ஆத்ம ஞான ரத்தினமும் சில சிந்தனைகளும்…

-திருநின்றவூர் ரவிகுமார்

நல்ல நூல்கள் மறுபதிப்பு காண்பது அரிதாகி விட்டது. அப்படியொரு அரிதான நிகழ்வு மேற்கண்ட நூலின் மறு பதிப்பு   ‘ஆத்மஞானரத்தினம்’- என்ற இந்நூல்.

சுப்பிரமணிய சிவா பாரத தேச விடுதலைக்காகப் பாடுபட்ட போராளி. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு வலதுகரமாகச் செயல்பட்டவர். இருவரும் இணைந்து மக்களிடையே ஏற்படுத்திய விடுதலைத் தீயின் எழுச்சியைக் கண்டு ஆங்கில அரசு பயந்தது. அவர்களை சிறையில் இட்டது; சிறையில் கொடுமைப் படுத்தியது. சிறையில் மாடுகளுக்கு பதிலாக செக்கிழுக்க வைக்கப்பட்டார் வ.உ.சிதம்பரம் பிள்ளை. அதனால் பின்னாளில் அவரை  ‘செக்கிழுத்த செம்மல்’ என்று உலகம் போற்றியது.

சுப்பிரமணிய சிவாவை சிறையில் கொடுமைப்படுத்தியதுடன், திட்டமிட்டு தொழுநோய்க்கு உள்ளாக்கியது ஆங்கிலேய ஆதிக்க அரசு. பொதுப் போக்குவரத்தை அவர் பயன்படுத்த முடியாதபடி ஆக்கியது ஆதிக்க அரசு. இருந்தாலும் அவர் மனம் தளராமல் மாட்டு வண்டியில் பயணித்து தேசிய எழுச்சியை ஏற்படுத்தினார். அதனால் அவரை மீண்டும் சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு என்று வரலாறு பதிவு செய்துள்ளது.

விவேகானந்தரும் விடுதலையும்

இத்தனை கஷ்டங்களையும் ஏற்றுக் கொண்டு அவர் தேச விடுதலைக்கு போராட ஊக்கம் அளித்தது எது? என்ற கேள்வி எழுவது இயற்கை.

அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டில் ஆன்மிகப் பேரொளியை ஏற்றியவர் சுவாமி விவேகானந்தர். அவர் கூறிய ஹிந்து ஆன்மிகத்தின் அடிநாதம் விடுதலை.

விடுதலை என்ற வார்த்தை, அடிமைப்பட்டிருந்த நாட்டு இளைஞர்களுக்கு  ‘தேச விடுதலை’ என்று பொருள்பட்டது.  ‘மதத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை’ என்று மேலை நாட்டினருக்கு அர்த்தமானது. ‘பந்தங்களிலிருந்து விடுதலை’ என்று பொருளானது துறவிகளுக்கு. இப்படி பலருக்கும் அவரவர் நிலைக்கு ஏற்ப விவேகானந்த கீதை விளங்கியது;  வாழ்வியலில் வழிகாட்டியது.

பாரத நாட்டில் தீவிர தேச பக்தியுடன், ஆயுதமேந்தி அன்னிய ஆங்கிலேய ஆட்சியை அகற்றப் போராடிய, வீரமுள்ள இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் வாய்மொழி வேதமானது.

பலரும் அவரை ஆழ்ந்து கற்றார்கள். விடுதலைப் போராளியானார்கள். அவர்களில் ஒருவர்  ‘வீர முரசு’ சுப்பிரமணிய சிவா. சுப்பிரமணிய சிவா சுவாமி விவேகானந்தரில் ஆழ்ந்தவர் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன, அவர் பின்னாளில் எழுதிய நூல்கள். அதில் ஒன்று இந்த நூல்.

அவர் சுவாமி விவேகானந்தரை ஆழ்ந்து கற்றவர் மட்டுமல்ல, அதன்படி வாழ்ந்தவர் என்பதை அவரது வாழ்க்கை சரிதம் வெளிப்படுத்துகிறது. இதைதான் சுவாமிஜி ‘நடைமுறையில் வேதாந்தம்’ என்று கூறினார்.

இந்நூலில்…

அன்றாட வாழ்வில் நமக்கு வழிகாட்டக் கூடிய, துணை நிற்கக்கூடிய வகையில், சின்ன சின்னதாக சுவாமிஜியின் 1004 உபதேச மொழிகளைத் தேர்ந்தெடுத்து, தொகுத்து வெளியிட்டுள்ளார் சுப்பிரமணிய சிவா. நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1922இல் இந்த நூலைப் பிரசுரித்தவர் சை.ந.பாலசுந்தரம் என்பவர். ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புஸ்தகசாலை, பார்க் டவுன்,  சென்னையில் அச்சிடப்பட்டு வெளியாகி உள்ளது.

இந்நூலைப் பற்றி சிவா

1922இல் வெளியான இந்த நூலின் முகவுரையில்,  

‘ஆத்ம ஞானத்தைத் தவிர வேறு ஞானம் இல்லை என்பதே என்னுடைய சித்தாந்தம்….’,

‘ஆத்ம ஞானமே பேத ஞானமாக விளங்குகிறது. உலக அறிவுக்கும் ஆத்ம ஞானமே காரணமாகும். ஆதலால், ஸ்வாமிகளுடைய  கூற்றுக்களிலே, ஆத்ம ஞானத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. ஆகையினால் அவர் பேசியது எல்லாம் ஆத்ம ஞானமே. பல வகைப்பட்ட பார்வையை உடைய உலகினர்களுக்கு அவருடைய கூற்றுக்களில் சில பலவிதமாய் விளங்கலாம். அது அவர்களுடைய பார்வையினாலேயே ஒழிய வேறில்லை….’,

‘திண்ணை வேதாந்தம் பேசி, சோம்பேறி மடங்களிலே காலம் கழிக்கும் காலம் போய்விட்டது; வேதாந்தமானது நம்முடைய தினசரி அனுபவத்திலே கொண்டு வரப்பட வேண்டிய காலம் இது. அதனால்தான் நமது தேசம் மேன்மையடையும்….’  

-என்றெல்லாம், திருவல்லிக்கேணி, 20.6.1922 தேதியிட்ட முகவுரையில் சுப்பிரமணிய சிவா உறுதிப்படத் தெரிவிக்கிறார்.

வெளியீட்டாளருக்கு ஏற்பட்ட சிக்கல்

இந்த நூலை மீள்பதிவு செய்ய ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தார் அந்த பழைய வெளியீட்டாளரிடம் நன்றி கூறவும் அவரது மற்ற நூல்களைப் பெறவும் நினைத்தபோது, அந்த வெளியீட்டகமும் இல்லை, அப்படி ஒன்று இருந்ததாக அந்தப் பகுதியில் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. எனவே  ‘இந்த நூலை முதலில் அச்சிட்டு வெளியிட்டவர்களுக்கு பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அருள் விளங்குவதாக. இந்த அரிய நூல் எங்களுக்குக் கிடைத்ததை இறைவனின் திருவருள் என்றே கூற வேண்டும்’ என்று சொல்லி வெளியிட்டுள்ளார்கள்.

இந்த நூலில் சுப்பிரமணிய சிவா எழுதிய நூல்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்கள். அதில் ஸ்ரீ விவேகானந்த ஸ்வாமிகளின் திவ்ய சரித்திரம் (2 பாகங்கள்) என்ற நூலும் அடக்கம். இரண்டு பாகங்களைக் கொண்ட அந்த நூல் 1923இல் வெளியானதாகத் தெரிகிறது. அதில் முதல் பாகம் மட்டுமே கிடைத்து, அது 1997 தஞ்சாவூர் ராமகிருஷ்ண விவேகானந்த சமிதி சார்பாக வெளியிடப்பட்டுள்ளது என்ற தகவலும், இந்த நூலின் பதிப்புரையில் முறையில் கிடைக்கப் பெறுகிறது.

இந்த நூலின் பதிப்புரையில் சுப்பிரமணிய சிவாவின் வாழ்க்கையையும் விடுதலைப் போராட்டத்தில், இலக்கியப் பணியில், அவரது பங்களிப்புப் பற்றியும் சுருக்கமான வடிவில் கொடுத்திருக்கிறார்கள். அதில் அவரது  ‘மொழிநடை’ என்ற குறிப்பு ஆவலை தூண்டுவதாக உள்ளது.

சிவாவின் மொழிப் பற்று

சுப்பிரமணிய சிவா நாட்டுப்பற்று கொண்டவர் மட்டுமல்ல, தாய்மொழியாம் தமிழ் மொழியின் மீதும் பற்றுக் கொண்டவர். ஆங்கிலேய ஆட்சி நமது சமுதாயத்தின் மீது ஆதிக்கம் செய்வது வெளிப்படையாகத் தெரிகிறது. அவர்களது மொழியான ஆங்கிலம் நம் பண்பாட்டைச் சிதைக்கிறது. எனவே ஆங்கில மொழியை அன்றாட  வாழ்வில் தவிர்க்க வேண்டும் என்று அவர் கருதினார்.

தெய்வத் தமிழையும் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் திருக்குறளையும் அவர் முன்னிறுத்தினார். அது பற்றியதொரு சுவாரஸ்யமான குறிப்பு அவரது எழுத்தில் கிடைக்கிறது. (இந்த நூலில் அல்ல. வேறு ஒரு நூலில் உள்ளது).

அவரது பிராமண நண்பரொருவர் (ஜாதியை வலியுறுத்திக் குறிப்பிட்டு எழுதி உள்ளார் சிவா) இவர் திருக்குறளைப் பற்றிப் பேசுவதையும் மேற்கோள் காட்டுவதையும் கேலி பேசி உள்ளார். அதே நண்பர் அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு சந்திக்கும்போது இவரிடம் திருக்குறளைப் பற்றி பாராட்டி பேசி உள்ளார்.

காரணத்தை விசாரித்திருக்கிறார் சிவா. யாரோ ஒரு ஆங்கிலேயன் தன் கட்டுரையில் திருக்குறளைப் பாராட்டி இருப்பதைப் படித்துவிட்டு, அதனால் தான், தன் நண்பரும் திருக்குறளைப் பாராட்டி உள்ளார் என்று தெரிந்து கொண்டார். இதை சுட்டிக்காட்டி, ஆங்கில மோகம் எப்படி நம் மக்களைப் பிடித்தாட்டுகிறது என்றும், நம்மைப் பற்றிக் கூட வெள்ளையர் சொன்னால்தான் ஏற்றுக்கொள்ளும் நிலையில் நம்மைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை குறித்தும், ஆங்கிலம் மற்றும் ஆங்கிலேயர் பற்றிய மோகத்தைக் குறித்தும் அருவருப்புடன் சுட்டிக்காட்டி எழுதியுள்ளார்.

சிவா தூய தமிழ் இயக்க போராளியா?

சுப்பிரமணிய சிவா வாழ்ந்த காலத்தில் தான் வேதாச்சலம் முதலியார்  தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்தார். தன் பெயரைக் கூட  ‘மறைமலை அடிகள்’ என்று மாற்றிக் கொண்டார்.

கைர்வி கிரேவால் என்ற பெண்மணி அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலையில், க்ரைம் லேப் பிரிவில் மேலாளராக உள்ளார். அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுக்க ஆரம்பிக்கப்பட்டது அந்தப் பிரிவு. அதே பல்கலை.யில் குடிமைக் கருத்தியல் (Public Policy) முதுகலை பட்டம் பெற்றவர். இந்திய பத்திரிகைகளில் கட்டுரை எழுதுபவர். அவர்  ‘பிரின்ட்’ என்ற ஆங்கில மின்னிதழில் 2019 ஜூலை 23 சுப்பிரமணிய சிவா பற்றி ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

கைர்வி கிரேவால்

அதில், மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்தை சுப்பிரமணிய சிவா தீவிரமாக ஆதரித்தார். குறிப்பாக சமஸ்கிருதம் கலவாத தனித்தமிழ் மொழியை வலியுறுத்தினார். தான் (சுப்பிரமணிய சிவா) நடத்திய  ‘ஞானபானு’ பத்திரிகையில் 1915 நவம்பர் மாத இதழில் எழுதிய கட்டுரையில்  ‘உங்கள் நாக்கு தமிழை மட்டுமே பேசட்டும். உங்கள் பேனா முனை தமிழை மட்டுமே எழுதட்டும். உங்கள் மனதின் மொழியாக தமிழ் மட்டுமே இருக்கட்டும். தமிழணங்கின் அருள் உங்களை காக்கட்டும்’ என்று எழுதியுள்ளதாக, கிரேவால்  குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அந்த அம்மையார் நிற்கவில்லை. அடுத்த வந்த பாராக்களில்,  ‘ஞானபானு’வில் அவர் ஒரு விளம்பரம் எழுதியுள்ளார். அது அவரது தூய தனி தமிழ் மீதான பற்றை விளக்குகிறது, என்று சொல்லியதுடன் அதையும் எழுதி உள்ளார்.

ஐந்து ரூபாய்’

“உங்களால் தூய தமிழில் எழுத முடியுமா? அப்படியானால் உடனே விரைக. திருவள்ளுவரைப் பற்றி எட்டுப் பக்கங்களுக்கு குறையாமல் தூய தமிழில், சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகள் கலவாமல், நமது ஞானபாநு   பத்திரிகைக்கு எழுதுவோருக்கு ஒரு தமிழன்பர் ஐந்து ரூபாய் (பரிசாக)  கொடுக்க முன்வந்துள்ளார்” -என்று குறிப்பிட்டுள்ளதுடன் கட்டுரையில் பல இடங்களில் தூய தமிழ் என்பதை மேற்கோள் குறியீட்டு அழுத்தமாக எழுதி உள்ளார்.

அமெரிக்கா, சிகாகோவில் நடந்த மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆங்கிலத்தில் பேசினார். ஆனால் அவர் பன்மொழி வித்தகர். அதே வேளையில், பாரதீயர்கள் தங்கள் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும், தாய்மொழியில்தான் கல்வி கற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தேசியத் தொடர்பு மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்ற அவரது கருத்தையே அண்ணல் அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் எதிரொலித்ததை அனைவரும் அறிவர்.

விவேகானந்தத்தில் ஆழ்ந்தவரான சுப்பிரமணிய சிவா அதே கருத்தைத் தான் கொண்டிருந்தார். அது மட்டுமன்றி, இன்றும் ஆட்டோ, பஸ், லாரி, ஷூ, செப்பல் என்று ஆங்கிலம் மக்களிடையே பரவி பயன்பாட்டில் இருப்பதைப் போல அன்று சமஸ்கிருதம் தமிழ் மொழியில் கலந்து இருந்தது.

மறைமலை அடிகளார் தமிழில் கலந்துள்ள பிற மொழி சொற்களைக் களைந்து தமிழைத் தூயதாக்கும் முயற்சியில் உருது, ஆங்கிலம், தெலுங்கு மொழிகளுடன் சமஸ்கிருத மொழிச் சொற்களையும் விலக்க வேண்டும் என்றார். ஆனால் சுப்பிரமணிய சிவா அப்படி இல்லை.

அவர் ஆங்கிலத்தைத் தவிர்த்து விட்டு தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்றாரே தவிர, தமிழில் பயன்பாட்டில் உள்ள வடமொழிச் சொற்களை நீக்க விரும்பவில்லை. மாறாக அவரது எழுத்தில் வடச்சொற்கள் விரைவி இருந்தன. இதை அவரது கட்டுரையைப் படிக்கும் எவரும் காணலாம்.

இந்நிலையில் கிரேவால் எழுதி ‘பிரின்ட்’ மின்னிதழில் வெளியான கட்டுரையில் சுப்பிரமணிய சிவா தூய தமிழ் இயக்க ஆதரவாளர் என்றும் குறிப்பாக சமஸ்கிருத சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்றார் என்றும் குறிப்பிட்டுள்ளது வியப்பளிக்கிறது.

தவறும் அதன் தொடர்ச்சியும்

கிரேவால் அமெரிக்க பல்கலையில் படித்தவர். அங்கு பணி புரிபவர். ஆங்கிலத்தில் எழுதுபவர் என்பதால் அவரது வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டு (ஆங்கில) விக்கிபீடியா சுப்பிரமணிய சிவா  ‘தனித்தமிழ் இயக்க போராளி’ என்று பதிவிட்டுள்ளது.

அதன் விளைவாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நான்காம் நாள் (தமிழ்) ஹிந்துஸ்தான் டைம்ஸ் மின்னிதழில் மணிகண்டன் என்பவர்,  ‘இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் எழுத்தாளரும் தூய தமிழ் இயக்க போராளியுமான சுப்பிரமணிய சிவாவின் பிறந்தநாள் இன்று’ என்ற தலைப்பிலே  ஒரு சிறு கட்டுரை எழுதியுள்ளார்.

இப்பொழுது ஆங்கிலத்தில் உள்ள இந்தப் போக்கு விரைவில் தமிழிலும் வரக்கூடும். இந்த விஷமம், இதுவரை தனித் தமிழ் தேசியவாதிகள் கண்ணில் படவில்லையா அல்லது சிவா பிராமணர் என்பதால் விட்டுவிட்டார்களா அல்லது பொய் எடுபடாது என்று முயற்சிக்கவில்லையா என்பது தெரியவில்லை.

பரிதிமாற் கலைஞர் தூயதமிழ்வாதியா?

சூரிய நாராயண சாஸ்திரி என்ற பிராமணர் தமிழ் மொழி மீது கொண்ட பற்றினால்  ‘பரிதிமாற் கலைஞர்’ என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார் என்றொரு கருத்து வலிமையாக முன்னிறுத்தப் படுகிறது. இது உண்மைதானா?

ஆங்கிலத்தில் ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி பதினான்கு அடிகளை கொண்ட பாடல் வகை  ‘சானட்’ எனப்படுகிறது. இவ்வகைப் பாடல்களை ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் இருந்து தமிழ்ப்படுத்தி எழுதினார் சாஸ்திரியார். இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம் இருந்தது அவருக்கு. சோதனை முயற்சியில் தன் பெயர் கெட்டுவிடக் கூடாது எனக் கருதிய அவர் அதை  ‘பரிதிமாற் கலைஞர்’ என்ற புனைப் பெயரில் வெளியிட்டார். இந்த வகை பாடல்களைத் தவிர மற்ற கட்டுரைகளை எல்லாம் அவர் சூரிய நாராயண சாஸ்திரி என்ற பெயரிலேயே எழுதினார்.

1897இல்  ‘ஞானபோதினி’ என்ற பத்திரிகையில் இது வெளிவந்த போது புனைப்பெயரில் எழுதிய சாஸ்திரியார் அதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தி உள்ளார். அது மட்டுமின்றி,  அதே காலகட்டத்தில் வேறு பத்திரிகைகளில் எழுதும் போது அவர் தன் சொந்தப் பெயரையே பயன்படுத்தி உள்ளார்.

பின்னாளில், இந்த சானட் வகை பாடல்களைத் தொகுத்து  ‘தனிப்பாசுரத் தொகை’ என்ற நூலாக 1901 இல் வெளியிட்ட போது, புனைப்பெயரில் இல்லாமல்  ‘சூரிய நாராயண சாஸ்திரி’ என்ற பெயரிலேயே வெளியிட்டுள்ளார். இந்த நூல் தவிர வேறு எங்கும் இந்தப் பெயரை சாஸ்திரியார் பயன்படுத்தவில்லை.

தூய தமிழ் பற்றி சாஸ்திரியாரின் கருத்து

அதுமட்டுமன்றி, அவர் இறப்பதற்கு முன் வெளியிட்ட  ‘தமிழ் மொழி வரலாறு’ என்ற நூல் முழுவதிலும் வடமொழிச் சொற்கள் விரைவி இருப்பதுடன்  ‘பாஷையின் சீர்திருத்தம்’ என்ற தலைப்பிட்ட கட்டுரையில் அவர்,  “சொற்கள் ஆங்கில பாஷையிற் புகுதலும் ஆங்கிலச் சொற்கள் தமிழ் பாஷையிற் புகுதலும் இயற்கையே. இதைத் தடுக்க முடியாது. தடுக்கப் புகுதலும் தக்கதன்றாம். ஆங்கிலச் சொற்களை திசை சொற்களென மேற்கொள்வதில் யாது தடையோ? இவ்வாறு செய்தலே அறிவுடையோர் செயலாம்”  என்று தன் மொழிக் கொள்கையை பதிவு செய்துள்ளார்.

இதை ஜே.சுடர்விழி என்பவரை மேற்கோள் காட்டி தமிழ் விக்கி என்ற இணைய கலைக்களஞ்சியம் பதிவு செய்துள்ளது. பேராசிரியர் கல்யாண ராமன் இதை மறுக்கிறார் என்றொரு வரியும் அந்த பதிவில் உள்ளது.

திப்புரையில் இருப்பது

இப்படிப்பட்ட சர்ச்சை இருப்பது தெரிந்து தானோ என்னவோ, இந்த – ஆத்ம ஞான ரத்தினம் – நூலின் பதிப்புரையில்,  ‘சிவாவின் மொழிநடையைப் பற்றி இங்கு கூற வேண்டும். அவரின் மொழிநடை பழைய தமிழும் சமஸ்கிருதமும் கலந்த நடையாக உள்ளது. அதுவே அவரது நடைக்கு அழகும் சேர்க்கிறது. சுவாமிஜியின் கருத்துக்களுக்கு எந்த விதத்திலும் மாறுபடாமல் அழகாக மொழிபெயர்த்துள்ளார். எனவே அவரது மொழி நடையை மாற்றாமல் வெளியிடுகிறோம்’  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவாவும் நடைமுறையில் வேதாந்தமும்

1908இல் கைது செய்யப்பட்ட சுப்ரமணிய சிவா 1912 இல் விடுதலை செய்யப்பட்டார். இயல்பாகவே துறவு மனப்பான்மையும் தேச விடுதலைக்குத் தொண்டாற்றுவதில் ஆர்வமும் கொண்டிருந்த சிவா, அதுவரையில் தன் குடும்பத்தைக் கவனித்தாரில்லை. விடுதலைக்குப் பிறகு தன் குடும்பத்தைக் காக்க நினைத்த அவர், தன் மனைவி மீனாட்சி பெயரில்  ‘ஞானபாநு’ என்ற மாத இதழைத் தொடங்க அரசு அனுமதி பெற்றார். அதில் தான் அவரது கட்டுரைகள் வெளிவந்தன.

1915 இல் அவரது மனைவி காலமானதும் அந்த பத்திரிகையை நிறுத்த வேண்டியதாயிற்று. அவரது மனைவியின் மரணம் பற்றி அவர் எழுதிய தலையங்கம் அவரது துறவு மனப்பான்மையையும் மனைவியை பற்றிய மதிப்பீட்டையையும் தெள்ளெனத் தெரிவிக்கிறது.

‘காலஞ்சென்ற ஸ்ரீமதி மீநாட்சியம்மாள்’  என்று தலைப்பிட்டு எழுதப்பட்டிருந்தது அந்தத் தலையங்கம்.

“நமது ஞானபாநுவின் பதிப்பாசிரியரும், சொந்தக்காரியுமான ஸ்ரீமதி மீநாட்சியம்மாள் சென்ற வைகாசி மாதம் 2ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு மகாசக்தியில் இரண்டறக் கலந்துகொண்டாளென்ற விசனகரமான சம்பவத்தை நமது வாசகர்களுக்குத் தெரிவிக்கின்றோம். இவ்வம்மையார் ஸ்ரீ சுப்பிரமணிய சிவத்தின் மனைவியென்பதை அநேகமாக எல்லோரும் அறிவர்.

ஸ்ரீ சுப்பிரமணிய சிவம் தேசபக்தி மேலீட்டால் சிறைவாசம் செய்ய நேர்ந்த காலத்தில், இவ்வம்மையார் பட்ட கஷ்டங்கள் பல. இவ்வம்மையாருக்கு இறக்கும்பொழுது வயது 27. ஸ்ரீ சுப்பிரமணிய சிவம் சிறு பிராயம் முதற்கொண்டே வேதாந்த விசாரணை செய்ய ஆரம்பித்து, இகலோக இன்பங்களை வெறுத்து, சாதுக்களுடனும், சந்நியாசிகளுடனும் சகவாசம் செய்துகொண்டு ராஜ்ய சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது இவ்வம்மையார் தமது தாயாரைத் துணையாகக் கொண்டு, மற்றச் சுற்றத்தினரை யெல்லாம் வெறுத்து, புருஷனே கதியென்ற பதிவிரதா தர்மத்தைப் பரிபாலனஞ் செய்யக் கங்கணம் கட்டிக்கொண்டு, புருஷன் இருக்கும் இடங்களைத் தேடித் தேடிச் செல்ல, ஸ்ரீசிவம்  ‘கானவர் வலையிற்பட்டுக் கைதப்பியோடு மான் போல்’  தமது மனைவியை அநேக இடங்களில், அநேக தடவைகளில் ஏமாற்றி நழுவிவிட, இவ்விதமாக இவ்வம்மையார் தமது புருஷனைத் தொடர்ந்து பட்ட கஷ்ட நஷ்டங்கள் ஆச்சரியத்தையும், அனுதாபத்தையும் விளைவிக்கத்தக்கன.

இவ்வாறாகவெல்லாம் ஸ்ரீசிவம் பல தடவைகளிலும் பல விதத்திலும் வெறுத்துத் தள்ளியும் சரீரத்தை விடாத சாயையைப் போல, இவ்வம்மையார் தமது புருஷனை விடாது பற்றித் தியானித்துக் கொண்டிருக்க, 1908-ஆம் வருஷத்தில் மகாசக்தியின் ஆக்ஞையின் பிரகாரம் ஸ்ரீசிவம் சிறைவாசம் செய்யுமாறு நேரிட்டது.

அப்பொழுதும் இவ்வம்மையார் அவரை விடாது சிறைச்சாலை அதிகாரிகளின் மூலமாக அவருக்கு வேண்டிய சௌகர்யங்களையெல்லாம் செய்து கொடுத்து, அவருடைய விடுதலை நாளை எதிர்பார்த்துக்கொண்டே காலங் கழித்தார். அப்போது இவ்வம்மையார் பட்ட கஷ்டங்கள் பற்பல.

ஸ்ரீசிவம் இயற்கையிலேயே சந்நியாச நோக்குடையவராயினும், இவ்வம்மையார் ஆதிமுதல் தம்மை விடாது பின்பற்றித் தம்முடைய பதிவிரதா தர்மத்தைப் பரிபாலனம் செய்து வந்ததால், இவ்வம்மையாருடன் கூடி இல்லறத்தில் வாழ இசைந்து, தமது விடுதலைக்குப் பின் சென்ற இரண்டரை வருஷ காலமாக வாழ்ந்து வந்தார்.

இவர்களுக்கு இகபர சாதனமாக இப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீசிவம் ராஜாங்கத்தாரால் சந்தேகிக்கப்பட்டவராதலால், பத்திரிகை நடத்துவதற்கு உத்தரவு கிடைப்பது சந்தேகம் என்று கருதி, ஸ்ரீமதி மீநாட்சியம்மாள் பேரால் பத்திரிகை நடத்துவதற்கு ராஜாங்கத்தாரிடமிருந்து அனுமதி பெறப்பட்டது. சென்ற இரண்டு வருஷ காலமாகப் பத்திரிகை இடையூறின்றி நடைபெற்று வந்தமைக்கு முக்கிய காரணம், இவ்வம்மையாரின் ஆர்வமும், தூண்டுதலுமேயாம். இப்பொழுது இவ்வம்மையார் மகாசக்தியில் லயமாகி விட்டார்.

தேச நன்மைக்கும், உலக முன்னேற்றத்திற்கும் பாடுபடும் தம்முடைய புருஷனுடைய கைங்கர்யமும், மற்ற தேசாபிமானிகளுடைய கார்யங்களும் இனிது நிறைவேறுமாறு இவ்வம்மையாரின் சக்தி அருள்புரிவதாக”

-என்று அமைந்திருந்தது அந்தத் தலையங்கம்.

சிவா தம்முடைய மனைவியின் மறைவையடுத்து, பத்திரிகைகளை நடத்துவதிலும், எழுதுவதிலும் கவனம் செலுத்தலானார்.

‘ஞானபாநு’ நின்ற பிறகு 1916இல்  ‘பிரபஞ்ச மித்திரன்’ என்ற வார இதழை ஆரம்பித்து சில காலம் நடத்தினார். 1916 முதல் 1919 வரை அவர் முப்பதுக்கும் மேலான நூல்களை எழுதி உள்ளார். மீண்டும் சிறைப்பட்டார்.

பிறகு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டிக்குச் சென்று அங்கு பாரதமாதா கோயிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அது ஈடேறும் முன்பே 1925 ஜூலை மாதம் 23 அன்று காலமானார்.

சுவாமிஜியின் சிந்தனைகளை முழுக்க உள்வாங்கிக் கொண்டு அதன்படியே வாழ்ந்தவர்  ‘வீர முரசு’  சுப்பிரமணிய சிவா என்பதால், அவரது இந்த நூல் கனம் பெறுகிறது. சுவாமிஜியின் சிந்தனையை அறிய விரும்புபவர்களும், தேசிய சிந்தனை கொண்டவர்களும், கவனமுடன் படிக்க வேண்டிய நூலிது.


நூல் விவரம்:

சுவாமி விவேகானந்தர் அருளிச் செய்த
ஆத்ம ஞான ரத்தினம்
(1004 உபதேச மொழிகள்)

ஆசிரியர்: சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா

விலை : ரூ. 150/-

வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,  மயிலாப்பூர், சென்னை- 4

$$$

Leave a comment