பட்டினத்தாரின் தனிப் பாடல்கள்

-திருப்பூர் கிருஷ்ணன்

தம் தனிப்பாடல்களால் தனிப்பாடல் துறையில் ஒப்பற்ற தனியிடம் பிடித்தவர் பட்டினத்தார். அவரது தனிப்பாடல்களின் தனிச் சிறப்பு என்பது உணர்ச்சி வேகம். ஆழ்மனத்திலிருந்து பீறிட்டெழுந்த உணர்ச்சிகளின் குவியலாய் அவரது பாடல்கள் தமிழை அலங்கரிக்கின்றன. தம் சொந்த வாழ்க்கைச் சம்பவங்கள் சார்ந்து அதிக எண்ணிக்கையில் பாடல்கள் புனைந்தவர் என்ற பெருமையும் பட்டினத்தாருக்கு உண்டு. 

தனிப்பாடல்கள் என்பன தமிழின் ஒரு தனி இலக்கிய வகை சார்ந்தவையாகப் போற்றப்படுகின்றன. எந்தத் தொகுப்பிலும் சேராத பாடல்களையே  ‘தனிப்பாடல்கள்’ என்றழைக்கிறோம். 

காளமேகம், ஔவையார் போன்ற புலவர்கள் இத்தகைய தனிப்பாடல்களை நிறைய எழுதியிருக்கிறார்கள். காளமேகத்தின் தனிப்பாடல்கள் சிலேடை நயம் நிறைந்தவை. ஔவையாரின் தனிப்பாடல்களில் தத்துவச் செறிவு மிகுதி.

தம் தனிப்பாடல்களால் தனிப்பாடல் துறையில் ஒப்பற்ற தனியிடம் பிடித்தவர் பட்டினத்தார். அவரது தனிப்பாடல்களின் தனிச் சிறப்பு என்பது உணர்ச்சி வேகம். 

ஆழ்மனத்திலிருந்து பீறிட்டெழுந்த உணர்ச்சிகளின் குவியலாய் அவரது பாடல்கள் தமிழை அலங்கரிக்கின்றன. தம் சொந்த வாழ்க்கைச் சம்பவங்கள் சார்ந்து அதிக எண்ணிக்கையில் பாடல்கள் புனைந்தவர் என்ற பெருமையும் பட்டினத்தாருக்கு உண்டு. 

காளமேகத்தைப் போன்ற சொல் விளையாட்டுக்கள் எதுவும் அவரிடம் கிடையாது. ஆனால் சிறந்த கவிதையின் ஆதாரமே உணர்ச்சிப் பெருக்கு தானே? 

அத்தகைய மேலான உணர்ச்சிப் பெருக்கிற்கு பட்டினத்தார் தனிப்பாடல்களில் பஞ்சமே இல்லை. அதனால் படிப்போர் உள்ளத்தை நேரடியாகச் சென்று அவை தாக்குகின்றன. அவரது தனிப்பாடல்கள் சொல்லும் கருத்து பயில்வோர் மனத்தைப் பயிலப் பயில மேம்படுத்துகிறது.

பட்டினத்தாரின் உணர்ச்சி மிகுதி காரணமாக, அவர் ஆழ்மனத்திலிருந்து புறப்பட்ட சில வரிகள் பாடலாய் முழுமை பெறவில்லை. ஆனாலும் பாடலாய் முழுமை பெறாத தனி வரிகளே கூட மிகப் பிரபலமாகி விட்டன. 

‘காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே’  என்பது அவரின் வளர்ப்பு மகன் மருதவாணன் எழுதி வைத்துவிட்டுச் சென்ற வரி. சிவபெருமானே அவர் மகனாக வந்து வளர்ந்தார் என்கிறது பட்டினத்தார் திருச்சரிதம். 

அந்த ஒற்றை வரி பட்டினத்தாரை முழுமையாக மாற்றியது. அவர் பணத்தாசையை முற்றிலுமாகத் துறந்து துறவியானார். 

அவரது சொத்து தனக்கு வரும் எனக் கருதிய அவரின் தமக்கை அப்படி வராமல் அது ஏழைகளுக்கும் கோயிலுக்குமே சென்றதால் கடும் சீற்றமடைந்தாள். அவள் பட்டினத்தாருக்கு, தான் தயாரித்த அப்பத்தில் நஞ்சு கலந்து கொடுத்தாள். 

அந்த அப்பத்தைப் பார்த்தவுடனேயே உண்மை உணர்ந்த பட்டினத்தார்,  ‘தன்வினை தன்னைச் சுடும்! ஓட்டப்பம் வீட்டைச் சுடும்!’ என்று சொல்லி அந்த அப்பத்தை அவள் வீட்டின் ஓட்டுக் கூரைமேல் எறிந்தார். 

அடுத்த கணம் அப்பத்திலிருந்து புறப்பட்ட தீ அவளது ஒரே சொத்தான அந்த வீட்டையும் எரித்துவிட்டது. 

தமிழ் இலக்கியப் பரப்பில் பட்டினத்தாரின் இந்த ஒரு வரி, ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற செய்தியைச் சொன்னவாறு நிரந்தரமாய் நிலைத்துவிட்டது. 

பட்டினத்தார், தனிப்பாடல்கள் அல்லாது நூல்களாகவும் பலவற்றை எழுதியுள்ளார். திருவிடைமருதூர் மும்மணிக் கோவை, திருக்கழுமல மும்மணிக் கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர்த் தொகை, திருப்பாடற்றிரட்டு என அவரது நூல்களும் தனி இலக்கியச் சுவை நிறைந்தவைதாம். 

என்றாலும் உணர்ச்சிப் பெருக்கில் அவரது வாழ்க்கைச் சம்பவங்களை ஒட்டி அவரிடமிருந்து புறப்பட்ட தனிப்பாடல்களின் சுவையே தனி. 

பட்டினத்தார் அண்மைக் காலத்தில் வாழ்ந்த உண்மை ஞானி. முற்றும் துறந்த முழுத் துறவி. யாரிடமும் எதன்பொருட்டும் இரந்து நின்றவர் அல்லர். 

தன்னைத் தேடி யாரேனும் அன்னம் கொண்டுதந்தால் உண்பாரே அல்லாது அன்னத்தின் பொருட்டாகக் கூட அலைய அவர் மனம் ஒப்பவில்லை. அவர் சுயமரியாதை நிறைந்த துறவியாக வாழ்ந்தார் என்பதை அவரின் ஒரு வெண்பா உணர்த்துகின்றது:

‘இருக்கும் இடம்தேடி என்பசிக்கே அன்னம்
உருக்கமுடன் கொண்டுவந்தால் உண்பேன்- பெருக்க
அழைத்தாலும் போகேன் அரனே என்தேகம் 
இளைத்தாலும் போகேன் இனி.’

காம இச்சையையும் இல்லற வாழ்வையும் அதன் காரணமாக மனிதர்கள் குடும்பத் தளையில் சிக்கிக் கிடப்பதையும் எண்ணி நொந்தவர் அவர்.

அந்த உணர்வின் மிகுதியால் இல்லறத்தாரைப் பார்த்து அவர் பாடிய பாடல் இது:

நாப்பிளக்கப் பொய்யுரைத்து, நவநிதியம் தேடி
நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடி
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போல
பொலபொலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்!
காப்பதற்கும் வகையறியீர்! கைவிடவும் மாட்டீர்!
கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே!’

வாழ்வின் நிலையாமை பட்டினத்தாரை ஆட்டிப் படைக்கிறது. அநித்தியமான வாழ்வல்லவா இது! நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடையதல்லவா இந்த உலகம்! 

இந்த நிலையாமையின் உண்மையை மக்கள் சரிவர அறிந்துகொள்ளவில்லையே என உருகுகிறது அவரின் ஞான மனம். 

‘இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை நீ உன்னாதே - பருத்ததொந்தி 
நம்மதென்று நாமிருக்க நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான்!’

‘வீடிருக்கத் தாயிருக்க வேண்டுமனை யாளிருக்க
பீடிருக்க ஊணிருக்க பிள்ளைகளும் தாமிருக்க
மாடிருக்க கன்றிருக்க வைத்தபொருள் தானிருக்க
கூடிருக்க, நீபோன கோலமென்ன கோலமே!’

என இறந்த மனிதன் ஒருவனை எண்ணிப் புலம்புகிறது அவர் கவிதை மனம். நிலையிலா வாழ்வை நிலையெனக் கருதாது இறக்கும் முன் குற்றாலநாதனான சிவனைச் சரணடையுங்கள் என்று அறிவுறுத்துகிறார்: 

‘காலன் வருமுன்னே கண்பஞ்சடை முன்னே
பாலுண் கடைவாய் படுமுன்னே - மேல்விழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே 
குற்றாலத் தானையே கூறு!’ 

‘விட்டுவிடப் போகுதுயிர் விட்டவுடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் - பட்டதுபட்
டெந்நேரமும் சிவனை ஏத்துங்கள் போற்றுங்கள் 
சொன்னேன் அதுவே சுகம்!’

தாயாரின் மறைவு பட்டினத்தாரை உருக்கிக் கரைத்தது. தாய் ஆர்யாம்பிகை காலமானபோது  ‘மாத்ரு பஞ்சகம்’ பாடிய ஆதிசங்கரர் போல, தன் தாய் காலமானபோது உணர்ச்சிப் பெருக்கு நிறைந்த சில வெண்பாக்களைப் பாடினார் அவர். 

 அந்த வெண்பாக்கள் ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம். தாயை இழந்த ஒவ்வொருவரும் அந்த வெண்பாக்களைப் படிக்கும்போது கண்கலங்குவது நிச்சயம். 

‘ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்று
பையலென்றபோதே பரிந்தெடுத்து - செய்யவிரு
கைப்புறத்திலே தாங்கிக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?’

எனத் தாயின் சடலத்தைப் பார்த்துக் கதறுகிறார் அவர். தாய்க்கு இறுதிச் சடங்காக வாய்க்கரிசி இடச் சொல்கிறார்கள் அவரை. வெண்பா வடிவில் உருகிப் பெருகுகிறது அவரது உணர்ச்சி வெள்ளம்:

’அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
 வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
 தேனே அமிர்தமே செல்வத் திரவியமே
 மானே எனவழைத்த வாய்க்கு?

‘அள்ளி யிடுவது அரிசியோ தாய்தனக்குக்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன் 
மகனே எனஅழைத்த வாய்க்கு?’ 

அன்னையின் சடலத்திற்குத் தீப்பந்தம் எடுத்துத் தீ மூட்ட வேண்டிய நிர்ப்பந்தம். அவர் மனம் துவண்டு சரிகிறது. 

‘முந்தித் தவம் கிடந்து முந்நூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்து - தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ
எரியத் தீமூட்டு வேன்?’

‘வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்?’

‘நொந்து சுமந்துபெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே- அந்திபகல்
கையிலே கொண்டென்னைக்  காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே தீ மூட்டுவேன்?’

மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு தாயின் சிதைக்கு நெருப்பு வைக்கிறார். 

‘முன்னையிட்ட தீ முப்புரத்திலே!
பின்னை யிட்ட தீ தென்னிலங்கையில்!
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே! 
யானுமிட்ட தீ மூள்க மூள்கவே!’

தன் தாயின் ஆன்மா சிவனின் திருவடியில் சென்று சேர்ந்திருக்குமா, தன்மேல் மட்டற்ற பாசம் செலுத்திய தாய் தன்னை மறந்திருப்பாளா என எண்ணி எண்ணி ஏங்குகிறார்:

‘வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ- சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரங்கிடந்திங்கு
என்னையே ஈன்றெடுத்த தாய்!’

அன்னை இறந்து ஒருநாள் கழிந்துவிட்டது. மறுநாள் பால்தெளிக்க வேண்டும். எல்லாம் சிவன் திருவுளம் என்றெண்ணி ஆறுதல் அடையத் தொடங்குகிறார்:

‘வீற்றிருந்தாள் அன்னை வீதி தனிலிருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் - பால்தெளிக்க 
எல்லீரும் வாருங்கள் ஏதென் றிரங்காமல்
எல்லாம் சிவமயமே ஆம்!’

இப்பிறவியில் தாயாய் வாய்த்தவளுக்குத் தன் இறுதிக்கடனைச் செலுத்தியபின் பட்டினத்தாரின் உள்ளம் சிந்திக்கிறது. 

இனி இன்னொரு அன்னையின் வயிற்றில் பிறப்பதா? மீண்டும் மீண்டும் இந்தப் பிறவிச் சுழல் ஏன்? என் பிறப்பறுத்து எனக்கு முக்தி தா சிவனே என அவர் முறையிடுகிறார். 

‘மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன் 
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா! 
இருப்பையூர் வாழ்சிவனே! இன்னும் ஓர் அன்னை
கருப்பையூர் வாராமல் கா!’

இப்படி இன்னும் பல பாடல்களால் தமிழிலக்கியத்தை வளப்படுத்திய பெருங்கவிஞர் பட்டினத்தார். 

அவரின் பாடல்களைப் பயில்பவர்கள் மேலான மனநிலையை அடைவார்கள். தத்துவ ஞானம் பெறுவார்கள். வாழ்வின் நிலையாமையை உணர்ந்து மனத் தெளிவு பெறுவார்கள். 

பட்டினத்தார் பாடல்களை இளைஞர்கள் படித்தால், வீணான புலனின்பங்களுக்கு ஆட்பட்டு அழியாதிருக்கும் மன வலிமையைப் பெறுவார்கள்.

பட்டினத்தார் பாடல்களை முதியவர்கள் படித்தால், தங்களின் கடந்தகால வாழ்வில் நேர்ந்த தவிர்க்கவியலாத சோகங்களுக்குக் கலங்காதிருக்கும் உறுதி அவர்கள் மனத்தில் பிறக்கும். 

தமிழர்களின் இலக்கியப் பொக்கிஷங்களில் மிக முக்கியமான ஒரு பொக்கிஷம் பட்டினத்தாரின் தனிப் பாடல்கள். தமிழர்களை மேம்படுத்துவதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் பொக்கிஷம் அது. 

.

  • நன்றி:  ‘ஓம் சக்தி’ தீபாவளி மலர்
  • திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து மீள்பதிவாகிறது.

$$$

Leave a comment