-மகாகவி பாரதி

மகாகவி பாரதி நம்முடைய நாட்டின் பெருமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட பல பெரியோர்கள் பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியிருக்கிறார். நாம் ஏன் பண்டைய பெரியோர்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அவர் ஒரு விளக்கத்தையும் தருகிறார். அது .... “அறிவுடையோரையும், லோகோபகாரிகளையும், வீரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும், லோகோபகாரமும், வீரமும் மங்கிப் போகும்”.
ஆகவேதான் அவர்காலத்தில் வாழ்ந்த, அல்லது அதற்கும் முற்பட்ட பழம்பெரும் தலைவர்களைப் பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிச் சென்றிருக்கிறார். அப்படிப்பட்ட பெருந்தலைவர்கள் மூவர் பற்றி வெவ்வேறு தருணங்களில் மகாகவி பாரதி எழுதியிருப்பதன் தொகுப்பை இங்கே நாம் காணலாம்…
1. லோகமான்ய பாலகங்காதர திலகர்
நமது தேசாபிமான திலகமாகிய ஸ்ரீமத் பாலகங்காதர திலகரின் 50-வது ஜன்ம தினம் புனா நகரத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது. ‘கால்’ பத்திரிகையின் அதிபராகிய ஸ்ரீமத் பரஞ்ஜபேயும், வேறு பல மித்திரர்களும் ஆரம்பத்தில் இந்த யோசனையைத் தொடங்கினார்கள். உடனே ஒரு பொதுக்கூட்டம் கூட்டப் பெற்றது. ஸ்ரீ பரஞ்ஜபே திலகரின் பிறந்தநாட் கொண்டாட்டத்தின் பொருட்டாகப் பணம் வேண்டுமென்று சொன்னவுடன், அந்த ஸ்தலத்தில் வைத்தே 750 ரூபாய் சேர்ந்து விட்டது. அதற்கப்பாலும் மேற்படி பெருங் காரியத்தின் பொருட்டுச் சிறிது சிறிதாகப் பணத் தொகைகள் சேர்ந்தன.
ஸ்ரீமான் திலகரிடம் இந்த விஷயத்தைப் பற்றி ஒருவர் கேட்டபோது அவர் “எனக்கேன் இந்த ஆடம்பரமெல்லாம்? அந்தப் பணத்தை ஏதேனும் வேறு உபயோகமான காரியத்தில் செலவிடலாகாதா?” என்றனராம். ஸ்ரீ திலகர் சொல்லியும்கூட மேற்படி ஆலோசனையை பரஞ்ஜபே முதலானவர்கள் கைவிட்டு விடவில்லை. தெய்வத்தினிடத்தில் சம்மதம் கேட்டுக் கொண்டா நாம் அதற்குப் பூஜை நடத்துகிறோம்?
தெய்வ பூஜையைக் காட்டிலும், இப்போது நமது நாடிருக்கும் நிலைமைக்கு வீரபூஜை (Hero-worship) அத்தியாவசியமாகும். ராமன், அர்ஜுனன், சிவாஜி, பிரதாபர் முதலிய யுத்த வீரர்களும், புத்தர், சங்கரர் முதலிய ஞான வீரர்களும் வாழ்ந்த இந்தப் புண்ணிய தேசமானது இப்போது வீர சூனியமாயிப் போய் விட்டது. அந்த ஸ்திதியில் ஈச்வர கடாக்ஷத்தினால் உதித்திருக்கின்ற சாமானிய மஹான்களைக்கூட நாம் தக்கபடி கவுரவம் செய்யாமல் இருப்போமானால் நம்மை மிகவும் இழிந்த குருடர்களென்று உலகத்தார் நிந்தனை புரிவார்கள்.
வீர பூஜையானது ஒரு தேசத்தின் அபிவிருத்திக்கு இன்றியமையாததாகும். கார்லைல் (Carlyle) என்ற ஆங்கிலேய ஞானியார், வீர பூஜையைப் பற்றி ஓர் முழு கிரந்தமெழுதி யிருக்கின்றார். எந்தக் காலத்திலும், வீர பூஜை விஷயத்தில் மிகுந்த சிரத்தை கொண்டிருந்த நமது நாட்டார்கள், அது மிகவும் அவசியமாயிருக்கும் இந்தத் தருணத்தில் சும்மா இருந்து விடலாகாது. ஆதலால், பரஞ்ஜபே முதலானவர்கள் இந்த விஷயத்தில் தக்க சிரமமெடுத்துக் கொண்டமை பற்றி அவர்களுக்கு எமது மகிழ்ச்சி யறிவிக்கிறோம்.
திலகர் இந்த தேசத்தினிடம் வைத்திருக்கும் அபிமானத்தையும், அவர் அதன் பொருட்டு அடைந்திருக்கும் கஷ்டங்களையும் விரித்துப் பேச வேண்டுமென்றால், நமது பத்திரிகை முழுமையும் இடம் போத மாட்டாது.
ஆரம்பத்தில் இவருக்கு கவர்ன்மெண்டார் ஒரு ஸப்-ஜட்ஜி வேலை கொடுப்பதாகச் சொல்லியபோது இவர் அதனை விஷமாக எண்ணி வேண்டாமென்று மறுத்து விட்டார். 1897-ம் வருஷத்திலே பம்பாய் மாகாணத்து மூட அதிகாரிகள் இவரைப் படுத்திய பாட்டையெல்லாம் நினைக்கும்போதே மனம் பதறுகின்றது. அதற்கப்பால் இவர் மீது ஒரு பொய்க் கேஸ் கொண்டு வந்தார்கள். அதனால் இவருக் கேற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் வரம்பில்லாதவையாகும். இவற்றை யெல்லாம் இப்போது நினைப்பூட்டுதல் அவசியமில்லை.
இந்த மஹான் நனவிலும் கனவிலும், பாரத தேசத்தின் க்ஷேமத்திற்கும் பெருமைக்கும் சுயாதீனத்திற்கும் பிரார்த்தனை புரிந்து வருகிறார். திலகர் சாமானியமாகத் தேசாபிமானிகளென்று சொல்லித் திரியும் கூட்டத்தாரைச் சேர்ந்தவரல்லர். பயங்காளித்தனத்தைப் புத்தி சாதுரியமென்றும், ஆண்மையற்றிருக்கும் அயோக்கியத் தன்மையைத் தீர்க்காலோசனையுடமை யென்றும் திலகர் நினைப்பவரில்லை.
சுதேசீய தர்மத்துக்கு பிரதம குருவாக ஸ்ரீ திலகரைக் கருதலாம். மஹா வைதீகானுஷ்டானங் கொண்டவராகிய திலக ரிஷி தற்காலத்துப் போலி வைதிகர்களைப் போல கண்மூடித்தனமான அகந்தையும் பொறாமையும், ஹிருதயக் குறுக்கமும் உடையவரில்லை. இவர் 50 வருஷங்கள் இருந்து தமது வலிமையையும் ஞானத்தையும் தாய்த் தேசத்தின் அனுகூலத்திற்கு நிவேதனஞ் செய்து வந்ததுபோலவே இன்னும் எத்தனையோ வருஷ காலம் ஜீவித்திருந்து நமக்கு ஹிதம் புரியுமாறு செய்ய வேண்டுமென்று ஸர்வேசுவரனது திருவடியைப் பற்றிப் பிரார்த்தனை புரிகிறோம்.
தனக்கென்ற எண்ணத்தை அடியோடு தொலைத்து, பிறர்க்கு என்று தமது உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்த முற்றும் துறந்த முனிவர்களெல்லாம் காடே யாயினும், நாடே யாயினும், மாளிகை யாயினும், காராகிருகமாயினும் தமது திருத்தொண்டிற்குக் காலமும் இடமும் கண்டு ஓயாது பாடுபட்டு வருதல் சகஜமே யன்றோ? அவர் உண்பதும் உறங்குவதுமே பிறர் பொருட்டாயின், பின் அவரது பெருமையைக் கணித்தற் கியலுமா?
அத்தகையோர் இவ்வுலகத்து இடைக்கிடை உலவுவதா லன்றோ கொடுமை மிஞ்சிய பிரளய காலங்களிலும்கூட இப் புவியணு மனத்தினாலும் அறிவினாலும் கணக்கிடற்கரிய அண்ட கோடிக் குவியல்களின் நடுவில் அடிபட்டுத் தூள் மயமாகாது சுகமே சுழன்று கொண்டிருக்கிறது.
இது பற்றி யன்றோ பெரியோரும்,
“உண்டா லம்ம விவ்வுலகம்
................................
தனக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே”
என்று கூறியுள்ளார்.
இப்போது நமது தேச குரு திலக மகரிஷியும் மாண்டலேயில் உடம்பு சுகமாகவே காலங் கழித்து வருகின்றார். தமது ஆச்சிரம வாசம் வீணாகாமல் சிஷ்ய கோடிகளுக்குப் பயன்படுமாறு ஸ்ரீ கிருஷ்ண பகவான் உபதேசித்த ‘பகவத் கீதை’க்குத் தத்துவார்த்தம் எழுதிக் கொண்டிருக்கிறார். இவ் வேலை ஓய்வு ஒழிவில்லாமல் நடந்து வருகிறதாம்.
$$$

2. விபின சந்திரபாலர்
கீழ் பெங்காளத்திலே ஸில்ஹெட் என்ற ஊரிலே, வக்கீல்களுக்குள் முதன்மைப் பட்டவராகி, மிகுந்த செல்வமும் புகழும் படைத்து விளங்கிய ஓர் பெங்காளி காயஸ்தப் பிரபுவின் குமாரராக விபின சந்திரர் பிறந்தார்.
வட நாட்டை ஒரே கலக்காகக் கலக்கிய சிப்பாய்க் குழப்பம் முடிந்து நாட்டில் அமைதி பிறந்த வருஷமாகிய 1858-ம் ஆண்டுதான் இவரது ஜனன வருஷமாகும்.
செல்வத்திலேயும் சிறப்பிலேயும் வளர்ந்த விபின சந்திரர் கல்வியிலே விருப்பமற்றிராமல், வாலிபப் பிராயத்திலேயே ஞானப் பயிற்சியிலேயும் நூற் பழக்கத்திலேயும் அளவிறந்த ஆவல் கொண்டவராகி அதிபாலியத்திலேயே மெட்ரிக்குலேஷன் பரீக்ஷை தேறிவிட்டார். அதன் பேரில் தந்தையார் சந்திர பாலரைக் கல்கத்தாவிலே கொண்டு விட்டுக் காலேஜில் சேர்த்தார்.
காலேஜில் படித்துக் கொண்டிருக்கும்போது இவருக்குப் பிரம ஸமாஜக் கோட்பாடுகளிலே பற்றுண்டாயிற்று. 18-ம் பிராயத்திலே பிரம ஸமாஜத்தில் சேர்ந்துவிட்டார். இவர் பிரம ஸமாஜத்திலே சேரக் கூடாதென்று இவருடைய தந்தை முதலானவர்கள் எத்தனையோ தடுத்தும், பிரயோஜனப் படவில்லை. எவருடைய சொல்லையும் பாராட்டாமல், இவர் சேர்ந்து விட்ட படியால், தந்தையார் மிகுந்த கோபங்கொண்டு பத்து வருஷ காலம் இவரது முகத்திலே விழிக்காமல் இருந்து விட்டார். மேலும் தாம் இறந்த பிறகு தமது சொத்துக்கு விபின சந்திரர் உரிமை யுடையவராக மாட்டாரென்று உயில் எழுதி வைத்து விட்டார்.
எவ்வளவு கஷ்டம் ஏற்பட்ட போதிலும், யாருடைய விரோதம் வந்த போதிலும் தமது மனச்சாக்ஷிக்கு விரோதமில்லாமல் தெய்வத்துக்கு உண்மையாக நடக்க வேண்டுமென்று சந்திரபாலர் நிச்சயம் செய்து கொண்டார்.
1879-ம் வருஷத்திலே இவர் ஒரிஸ்ஸா மாகாணத்திலே கடக (கட்டாக்) நகரத்து ஹைஸ்கூல் ஒன்றிலே ஹெட்மாஸ்டர் வேலை பார்த்தார். அப்போழுது இவருக்கு வயது 21. 1880-ம் வருஷத்திலே ஸில்ஹெட்டில் இவர் தாமாகவே ஒரு ஹைஸ்கூல் ஸ்தாபனம் செய்தார். 1881-ம் வருஷத்தில் நமது மாகாணத்திலே பெங்களூரிலிருக்கும் ஆர்க்காட் நாராயணசாமி முதலியார் ஹைஸ்கூலிலே ஹெட்மாஸ்டரானார். இப்பொழுதுதான் இவரது முதலாவது விவாகம் நடைபெற்றது. சில வருஷங்களிலே தந்தையும், இவருடன் சமாதானமாய்ப் போய்விட்டார்.
1890-ம் வருஷத்திலே இவரது முதல் தாரம் இறந்து விட்டதன் பேரில், 1891-ம் ஆண்டிலே இரண்டாம் தாரம் விவாகம் செய்து கொண்டார். இதைத் தவிர இவர் லாஹோர் ‘ட்ரைப்யூன்’ பத்திரிகை முதலிய பல பத்திரிகைகளின் தலைவராக இருந்திருக்கிறார்.
1898-ம் வருஷத்திலே இவர் பிரம ஸமாஜ ஆசாரியராக இங்கிலண்டு, அமெரிக்கா முதலிய தேசங்களிலே சென்று உபன்னியாசங்கள் புரிந்தார். பாலிய முதலாகவே ஐரோப்பியர்கள் விஷயத்தில் மிகுந்த பக்தியும் மதிப்பும் கொண்டு வளர்ந்து நமது தேசத்திற்கு நல்ல காலம் பிறக்க வேண்டுமானால் அது ஐரோப்பியரின் ஸஹவாஸத்தினாலேதான் ஸாத்தியமாகு மென்று நம்பிக்கை கொண்டிருந்த இவர், மேல்நாடுகளிலே யாத்திரை செய்ததினின்றும் ஐரோப்பியர்களின் ஸ்வபாவத்தை நன்கு தெரிந்தவராகி இனி இந்தியர்கள் தமக்குத் தாமே துணை செய்து கொண்டாலொழிய நற்காலம் பிறக்கமாட்டாதென்ற விசுவாசம் கொண்டு விட்டார். அதன் பேரிலேதான் 1901-ம் வருஷத்தில் இந்தியாவிற்கு வந்து, இவர் ‘நியு இந்தியா’ என்ற புதிய கட்சிப் பத்திரிகையை ஸ்தாபனம் செய்தார்.
விபின சந்திரர் பெங்காள ஜனத் தலைவர்களுக்குள்ளே மிகவும் உயர்ந்த தகுதிக்கு வந்து விட்டார். 1886-ம் வருஷத்திலே விபின சந்திரபாபு காங்கிரஸ் கூட்டத்திலே சேர்ந்து கொண்டார்.
1887-ம் வருஷத்திலே சென்னையில் நடைபெற்ற காங்கிரஸில் இவர் ‘ஆயுத ஆக்டை’ கண்டனம் புரிந்து செய்த பிரசங்கம் மிகவும் வியக்கத் தக்கதாக இருந்தது. அதுமுதல் இவர் காங்கிரஸ் விஷயங்களிலே மிகுந்த சிரத்தை பாராட்டி வருகிறார்.
பிரம ஸமாஜத்தி முக்கியமான மெம்பர்களிலே பாபு விபின சந்திரர் ஒருவர். மதுபானத்தை வேரறுத்துவிட வேண்டுமென்னும் நோக்கத்துடன் வேலை செய்யும் கூட்டத்தாருக்கு இவர் ஓர் பூஷணம் போன்றவர்.
ஸ்ரீ ஹனுமான் எப்படி ஆஹாரம் முதலிய எவ்விதமான் லோக போகங்களையும் இச்சிக்காமல் “ராம ராம” என்று தியானம் செய்துகொண்டே ஆனந்தமடைந்திருந்ததாக சொல்லப்படுகின்றதோ அதுபோல ஸ்ரீ விபின சந்திரரும் சதாகாலமும் பாரத நாட்டின் அபிவிருத்தியைப் பற்றி தியானம் செய்வதிலேயே நாள் கழிக்கின்றார்.
ஹனுமானுக்கு எப்படி ‘ராமாமிருதம் ஜீவனம்’ ஆக இருந்ததோ, அதுபோன விபின சந்திரருக்குப் ‘பாரதாமிருதம் ஜீவனம்’ என்று கூறுதல் மிகவும் பொருந்தும்.
$$$
3. லாலா லஜ்பத்ராய்
ஸ்ரீமான் லஜ்பத்ராயரை மாண்டலே கோட்டைக்குள் அடைத்து வைக்கப் போவதாக ஆரம்பத்திலே அங்கு கொண்டு சென்றார்கள். இப்பொழுது அங்கேயிருந்து கடத்திச் சென்றுவிட்டார்களென்று ஓர் தந்தி சொல்லுகிறது. அனேகமாக இவரை ஷான் நாடுகள் என்ற பிரதேசத்துக்கு அனுப்பியிருக்கலாமென்று தோன்றுகிறது. கீழே இந்த மஹானது சரித்திரத்தைச் சுருக்கமாகத் தருகின்றோம்.
இவருடைய தந்தை ஓர் சர்க்கார் பாடசாலையில் உபாத்தியாயரா விருக்கிறார். மிகவும் விருத்தராய் விட்ட போதிலும் சத்காரியங்களிலே மிகுந்த முயற்சி யுடையவரா யிருக்கின்றார்.
லாலா லஜ்பத்ராய் 1865-ம் வருஷத்தில் பிறந்தார். எனவே இப்போழுது வயது 41 ஆகிறது. (பாரதி இதை எழுதிய காலத்தில்). குழந்தைப் பிராயத்திலே லஜ்பத்ராய் பலக்குறைவு உடையவராகவும் ஏழையாகவு மிருந்தபோதிலும் நன்றாக வித்தியாப்பியாசம் செய்து அரிய தேர்ச்சி கொண்டு விட்டார். 18-ம் வயதிலேயே வக்கீல் வேலை பார்க்கத் தொடங்கினார்.
1892 வரையில் ஹிஸார் என்ற ஊரிலே வக்கீல்களுக்குள் முதன்மைப் பட்டவராக விளங்கினார். 1892-ம் வருஷத்துக் கப்பால் இவர் லாஹோர் சீப் கோர்ட்டிலே போய் வக்கீலாக அமர்ந்தார். சிறிது காலத்திற்குள்ளே மிகவும் பிரசித்தராய் விட்டனர். 1892-ம் வருஷம் முதல் 1902-ம் வருஷம் வரை 10 வருஷங்களுக்குள் இவர் மிகுந்த கீர்த்தியும், செல்வமும் அடைந்தவராயினர்.
1902-க்கப்பால் பொதுஜனங்களுக் கனுகூலமான விஷயங்களிலே விசேஷ சிரத்தை கொள்ளத் தொடங்கினார். பாலியத்திலேயே ஆரிய சமாஜத்திலே சேர்ந்து கொண்ட இவர் மேற்படி சமாஜத்தின் அபிவிர்த்தியின் பொருட்டாக எவ்வளவோ முயற்சி செய்திருக்கின்றார். லாஹோரில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் தயானந்த ஆங்கிலோ வைதிக காலேஜை உன்னத நிலைமைக்குக் கொண்டு வரும் பொருட்டு இவர் அளவற்ற பரிசிரமம் எடுத்திருக்கின்றார்.
பஞ்சக் காலத்தில் இவர் இன்னும் சில ஆரிய சமாஜிகளின் கூடச் சேர்ந்துகொண்டு பஞ்சத்தால் பீடிக்கப்பட்டு வருந்தும் ஜனங்களுக்குதவி செய்து அவர்களை கிருஸ்துவப் பாதிரிகளின் வலையினின்றும் காப்பாற்றினார். இக்காரணம் பற்றியே பாதிரிகள் இன்று வரையும் கூட லாலா லஜ்பத்ராயரிடத்திலும் ஆரிய சமாஜத்தாரிடத்திலும் கெட்ட எண்ணம் கொண்டவர்களாகவே இருந்து வருகின்றார்கள்.
இவர் பஞ்சாப் நாஷனல் பாங்க், பருத்தி நூல் யந்திரசாலைகள் என்பவற்றின் டைரக்டர்களிலே ஒருவர். மேலும் மேற்படி யந்திரசாலைகளிலே இவர் நெருங்கிய சம்பந்தங்கொண்டு பல விதங்களிலேயும் உழைத்து வந்தார்.
இடாலி தேசத்தைக் கொடுங்கோன்மையினின்றும் விடுவித்து ஸ்வராஜ்ய ஸ்தாபனம் செய்தவர்களாகிய மாஸினி (Mazzini), காரிபால்டி (Garibaldi) என்ற மஹான்களின் சரித்திரத்தை லாலா லஜ்பத்ராய் உருது (ஹிந்துஸ்தானி) பாஷையிலே எழுதியிருக்கின்றார்.
மகமதிய ராஜாக்கள் கொடுங்கோன்மையிலே விருப்பங் கொண்ட காலத்தில் அவர்களுடைய ஹிம்ஸையினின்றும் நாட்டை விடுவித்து, மஹாராஷ்டிர ஸ்தாபனம் செய்த சிவாஜி மஹாராஜாவின் திவ்விய சரித்திரத்தை ஹிந்துஸ்தானியிலே எழுதி உபகரித்திருக்கின்றார். ஆரிய ஸமாஜத்தின் ஸ்தாபனாச்சார்யராகிய மஹரிஷி தயாநந்த ஸரஸ்வதியின் சரித்திரமும் இவரால் எழுதப்பட்டிருக்கின்றன.
இதுவன்றியும் இங்கிலீஷ் பாஷையிலும் பஞ்சாபி பாஷையிலும் பல அரிய உபந்நியாசங்க ளெழுதிப் பிரசித்தி பெற்றிருக்கின்றார். 1888-ம் வருஷத்திலேதான் அலஹாபாத்திலே நடந்த காங்கிரஸ் சபைக்கு வந்து இவர் ராஜாங்க விசாரணைகளில் பஹிரங்கமாகத் தலையிடத் தொடங்கினார். அதுமுதலாக ராஜநீதி சம்பந்தமான விஷயங்களிலே ஓயாது கவனம் செலுத்தி வருகின்றார்.
1905-ம் வருஷத்திலே இவர் நாஷனல் காங்கிரஸின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவராகி, கோகலேயுடன் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே பாரத நாட்டின் ராஜநீதி விஷயங்களைப் பற்றிப் பலவிடங்களிலே உபந்நியாசம் புரிந்தார். இதே சமயத்தில் அமெரிக்கா தேசத்துக் கல்வி முறைகளை நன்கு தேர்ந்து வர வேண்டுமென்றெண்ணி அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இங்கிலாந்து, அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து லாலா லஜ்பத்ராய் நமது நவீனக் கோட்பாடுகளை இந்நாட்டாருக்குப் பிரசங்கிப்பாராயினர். ஸ்வதேசியம் அந்நிய வஸ்து பஹிஷ்காரம் என்ற தேசபக்தி முறைமைகளிலே இவர் மிகுந்த அன்பு கொண்டவர். பாரத நாட்டின் தற்கால இழிந்த நிலைமையைக் கருதி மனம் பொங்கி ஆற்றாமையுடன் இவர் எழுதியிருக்கும் சில வசனங்கள் இப்போழுது நமக்கு முன்பாக விருக்கின்றன. அவ்வசனங்க ளெப்போதும் நமது நினைப்பினின்றும் நீங்க காட்டா.
அளவிறந்த தேசபக்தி கொண்டவரா யிருப்பினும் ஸ்வாதந்திரியமடைவதற்கு இவர் சாந்தமான உபாயங்களையே நாடி யிருந்தனர். ஸர்க்காருக்கு விரோதமாக இவர் கலகம் எழுப்ப முயன்றார் என்பதை எவரும் நம்ப மாட்டார்கள்.
எனினும் என்ன எண்ணம் கொண்டோ இவரை கவர்ன்மெண்டார் தீபாந்தரத்துக்கு ஏற்றியனுப்பி விட்டார்கள். இவர் கடைசியாகச் சொல்லிய வாக்கியத்தை நாம் இந்தச் சமயத்தில் மறக்கலாகாது. “கடவுள் செய்வதெல்லாம் நன்மையின் பொருட்டாகவே செய்கின்றார்.”
$$$