-முரளி சீதாராமன்
டி.எம்.கிருஷ்ணா விவகாரம் இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் வழக்கம் போல ஈவெரா ஆதரவு நிலைப்பாட்டுடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது ஒன்றே போதுமே, டி.எம்.கிருஷ்ணாவின் யோக்கியதைக்கு சான்று வழங்க! இதோ, சேலம் அன்பர் திரு. முரளி சீதாராமனின் விளக்கம்...

“டி.எம்.கிருஷ்ணாவிடம் காணப்படுவது கலைஞர்களுக்கே உரித்தான கர்வம்தானே!”- என்று ஒரு நண்பர் பதிவிட்டிருந்தார். அவருக்கு எனது பதில்:-
பிரச்னை அவரது கர்வமல்ல! வித்யா கர்வம் என்பதை பாரதி ‘ஞானச் செருக்கு‘”’ என்பான். அதை நல்லது என்பான் பாரதி!
‘திமிர்ந்த நல் ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்!’- என்பான் பாரதி.
ஆனால் டி.எம்.கிருஷ்ணாவிடம் காணப்படுவது ஞான வக்ரம்.
ஈவேரா – கடைந்தெடுத்த நாத்திகர்; கடவுளை நம்புபவன் முட்டாள் – பரப்புபவன் அயோக்யன் – வணங்குபவன் காட்டுமிராண்டி என்றவர். (அது அவரது கருத்துரிமையாகவே இருக்கட்டும்!)
ஆனால் அவரைக் கொண்டாடிவிட்டு – “சிந்திக்கச் சொன்னவர் பெரியார்“- என்று ராகம் நீட்டி முழக்கிவிட்டு…
ராமர் படத்தை செருப்பால் அடித்து ஊர்வலம் நடத்தியவரைப் புகழ்ந்து கொண்டாடிவிட்டு….
“தெலியலேது ராமா பக்தி மார்க்கமு!” ,“ராமா நீ சமானம் எவரு?”வும் ஒரே ஆள் எப்படிப் பாட முடியும்?
“ஏசு நாதரால் மூன்று ஆணியைப் பிடுங்கி எறிந்து வெளியே வர முடியவில்லை – இவரா உங்களை ரட்சிப்பார்?”- என்று நாத்திகவாதம் பேசும் ஒருவரை எந்த கிறிஸ்தவனாவது புகழ்வானா?
சரி அந்தப் ‘பகுத்தறிவு’ கிறிஸ்தவன் – பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் போன்ற ஒரு நாத்திகரை – “நான் ஏன் கிறிஸ்தவன் இல்லை?”- புத்தகத்தை – அது பரப்பும் சிந்தனையைப் புகழ்ந்துவிட்டு…
பிறகு சர்ச்சுக்கும் போய் ‘காயரில்’ தேவகீதம் பாட முடியுமா? விடுவார்களா?
ஷேக் சின்ன மௌலானா இஸ்லாமியர் – மிகச் சிறந்த நாதஸ்வர வித்வான்களில் ஒருவர்! அவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கே ஆஸ்தான வித்வான்! எவராவது எதிர்த்தார்களா, இல்லையே?
காரணம் ஷேக் சின்ன மௌலானா நாத்திகர் இல்லை – ஈவேரா போன்ற ஹிந்து விரோதியைக் கொண்டாடியவர் இல்லை!
கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் ‘ஹரிவராசனம்’ தான் கோடிக் கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு தாரக மந்திரம்! ஜேசுதாசை அசூசையோடு பார்த்தார்களா எவராவது? இல்லை! காரணம் ஜேசுதாஸ் தன்னை முற்போக்கு – நாத்திகம் என்றெல்லாம் பறைசாற்றியதில்லை! ஈவேராவை – ஹிந்து நம்பிக்கைகளை மட்டும் சாடிய போலிப் புரட்சிக்காரரை – தோள்மீது சுமந்து ஜேசுதாஸ் திரியவில்லை.
டி.எம்.கிருஷ்ணாவிடம் காணப்படுவது ஞானச் செருக்கல்ல – ஞான வக்ரம்.
$$$