அயோத்தி கோயில்- மேலும் இரு நூல்கள்

-திருநின்றவூர் ரவிகுமார்

அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் தொடர்பாக அண்மையில் வெளிவந்துள்ள மேலும் இரு நூல்களை அறிமுகம் செய்கிறார் எழுத்தாளர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்... 

காண்க: ஸ்ரீ ராம ஜென்மபூமி – வெற்றி வரலாறு

.

1. ஆலயம் காணும் அயோத்தி நாயகன்

ஆசிரியர்: சேக்கிழான்
வெளியீடு: விஜயபாரதம் பிரசுரம், சேத்துப்பட்டு, சென்னை- 31
விலை: ரூ. 125/-
தொடர்புக்கு: +91 89391 49466

ஸ்ரீ ராமஜென்ம பூமி மீட்பு இயக்கத்தின் வரலாறு நீண்டது. மக்கள் மன்றத்தில், சட்டமன்றங்களில், நீதிமன்றங்களில் என பல்வேறு நிலைகளில் நடந்த போராட்டங்களும் இழப்புகளும் கொண்ட சுமார் 500 ஆண்டுகால வரலாறு அது. ஆனால் 1984 இல் விஸ்வ ஹிந்து பரிஷத் அந்த விஷயத்தை கையில் எடுத்ததும், அதன் பிறகு பாஜக 1989 இல் ‘அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம்’ என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியதும், அந்த இயக்கத்தின் போக்கில் ஒரு புதிய உத்வேகத்தை அளித்தன.

எல்லா விஷயங்களிலும் ஓட்டு அரசியல் செய்வதையே வழக்கமாகக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளால் 1992 டிசம்பர் 6 தேதி சர்ச்சைக்குரிய கட்டடம் வேறு வழியின்றி தகர்க்கப்பட்டது. அதன்பிறகு, மக்கள் ஒத்துழைப்பு, மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தின் சாசன அமர்வின் ஒருமித்த தீர்ப்பு என அந்த பிரச்சனை 2019 இல் முடிவுக்கு வந்தது. 2024 ஜனவரியில் ஸ்ரீ ராமபிரானின் ஆலயம் பிரம்மாண்டமாக நிறுவப்பட்டது.

அந்த நீண்ட வரலாற்றை ஏழு அத்தியாயங்களாக பிரித்து எழுதியுள்ளார் சேக்கிழான். இவர் ராம ஜன்ம பூமி மீட்பு இயக்கத்தில் ஈடுபட்டதற்காக 1990 இல் திமுக அரசினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். அதனால் இந்த நூலை எழுதும் பணியில் உணர்வுப்பூர்வமாக ஈடுபட்டுள்ளார். ஆனால் தன் உணர்வுகளை எங்கும் புகுத்தாமல் நடந்ததை நடந்த விதமாகத் தொகுத்தளித்துள்ளார்.

அயோத்தி ராம ஜன்ம பூமி இயக்க வரலாற்றை இதற்கு முன்பு சுருக்கமாகத் தொகுத்தவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன். அவரே இந்த நூலைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கி இருப்பது சிறப்பு. பல புதிய செய்திகளுடன் படங்களையும் கொண்டதாக பொலிவுடன் இருக்கிறது இந்நூல்.

ஸ்ரீ ராம ஜன்ம பூமி வரலாற்றை, அதில் ஈடுபட்டவர்களின் தியாக சரித்திரத்தை, போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளை மீறி தேசிய உணர்வு வென்று வாகை சூடி உள்ளதை அறிந்து கொள்ள விழைவோர் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.

$$$

2. அயோத்தி (அ முதல் ஃ வரை)

ஆசிரியர்: ஆர்.ராதாகிருஷ்ணன்
வெளியீடு: சுவாசம் பதிப்பகம், பொன்மார், சென்னை-127
விலை: ரூ. 230/-
தொடர்புக்கு: 81480 66645

நரசிம்ம ராவ் ஆட்சிக்கு வந்த போது நாட்டில் ஏகப்பட்ட பிரச்னைகள். கட்சியிலும் பிரச்னை. தன் அனுபவத்தினால் அவர் எல்லாவற்றையும் திறம்படத் தீர்த்தார். அதனால் நாடு வளர்ச்சி பாதைக்குத் திரும்பியது என்றெல்லாம் அவருக்கு புகழாரத்தோடு தொடங்குகிறது  இந்த நூல்.

ஒவ்வொரு பிரச்னையாக எதிர்கொண்டு முறியடித்து….. கடைசியாக நின்றது ஒரே ஒரு பிரச்னைதான். அதுதான் ‘அயோத்தி ராமர் கோயில்’ பிரச்னை (பக். 10) என்கிறார். அயோத்தி விஷயத்தில் நரசிம்ம ராவ், அத்வானி, வாஜ்பாய் சொன்னதை நம்பினார். அவர்கள் துரோகம் செய்து விட்டார்கள் என்கிறார் நூலாசிரியர். ஐயோ பாவம்.

உச்சநீதிமன்றம் 1992 டிசம்பர் 6ஆம் தேதி தீர்ப்பு சொல்வதாக இருந்ததை கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கக் காரணம் ராவ். சர்ச்சைக்குரிய கட்டடம் என்றிருந்ததை மசூதி என்று கூறிய முதல் தலைவரும் அவர்தான். அதே இடத்தில் மீண்டும் மசூதி கட்டித் தரப்படும் என்று அறிவித்தவரும் அவரே தான். பிரச்னைக்கு சம்பந்தமே இல்லாத ராஜஸ்தான், ஹிமாச்சல், மத்திய பிரதேச மாநில அரசுகளை, 356வது சட்டப் பிரிவைப் பயன்படுத்திக் கலைத்தவரும்  அவர்தான். கட்டடத்தைத் தகர்க்கத் தூண்டியவரும், பழியை பாஜக ஆர்.எஸ்.எஸ். மீது போட்டவரும், அதனால் தனது பதவியைக் காப்பாற்றிக் கொண்டு ஆதாயம் அடைந்தவரும், பாஜகவைத் தடை செய்ய திட்டமிட்டு வாஜ்பாயின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அம்பலப்பட்டு பின்வாங்கியவருமான ராவை தான் அப்பாவி, ஏமாளி என்கிறார் நூலாசிரியர்.

மக்கள் பலருக்கும் மனதளவில் மன்னர்கள், நவாபுகள் ஆட்சியை விட வெள்ளையர் ஆட்சி எவ்வளவோ மேல் என்ற எண்ணம் உருவானது மறுக்க முடியாத உண்மை (பக். 48), ‘வெள்ளைக்காரன் நீதிக்கு பேர் போனவன்’ என்ற அபிப்பிராயம் மக்களிடையே நிலவியது (பக். 63) என்பது போன்ற நூலாசிரியரின் கருத்துகள் அடிமைத்தனத்தின் எதிரொலி. அதற்கு எதிரானதே அயோத்தி ஆலய  நிர்மாணம்.

கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்ட வேண்டிய நிலை வரும்போது, அது கோயிலா அல்லது புத்த விஹாரமா என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறார் நூலாசிரியர். இதிலிருந்து அவரது நோக்கம் நடந்ததை சொல்வதல்ல, உள்நோக்கத்துடன் திசை திருப்புவது என்பது தெளிவாக வெளிப்படுகிறது.

$$$

Leave a comment