-ஜடாயு
அற்புதமான சமஸ்கிருத சுலோகங்களை தமிழில் பதிவு செய்வதை ஒரு கடமையாகச் செய்து வருபவர் எழுத்தாளர் திரு. ஜடாயு. ‘பாரத சாவித்ரி’ என்ற தலைப்பிலான, மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஐந்து சுலோகங்கள் நாம் அறிய வேண்டியவை...

ஆயிரக்கணக்கான தாய்தந்தையரும், நூற்றுக்கணக்கான மனைவி மக்களும் இந்த சம்சார சக்கரங்களில் தொடர்ந்து தோன்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பிறரும் வருவார்கள், போவார்கள்.
ஆயிரக்கணக்கான இடங்கள் மகிழ்ச்சியையும், நூற்றுக்கணக்கான இடங்கள் பயத்தையும் தருகின்றன. நாள்தோறும் இவை மூடனிடம் புகுகின்றன. பண்டிதனிடம் புகுவதில்லை.
கைகளைத் தூக்கிக்கொண்டு கதறுகிறேன். ஆனால் கேட்பவர் ஒருவருமில்லை. தர்மத்திலிருந்து தான் அர்த்தமும், காமமும் (அறத்திலிருந்து தான் பொருளும், இன்பமும்). அந்த தர்மத்தை ஏன் கடைப்பிடிப்பதில்லை?
காமத்தாலோ, பயத்தாலோ, பேராசையாலோ, ஜீவனத்திற்கான காரணம் என்பதாலோ கூட தர்மத்தை விட்டுவிடக் கூடாது. தர்மம் என்றுமுளது, நித்தியம். இன்பதுன்பங்கள் அழிவிற்குட்பட்டவை, அநித்தியம். ஜீவன் (உயிர்) என்றுமுளது, அது தோன்றுவதற்கான காரணம் அநித்தியமானது.
இந்த ‘பாரத சாவித்ரி’யை காலை எழுந்தவுடன் கற்பவன், பாரதம் கற்ற பயனைப் பெற்று பரம்பொருளை அடைவான்.
– மகாபாரதம், ஸ்வர்காரோஹண பர்வம் 5.50-64.
மகாபாரதத்தின் இறுதி பர்வத்தில் இறுதிக்கு முந்தைய அத்தியாயத்தில் கடைசியாக வியாசர் கூற்றாக அமைந்த சுலோகங்கள் இவை. இந்த சுலோகங்கள் சுருக்கமான எடுத்துரைக்கும் மகத்தான ஞானமானது ‘சாவித்ரி’ எனப்படும் புனிதமான காயத்ரி மந்திரத்திற்கு நிகரானது என்பதால் ‘பாரத சாவித்ரி’ என்றே அழைக்கப் படுகிறது.
என் அப்பா (வயது 80) பல வருடங்களாக காலை எழுந்தவுடன் கூறும் சுலோகங்களில் (ப்ராத ஸ்மரணம்) இது உண்டு என்பதால், மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. காலை எழுந்தவுடன் பால்கனிக்குச் சென்று ஆகாயத்தைப் பார்ப்பதை கடந்த 20 வருடங்களாக நான் பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். அப்போது பெரும்பாலும் இந்த சுலோகங்களை மனதால் ஸ்மரித்து விடுவேன். சில சமயம் தோன்றினால் வாய்விட்டுக் கூறுவதும் உண்டு.
சுலோகங்கள்:
மாதா-பித்ருʼ-ஸஹஸ்ராணி
புத்ர-தா³ர-ஶதானி ச ।
ஸம்ʼஸாரேஷ்வனுபூ⁴தானி
யானி யாஸ்யந்தி சாபரே ॥
ஹர்ஷ-ஸ்தா²ன-ஸஹஸ்ராணி
ப⁴ய-ஸ்தா²ன-ஶதானி ச ।
தி³வஸே தி³வஸே மூட⁴-
மாவிஶந்தி ந பண்டி³தம் ॥
ஊர்த்⁴வபா³ஹுர்விரௌம்யேஷ
ந ச கஶ்சிச்ச்²ருʼணோதி மே ।
த⁴ர்மாத³ர்த²ஶ்ச காமஶ்ச
ஸ கிமர்த²ம்ʼ ந ஸேவ்யதே ॥
ந ஜாது காமான்ன ப⁴யான்ன லோபா⁴த்³
த⁴ர்மம்ʼ த்யஜேஜ்ஜீவிதஸ்யாபி ஹேதோ꞉ ।
த⁴ர்மோ நித்ய꞉ ஸுக²து³꞉கே² த்வநித்யே
ஜீவோ நித்யோ ஹேதுரஸ்ய த்வநித்ய꞉ ॥
இமாம்ʼ பா⁴ரத-ஸாவித்ரீம்ʼ
ப்ராதருத்தா²ய ய꞉ படே²த் ।
ஸ பா⁴ரத-ப²லம்ʼ ப்ராப்ய
பரம்ʼ ப்³ரஹ்மாதி⁴க³ச்ச²தி ॥
माता-पितृ-सहस्राणि पुत्र-दार-शतानि च ।
संसारेष्वनुभूतानि यानि यास्यन्ति चापरे ॥
हर्ष-स्थान-सहस्राणि भय-स्थान-शतानि च ।
दिवसे दिवसे मूढमाविशन्ति न पण्डितम् ॥
ऊर्ध्वबाहुर्विरौम्येष न च कश्चिच्छृणोति मे ।
धर्मादर्थश्च कामश्च स किमर्थं न सेव्यते ॥
न जातु कामान्न भयान्न लोभाद्
धर्मं त्यजेज्जीवितस्यापि हेतोः ।
धर्मो नित्यः सुखदुःखे त्वनित्ये
जीवो नित्यो हेतुरस्य त्वनित्यः ॥
इमां भारत-सावित्रीं प्रातरुत्थाय यः पठेत् ।
स भारत-फलं प्राप्य परं ब्रह्माधिगच्छति ॥
- நன்றி: எழுத்தாளர் திரு. ஜடாயுவின் முகநூல் பக்கம்.
$$$