-திருநின்றவூர் ரவிகுமார்

“பித்தா ! பிறை சூடி ! பெருமானே அருளாளா …”
என்ற பாடலில் சிவபெருமான் பித்தன் என்று அழைக்கப்பட்டுள்ளார். சுடுகாட்டில் சாம்பலை உடல் முழுவதும் பூசி இருப்பதால் இப்படி அழைக்கப்பட்டிருக்கலாம்.
இதேபோல, பெருமாளை பித்தன் என்று யாராவது அழைத்துள்ளார்களா என்று கேள்வி மனதில் எழுந்தது. கள்வன், பொய்யன், பெண்களை மயக்குபவன் என்றெல்லாம் சொல்லி உள்ளார்கள் என்பது தெரியும். அதேசமயம், பெருமாளை ஒருவர் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக பித்தன் என்று சொல்லியுள்ளார்.
சொன்னவர் அரசனாக இருந்தவர், ஆழ்வாராகப் போற்றப்படுபவர். பொதுவாகவே ஆழ்வார்களுக்கு கண்ணனின் லீலைகளை சொல்லிச் சொல்லி ஆனந்தித்து மாளாது. இவரோ கண்ணன் மீது மட்டுமல்ல, ஸ்ரீ ராமபிரான் மீது அளவற்ற அன்பு கொண்டவர். அந்தப் பித்து அவரது உலகியல் வாழ்விலும் வெளிப்பட்டது என்று கூறப்படுகிறது.
இவர் ராஜாவாக இருந்ததாலே ராஜாராமன் மீது அணுக்கம் கொண்டிருந்தார் என்று சொல்வதுண்டு. ஆனால் அதனால் ஸ்ரீ ராமபிரானைப் பற்றி நேரடியாக மட்டுமல்ல, தயரதன் நிலையில் நின்றும் பத்து பாசுரங்கள் இயற்றியுள்ளார். அரச குலத்தில் வாழ்க்கைப்பட்ட தேவகி மீதும் இவருக்கு பற்றுதலும், அவள் கண்ணனின் பால லீலைகளை அனுபவிக்க முடியாமல் போனது பற்றி இரக்கமும் கொண்டிருந்தார் என்பதும் இவரது பாசுரங்களில் வெளிப்படுகிறது.
தேவகிக்கு சிறையில் பிறந்தான் ஸ்ரீ கிருஷ்ணன். ‘ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து’ வளர்ந்தவன் அவன். குழந்தையைப் பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்க்கும் வாய்ப்பை இழந்தவள் தேவகி. அந்த வாய்ப்பைப் பெற்றவள் யசோதை. எங்கும் நிறைந்த பரம்பொருள் ‘அம்மா’ என்று அழைக்கும் பேறு பெற்றவள் யசோதை. ஆயர்குலப் பெண்கள் பலரும் கூட கண்ணனுக்கு முலைப்பால் ஊட்டியிருக்கிறார்கள். இவ்வளவு ஏன், கண்ணனைக் கொல்வதற்கு வந்த பூதனை கூட முலையூட்டினாள். அதற்கு, உரிமை இருந்தும், வாய்ப்பில்லாமல் போனது தேவகிக்கு. அந்த ஆற்றாமையை ஆழ்வார் அழகான தமிழில் வெளிப்படுத்தியுள்ளார்.
தன் அரசனான கம்சனைக் கொல்லப் பிறந்தவன் கண்ணன் என்பதால் அவன் மீது கோபம் கொண்டவள் பூதனை. அதனால் கண்ணனைக் கொல்ல வேண்டும் என்ற வஞ்சனையை தன் உள்ளமெல்லாம் கொண்டவள். உடலெல்லாம் விஷத்தைப் பூசிக்கொண்டு, அழகிய தாயாக வடிவம் கொண்டு கோகுலம் வந்தாள். கண்ணனை அழைத்து முலையூட்டினாள். அவனும் பால் அருந்துவது போல் அவள் உயிரை உறிஞ்சி விட்டான். இதை ஆழ்வார் பாடுகிறார்.
“வஞ்சம் மேவிய நெஞ்சடைப் பேய்ச்சி
வரண்டு, நார் நரம்பு எழ, கரிந்து உக்க,
நஞ்சம் ஆர் தரும் சுழி முலை அந்தோ!
சுவைத்து நீ அருள் செய்து வளர்ந்தாய்;
கஞ்சன் நாள் கவர் கருமுகில் எந்தாய்!
கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து;
தஞ்சமேல் ஒன்றிலேன் உய்ந்திருந்தேன்;
தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே!”
“வஞ்சனையை தன் உள்ளமெல்லாம் கொண்டவளும் விஷத்தை உடலில் பூசியிருந்தவளுமான பேய்ச்சியான பூதனை, உன் உடல் வரண்டு எலும்பு, நரம்புகள் எல்லாம் கரித்துப் போய், உதிர்ந்து விழுந்து உயிர் விட வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு விஷம் பூசிய தனத்தைக் கொண்டு உனக்குப் பாலூட்ட வந்தாள். அவள் மனம் நோகாமல் அவள் தனத்தில் வாய் வைத்து பால் பருகுவது போல் நீ அவள் உயிரையே பருகி எடுத்து விட்டாய்.
இதைக் கண்டு மற்ற ஆய்ச்சியர் பயம் கொள்ளக் கூடாது என்று குழந்தை போல் அவர்களுடனே உயிர் வாழ்ந்து வளர்ந்து வருபவன் தானே நீ? உன்னைக் கொல்லும் நோக்கத்தை உடைய கம்சனின் வாழ்நாள் எல்லாம் கவர்ந்து கொண்ட, கரிய மேகம் போன்ற நிறத்தை உடைய எங்கள் தலைவனே!
உனக்கு பால் புகட்ட முடியாமல் என்னுடைய இந்த தசையாலான தனங்களை ஒரு சுமையாக வெறுமனே சுமந்து கொண்டிருக்கிறேன். என்ன கொடுமை இது! இதனால் உலகில் உள்ள பெண்களில் எல்லாம் மிகவும் கீழானவளாக ஆகிவிட்டேனே!
இருந்தாலும் எனக்குப் புகலிடம் ஒன்று இருக்கும் என்றால் அது உன்னுடைய திருவடியை அன்றி வேறில்லை. அந்த நம்பிக்கையில் தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் என்ன, நல்ல பால் சுரக்கும் தனங்களைக் கொண்ட யசோதையை நீ தாயாகப் பெற்றிருக்கிறாய். அது சரியானது தான்; தகுதியானது தான்” என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்கிறாள் தேவகி தாய்.
இது மேற்சொன்ன பாசுரத்தின் கருத்து.
இதில் மூன்று பெண்களைக் கூறி மூன்று பெண்களின் தனங்களை அழகான சொற்களால் சுட்டிக்காட்டி இருக்கிறார். முதலில், ‘வஞ்சம் மேவிய நெஞ்சடை பேய்ச்சி வரண்டு நார் நரம்பு எழ கரிந்து உக்க தஞ்சம் ஆர் தரும் சுழிமுலை’ என்றது பூதனை. அடுத்ததாக, ‘வறிதே சுமந்த முலை’ என்றது தேவகியை. மூன்றாவதாக, ‘தக்கதே நல்ல முலை’ என்றது யசோதை. ஒவ்வொரு தனத்திற்கும் பொருத்தமான, நயமான சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார் ஆழ்வார்.
தாய்ப்பால் ஊட்டுவது பெண்ணுக்கு மகிழ்ச்சி அளிப்பது மட்டுமல்ல, அது தாய்மையின் லட்சணங்களில் ஒன்று. இக்காலப் பெண்கள் முலையூட்டுவது குறைந்துவிட்டது. சிலருக்கு உடல் ரீதியான இயலாமை. பலருக்கு அழகு கெட்டுவிடும் என்ற மனோ வியாதி. நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்டது என்றாலும் ஏழை, ஏமாந்தவர்களிடம் கறந்து விடும் சுரண்டல் தான் தாய்ப்பால் வங்கி என்றொரு புகார் உள்ளதை மறுப்பதற்கில்லை.
***
அடுத்தது, பெருமாளைப் பித்தனாக வரித்த பாசுரம்….
பாலகிருஷ்ணன் கோபி கிருஷ்ணனாக ஆகிறான். ஒருத்தியின் இடையைப் பிடித்துக் கொண்டு வேறொருத்திக்கு கண் சாடை காட்டுகிறான். மூன்றாமவளுக்கு தெரியும்படி இதை செய்கிறான். இதனால் அவள் கோபம் கொண்டு ஊடுகிறாள். தோழியை தூது அனுப்புகிறாள் ஒருத்தி. அவனோ அந்த தோழியை கவர்ந்து விடுகிறான். இப்படி பல பல லீலைகள் ஸ்ரீ கிருஷ்ணன் வாழ்வில்.
அதில் ஒருத்தி தான் இவனது குழந்தைப் பருவத்து நிகழ்வை சுட்டிக்காட்டி, பித்தனென சாடுகிறாள். அதையும் பொருத்தமாகவே போடுகிறார் ஆழ்வார்.
“தாய் முலைப்பாலில் அமுதிருக்கத்
தவழ்ந்து தளர் நடையிட்டுச் சென்று
பேய் முலை வாய்வைத்து நஞ்சையுண்டு
பித்தன் என்றே பிறர் ஏசநின்றாய்;
ஆய்மிகு காதலொடு யான் இருப்ப,
யான் விட வந்த என் தூதியோடே
நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய்;
அதுவும் உன் கோரம்புக்கு ஏற்குமன்றே!”
பொருள்: “யசோதையின் தனங்களிலிருந்து நிரம்பி சுரக்கும் பால் இருக்கிறதே, அது அமிழ்தம் போன்று சுவை மிகுந்தது. அதை விட்டுவிட்டு, தட்டுத் தடுமாறி, தவழ்ந்து தளர் நடையிட்டுச் சென்று பூதனை என்னும் அரக்கியின் விஷம் தடவிய முலையில் வாய் வைத்து உறிஞ்சியவனே! தன் தாய்க்கும் மற்றொரு பெண்ணுக்கும் வேறுபாடு தெரியாத பைத்தியக்காரனாக (பித்தன்) இருக்கிறானே என்று கேலி பேசும்படி இருந்தவனே! நான் உனக்காக காதலோடு காத்துக் கிடக்கிறேன். நான் உன்னிடம் தூதாக அனுப்பிய என் வீட்டு வேலைக்காரியை கூடி மகிழ்ந்து கிடக்கிறாயே! இது உன் துஷ்டத்தனத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது”.
குலசேகர ஆழ்வார் சேர நாட்டைச் சேர்ந்தவர். இன்று அது கேரள மாநிலமாக உள்ளது. சேர நாட்டைச் சேர்ந்த கொல்லிமலையை ஆட்சி செய்தவர். எட்டாம் நூற்றாண்டில், ஒரு பராபவ ஆண்டு, மாசி மாதம், புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கூறப்படுகிறது.
இவர் பாடிய பாசுரங்கள் 105. அவை ‘பெருமாள் திருமொழி’ என்று அழைக்கப்படுகின்றன. நாம் முதலில் பார்த்த பாசுரம் ஏழாம் திருமொழி- பத்தாம் பாசுரம். அடுத்ததாகப் பார்த்ததே ஆறாம் திருமொழி – நான்காம் பாசுரம்.
“ஆரம்கெடப் பரன் அன்பர் கொள்ளார் என்று, அவர்களுக்கே
வாரம் கொடு குடப்பாம்பில் கையிட்டவன்; மாற்றலரை
வீரம் கெடுத்த செங்கோல் கொல்லிகாவலன்; வில்லவர்கோன்;
சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே."
-மணக்கால் நம்பி
$$$