வறுமை ஒழிப்பு – அர்த்தமும் அனர்த்தமும்

-திருநின்றவூர் ரவிகுமார்

‘பழங்குடியினத்தவர்; விதவை அதனால்தான் குடியரசுத் தலைவரை புதிய நாடாளுமன்ற கட்டடக் திறப்புக்கு அழைக்கவில்லை’ என்றெல்லாம், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற வகையில் எதிர்க்கட்சிகள் வசைபாடின. ஆளுங்கட்சியை வசை பாடுவதாக நினைத்து, குடியரசுத் தலைவரின் ஜாதியையும் வாழ்வியல் நிலையையும் குத்தி அவமதித்தன.

வந்தார் செங்கோலுடன்

இந்த ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரைத் தொடங்கி வைக்க குடியரசுத் தலைவர் வந்தார். புதிய நடைமுறையாக, ராஜீவ் சர்மா என்ற நாடாளுமன்ற ஊழியர் செங்கோலைத் தாங்கியபடி பணிவுடன் முன்னே செல்ல குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற கட்டடத்துக்குள் கம்பீரமாக நுழைந்தார்.  ‘பாரத் மாதா கி ஜே, ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ஜெகன்நாத், ஜெய் சியாராம்’ என்று கோஷம் எழுப்பி உறுப்பினர்கள் அவரை வரவேற்றனர். ஏற்றமிகு பாரதப் பாரம்பரியத்தை நிலைநாட்டிய புதிய நடைமுறையைக் கண்டு எதிர்க்கட்சியினர் திகைத்து மௌனித்தனர்.

அனைவரும் இதை தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். அவரது உரையில் ராமர் கோயில் நிர்மாணம், மகளிர் இட ஒதுக்கீடு பற்றிக் குறிப்பிட்ட போது அரங்கு கைத்தட்டி ஆராவரித்தது என்று பத்திரிகைகள் எழுதின. அவரது உரையில் என்னை மிகவும் கவர்ந்த கவர்ந்தது வேறொரு விஷயம். அது பற்றித் தான் இந்தப் பத்தி.

வறுமை ஒழிப்பு கோஷமும் நடைமுறையும்

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது  ‘வறுமையை ஒழிப்போம்’ என்ற கோஷத்தை (கரீபி ஹட்டாவ்) எழுப்பினார். அது மக்கள் மனதைக் கவர்ந்தது. அவருக்கு அமோக ஆதரவு கிடைத்தது. ஆனால் வறுமை ஒழிந்ததா என்ற கேள்வி எழுப்பினால் பதில் நிச்சயமாக எதிர்மறையாகத் தான் வரும். இந்திரா அம்மையார் ஆட்சி போய், அவரது மகன் ஆட்சி, அதன் பிறகு பல கிச்சடி ஆட்சிகள், மீண்டும் காங்கிரஸ் ஆட்சி,  வாஜ்பாய் தலைமையில் கூட்டணி ஆட்சி, மீண்டும் நீண்ட காங்கிரஸ் ஆட்சி, பிறகு மோடி 1.0 ஆட்சி வந்த பிறகும் வறுமை ஒழிந்ததா என்றால் இல்லை.

முனைவர் மன்மோகன் சிங் ஆட்சியில் நாள் ஒன்றுக்கு ரூ. 32 சம்பாதித்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு அப்பால் வெளியே சென்று விடுவார் என்று வறுமைக் கோட்டை கீழே இறக்கிய பின்னும் அரசின் கணக்கெடுப்பின்படி வறுமை ஒழியவில்லை. ஆனால் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மூ தனது உரையில்,  “வறுமையை ஒழிப்போம் என்ற கோஷத்தை நாம் கேட்டுள்ளோம். ஆனால் வறுமை உண்மையிலேயே ஒழிந்துள்ளதா என்றால், ஆம் ஒழிந்துள்ளதை இப்போது, இந்த ஆட்சியிலே பார்க்கிறோம்” என்றார். முற்றிலும் ஒழியவில்லை என்றாலும் வறுமை வெகுவாகக் குறைந்துள்ளதை புள்ளி விவரங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.

கணக்கிட்டு முறையில் மாற்றம் – சொல்லுவது என்ன?

இந்த இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் மேற்கத்திய நாடுகளில் இது பற்றிய விவாதம் தொடங்கியது. விளைவாக 2010இல் ஐ.நா.சபையில் வறுமைக் கோட்டை அளவிட புதிய,  பல பரிமாணங்களைக் கொண்ட வறுமை கணக்கீட்டு முறை (Multi Dimensional Poverty Index) அறிமுகமானது. ஆனால் இந்தியாவில் அது நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை. குடியரசுத் தலைவரின் உரைக்குப் பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சரின் உரையில் இந்த புதிய கணக்கெடுப்பின்படி சுமார் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு (Below Poverty Line- BPL) வெளியே வந்துள்ளனர் என்று குறிப்பிட்டார். மொத்த மக்கள்தொகையில் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருந்தவர்கள் 2015-16 கணக்கெடுப்பின்படி 24. 85 % ஆக இருந்தது 2019-21இல் 14.96 % ஆகக் குறைந்துள்ளதை நிதி ஆயோக் அறிக்கையில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

வழக்கமான வறுமைக் குறியீட்டில் இருந்து இந்த புதிய, பல பரிமாண வறுமைக் குறியீடு எப்படி மாறுபட்டது என்ற கேள்வி எழுகிறது.

வருமானத்தின் அடிப்படையிலான வறுமைக் குறியீட்டு முறை இதுவரை பின்பற்றப்பட்டு வந்தது. அதன்படி ஒரு நுகர்வோர் எதற்கு, எவ்வளவு செலவு செய்கிறார் என்று கணக்கிட்டு, அதன் அடிப்படையில் வறுமைக் குறியீடு வெளியிடப்பட்டு வந்தது. கடைசியாக வெளியானது 2011-12 ஆண்டிற்கான கணக்கீடு. அதன்படி 22 % மக்கள்தொகையினர் அதாவது 27 கோடி பேர்  வறுமைக் கோட்டுக்குக் கீழே வறுமையில் வாடிக் கொண்டிருந்தனர். இந்தக் கணக்கீட்டை  ‘நேஷனல் சாம்பிள் சர்வே’ என்பார்கள். இது புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையினரால் நடத்தப்படும்.

புதிய முறையின் விவரங்கள்

புதிய கணக்கிட்டு முறையின்படி, முன்பிருந்த செலவு என்ற ஒற்றை அம்ச முறைக்குப் பதிலாக மூன்று விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படுகிறன்றன. ஆரோக்கியம், கல்வி, வாழ்க்கைத் தரம் என்பவையே அந்த மூன்று அம்சங்கள். கணக்கீட்டு முறையில் மூன்றும் சமமான அளவிலேயே அழுத்தம் பெற்றுள்ளன.

துல்லியமான கணக்கீட்டிற்காக இந்த மூன்று அம்சங்களும் மேலும் பல உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியம் தொடர்பாக, சத்துணவு, மகப்பேறு மரணம்,  குழந்தை மரணம், இளம்பருவ மரணம், தாய் – சேய் ஆரோக்கியம் என்ற துணைப் பிரிவுகளில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கல்வி என்ற பிரிவில், எத்தனை ஆண்டுகள் பள்ளிப் படிப்பு, பள்ளி வருகைப் பதிவு நாட்கள் ஆகியவை கணக்கில் கொள்ளப்படுகின்றன.

வாழ்க்கைத் தரம் என்பதில், சமையல் எரிபொருள் (விறகுக் கட்டை, சாணம், சாண எரிவாயு, பெட்ரோலிய எரிவாயு), கழிப்பிட வசதி, குடிநீர், மின்சாரம், வீடு (குடிசை, கல் கட்டடம், வாடகை/ சொந்தம்) சொத்து (ஆடு, மாடு, டி.வி, செல்ஃபோன், ஆபரணங்கள்), வங்கிக் கணக்கு ஆகியவை கருத்தில் கொள்ளப்படுகின்றன.

இது மூன்றும் மட்டுமின்றி, ஏற்கனவே உள்ள வருமானமும் கணக்கில் கொள்ளப்படும்.

ஐ.நா.வும் நிதி ஆயோக்கும் சொல்வது என்ன?

பல பரிமாண வறுமைக் குறியீட்டு முறையைத் தான் ஐ.நா.சபையின் மனித மேம்பாட்டு அறிக்கை (Human Development Report ) பயன்படுத்துகிறது. 2021 முதல் இந்த அடிப்படையில்தான் அது உலக நாடுகளை தரவரிசைப் படுத்துகிறது.

நிதி ஆயோக் அறிக்கையில்,  ‘வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட வறுமைக் குறியீடு கணக்கெடுப்பினால் வறுமையின் தீவிரமும் பரிமாணமும் வெளிப்படுவதில்லை. வெறும் தலைக் கணக்கு மட்டும் தான் தெரிகிறது. தலைக் கணக்கெடுப்பு முறையில் ஏழை மேலும் ஏழையாகப் போயிருக்கலாம். அது நமக்குத் தெரியாது. வறுமைக் கோட்டைத் தாண்ட வேண்டியவர்கள் எத்தனை பேர் என்பது மட்டும்தான் தெரியும்’  என்று பழைய முறையின் போதாமையை சுட்டிக்காட்டுகிறது.

புதிய முறையை வடிவமைத்தவர்கள்

இந்த போதாமையைப் போக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சபீனா அல்கீரி, ஜேம்ஸ் பாஸ்டர் என்ற இரண்டு பேராசிரியர்கள் இணைந்து உருவாக்கியதே இந்த  ‘பல பரிமாண வறுமைக் குறியீட்டு முறை’. இதன் மூலம் வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமின்றி, வறுமையின் ஆழமும் தீவிரமும் தெரிய வரும்.

இந்த முறையில் கூடுதல் சிறப்பம்சமாக பாரதத்தைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பொருளியலாளரான அமார்த்தியா சென்னின் கருத்தும் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதைக் கூறலாம்.

மார்த்தியா சென் சொன்னது என்ன?

அமார்த்தியா சென்னின் தேற்றம், செயல்திறன் அல்லது தகுதி அணுகுமுறை (Capability Approach) எனப்படுகிறது. அதாவது மக்கள் நல்வாழ்வைக் கணக்கிட அவர்களுக்கு உள்ள வளங்கள் மட்டுமன்றி, அதை பயன்படுத்திக் கொள்ளக்கூடிய நிலையில் திறன் படைத்தவர்களாக இருக்கிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும் என்பது, அவரது அணுகுமுறை. அதையும் ஆக்ஸ்போர்ட் பேராசிரியர்கள் வடிவமைத்த இந்த புதிய பல பரிணாம வறுமைக் குறியீட்டு முறை கருத்தில் கொண்டுள்ளது. அதைத் தான் மோடி அரசு பயன்படுத்தி உள்ளது. அது மட்டுமல்ல, அதை மேலும் மெருகேற்றி உள்ளது.

மோடி அரசு செய்த மேம்பாடு

உலக அளவில் பயன்படுத்தப்படும் பல பரிமாண வருமான வறுமைக் குறியீட்டு முறை பத்து அம்சங்களைக் கொண்டது. மோடி அரசு அந்த பத்து அம்சங்களை அப்படியே எடுத்துக்கொண்டு, அத்துடன் மேலும் இரண்டு அம்சங்களைச் சேர்த்து, பன்னிரண்டு அம்சக் கணக்கிட்டு முறையாக மேம்படுத்தி உள்ளது. நம் தேசத்திற்கான முன்னுரிமை அம்சமாக தாய்- சேய் ஆரோக்கியம், வங்கிக் கணக்கு என்ற இரண்டு விஷயங்களைச் சேர்த்துள்ளது.

ஆரோக்கியம் என்பதில் மூன்று உட்பிரிவுகள், கல்வி என்பதில் இரண்டு உட்பிரிவுகள், வாழ்க்கைத் தரம் பிரிவில் ஏழு உட்பிரிவுகள் என மொத்தம் பன்னிரண்டு அம்சங்களைக் கொண்டதாக பாரத வறுமைக் கணக்கிட்டு முறை மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு துணைப் பிரிவும் வெவ்வேறு மதிப்பீடுகளைக் கொண்டிருந்தாலும் மூன்று முக்கியப் பிரிவுகளும் சமமான மதிப்பீட்டைக் கொண்டுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் எது எல்லைக் கோடு என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த எல்லைக் கோடானது தனி மனிதனுக்கு எந்த அளவுக்கு போதுமானது என்று நேர்மறையாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக  ‘எது இல்லை என்றால்’ என்ற எதிர்மறை அணுகுமுறையே இதுவரை பின்பற்றப்பட்டு வந்தது. இப்போது அது மாற்றப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஒருவர் ஆறு ஆண்டுகள் பள்ளிக் கல்வி பெற்றிருந்தால் அதற்கு ஒரு மதிப்பீடு உண்டு. முன்பு அப்படியல்ல,  ‘உயர்நிலை/ நடுநிலை ப்பள்ளி தாண்டாதவர்’ (எதிர்மறை)  என்பார்கள்.

முதல், இரண்டாம் அறிக்கைகள்

பல பரிமாண வறுமைக் குறியீட்டை 2021இல் அரசு முதலில் வெளியிட்டது. அந்தக் குறியீட்டில் 36 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் 640 மாவட்டங்களும் இடம்பெற்றிருந்தன. இது 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.

இரண்டாவது குறியீடு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இது குடும்ப ஆரோக்கிய தேசியக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த பல பரிமாண வறுமைக் குறியீடு அறிக்கை 2015-16 இல் எடுக்கப்பட்ட குடும்ப ஆரோக்கிய தேசியக் கணக்கெடுப்பையும் 2019-21 இல் எடுக்கப்பட்ட அடுத்த கணக்கெடுப்பையும் கருத்தில் கொண்டு இந்த இரண்டிற்கும் இடையே ஏற்பட்டுள்ள மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, வறுமை குறைந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறது

கடந்த ஆண்டு வெளியான குறியீட்டு அறிக்கையைத் தான் மேதகு குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டு இருந்தார்.

விமர்சனங்களும் விளக்கங்களும்

வழக்கம்போல நம் நாட்டு மேதாவிகள் இதில் குறை கண்டுபிடித்து விமர்சித்துள்ளனர். விமர்சிக்க கூடாது என்பதல்ல, ஆனால் இவர்கள் இந்த ஆட்சியின் போது தான் புற்றீசல் போலக் கிளம்பி வருகிறார்கள். கடந்த காலத்தில் இவர்கள் அனைவரும் வாய் மூடி, அதனால் வசதியாக வாழ்ந்திருந்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

முன்னாள் புள்ளியியல் துறை தலைவராக இருந்தவர் புரோணாப் சென். அவர் சொல்லுகிறார்,  “வறுமை என்பது வருமானம் தொடர்புடைய கருத்து. பல பரிமாண வறுமைக் குறியீடு என்பது, எதைப் பெறாமல் இழந்து விட்டார்கள் என்று கூறும்  இழப்பியல் கோட்பாடு. இரண்டும் முற்றிலும் வேறானது. எடுத்துக்காட்டாக, ஒரு பழங்கால ஜமீன்தாரை நினைத்துக் கொள்ளுங்கள். அவர் பாரம்பரியமான பெரிய வீட்டில் வசிப்பார். ஆனால் வருமானம் இல்லாமல் திண்டாடுவார். பல பரிமாண வறுமைக் குறியீட்டின்படி அவர் வறியவர் அல்ல என்று கருதப்படுவார்.”

அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருப்பவர் அமித் பாஸோல். அவர் சொல்கிறார்,  “இதுவரை பின்பற்றப்பட்ட மரபான வறுமைக் குறியீடு கணக்கீட்டு முறைக்கு மாற்றாக பல பரிமாண வறுமைக் குறியீடு முறையைக் கருத முடியாது. எடுத்துக்காட்டாக, கல்வியைப் பற்றிய குறியீடு. இப்போது அதிகமானோர் கல்வியறிவு பெற்று வருகின்றனர். அதனால் புதிய கணக்கீட்டு முறையில் வறுமைக் கோட்டுக்கு மேலே வந்து விடுகிறார்கள். ஆனால் அவர்கள் கடன் பெற்று படித்திருப்பார்கள் அல்லது சொத்தை விற்று கல்வி பெற்றிருப்பார்கள்”  என்று புதிய முறையின் போதாமையை சுட்டிக்காட்டுகிறார்.

விமர்சகர்கள் ஒப்புக் கொண்டது என்ன?

அதே வேளையில் பேராசிரியர் சென் ஒரு விஷயத்தைக் கூறுகிறார்.  “இந்தப் புதிய முறையினால் எந்த இடத்தில் பிரச்னை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. கல்வித் துறை, ஆரோக்கியம், வீட்டு வசதி ஆகியவற்றில் எங்கு குறைபாடு, பிரச்னை என்பது தெளிவாகத் தெரிந்து விடுவதால், அரசு அந்த இடத்தை குறிவைத்து பிரச்னையைத் தீர்க்க திட்டமிட்டுச் செயல்பட முடியும். இது அரசின் திட்டமிடலுக்கு உதவியாக இருக்குமேயன்றி வறுமையைக் கணக்கிடுவதற்கு உதவாது” என்கிறார் அவர்.

பேராசிரியர் பாஸோல் கூறுகிறார், நாம் இரண்டு முறையிலும் கணக்கெடுப்பு செய்து, இரண்டையும் ஒன்றாக்கி அதன் அடிப்படையில் குறியீடு தயாரிக்க வேண்டும்.

குழப்பவாதிகள்

சில தொழிலாளர் எண்ணிக்கையைக் கொண்டு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். வேறு சிலர் வெவ்வேறு துறை அறிக்கைகளைக் கொண்டு விவாதம் செய்கின்றனர். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக நாட்டின் வறுமையைப் பற்றி சரியாக வெளிப்படுத்துமா என்ற கேள்வி எழாமல் இல்லை.

விவாதங்கள் தொடர்கின்றன. ஆனால் அரசுதான் கணக்கீடு செய்து அறிக்கை வெளியிட வேண்டும். அரசு பழைய முறையைக் கைவிட்டு விட்டது. புதிய முறையின்படி மேலும் ஒரு குறியீட்டு ஆண்டறிக்கை இந்த வருடம் வெளியாக உள்ளது. அதைக் கண்டு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

கள்ள மௌனம்

ஆனால் பொருளாதாரம் பற்றி முட்டுச்சந்தில் கூட வாய் கிழியப் பேசும் கம்யூனிஸ்டுகள் குடியரசுத் தலைவரின் இந்த விஷயத்தைக் கண்டு கொள்ளாமல் விலகி, அயோத்தி, பெண்கள் இடஒதுக்கீடு பற்றி மட்டுமே பேசுகின்றனர். எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, ஊடகங்களும் பொருளாதார விஷயங்களை விவாதிக்காமல் அரசியலில் மட்டுமே கவனத்தை திசை திருப்புவது நாட்டிற்கு நல்லதல்ல.

$$$

Leave a comment