மன்னன் எழுதிய மாமன்னனின் கதை

-திருநின்றவூர் ரவிகுமார்

ஆழ்வார்கள் பன்னிருவர்.  அவர்களில் ஒருவர் குலசேகர ஆழ்வார். சேர நாட்டில் (இன்றைய கேரளத்தில்) கொல்லிமலைப் பகுதியை அரசாண்டவர்.  இவர் இயற்றிய பாசுரங்கள் 105. அது  ‘பெருமாள் திருமொழி’ என்று அழைக்கப்படுகிறது.

வைணவ சமயத்தின் தாயெனக் கருதப்படுபவர் சுவாமி நம்மாழ்வார். வளர்ப்புத் தாயாகக் கருதப்படுபவர் ராமானுஜ மாமுனி. அவர் தமிழகத்தில் (திருப்பெரும்பூதூர்) பிறந்திருந்தாலும், பாரத தேசம் முழுக்கவும் பயணித்து விசிஷ்டாத்வைதம் என்று வழங்கப்படும் வைணவக் கருத்தியலை நிலைநிறுத்த வேண்டியிருந்த காரணத்தால், அவரது நூல்கள் அனைத்தும் வடமொழியிலேயே இருக்கின்றன. விதிவிலக்காக ஓரிரண்டு செய்யுள்களை அவர் தமிழில் இயற்றியுள்ளார். அதிலொன்று குலசேகர ஆழ்வாரைப் பற்றியது. அதிலிருந்தே குலசேகரப் பெருமானின் உயர்வைப் புரிந்து கொள்ளலாம். அந்தச் செய்யுள்:

இன்னமுது ஊட்டுகேன் இங்கே வா! பசுங்கிளியே!
தென்னரங்கம் பாடவல்ல சீர்பெருமாள் - பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள்
குலசேகரன் என்று கூறு.


    (உடையவரின் தனியன்)

“இளமையான பசும் கிளியே! என் அருகே வா! தென்திசையில் அமைந்துள்ள அழகிய திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள எம்பிரானின் பெருமைகளையும் சிறப்புகளையும் போற்றிப் பாட வல்லவரும், சீரும் சிறப்பும் மிக்கவரும், பெருமாள் என்ற பெயரை உடையவரும், அழகிய புருவங்களைக் கொண்ட நெற்றியை உடைய பெண்களுக்கு மன்மதன் போல் கவரக்கூடிய அழகிய தோற்றம் கொண்டவரும், சேரர் குலத்திற்கு அதிபதியானவரும், எங்கள் குலசேகரனை பற்றிய நீ பாடிக் கொண்டிருந்தால், உனக்கு இனிய தேவாமிர்தத்தை ஊட்டி உன்னை வளர்த்து வருவேன்” என்று நாயகி பாவத்தில் பாடியுள்ளார் உடையவரான எம்பெருமானார்.

இளம் கிளியைப் பார்த்து,  “எதையோ மீண்டும் மீண்டும் மிழற்றிக் கொண்டிருக்காதே. என் மதிப்பிற்குரிய குலசேகரன் பெயரை மட்டுமே திருப்பித் திருப்பி கூறிக் கொண்டிரு. அப்படி செய்தால், பொதுவாக எல்லோரும் கொடுப்பது போல் பாலும் பருப்பும் அல்ல, தேவாமிருதத்தையே உனக்கு உணவாகத் தருவேன். அதுவும் வேலைக்காரர்கள் மூலமாக அல்ல நானே உனக்கு ஊட்டுவேன்” என்று குலசேகர ஆழ்வார் மீது தனக்குள்ள பக்தியை வெளிப்படுத்தி உள்ளார் உடையவர்.

குலசேகர ஆழ்வார் தாம் இயற்றிய பெருமாள் திருமொழியில், 11  பாசுரங்களில் உத்தரகாண்டத்தை உள்ளடக்கிய ராமாயணத்தைக் கூறியுள்ளார். அது பத்தாம் திருமொழியாக உள்ளது. (நாலாயிர திவ்யப் பிரபந்தம்- முதலாயிரம்: 741- 751 / பெருமாள் திருமொழி- 10).

இப்பாடல்களில், அயோத்தி மாநகரின் சிறப்பைக் கூறுவதில் தொடங்கி ராம அவதாரம் பூரணம் பெறும்போது அனைவருடனும் வைகுண்டத்துக்கு மீண்டது வரை குலசேகரர் பாடியுள்ளார். அந்தப் பாசுரங்கள் தமிழகத்தில் சிதம்பரம் எனப்படும் தில்லை நகரில் உள்ள திருச்சித்ர கூடத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை மங்களாசாசனம் செய்யும் விதமாகப் பாடியதாகும்.

அங்கண் நெடுமதில் புடை சூழ் அயோத்தி என்னும்,
  அணிநகரத்து உலகனைத்தும் விளக்கும் சோதி,
வெங்கதிரோன் குளத்துக்கோர் விளக்காய்த் தோன்றி,
  விண்முழுதும் உயக்கொண்ட வீரன்தன்னைச்
செங்கண், நெடுங்கரு முகிலை இராமன் தன்னை,
  தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை, எம்பெருமான் தன்னை,
  என்று கொலோ கண்குளிரக் காணும் நாளே? 1

“அகன்றதும் அழகியதும் நீண்ட நெடிய உயர்ந்த மதில்களால் நாற்புறமும் சூழப்பட்ட நகர் அயோத்தி. அந்த புகழ்பெற்ற, அழகாக அலங்கரிக்கப்பட்ட நகரத்தில், இவ்வுலக உயிர்கள் அனைத்திற்கும் ஒளி மிளிரச் செய்கின்ற பெருவிளக்காக அவதரித்தவன். எல்லோராலும் விரும்பப்படுகின்ற சூரிய குலத்திற்கே ஒளி தருவது போல விளங்குபவன். விண்ணுலகத் தேவர்களின் துயரம் தீர்த்து, அவர்கள் அச்சமின்றி வாழ்வதற்குக் காரணமான வீரன். சிவந்த செந்தாமரை போன்ற கண்களை உடையவன். நீண்ட கரிய மேகத்தைப் போன்ற நிறத்தை உடையவன். ராமன் என்று அவனுக்குப் பெயர். அந்த ராமன் தில்லைநகரில் திருச்சித்ர கூடத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறான். ஒப்பற்ற தனிப்பெரும் தலைவனான அவனை என்றைக்கு என்னுடைய கண்கள் குளிரும்படி கண்டு வணங்கப் பெறுவேனோ?” என்று உருகுகிறார் சேர மன்னன் குலசேகரர்.

அயோத்தி மாநகரம் இன்று ஒளி விளக்குகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. உலகத்திற்கு வழிகாட்டும் ஜோதியாக ஒளிர்கிறது. அங்கு அர்ச்சாவதாரமாக மதலை வடிவில் ராமன் எழுந்தருள இருக்கிறான் (22-01-2024). எட்டாம் நூற்றாண்டில் ஆழ்வார் பாடிய ஒளிமிகுந்த அயோத்தி ஜோதியை நாம் கண்ணால் தரிசிக்கும் பாக்கியம் பெற்றுள்ளோம். திருச்சித்ரகூடம் என்பது தில்லை கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியாகும்.

வந்து எதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி,
  வரு குருதி பொழிதர வன்கணை ஒன்று ஏவி,
மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்விகாத்து,
  வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்;
செந்தளிர்வாய் மலர்நகை சேர் செழுந்தண் சோலைத்
  தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவராயிரவர் ஏத்த
  அணி மணி ஆசனத்திருந்த அம்மான் தானே! 2

“தன்னை மிகுந்த செருக்குடன் எதிர்த்துப் போரிட்ட தாடகை என்னும் அரக்கியின் மார்பை இரண்டாகப் பிளந்தவன். அவளது உடலில் இருந்து அருவி போல் ரத்தம் தரையில் பெருகி ஓடும்படி செய்தவன். ஒப்பற்ற கோதண்டம் என்ற வில்லிலிருந்து வலிமை பொருந்திய கணை ஒன்றினால் இதை சாதித்தவன். வேத மந்திரங்களை எப்போதும் ஓதிக்கொண்டே இருக்கும் விஸ்வாமித்திர முனிவரின் வேள்வியைக் காத்தவன். அந்த வேள்வியை அழிக்க வந்த மாரீசன், சுபாகு என்ற தாடகையின் இரு மகன்களின் ஒருவனின் (சுபாகு) உயிரை கடலில் செலுத்தி அழித்தவன். அந்த சிறுவன் யார் என்றால் செழுமையான குளிர்ச்சி பொருந்திய சோலைகள் உள்ள தில்லைநகரில் வேத விற்பனர்களான அந்தணர்கள் மூவாயிரம் பேரும் சூழ்ந்து நின்று போற்றி வணங்கும் அழகிய ரத்தினங்களால் செய்யப்பட்ட அரியாசனத்தில் வீற்றிருப்பவனாகிய என் தலைவனான ராமபிரான்” என்கிறார் ஆழ்வார்.

விஸ்வாமித்திரரின் வேள்வி காத்தது, தாடகை, சுபாகு வதம் செய்தது, மாரீசனைத் தப்பியோட விட்டதை இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் கூறுகிறார்.

செவ்வரி, நற் கரு நெடுங்கண் சீதைக்கு ஆகிச்
  சினவிடையோன் சிலை இறுத்து, மழுவாள் ஏந்தி,
வெவ்வரி நற் சிலைவாங்கி, வென்றிகொண்டு,
  வேல்வேந்தர் பகைதடித்த வீரன் தன்னை,
தெவ்வர் அஞ்சு நெடும்புரிசை, உயர்ந்த பாங்கர்த்
  தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்,
எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை,
  இறைஞ்சுவர் இணையடியே இறைஞ்சினேனே! 3

“நல்ல சிவந்த ரேகைகள் படிந்த நீண்ட கருமையான கண்களைக் கொண்டவள் சீதாப்பிராட்டி. அவளை மணம் புரிந்து கொள்வதற்காக காளையை வாகனமாகக் கொண்ட சிவபெருமானின் ஆற்றல் மிக்க வில்லை முறித்தான். திருமணம் முடிந்து அயோத்தி நகருக்குத் திரும்புகையில் மழுவாயுதம் கொண்டு எதிர்த்து வந்த பரசுராமனிடமிருந்து சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த கொடிய வில்லை வாங்கி நாணேற்றி, அவனது கொற்றத்தை அடக்கியவன். இதன்மூலம் பரசுராமனைக் கண்டு பயந்து நடுங்கிக் கொண்டிருந்த பல அரசர்களின் பயத்தைப் போக்கியவன். அவன் யாரென்றால், ஏனையவர்களால் கைகளால் பற்றுவதற்கும் கூட கடினமான கோதண்டம் என்னும் வில்லை தன் நீண்ட கரங்களில் பற்றியபடி வீற்றிருப்பவனாகிய ராமபிரான்” என்கிறார் சேரலர் கோன்.

சீதா கல்யாணம், பரசுராமன் கர்வபங்கம் ஆகியவை இந்தப் பாசுரத்தில் சேவிக்கப்படுகின்றன.

தொத்து அலர் பூஞ் சுரிகுழல் கைகேசி சொல்லால்,
தொல்நகரம் துறந்து, துறைக் கங்கை தன்னை
பத்தியுடைக் குகன்கடத்த, வனம் போய்ப்புக்கு,
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து,
சித்திர கூடத்து இருந்தான் தன்னை, இன்று
தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எத்தனையும் கண்குளிரக் காணப்பெற்ற
இரு நிலத்தார்க்கு, இமையவர் நேர் ஒவ்வார்தாமே! 4

“தனது நீண்டு சுருண்ட கூந்தலில் கொத்துக்கொத்தாய் மணம் வீசும் மலர்களை சூடிக் கொண்டிருப்பவள் கைகேயி. அவளது சொல் கேட்டு அரசு ஆட்சி துறந்து தொன்மையானதும், பரம்பரையாக தனக்கு உரியதுமான அயோத்தி நகரை விட்டு வெளியேறியவன். தன் மேல் அன்பு கொண்ட குகன் என்பவனால் படகு மூலம் கங்கையை கடந்து வனம் புகுந்தவன். காட்டில் சித்ரகூடத்தில் இருந்து தன் வனவாசத்தை கழித்தபோது, தன்னைக் காண வந்த தன் தம்பி பரதனுக்கு தன்னுடைய மரவடியையும் அரசு ஆட்சியையும் மனமுவந்து தந்தவன் ராமபிரான்”.

இது இப்பாசுரத்தின் கருத்து. இதில் கைகேயினால் ராமன் வனமேகியதும், குகனின் நட்பும், பரதனுக்கு ஆட்சி பொறுப்பும் பாதுகையும் தந்ததும் சொல்லப்படுகின்றன.

வலி வணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று,
  வண்தமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி,
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி,
  கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி,
சிலை வணக்கி மான் மறிய எய்தான் தன்னை,
  தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
தலை வணங்கிக் கை கூப்பி ஏத்த வல்லார்,
  திரிதலால் தவமுடைத்து இத் தரணிதானே! 5

“பகைவர்களைத் தோற்றோடச் செய்யும் வலிமைமிக்க மலை போன்ற பெரிய தோள்களை உடைய விராதன் என்னும் அரக்கனைக் கொன்றவன். வளமையான தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்து புகழ் கொண்டவர் அகத்திய முனிவர். அவர் மனம் உகந்து அளித்த சீரிய கட்டமைப்பு கொண்ட வில்லைப் பெற்றவன். கலைமானைப் போன்று மருண்ட பார்வையும்  அழகிய தோற்றமும் கொண்டு வந்த சூர்ப்பனகை என்னும் அரக்கியின் மூக்கை அரிந்தவன். கரன், தூடணன், திரிசிரா ஆகியோர்களுடன் போரிட்டு அவர்களின் உயிரைப் போக்கியவன். மாயமானாக உருமாறி வந்த மாரீசனை தன் வில்லை வளைத்து அம்பெய்திக் கொன்றவன். அப்படிப்பட்ட ராமபிரானை தலையால் வணங்கி, கைகளால் தொழுது, வாயால் போற்றி, வணங்க வல்லவர்கள் இருப்பதால் இந்த பூவுலகம் பேறு பெற்றதாகிறது”.

இந்தப் பாசுரத்தில் அகத்திய முனிவரைச் சந்தித்தது, அவரிடம் விற்படை பெற்றது, விராதனைக் கொன்றது, மான் விழியாள் சூர்ப்பனகை மூக்கை அரிந்தது, கரன், தூடணன், திரிசிரா ஆகியோரை போரிட்டுக் கொன்றது, ராவணனின் கட்டளையால் மாயமானாக வந்த மாரீசனை வில்லடித்துக் கொன்றது என ராமனின் வீர தீரச் செயல்கள் வரிசையாகச் சொல்லப்படுகின்றன. ராமன் தன் அவதார நோக்கத்தை மேலும் அணுகியதை இந்தப் பாசுரம் கூறுகிறது.

தனம் மருவு வைதேகி பிரியலுற்று,
  தளர்வு எய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி,
வனம் மருவு கவியரசன் காதல்கொண்டு,
  வாலியைக் கொன்று, இலங்கை நகர் அரக்கர் கோமான்,
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை,
  தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
இனி தமர்ந்த அம்மானை, இராமன் தன்னை
  ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே. 6

“செல்வத்திற்கு அதிபதியானவள், ராமனின் நெஞ்சத்தில் என்றும் நீங்காமல் இடம் பிடித்தவள் சீதா பிராட்டி. காட்டில் அவளைப் பிரித்ததால் மனத்தளர்வு ஏற்பட்டது அவனுக்கு. பிறகு பக்ஷி ராஜாவான சடாயுவைச் சந்தித்தது. அவன் இறந்ததும் வைகுந்தம் அருளியது கூறப்படுகிறது. பிறகு மலைப் பகுதியில் தன் அண்ணனான வாலிக்கு பயந்து வாழ்ந்த சுக்ரீவனைச் சந்தித்து நட்பு பூண்டது. அவன் பொருட்டு வாலியைக் கொன்றது. பிராட்டியைத் தேடி நாற்புறமும் சென்ற வானர வீரர்களில் தென்திசை சென்ற அனுமானைக் கொண்டு இலங்கை அதிபதியாக இருந்த ராவணனின் செருக்கு அடங்கும்படி அந்நகருக்குத் தீயிட்டது” இங்கு சொல்லப்பட்டது.

குரை கடலை அடலம்பால் மறுகஎய்து,
  குலைகட்டி, மறுகரையை அதனால் ஏறி,
எரிநெடுவேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்
  இன்னுயிர் கொண்டு, அவன் தம்பிக்கு அரசும் ஈந்து,
திருமகளோடு இனிதமர்ந்த செல்வன் தன்னை,
  தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அரசமர்ந்தான் அடிசூடும் அரசையல்லால்
  அரசாக எண்ணேன் மற்றரசு தானே! 7

“ஓயாது அலைகள் வீசுவதால் எப்பொழுதும் ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கும் கடலை தன் அம்பால் கலங்கடித்தவன். ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் மீது அணை கட்டி அதன் மீதேறி இலங்கைக்குச் சென்றவன். நீண்ட வேலாயுதங்களைக் கொண்ட அரக்கர்களையும் அவர்களது தலைவனான ராவணனின் உயிரையும் கவர்ந்தவன். அவனது தம்பியான வீடணனுக்கு முடிசூட்டி அரசாட்சி செய்ய வைத்தவன் ராமபிரான்” என்கிறது இப்பாசுரம்.

இதில் மூன்று விஷயங்கள் கவனத்தைக் கவர்கின்றன. ஒன்று, அணை கட்டி அதன் மீதேறி இலங்கை சென்றவன் ராமபிரான். இரண்டு, திருமகளோடு இனிதமர்ந்த செல்வன்.  ‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்’ என்று தாயாரையும் பெருமாளையும் சேர்த்து மங்களா சாசனம் செய்வது. மூன்றாவதும் முக்கியமானதும்,  ‘அரசாக எண்ணேன் மற்றரசு தானே!’ இங்கு ராம ராஜ்ஜியத்தின் பெருமை பேசப்பட்டுள்ளது.

அம்பொன், நெடுமணி மாட அயோத்தி எய்தி,
  அரசு எய்தி, அகத்தியன்வாய், தன் முன் கொன்றான்
தன் பெரும்தொல் கதைகேட்டு மிதிலைச் செல்வி
  உலகு உய்ய திருவயிறு வாய்த்த மக்கள்
செம்பவளத் திரல்வாய், தன் சரிதை கேட்டான்
  தில்லை நகர் திருச்சித்ர கூடந் தன்னுள்
எம்பெருமான் தன் சரிதை, செவியால், கண்ணால்
  பருகுவோம், இன்னமுதம் மதியோம் அன்றே! 8

“ராமபிரானின் முடிசூட்டு விழாவிற்காக அழகிய பொன்னாலும் உயர்ந்த ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த மாட மாளிகைகளைக் கொண்ட அயோத்தி நகருக்கு மீண்டும் வந்தது, முடி சூட்டிக்கொண்டு அரசாட்சி ஏற்றது, அரசவைக்கு வந்த அகத்திய மாமுனி இராமபிரானால் கொல்லப்பட்ட இராவணனின் வரலாற்றை அனைவரும் அறியும் விதமாக எடுத்துக் கூறியது, சீதைப் பிராட்டி ஈன்ற மக்களான லவன், குசன் ஆகியோரின் பவளம் போன்ற சிவந்த வாயினால் தன்னுடைய வரலாற்றை ராமபிரான் கேட்டது” ஆகியவற்றை இந்தப் பாசுரத்தில் கூறுகிறார் ஆழ்வார்.

அகத்திய மாமுனி  தாமதமாக வருகிறார். வந்தவர் அரசவையில் எல்லோருக்கும் தெரியும்படி ராவணனின் மாட்சியையும் ராமபிரானால் அவனுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியையும் எடுத்துக் கூறுகிறார். அப்போதுதான் மக்களுக்கு நடந்த விஷயம் முழுமையாகவும் தெளிவாகவும் தெரிய வருகிறது. வான்மீகி முனிவரால் பயிற்றுவிக்கப்பட்ட லவன், குசன் இருவரும் ஸ்ரீ ராமபிரான் முன்பு அவரது அரசவையில் அவரது வரலாறாகிய ராமாயணத்தைப் பாடியது என ஆழ்வார் கூறும் இரண்டு நிகழ்வுகளும் உத்தர ராமாயணத்தில் வருகின்றன. அவற்றை இங்கே கூறுகிறார் குலசேகரர்.

செறிதவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று,
  செழு மறையோன் உயிர்மீட்டு, தவத்தோன் ஈந்த
நிறை மணிப்பூண் அணியும் கொண்டு, இலவணன் தன்னைத்
  தம்பியால் வான் ஏற்றி, முனிவன் வேண்ட,
திறல் விளங்கும் இலக்குவனைப் பிரிந்தான் தன்னை
  தில்லை நகர் திருச்சித்ர கூடந் தன்னுள்
உறைவானை, மறவாத உள்ளந் தன்னை
  உடையோம்; மற்று உறுதுயரம் அடையோம் அன்றே. 9

“நிறைய தவத்தை இயற்றிய சம்புகன் என்பவனை அவன் இருக்கும் இடம் தேடிச் சென்று அவனைக் கொன்றவன். அதன்மூலம் சிறந்த அந்தணச் சிறுவனின் உயிரை மீட்டவன். தவத்தில் சிறந்த அகத்தியர் அளித்த மதிப்பு மிக்க அணிகலன்களைப் பூண்டவன். இலவணன் என்றும் அசுரனை தன் தம்பியாகிய சத்துருக்கனைக் கொண்டு வீரசுவர்க்கத்திற்கு அனுப்பியவன். துர்வாச முனிவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி தனது மற்றொரு தம்பியான இலக்குவனனைப் பிரிந்தவன் ராமபிரான்” என்கிறார் இந்தப் பாசுரத்தில்.

சம்புகன் நிறைய (செறி= நிறைந்த) தவம் செய்தவன் என்பது தெரிகிறது. அது அன்றைய காலகட்டத்தின் நெறிமுறைகளுக்கு உட்பட்டதா, அதனால் சமூகத்திற்கு நன்மை ஏற்பட்டதா அல்லது தீமை ஏற்பட்டதா என்று கேள்வி எழுகிறது. அறத்தின் வழியில் வழுவாத ஆட்சி செய்தவர் ராமபிரான். அவர் அவனைத் தேடிச் சென்று கொன்றிருக்கிறார் என்றால், அவன் தவறிழைத்தவன் ஆகிறான். இன்று சிலர், ராஜ தண்டனை பெற்றவனை  ‘தலித்’ என்று வலிந்து பொருள் கொண்டு பிலாக்கணம் வைக்கிறார்கள். அது தவறு.

ஆரியர்கள் வடக்கில் இருந்து வந்தவர்கள் என்றும், தெற்கில் இருப்பவர்கள் திராவிடர்கள் என்றும், அயோத்தி தமிழகத்திற்கு வடக்கில் இருப்பதால் ஸ்ரீ ராமபிரான் ஆரியன் என்றும், தெற்கில் இருந்த ராவணன் திராவிடன் என்றும் கட்சி கட்டினார்கள். ஆனால், அவர்களின் கூற்றுப்படியே, ராவணன் அந்தணர் குலம் என்பதையும், ஸ்ரீ ராமபிரான் ஷத்ரியன் என்பதையும் சுட்டிக் காட்டிய பின்னர், அவதூறு அடங்கியது.

ராமாயணத்தை இயற்றிய ஆதிகவி என்று போற்றப்படும் வான்மீகி தொடக்கத்தில் வேடுவ குலத்தில் பிறந்து வழிப்பறி கொள்ளையனாக வாழ்ந்தார். அவரை மகரிஷி என்று ராமபிரான் போற்றுகிறார். படகோட்டிய குகன் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தவர். அவனை ராமன் –  நண்பனாக அல்ல- சகோதரனாகவே ஏற்றுக் கொண்டான் என்று கம்பர் கூறுகிறார். ‘குகனோடு ஐவரானோம், என்பது கம்பராமாயண வரி. குரங்கரசன் சுக்ரீவனை ஆறாவது சகோதரனாக ஏற்றுக் கொள்கிறார் ராமபிரான். அரக வேந்தனான எதிரியின் தம்பி வீடணன் தன்னுடன் இருந்து தனக்கு பாதகம் செய்து விடுவானோ என்று சந்தேகம் கொள்ளாமல், அவனையும் சகோதரனாக ஏற்றுக் கொள்கிறான் ராமன்.

இவ்வாறு சமூகத்தின் பல்வேறு படிநிலைகளில் இருந்தவர்களையும் சமமாக ஏற்றுக் கொண்ட ராமபிரான்  ‘தலித்’ என்பதற்காக மட்டுமே சம்புகனைக் கொன்றார் என்பது ஏற்கும்படியாக இல்லை. குறைந்தபட்சம் வாலியைப் போல சம்புகன் வாதித்தானா என்றால் அதுவும் இல்லை. மாறாக,   ‘ராமா உன்னால் எனக்கு மோக்ஷம் கிட்டியது’ என்று மகிழ்ச்சியுடன் வணங்கி விடை பெறுகிறான் என்கிறது உத்தர ராமாயணம். இதை சில தற்குறிகள் வசதியாக மறந்து விடுகிறார்கள், அல்லது மறைத்து விடுகிறார்கள்.

‘ராமன் என்றால் வில்லறம்,  சொல்லறம், இல்லறம்’ என்றிருக்க அதை விடுத்து, அவனிடத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து கொள்வதும் தங்களது மோசமான கற்பனையின் அடிப்படையில் அவதூறு செய்வதும் திராவிட அரசியல்வாதிகளின் இயல்பாக உள்ளது.

‘ராம ராஜ்ஜியத்தைத் தவிர மற்ற ராஜ்ஜியங்களை அரசாகவே கருத மாட்டேன்’ என்று ஆட்சி முறைமைக்கு அளவுகோலாக ராமனின் ஆட்சியைக் கூறுகிறார் சேர மன்னன். அகால மரணம் என்பதே ஆட்சிக்கு அவமானம் எனக் குறிப்பிடப்படுகிறது உத்ரகாண்டம் காட்டும் ராம ராஜ்ஜியத்தில். அப்படிப்பட்ட ராம ராஜ்ஜியத்தைக் குறை கூறுபவர்களின் அறிவுத் தகுதி, நடத்தைத் தகுதி, ஆட்சித் தகுதி எப்படிப் பட்டது என்பதை மக்கள் சிந்தனைக்கு விட்டுவிட்டு, மேலே ஆழ்வாரைத் தொடர்வோம்.

இந்தப் பாசுரத்தில் உள்ள செய்திகளும் உத்தரகாண்டத்தில் வருபவையே.

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி,
  அடல் அரவப் பகைஏறி, அசுரர் தம்மை
வென்று இலங்குமணி நெடுந்தோள் நான்கும் தோன்ற,
  விண்முழுதும் எதிர்வரத் தன்தாமம் மேவி,
சென்று இனிது வீற்றிருந்த அம்மான் தன்னை
  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி,
  நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே! 10

“அவதார நோக்கம் முடிந்து, தன் இருப்பிடமாகிய வைகுண்டத்திற்குச் செல்லும்போது உலகத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் தம்முடன் பரமபதத்திற்கு அழைத்துச் சென்றவன். பாம்புக்குப் பகைவனான கருடனை தன் வாகனமாக கொண்டவன். அசுரர்களை எல்லாம் கொன்று வெற்றித் திருமகளாக விளங்கும் பருத்த தோள்களை உடையவன். விண்ணகத்தவர் அனைவரும் எதிர்கொண்டு வரவேற்க தன் மேன்மை வெளிப்படும்படியாக இனிது வீற்றிருப்பவன். அந்த ராமபிரானை ஏற்றி, போற்றி தொண்டு செய்பவர்கள் பேறு பெற்றவர்கள்” என்கிறார் இந்தப் பாசுரத்தில் குலசேகர ஆழ்வார்.

ஸ்ரீமன் நாராயணனே ராமபிரானாக அவதரித்தான் என்பதும், அவதார காலத்தில் உடன் இருந்தவர்களுடன் வைகுந்தம் திரும்பினான் என்பதன் மூலம் அவர்கள் ஏற்கனவே வைகுண்ட வாசிகளான நித்தியசூரிகள் என்பதும் சொல்லப்படுகிறது. இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது அவனைப் போற்றி வணங்கி, எப்பொழுதும் தொண்டு செய்வதேயாகும். வைணவ சமயத்தின் சாரமான சரணாகதியும் தொண்டும் இப்பாசுரத்தின் வழி வலியுறுத்தப்படுகிறது.

தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
  திறல் விளங்கு மாருதியோடு  அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர்த் தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று
  அதுமுதலா, தன் உலகம் புக்கது ஈறா,
கொல் இயலும் படைத்தானை, கொற்ற ஒள்வாள்
  கோழியர்கோன், குடைக் குலசேகரன் சொற் செய்த
நல்இயல் இன்தமிழ் மாலை பத்தும் வல்லார்,
  நலந்திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே! 11

இந்த பாசுரத்தில், தான் அரசன், தன் பெயர் குலசேகரன், தான் இயற்றிய பாசுரங்கள் இனிய தமிழ் மொழியில் நல்ல இலக்கணத்துடன் கூடியவை என்று அகச் சான்றுகளை தருகிறார் ஆழ்வார். தயரதன் மகனாக தோன்றிய ஸ்ரீ ராமபிரானின் வரலாற்றை சொன்ன ஆழ்வார் தன் பாசுரங்களை நன்கு கற்று உணர்ந்து கொள்பவர்களுக்கு எல்லாம் நன்மையும் தரும் ஸ்ரீமந் நாராயணனின் திருவடி கிட்டும் என்று பலன் கூறி நிறைவு செய்கிறார்.

$$$

Leave a comment