இனவாதச் சாக்கடையில் உழலும் கம்யூனிஸ்டுகள்

-பி.ஏ.கிருஷ்ணன்

கம்யூனிஸ்டுகள் குறுங்குழு இனவாதச் சாக்கடையில் உழலும் அவலம், தமிழ்நாட்டில் மட்டுமே நடப்பது. இது மார்க்ஸையும் லெனினையும் அவமானம் செய்வது. அறிவுள்ள கம்யூனிஸ்டுகள் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு.

கம்யூனிஸ்டு எம்.பி. ஒருவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருக்கும் கல்வெட்டுகளைக் குறிப்பிட்டு இவ்வாறு கூறியிருக்கிறார்:

“சமஸ்கிருதம்தான் உலகின் மூத்த மொழி, வேதப் பண்பாடே இந்தியப் பண்பாடு என்று இடைவிடாமல் கூவிக் கொண்டிருக்கும் இந்துத்துவா கூட்டத்துக்கு மதுரையிலிருந்து உரக்கச் சொல்வோம்- தமிழே எங்கள் மொழி என; சமத்துவமே எங்கள் வழி என. அதற்கான ஆயுதமே எங்கள் இயக்கம். அதனை வென்றடையவே எமது மாநாடு.”

சமஸ்கிருதம்தான் உலகின் மூத்தமொழி, வேதப் பண்பாடே இந்தியப் பண்பாடு என்று சொல்வது கோமாளித்தனம். அதேபோன்று தமிழகம் ஏதோ தனியாக இயங்கியது என்று சொல்வதும் கோமாளித்தனம்தான். இந்துத்துவ வெறுப்புக்கு எதிர்வினை திராவிட ஹிட்லரின் இனவெறி வெறுப்போ அல்லது சமஸ்கிருத வெறுப்போ அல்ல. அடிப்படை மார்க்சியம் தெரிந்த யாரும் இவ்வாறு பேச மாட்டார்கள்.

கம்யூனிஸ்டுகள் குறுங்குழு இனவாதச் சாக்கடையில் உழலும் அவலம், தமிழ்நாட்டில் மட்டுமே நடப்பது. இது மார்க்ஸையும் லெனினையும் அவமானம் செய்வது. அறிவுள்ள கம்யூனிஸ்டுகள் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு.

இனி மதுரையின் வரலாறு என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

இது சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சி:

“சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து”

“உயர்நிலை யுலக மிவணின் றெய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்
பெரியோர் மேஎ யினிதி னுறையுங்
குன்றுகுயின் றன்ன அந்தணர் பள்ளியும்”.

“கோத லந்தணர் வேதம் பாட”

வேதம் ஓதுவதையும் அந்தணர் பள்ளிகளையும் மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது. 

சிலப்பதிகாரம் மதுரை நகரின் கோயில்களைக் குறிப்பிடும்போது இவ்வாறு சொல்கிறது:

“நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும்
உவணச் சேவ லுயர்த்தோன் நியமமும்
மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்”

நெற்றிக் கண்ணுடைய சிவனுக்கும் கருடக்கொடியோனாகிய விஷ்ணுவிற்கும், ஏரைப் பிடித்திருக்கும் பலராமனுக்கும், சேவற்கொடியோனான முருகனுக்கும் மதுரையில் கோயில்கள் இருந்தன. இவர்கள் அனைவரும் இந்தியக் கடவுள்கள்.

இளங்கோவடிகள் மதுரைக் காண்டம் ஊர்காண் காதையில் ராமனைக் குறிப்பிடும் போது இவ்வாறு கூறுகிறார்:

“தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோ னென்பது
நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ”

வேதமுதல்வன் என அழைக்கப்படும் பிரமனைத் தந்த விஷ்ணுதான் ராமன் என்பது பண்டைய கதை என்பது உனக்குத் தெரியாதா என்கிறார்.

அப்பர் ஆலவாய் அழகனை “வேதியா வேதகீதா” என்று அழைக்கிறார்.

சம்பந்தர் தன் தேவாரத்தில் இவ்வாறு சொல்கிறார்:

“மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
   வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
   பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகன்நால்
   வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த
   ஆலவா யாவது மிதுவே.”

நால் வேதங்களையும் அவற்றின் பொருட்களையும் அருளியவன் அமர்வது மதுரை என்கிறார் அவர்.

மதுரையில் சங்கங்கள் இருந்தன என்று  நமக்கு அறிவித்த இறையனார் அகப்பொருள் உரையின் முதல் சூத்திரம் இவ்வாறு தொடங்குகிறது:

 “அன்பின் ஐந்திணைக் களவெனப் படுவது
அந்தணர் அருமறை மன்றல் எட்டினுள்
கந்தருவ வழக்கம் என்மனார் புலவர்”…

பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம் இவ்வாறு சொல்கிறது:

“மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்கள் எங்கும் பரவுக வறங்க ளின்ப 
நல்குக வுயிர்கட் கெல்லா நான்மறைச் சைவ மோங்கிப் 
புல்குக வுலக மெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க!” 

எனவே மதுரையின் வரலாறு இந்தியப் பண்பாட்டோடு இணைந்து இருந்தது என்பது வெளிப்படை. சமஸ்கிருத வெறுப்போ, அல்லது வேதங்களை ஒதுக்குவதோ தமிழ் மண்ணில் இருந்ததில்லை.

இந்தியப் பண்பாடு, இந்துப் பண்பாடு மட்டுமன்று என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் இருந்த எல்லாப் பண்பாடுகளும் இந்தியா முழுவதும் இயங்கியவை.  ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தன்மை இருந்தது என்பது உண்மை. ஆனால் அத்தன்மை இந்திய கலாச்சார ஒற்றுமை என்ற அடித்தளத்தைச் சிதைத்து விடவில்லை என்பதும் உண்மை. 

கம்யூனிஸ்டுகள் பெரியாரின் அடியாட்களைப் போலச் செயல்படுவதை விடக் கீழ்மை ஏதும் இருக்க முடியாது.

.

குறிப்பு:

திரு. பி.ஏ.கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவு இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.

$$$

Leave a comment