனே செய்து வருகிறது.

நூலுக்கும் வாசகருக்கும் இணைப்புப் பாலமாக ஆண்டு உறுப்பினர் திட்டத்தை  விஜயபாரதம் ‘புஸ்தகம்’ உறுப்பினர் திட்டம்) கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜயபாரதம் பிரசுரம் நடைமுறைப்படுத்தி வருகிறது.  ஆண்டுக்கு ரூ. 1,500 செலுத்தும் உறுப்பினரின் இல்லம் தேடி, ஓராண்டில் வெளியாகும் (சந்தாதாரர் செலுத்திய தொகைக்கு மேற்பட்ட மதிப்புடன் கூடிய) அனைத்து நூல்களும் அனுப்பி வைக்கப்படுவதே இத்திட்டத்தின் சிறப்பு.

தமிழ் மொழிக்கு சிறப்புச் சேர்க்கும் இலக்கியங்கள், தமிழ் இலக்கியங்களில் தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் ஆதாரங்கள், இளைஞர்களுக்கு உதவும் எதிர்கால வழிகாட்டி நூல்கள், மகளிர் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் நூல்கள், குடும்ப அமைப்பின் சிறப்பை உணர்த்தும் நூல்கள், குழந்தைகளைப் படிக்கத் தூண்டும் களஞ்சியங்கள், முக்கியமான தமிழ் நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றை வெளியிடும் தொலைநோக்குத் திட்டங்களுடன் ‘விஜயபாரதம் பிரசுரம்’ இயங்கி வருகிறது.

ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 30 நூல்களை வெளியிட வேண்டும்; நேர்மறைக் கருத்தாக்கங்கள் கொண்ட நூல்களை பெருமளவில் வெளியிட வேண்டும்; பதிப்புத் துறையில் முன்னுதாரணமான பதிப்பகமாக உருவெடுக்க வேண்டும் என்ற இலக்குகளுடன், வாசகர்களின் மேலான ஆதரவுடன் விஜயபாரதம் பிரசுரத்தின் பயணம் தொடர்கிறது.

$$$

Leave a comment