-திருநின்றவூர் ரவிகுமார்

ராமருக்கு ஏன் இந்த மகத்துவம், தமிழகத்தில் ராமாயணத்தின் தாக்கம் என்று தொடங்கும் இந்த நூலில், அயோத்தி ராமர் பிறந்த இடத்தில் பாபர் காலத்தில் நடந்தது தொடங்கி இப்பொழுது அமைந்துள்ள பிரம்மாண்டமான கோயிலின் சிறப்பு வரை தொகுக்கப்பட்டுள்ளது.
பாரத நாட்டில் எண்ணற்ற மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியிலும் மிகச் சிறந்த கவிஞர், இலக்கியவாதி யார் என்று பார்த்தால் அவர் ராமாயணத்தை அந்த மொழியில் எழுதி இருப்பார், பாடியிருப்பார். ராமன் புகழைப் பாடுபவர்தான் சிறந்த கவிஞர் என்று பாரத மக்கள் கருதுகிறார்கள். பாரத நாட்டு மொழிகளில் உள்ள ராமாயணத்தின் பெயர்கள், அதை எழுதியவர்கள் யார், யார் என்று தொகுத்துக் கூறுகிறது ஒரு கட்டுரை.
‘உலகில் ஒவ்வொரு நாட்டின் தோற்றத்திற்கும் இருப்பிற்கும் ஒரு காரணம் உண்டு’ என்று ஸ்ரீ அரவிந்தர் கூறியுள்ளார். ‘பாரதத்தின் இருப்பிற்குக் காரணம் தர்மம். அதை உலகிற்குக் கொடுக்கவே பாரதம் உயிருடன் உள்ளது’ என்பது அவரது கூற்று. அறத்தின் நாயகனான ராமன் புகழ் உலகமெங்கும் பரவி உள்ளதே இதற்கு சான்று. உலக மொழிகள் பலவற்றிலும் எழுதப்பட்டுள்ள ராமாயணத்தைப் பற்றிக் கூறுகிறது ஒரு கட்டுரை.
ராமர் பிறந்த இடத்தை மீட்பதற்காக நடந்த போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு பற்றியும், தமிழ்நாட்டில் அதற்காக உயிர் நீத்தவர்கள் பற்றியும் உள்ள தொகுப்பு, திமுக என்றைக்கும் ஹிந்து விரோதி தான் என்பதை உறுதி செய்கிறது.
கடைசியில் (உள்ளட்டையில்), இன்று அயோத்தியில் பிரம்மாண்டமான ஆலயம் எழுவதற்கு மூளையாக, உடலாக, களமாடிய மோரோபந்த் பிங்களே, அசோக் சிங்கல், எல்.கே.அத்வானி ஆகியோர் பற்றிய குறிப்புடன் கூடிய படங்கள் சிறப்பு.
***
நூல் விவரம்:
ஸ்ரீ ராம ஜென்மபூமி - வெற்றி வரலாறு
தொகுப்பாளர்: பசுந்தாய் கணேசன்
வெளியீடு: பசுத்தாய் பதிப்பகம்,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை -2
விலை: ரூ. 300/-
தொடர்புக்கு: 98407 47694.
$$$
One thought on “ஸ்ரீ ராம ஜென்மபூமி – வெற்றி வரலாறு: நூல் அறிமுகம்”