இருக்கு ஆனா இல்லை

-பத்மன்

ஒரு திரைப்படத்தில் வடிவேலுவிடம் என்னத்த கண்ணையா சொல்லும் ‘வரும் ஆனா வராது’ வசனத்தைப் போன்றதுதான், இறைவனைப் பற்றிய விளக்கமும். ஆம்! கடவுள் ‘இருக்கு ஆனா இல்லை’. ஏனிப்படி?

கண்ணையா எதனால் “வரும்… ஆனா வராது…” என்று இழுக்கிறார்? அவரால் காரை ஓட்ட இயலும். ஆனால் அவருக்கு இரவில் பார்வை மங்கிவிடுகின்ற காரணத்தால், அதாவது குறைபாடு உள்ள காரணத்தால் வண்டி ஓட்ட இயலாது.

இதைப்போல்தான் இறைவனை நாம் தெரிந்துகொள்ள, அறிந்துகொள்ள இயலும். ஆனால், நம்மிடம் உள்ள குறைபாடு காரணமாக அறிந்துகொள்ள முடியவில்லை.

நம்மால் அறிந்துகொள்ளப்படும்போது இறைவன் இருக்கிறார். அறிந்துகொள்ள இயலாதபோது அவர் இல்லை. ஆக, ஒரேநேரத்தில் அவர் இருந்துகொண்டே இல்லாமல் போகிறார், இல்லை எனும்போதிலும் இருந்துகொண்டும் இருக்கிறார்.

இறைவனை அறியாமல் இருப்பதற்கு நம்மிடம் உள்ள குறைபாடே காரணம். அந்தக் குறைபாடுதான்  ‘அறியாமை’ என்கிற மாயை. அதனை விலக்கினால் இறைவனின் இருப்பு புலப்படும். காலையில் விழித்ததும் கண்கள் மங்கலாகத் தெரிகின்றபோது, கண்களில் படர்ந்துள்ள படலத்தை தேய்த்து அகற்றுகிறோம். கண்ணொளி சுடர் வீசுகிறது. அதைப்போல் இந்த மாயப் படலத்தைத் துடைத்தெறிந்தால் இறைவனின் திருக்காட்சி கிட்டும்.

மாயை என்பது பொய்யல்ல, அதேநேரத்தில் உண்மையும் அல்ல. இரண்டும் கலந்து நம்மை மயங்கச் செய்வது. ‘பழுது என்று தாண்டவும் முடியவில்லை, பாம்பு என்று மிதிக்கவும் முடியவில்லை’ என்ற நிலைதான் இந்த மாயை. இது ஒரு தோற்ற மயக்கம்.

தரையில் கிடக்கும் கயிறு பாம்பாக நினைக்க வைக்கிறதே, அவ்வாறு நினைக்கும் தருணத்தில் அது பாம்புதான், அந்த நினைப்புதான் நமக்கு பயத்தைத் தருகிறது. ஆனால், அது வெறும் கயிறுதான் என்பதை உணர்ந்துகொள்ளும்போது பயம் போய்விடுகிறது. அதனை நாம் எளிதில் தாண்டிச் சென்று விடுகிறோம்.

அதுபோலத்தான் மாயையும். நாம் வெறும் உடல்கள் என்று மயங்கிக் கிடக்கும்போது பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடிவதில்லை;  ஆண்டவனை அறிந்துகொள்ள முடியவில்லை. நம்மில் இருப்பதும், நம்போல் அனைவரிலும், அனைத்திலும் இருப்பதும் அந்த இறைவனே என்பதை உணர்ந்துகொள்ளும்போது அந்த இறைவன் அறிந்து கொள்ளப்படுகிறான்; நம்மில் ஆட்சி செய்யத் தொடங்குகிறான்.

நாம் ஆன்மா, அதனைப் போர்த்தியிருக்கும் ஆடைதான் உடல் என்பதை உணர்வதுதான் ஞானம். இந்த ஆன்மா ‘ஏக இறைவனின் பிரதிபிம்பம்’ என்பதை அறிந்துகொள்வதுதான் பரிபூரண ஞானம்.

நாணம் வந்தால் தலை சாயும்,  ஞானம் வந்தால் தலைக்கனம் சாயும். நான், எனது என்ற உடல் சார்ந்த மயக்கம்- மாயை நீங்கி, நான் ஆண்டவனின் பிரதிபிம்பம் என்பதை உணர்ந்துகொள்ளும்போது சுயநலம் உள்ளிட்ட மலங்கள் நீங்குகின்றன, நிர்மலம் உண்டாகிறது. அப்போது எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் நம்முள் இருப்பவனாகிறான், அதுவரை இல்லாததுபோல் இருக்கிறான்.

உதாரணத்துக்கு, காலையில் காண்கின்ற கதிரவன் மாலையில் இல்லை. அதனால் சூரியன் இல்லை என்று ஆகிவிடுமா? ஆயினும் மாலையில் இருந்து மறுநாள் விடியும் வரை சூரியன் இல்லை. எங்கே செல்கிறது சூரியன்? இயற்கையின் விதிப்படி மாலையில் மறைந்து கொள்கிறது,

ஆக, எப்போதும் இருக்கின்ற பகலவன் இல்லாததுபோல் தோன்றுகிறான். இதுதான் மாயை. அதுபோலத்தான் எப்போதும் எங்கும் இருக்கின்ற இறைவனும் இல்லாததுபோல் தோற்றம் கொடுக்கிறான்.

இரவு நேரத்தில் சூரியன் இல்லை என்று கூறுவது ஒருவகையில் உண்மைதானே? அதுபோல அறியாமை இருள் சூழ்ந்திருக்கும் காலகட்டத்தில் ‘கடவுள் இல்லை’ என்று கூறுவதும் தற்சமய உண்மையே. காலையில் ஒளியுடன் சூரியன் உதிப்பதைப் போல, ஆத்மஞானம் பிரகாசிக்கும்போது ஆண்டவனும் அறியப்படுகிறான், நம்முள் உறைபவனாகிறான். இதுவே முக்காலமும் உண்மை.

இதனைத்தான் தட்சிணாமூர்த்தி ரூபத்தில் சிவபெருமான் நமக்கு போதிக்கிறார். அவரது காலடியில் கிடக்கும் அரக்கனுக்குப் பெயர் அபஸ்மாரன். ‘அபஸ்மாரம்’ என்றால் மறதி, அறியாமை என்று பொருள். அந்த அறியாமையை ஒடுக்கி அண்ணாந்து பார்த்தால், அறிவின் மொத்த உருவமாகிய, உருவகமாகிய ஆண்டவன் தெரிவார்.

‘சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளீரோ?’ என்று மகாகவி பாரதியார் எழுப்பிய கேள்வி எப்போதும் நம் மனத்தில், சிந்தனையில் எதிரொலிக்கட்டும். அந்த சுத்த அறிவு என்பது அனைத்திலும் இறைவன் இருப்பதை அறிந்துகொள்ளும் ஆத்ம ஞானமன்றி வேறில்லை.

இதனை அறிந்தால்தான் மகாகவி கூறியபடி ‘நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு’ என்பது நடைமுறை சாத்தியமாகும். அதுவரையில் கடவுள், நம்மிடம் ‘இருக்கு ஆனா இல்லை’.

$$$

Leave a comment