-பிஆர்.மகாதேவன்
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் ‘பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை’ நூலை தமிழாக்கம் செய்தவர் எழுத்தாளர் திரு. பிஆர்.மகாதேவன். அவரது சீரிய சிந்தனை மிளிரும் சிறிய கட்டுரை இது....

டாக்டர் அம்பேத்கர் இந்தியப் பிரிவினைக்கு அருமையான செயல்திட்டம் தீட்டித் தந்திருந்தார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் வடமேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் அவர்களுடைய ஆட்சி அதிகாரம்தான் நடந்து வருகிறது. எனவே இந்தப் பிரிவினையினால் கூடுதலாக எதுவும் கிடைக்கப் போவதில்லை. பிற இந்திய மாகாணங்களில் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தனித்து அடையாளப்படுத்தும்படியாக எங்குமே அவர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை; இந்து பெரும்பான்மைக்கு மத்தியில்தான் இருக்கிறார்கள். இந்தியப் பிரிவினையினால் இந்தப் பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு அவர்கள் கோரும் தனி நாடு தொடர்பான எந்த அதிகாரமும் கிடைக்க வாய்ப்பு இல்லை.
ஆக, அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் ஏற்கெனவே தனி நாடாகத் தான் இருக்கிறார்கள். எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் இடங்களில் தனி நாடாக ஆகப் போவதும் இல்லை. எனவே இந்த பிரிவினையே அவசியமற்றது என்பதுதான் அவருடைய முதல் கருத்து.
அடுத்ததாக, வட மேற்கு மற்றும் வட கிழக்கு எல்லைப் பகுதியில் பிரித்துக் கொடுப்பதென்றால் அதை மிகவும் தெளிவாக, திட்டமிட்டு, நிதானமாகச் செய்ய வேண்டும் என்று அவர் சொன்னார்.
இந்துப் பிரதிநிதிகள், முஸ்லிம் பிரதிநிதிகள், சர்வதேசப் பிரதிநிகள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும். அவை இரு நாடுகளிலும் இடம் பெயரவிருக்கும் மக்கள், பரிமாறிக்கொள்ள வேண்டிய சொத்துகள், உடமைகள், பங்கிடப்பட வேண்டிய பிற விஷயங்கள் இவற்றை முதலில் கணக்கெடுக்க வேண்டும்.
இடம் பெயர்ந்து செல்பவர்களுக்கு இரு நாட்டு அரசுகளும் போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். புதிய தேசத்தில் உரிய இடங்களில் உரிய சொத்துகளுடன் வாழ வழி செய்துதர வேண்டும்.
இவையெல்லாம் குறைந்தது பத்து ஆண்டுகளுக்கான செயல்திட்டம்.
அதுவரை வடமேற்கு எல்லை மற்றும் வடகிழக்கு எல்லையில் இருக்கும் மாவட்டங்கள் எல்லாம் ஒரு பொதுவான அரசாங்க அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இருக்க வேண்டும்.
பாகிஸ்தான் என்ற நாடு உருவானதும் தனி நாடாக ஆகிவிடக் கூடாது. ஒரு பத்து ஆண்டுகள் இந்திய- பாகிஸ்தானிய பொது நிர்வாகத்தின் கீழ் நட்புறவில் இருக்க வேண்டும். ஒருவேளை பிரிந்து சென்றது தவறு என்று அவர்கள் நினைத்தால் திரும்பவும் இந்தியாவுடன் சேர்ந்துகொள்ள இடமிருக்க வேண்டும்.
உலகில் பல நாடுகளில் இதுபோல் நடந்த தேசப் பிரிவினையை எடுத்துக்காட்டி, ஒரு துளி ரத்தம் சிந்தாமல் ஒரு உடமையும் அழிக்கப்படாமல் இந்துஸ்தான், பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் உருவாக வேண்டும் என்று மிகத் தெளிவாக திட்டம் வகுத்துக் கொடுத்தார்.
இந்தியாவில் ஒரு முஸ்லிமுக்கு ஐந்து ஏக்கர் நிலம் இருந்தால் அதே மதிப்பிலான நிலம் பாகிஸ்தானில் கொடுக்கப்பட வேண்டும். அல்லது அதற்கு இணையான பணம் தரப்பட வேண்டும் என்று மிகத் தெளிவாக மிக நுணுக்கமாக செயல் திட்டம் வகுத்துத் தந்திருந்தார். இடம்பெயர்பவர்களுக்கு எதையும் இழக்க வேண்டியிருக்காது என்ற உத்தரவாதத்தை இரு நாடுகளும் தர எல்லா வழிகளையும் செய்ய வேண்டும் என்று அழுத்தமாகச் சொல்லியிருந்தார்.
இந்தியாவின் பிற மாகாணங்களில் இருக்கும் முஸ்லிம்களும் பாகிஸ்தான் என்ற புதிய தேசத்துக்கு மெள்ள மெள்ளச் சென்றுவிடுவதே நல்லது; ‘இந்துக்களுடன் எங்களால் வாழ முடியாது’ என்று சொல்லித்தானே தனிநாடு கேட்கிறார்கள்? எல்லையில் இருப்பவர்களுடைய அந்தக் கோரிக்கைக்கு உள் நாட்டிலும் வரவேற்பு இருக்கும்பட்சத்தில் அதன் பின்னும் இந்துஸ்தானில் இருப்பார்கள் என்றால் தனிநாடு கேட்பதன் அர்த்தமே அடிபட்டுப் போகிறது என்றும் சொன்னார்.
காந்தி நினைத்திருந்தால் அன்று தனக்கு இருந்த அளவிட முடியாத மக்கள் ஆதரவை வைத்து இந்தப் பிரச்னையை எளிதில் தீர்த்திருக்க முடியும். 1940கள் வரையில் டொமினியன் அந்தஸ்தே போதும் என்று போராடிய காந்தியும் காங்கிரஸும் ‘இந்தப் பிரிவினையை நல்லபடியாக முடித்துக் கொடுத்துவிட்டு பிரிட்டிஷார் போனால் போதும்’ என்று சொல்லியிருக்கலாம். அல்லது காஷ்மீர் பிரச்னையை உடனே ஐ.நா.வுக்குக் கொண்டுசெல்லத் தயாராக இருந்த , இந்தியப் பிரிவினையையும் ஐ.நா.வே இருந்து நல்ல முறையில் நடத்திக் கொடுக்கும்படிக் கேட்டிருக்கலாம்.
இருவரும் அதைச் செய்யவில்லை.
வரைபடத்தில் ஒரு கோட்டைக் கிழித்துவிட்டு இந்தப் பக்கம் இருப்பவர்கள் எல்லாம் அந்தப் பக்கம் போங்கள். அந்தப் பக்கம் இருப்பவர்கள் எல்லாம் இந்தப் பக்கம் வாருங்கள் என்று மிக மிகக் கொடூரமாக இந்தியப் பிரிவினையை பிரிட்டிஷார் முடிவு செய்தபோது, கைகட்டி எஜமான விசுவாசத்துடன் அவர்கள் வேடிக்கை பார்த்தனர்.
போரில் தோல்வியுற்று பின்வாங்கிச் செல்ல நேரும்போது அந்தக் கோபத்தில் நெல் வயல்களுக்குத் தீ வைத்துவிட்டுச் செல்வதும் குடிநீருக்கு வழியின்றி கிணறுகளை மூடிவிட்டுச் செல்வதும் பழங்காலப் போர் முறைகளில் ஒன்று. பிரிட்டிஷார் அதுபோலவே நம் நாட்டில் பிரிவினைத் தீயை வைத்துவிட்டுச் சென்றார்கள்; நல்லிணக்கக் கிணறுகளை மூடிவிட்டுச் சென்றார்கள்.
காந்தி தனது அமைதி யாத்திரைக்குக் கிடைத்த இன்னொரு அரிய வாய்ப்பு என்று, மந்தகாசப் புன்னகையுடன் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தார்.
டாக்டர் அம்பேத்கர் முன்வைத்த திட்டத்தின் அடிப்படையில் ‘பிரிவினையை பத்தாண்டு காலத் திட்டமாக முன்னெடுப்போம்’ என்று ஒரே ஒரு வார்த்தை காந்தி சொல்லியிருந்தால் யாரும் அதை மறுத்திருக்கப் போவதில்லை. அரசியல் சாசனத்தைவிட பாபா சாஹேபின் மகத்தான சாதனையாக அது இருந்திருக்கும். நினைத்துப் பாருங்கள் ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் நம் தேசப் பிரிவினையென்பது சுகப் பிரசவம் போல, தாங்க முடிந்த சிறிய வலியுடன் தாயும் சேயும் நலம் என நிகழ்ந்து முடிந்திருக்கும்.
இதில் இன்னொரு வேதனையென்னவென்றால், பிரிவினைக்காலத்தில் பெரும் வேதனையை அனுபவித்த இந்து ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் கோட்சேக்கு ஆதரவாக நின்றனர். கோட்சேக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டபோது அவர்கள் கதறி அழுதனர். அவர்கள் இழந்தது அவர்களுக்குத் தெரியும். அந்த வேதனையைத் துளியும் புரிந்துகொள்ளாத எஞ்சிய இந்துக்கள் அந்தத் தீர்ப்பை எழுதியதன் மூலம் இந்தியாவையும் சேர்த்தே தண்டித்திருக்கிறார்கள்.
இந்தியப் பிரிவினைக்கு வழிவகுத்தவர்களில் மிக முக்கியமானவரான காந்தியை கோட்சே மகாத்மா ஆக்கியிருக்கவே கூடாது.
டாக்டர் அம்பேத்கரின் செயல்திட்டம் ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்ததென்றால் நம் தேசம் அம்பேத்கரின் தேசமாக ஆகியிருக்கும். காந்தியும் இந்துத்துவர்களும் முன்னெடுத்த இந்து ஒற்றுமையும் அதே திசையில் முன்னேறி நம் தேசம் இப்போது இருப்பதைவிடப் பல மடங்கு உன்னதமான இந்துஸ்தானாகப் பரிணமித்திருக்கும்.
நம்பிப் பின் தொடர்ந்த தலைவர்களாலே கைவிடப்பட்ட முதல் தேசம் நம்முடையதாகத்தான் இருக்கும்.
அப்படியான கடைசி தேசமாகவும் அப்படியான கடைசி நிகழ்வாகவும் அதுவே அமையட்டும்.
- ஜனவரி 30 அன்று, முகநூலில் எழுத்தாளர் திரு. பிஆர். மகாதேவன் எழுதிய பதிவு இது.
- காண்க: பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை (நூல் அறிமுகம்)
$$$