-சீரங்கத்தான்

சரி பீடிகை போதும்… தலைப்பின் பொருளுக்கு (subject matter) வருவோம். ஆங்கிலேயனுக்கு வாட்ராப் watrap – உள்ளூருக்கு வத்திராப்பு – கற்றவனுக்கு வற்றாயிருப்பு. இப்படியாக ஒரு ஊருக்கு பல பெயர்கள் சொல் வழக்காக இருக்கலாம். பொருள் புரிந்து கொள்வோம். வாருங்கள்.
ஈசாவாஸ்ய உபநிடத்தின் சாந்தி மந்திரம்:
பூர்ண மத: பூர்ணமிதம்
பூர்ணமேவா வசிஷ்யதே!
இதன் தமிழாக்கம்:
“அது பூரணம். இதுவும் பூரணம். பூரணத்திலிருந்து பூரணம் உண்டாகிறது. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்து விட்டாலும் எஞ்சி இருப்பதும் பூர்ணமே”.
இது ஒரு அற்புதமான மந்திரம். ஆனால் இந்தக் கணக்கு தான் புரியவில்லை அல்லவா? விஞ்ஞானத்தைக் கூட்டி புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
அது, இது என்பதெல்லாம் அண்டங்களைக் குறிக்கின்றது என்று கற்பனை செய்து கொள்வோம். சற்றே மாற்றிப் படிப்போம்.
“அது அண்டம். இதுவும் அண்டம். அண்டத்தில் இருந்து அண்டம் உண்டாகிறது. அண்டத்திலிருந்து அண்டத்தை எடுத்து விட்டாலும் எஞ்சி இருப்பதும் அண்டமே!”
அண்டங்களின் ஆயுட்கால முடிவில் அண்டங்கள் கருந்துளையில் ஒடுங்குகின்றன. ஒடுங்கியவை பெரு வெடிப்பில் உமிழப்பட்டு, மீண்டும் அண்டம் ஆகின்றன. அதாவது தோன்றிய நிலையில் உள்ள பிரபஞ்சப் பொருள் அனைத்தும் தோன்றா நிலைக்கு ஒடுக்கப்பட்டு, பின்னர் தோன்றிய நிலையான அண்டமாக மாறுகின்றன.
ஆக, இந்தப் பேரண்டம் முற்றிலும் பூரணமானது. இதில் கூட்டுவதற்கோ கழிப்பதற்கோ ஒன்றும் இல்லை. ஆகையால் அது பூரணம். இதுவும் பூரணம். அந்த நிறைவான பூர்ணனே குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன்.
நம் ரிஷிகளின் சிந்தனை எந்த அளவுக்கு உயர்ந்து நிற்கிறது என்று பாருங்கள்!
அண்டமும் பிண்டம் ஒன்றே என்பர். பிண்டமாகத் தோன்றும் நீயும் நானும் ஒரு விதத்தில் பூரணமே! இந்த என் பூர்ணமே மற்றொரு பூர்ணம் (சந்ததி) தோன்றக் காரணமாகிறது. பிண்டத்தில் இருந்து உயிர் பிரிந்து விட்டாலும் தோன்றா நிலையில் அந்த உயிரும் பூர்ணமே! ஏனெனில் காலக்கிரமத்தில் மீண்டும் அது ஒரு புதிய உடலைப் பெற்று பூர்ணமாக வலம் வரும் அல்லவா? அணுவிலிருந்து அண்டம் வரை இறைவனின் படைப்பில் எல்லாம் பூர்ணமே! குறை உண்டு எனில் அது நம் கண்ணோட்டத்தின் குறைபாடே!
இந்த மந்திரம் மூலமாக கீழ்க்கண்ட மூன்று விஞ்ஞானக் கோட்பாடுகள் விளக்கம் பெறுகின்றன.
1. ஆற்றல் பாதுகாப்பு விதி எனப்படும் Law of Conservation of Energy 1842.
ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது. மாறாக ஒரு வடிவத்தில் இருந்து மற்றொன்றாக உருமாற்றலாம். ஆகையால் மொத்தத்தில் பிரபஞ்சத்தின் மொத்தமும் பூரணம். அதாவது முழுமையானது. குறைதல் என்ற குறைபாடு இல்லை. இதன்படி கன்சர்வேஷன் எனர்ஜி என்னும் கோட்பாடு நிருபணம் ஆகின்றது.
2. சார்புக் கொள்கை எனப்படும் Theory of Relativity E = mc2
அடுத்ததாக, ஐன்ஸ்டீனின் கோட்பாடு சொல்கிறது, பொருளும் ஆற்றலும் ஒன்று மற்றொன்றாக மாறும் இயல்புடையவை. இதைத் தான் சாஸ்திரம் தோன்றிய ( வ்யக்த) தோன்றா (அவ்யக்த) என இரண்டு நிலைகளைக் குறிப்பிடுகின்றது. தோன்றிய நிலையில் பொருளாகவும் அதே பொருள் தோன்றா நிலையில் ஆற்றலாகவும் இருக்கின்றது.
3. பல பிரபஞ்சக் கோட்பாடு எனப்படும் Multi Universes Theory
இந்த மந்திரத்திலிருந்து பல பிரபஞ்சக் கோட்பாடு (Multi Universes Theory) உறுதியாகிறது. பேரண்டத்தில் பல பிரபஞ்சங்கள். ஒவ்வொன்றும் பூரணம்.
எண்ணிலடங்கா அண்டங்களைக் கொண்ட இந்தப் பேரண்டமும் வற்றாத இருப்பான பூர்ணமே! அள்ள அள்ள குறையாத வைத்த மாநிதியே!
வியப்பாக இருக்கிறது அல்லவா? ஒரு மந்திரம் எத்தனை விஞ்ஞானக் கோட்பாடுகளுக்கு விளக்கம் தருகிறது பாருங்கள்.
“பூர்ண மத: பூர்ணமிதம்” என்னும் 12 சொற்கள் கொண்ட கோட்பாட்டை தமிழ் மொழி ஒரே வார்த்தையில் விளக்குகிறது. அதுதான் தமிழின் தனிச்சிறப்பு.
சைவத்தில் அது வற்றாயிருப்பு. எடுக்க எடுக்க வற்றாத இருப்பு. அது பூர்ணமானது.
வைணவத்தில் வைத்தமாநிதி. இருப்பாக வைக்கப்பட்ட மாபெரும் நிலையான நிதி. இதுவும் பூர்ணமானது.
இதனை விளங்க வைத்து என்னை எழுத வைத்த, வற்றாயிருப்பு சிவபெருமானுக்கும், திருக்கோளூர் (குபேரஸ்தலம்-ஆழ்வார்திருநகரி) வைத்தமாநிதிப் பெருமாளுக்கும் என் கோடி வணக்கங்கள்.
$$$
One thought on “வாட்ராப்பும் வைத்தமாநிதியும்- 2”