-ஆசிரியர் குழு
கர்நாடக சங்கீத கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‛சங்கீத கலாநிதி’ விருது வழங்குவதற்கு இசைக் கலைஞர்கள் உட்பட பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என உறுதியுடன் அறிவித்துள்ளனர்.
சென்னையைக் சேர்ந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா; மகசேசே விருது பெற்றவர். இந்திய அளவில் பிரபலமான டி.டி.கே. தொழில் குழுமத்தைச் சேர்ந்தவர்; மறைந்த மத்திய நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணாமாச்சாரியின் குடும்பத்தைச் சார்ந்தவர்.

இவர் கர்நாடக இசைக் கலைஞர்களை அவதூறாகப் பேசுவது வழக்கம். ஹிந்து சமய நம்பிக்கைகளை மனம் போனபடி விமர்சிப்பதிலும், கர்நாடக இசைக் கீர்த்தனைகளை மனம் போனபடிப் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வந்தார். பிராமணர்களுக்குள் தன்னை முற்போக்காகக் காட்டிக் கொள்வதற்காக, ஈ.வெ.ராமசாமியைப் புகழ்ந்து மேடையில் பாடுவது இவரது வழக்கம். ஆன்மிக நம்பிக்கைகளை இழிவு செய்வதிலும், மார்க்சிய அரசியல் கண்ணோட்டத்தில் பாரம்பரிய கர்நாடக இசையை விமர்சிப்பதிலும் இவருக்கு விருப்பம் அதிகம். மது அருந்தியபடி பாடுவது, லுங்கி அணிந்துகொண்டு மேடையில் பாடுவது, பாடுகையில் அநாகரிக கொனஷ்டைகள் செய்வது ஆகியவையும் இவர் மீதான குற்றச்சாட்டுகள். எனவே, இவருக்கு கர்நாடக இசைத் துறையில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ‛ சங்கீத கலாநிதி’ விருதுக்கு இந்த ஆண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார். எனவே, இந்த ஆண்டு நடைபெறும் மியூசிக் அகாடமியின் 98வது ஆண்டு கூட்டத்திற்கு டி.எம்.கிருஷ்ணா தலைமை தாங்குவார். இவருக்கு விருது அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும், தான்தோன்றித்தனமாக மியூஸிக் அகாடமி செயல்படுவதாகவும் விமர்சனங்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு கர்நாடக இசைக்கலைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுவரை இல்லாத வகையில் இசைக்கலைஞர்கள் பலரும் துணிவுடன் முன்வந்து, ‘இந்த ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்’ என்று அறிவித்துள்ளனர். வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி, ஹரிகதா சொற்பொழிவாளர்கள் துஷ்யந்த் ஸ்ரீதர், விசாகா ஹரி, பாடகர்களான திருச்சூர் சகோதரர்கள் (கிருஷ்ண மோகன், ராம்குமார் மோகன்), சித்திரவீணைக் கலைஞர் ரவிகிரண், பாலக்காடு மணி ஐயர் குடும்பம், பெங்களூர் மிருதங்க இசைக் கலைஞர் அர்ஜுன் குமார் ஆகியோர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இப்பட்டியலில் மேலும் பலர் இணைந்து வருகின்றனர்.
சித்ரவீணை ரவிகிரண், பாலக்காடு மணி ஐயர் குடும்பத்தினர் (டி.ஆர்.ராஜாமணி), தாங்கள் பெற்ற ‘சங்கீத கலாநிதி’ விருதை திருப்பித் தரப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக இசைக் கலைஞர்களின் வேதனை மிகுந்த கண்டனங்கள் இதோ…
ரஞ்சனி – காயத்ரி:

பிரபல இசைக்கலைஞர்களான ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‛‛மியூசிக் அகாடமியின் 2024ஆம் ஆண்டு கூட்டத்திலும், டிச. 25 இல் நடக்கும் இசை நிகழ்ச்சியிலும் இருந்து விலகிக் கொள்கிறோம். டி.எம்.கிருஷ்ணா தலைமையில் கூட்டம் நடப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர் கர்நாடக இசைக்கலைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவதுடன், வேண்டுமென்றே இசை சமூகத்தின் உணர்வுகளை மிதித்து வருகிறார். மரியாதைக்குரிய ஆளுமைகளான தியாகராஜர், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரை அவமதித்தவர் அவர். கர்நாடக இசைக்கலைஞராக இருப்பது அவமானத்திற்குரியது என்ற உணர்வைப் பரப்ப முயன்றார். இசையில் ஆன்மிகத்தை இழிவுபடுத்தும் வகையிலும் பேசி வருகிறார்.
ஈ.வெ.ரா. போன்ற ஒருவரை டி.எம்.கிருஷ்ணா புகழ்ந்ததை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது. ஈ.வெ.ரா. பிராமணர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என வெளிப்படையாகப் பிரகடனம் செய்தவர். இச்சமூகத்தின் ஒவ்வொரு பெண்ணையும் பலமுறை கேவலமான மற்றும் தகாத வார்த்தைகளால் பேசியவர்.
கலை மற்றும் கலைஞர்கள், ரசிகர்கள், நிறுவனங்கள், வேர்கள் மற்றும் கலாசாரத்தை மதிக்கும் ஒரு மதிப்பிற்குரிய அமைப்பை நாங்கள் நம்புகிறோம். இதனைப் புறக்கணித்துவிட்டு இந்த ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டால், அது நாங்கள் கொண்ட நம்பிக்கையைக் கொச்சைப்படுத்துவது ஆகும்”.- இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

$$$
விசாகா ஹரி:

விசாகா ஹரி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:
“கடவுள் அருளால், ‛உங்கள் தொழிலில் கவனம் செலுத்துங்கள். உங்கள் முக்கிய மதிப்பீடுகள் மற்றும் கொள்கைகளில் உறுதியுடன் இருக்க வேண்டும்” என்ற கொள்கையைப் பின்பற்றி வருகிறேன். ஆனால், சமீப காலங்களில் எனது கொள்கைகள் சில செயல்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளதால், இந்த முறை எனது கொள்கையில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.
இந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருதுக்குத் தேர்வானவர், முன்னர் நிறைய சர்ச்சைகளுக்கு உள்ளானவர். பலரின் உணர்வுகளை வேண்டுமென்றே பெரிதும் புண்படுத்தி உள்ளார். அவர் பல ஆண்டுகளாக மியூசிக் அகாடமியில் வழக்கமான உறுப்பினராக இல்லை. தியாகராஜர், முத்துசாமி முக்கியமானது என்ற நம்பியதைப் போல நானும் நம்புகிறேன்.
மியூசிக் அகாடமியின் இந்த முடிவை, மறைந்த சங்கீத கலாநிதிகளான அரியக்குடி, செம்மங்குடி, பாலக்காடு மணி ஐயர் ஆகியோர் இன்று உயிருடன் இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா? அவர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? தற்போது இருக்கும் சங்கீத கலாநிதிகள் கூட இந்த முடிவை ஏற்பார்களா?” எனக் கூறியுள்ளார்.
Vishakha Hari
By Guru's grace, I have been following the principle of " Mind your own business and stick to your core values and principles". But this time I have decided to move away from that stance as my core values are threatened by certain actions in the recent past.
This year's Sangeetha Kalanidhi designate awardee has engaged in a lot of slandering previously, hurting the sentiments of many tremendously and willfully.
He has not been a regular performer in the institution for years, either.
I (as many others) believe that values and virtues are as important as the music - as what Sri Thyagaraja, Sri Muthuswamy Dikshithar, Syama Sastri-- our beloved Music Trinity also believed and lived by. This whole journey of Nadopasana is intended towards divinity.
I wonder if the late Sangeetha Kalanidhis like Ariyakkudi or Semmangudi or Palghat Mani Iyer would accept this decision if alive today.What would their stance be? Also, would even the present Sangeetha Kalanidhis accept this decision? Awards may come and go. But setting the right role models for posterity is what is important.
-Smt.Vishakha Hari
$$$
திருச்சூர் சகோதரர்கள் (கிருஷ்ண மோகன், ராம்குமார் மோகன்):

இதுதொடர்பாக, திருச்சூர் சகோதரர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னை மியூசிக் அகாடமியின் 2024ஆம் ஆண்டுக் கூட்டத்தில் இருந்து வெளியேறுகிறோம். எங்களது நிகழ்ச்சி டிச. 19இல் நடைபெற இருந்தது. நமது நம்பிக்கைகள் மற்றும் முக்கிய மாண்புகளுக்கு முற்றிலும் எதிரானவற்றை டி.எம்.கிருஷ்ணா பரப்புகிறார். டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்றால், எங்கள் நம்பிக்கைகள் போலித்தனமானதாக இருக்கும் – இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

$$$
துஷ்யந்த் ஸ்ரீதர்:

துஷ்யந்த் ஸ்ரீதர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“வால்மீகி, கம்பன், தேசிகர், தியாகராஜர், தீக்ஷிதர், அருணாச்சலக் கவிராயர், நம்மாழ்வார் மற்றும் மற்ற ஆச்சார்யார்களின் கண்கள் வழியாக ராமர் மற்றும் சீதையை பெருமையுடன் பார்க்கிறேன். ராமரின் பெருமைகளை உடைத்த ஈ.வெ.ரா. வின் கண்கள் வழியாக ராமரை வணங்கும் திறன் எனக்கு இல்லை. பின்னர் விருது கிடைக்கும் என அர்த்தப்படுத்தினாலும், உணர்ச்சிகள் இல்லாத ஒரு உயரடுக்குக் குழுவின் ஒரு பகுதியாக இருப்பதற்குப் பதிலாக, நான் எப்போதும் சிறுபான்மையினராக இருந்து, விருது இல்லாதவனாக இறந்துவிடுவதையே விரும்புவேன்” எனக் கூறியுள்ளார்.

***
தொடர்ந்து துஷ்யந்த் ஸ்ரீதர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ரஞ்சனி காயத்ரி ஆகியோருடன் கலந்துரையாடியதில், சநாதனத்தை மதிக்கும் இசைக்கலைஞர்களாக அவர்களைக் கண்டேன். அவர்களின் முடிவை நான் மதிக்கிறேன். அவர்களுக்குப் பாராட்டுகள்” எனக் கூறியுள்ளார். மியூசிக் அகாடமி தலைவருக்கு தனது கண்டனக் கடித்ததையும் இவர் எழுதியுள்ளார். (கீழே…)

$$$
சித்ரவீணை ரவிகிரண்:

சித்ரவீணை ரவிகிரண் வெளியிட்ட அறிக்கையில், “மியூசிக் அகாடமி வழங்கிய சங்கீத கலாநிதி விருதை திருப்பித் தர முடிவு செய்துள்ளேன். எதையும் விட கொள்கை முக்கியம் என்பதால், நன்கு பரிசீலனை செய்து இந்த முடிவை எடுத்துள்ளேன். குழந்தைப் பருவத்தில் இருந்து எனக்கு ஆதரவு அளித்த அமைப்பிற்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்” என்று கூறியுள்ளார். இவரும் தனது கண்டனத்தை மியூசிக் அகாடமி தலைவருக்கு (த ஹிண்டு – என்.முரளி) எழுதியுள்ளார். (கீழே)…

- (தினமலர் நாளிதழ் செய்தி உதவியுடன், கூடுதல் தகவல்களுடன் தொகுக்கப்பட்டது).
$$$
கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் வெளியான கருத்துகளில் இரு பதிவுகள் இங்கே...

2. ஏழு ஸ்வரங்களும் உங்களை வாழ்த்தட்டும்!
-ச.சண்முகநாதன்
நாவில் சரஸ்வதி குடி இருந்தால் மட்டுமே சங்கீதம் சிறக்கும், நா முக்கியமான ஒன்று சங்கீதத்திற்கும் வாழ்வதற்கும். நாதம் என்பதன் ஆரம்பமே ‘நா’ தானே?
அதனால்தான் தியாகராஜ சுவாமிகளும் அந்த ‘நாவிற்கு சுவை தருவது தயிரும் வெண்ணையுமா இல்லை, அந்த தாசரதி த்யான பஜனை எனும் அம்ருதமா?’ என்று பாடுகிறார்.
“ததி நவநீத க்ஷீரமுலு ருசோ?
தாஸரதி த்யான பஜன சுதா ரசமு ருசோ”
வேதம் பயின்ற ராவணன் தீமை செய்தது போல, சில சங்கீதவாதிகள் சரஸ்வதி குடி கொண்டிருக்கும் நாவைக் கொண்டு, ராமனைப் பழித்தவனைப் புகழ்ந்து பாடுவது தகுமா? கோடி முறை ராமநாமம் ஜெபித்தது தியாகராஜ சுவாமிகளின் நா. அந்த ராமனை நிந்தனை செய்து இழிவு செய்தது ஈவேரா எனும் அசிங்கம். இரண்டையும் ஒரு சங்கீதாவதி ஒரே நாவில் வைப்பது தகுமா?
‘அவர் நாக்கு அவர் உரிமை’ என்று ஒதுங்கி இருந்தாலும், மியூஸிக் அகாடெமி அவருக்கு உயரிய விருது கொடுப்பது பாம்புக்கு பால் வார்க்கும் வேலை என்பது எங்கள் கருத்து. எங்கள் கருத்து எங்கள் உரிமை.
மாற்று மதத்தில் பிறந்தாலும் ராமனையும் கிருஷ்ணனையும் உருகி உருகிப் பாடிய ஜேசுதாஸ் அவர்களுக்கு கொடுத்திருக்கலாம், சங்கீத கலாநிதியை. ஏன் இதுவரை கொடுக்கவில்லை என்று தெரியவில்லை.
பெண்களை மேடையேற்ற சில தயக்கங்கள் இருந்ததாகச் சொல்லப்படும் சங்கீத உலகதில் இருந்து இன்று இரண்டு பெண்கள் ஒரு பிரளயத்தை இப்போது தொடங்கி வைத்திருக்கிறார்கள்.
‘பாதகம் செய்வோரை கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா- மோதி மிதித்து விடு பாப்பா… அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ என்று சொன்ன பாரதி வழியில் வந்த இரண்டு பெண் ஜாம்பவான்கள் தேரோட்டிகளாக இந்த யுத்தத்தை வழி நடத்துகிறார்கள்.
இதுதான் சநாதன தர்மம். இதைத்தான் கொண்டாடுகிறோம்.
ஒரு அவச்சொல் இல்லை, ஒரு பழிச்சொல் இல்லை, ரஞ்சனி- காயத்ரியின் செய்திக்குறிப்பில். “எங்கள் தர்மம் உயர்ந்தது. அதனை இழித்துப் பேசியவரை புகழ்ந்து பாடுவது அந்த தர்மத்தைப் பழிப்பது போலவே ஆகும்”. ‘so we are staying away’ என்று தர்மயுத்தம் செய்கின்றனர்.
ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள் இந்த யுத்தத்தில் தர்ம ரதத்தின் தேரோட்டிகளாய் தேரைச் செலுத்தட்டும்.
“ஸாக்ஷாத்கார நீ ஸத்-பக்தி
ஸங்கீத ஞான விஹீனுலகு”
‘சாட்சாத்காரமே! உனது தூய பத்தி (கலந்த) இசை அறிவற்றோருக்கு முக்தி உண்டாமோ?’
அவர்களுக்கு முக்தி கிடைக்கிறதோ இல்லையோ, எனது தர்மம் என்னுடையது. அதைப் பழிப்போருடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று தெள்ளத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள் ரஞ்சனி- காயத்ரி சகோதரிகள்.
ஏழு ஸ்வரங்களும் உங்களை வாழ்த்தட்டும், சகோதரிகளே. கலைவாணி மேலும் அருள் புரியட்டும்.
$$$

3. நியாயவான்கள் மட்டும் கல்லெறியுங்கள்!
-ஹரன் பிரசன்னா
ஈவெராவை டி.எம்.கிருஷ்ணா ஆதரிக்கிறார் என்பதற்காக அவருக்குத் தரப்பட்ட விருதை எதிர்க்கக் கூடாது என்று, அறம் பேசத் தொடங்கி இருக்கிறார்கள் கம்யூனிஸ்டுகளும் மற்ற உடன்பிறப்பு அரசியல்வாதிகளும். இவர்களுக்கு இதைச் சொல்ல ஏதாவது தகுதி இருக்கிறதா?
ஈவெரா பெயரில் வழங்கப்படும் ஒரு விருது ஈவெராவைத் தினம் தினம் விரட்டியடிக்கும் ஒருவருக்கு ஒருவேளை தரப்பட்டால், அவரது திறமைக்காக மட்டும் அது தரப்பட்டது என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அல்லது அப்படி ஒரு விருதை யாராவது தருவார்களா? இதுவரை அப்படி ஒன்று நிகழ்ந்திருக்கிறதா?
அவ்வளவு ஏன்? அரசுப் பெயரில் தரப்படும் விருதுகள்கூட அந்தந்த அரசு எந்த நிலைப்பாட்டில் உள்ளதோ அப்படித்தானே தரப்படுகிறது? அதை எதிர்த்து இவர்கள் ஏதேனும் பேசி இருக்கிறார்களா?
தங்கள் ஆதரவாளர்களுக்கு விருது தரப்படும்போது அதை ஏற்பதும் எதிர்த்தரப்புக்காரர்களுக்கு விருது தரப்படும்போது அதை எதிர்ப்பதும்தான் நம் ‘நேர்மையான’ சமுதாய மரபு! இப்போது மட்டும் என்ன ஓவர் வீராவேசம்?
அவ்வளவு ஏன்? எதிர்க்கருத்து உள்ள ஒருவரின் போஸ்ட்டையாவது இவர்கள் பாராட்டியிருக்கிறார்களா? இவர்களுக்கெல்லாம் கூச்ச நாச்சமே இல்லையா?
ஈவெராவைத் தினந்தினம் பாராட்டி ஹிந்துக்களையும் பிராமணர்களையும் திட்டும் ஒருவருக்கு விருது தரப்பட்டால், அதை எதிர்ப்பவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். உடனே உங்கள் நியாயச் சொம்பைக் கொண்டு வராதீர்கள். ஏனென்றால் நீங்களே சாதிய வெறுப்பில் ஊறியவர்கள்தான். அதனால்தான் பேசுபவர் என்ன ஜாதி என்று பார்த்து, எத்தனை ஆணவம் என்று நீங்கள் ஆரம்பிக்கிறீர்கள்.
நியாயவான்கள் மட்டும் கல்லெறியுங்கள்.
$$$