இந்தியா ஐக்கியமேயன்றி கூட்டாட்சியன்று

-ராம் மாதவ்

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் தற்காலிகப் பிரிவான 370வது ஷரத்தை மோடி அரசு நீக்கியிருந்தது. அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நடவடிக்கை சரியானதே என்று தீர்ப்பு (11.12.2023) அளிக்கப்பட்டது. இது தொடர்பாக திரு. ராம் மாதவ் எழுதியுள்ள கட்டுரை இது...

“ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அரசியல் சாசனத்தின் உயிர்த் துடிப்பை உறுதி செய்வதாகவே உள்ளது. தற்காலிகமானதொரு (370) ஷரத்தை எப்பொழுதும் நீக்க முடியாதபடி நிரந்தரமாக நீட்டிக்கச் செய்த நேருவின் பாதகத்தை திருத்தியுள்ளது”.

370 வது சட்டப்பிரிவு பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மழுப்பலான சமரசம் என்றும், நீதிபதிகளுக்கு உள்நோக்கம் கற்பித்தும், சிலர் பசப்பி வருகின்றனர். ஆனால் இந்திய அரசியல் சாசனத்தின் ஆன்மாவின் கண்ணோட்டத்தின்படி வேறு விதமாக தீர்ப்பு வர முடியாது.

அந்த சட்டப்பிரிவு தற்காலிகமானது என்பதையும், கடந்த எழுபது ஆண்டுகளாக நடந்த நிகழ்வுகள் அந்த மாநிலம் முழுமையாகவும் முடிவாகவும் இந்தியாவுடன் ஐக்கியமாவதைத் தடுப்பதாக, சிதைப்பதாக இருந்ததையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சிலர், நீதிமன்றத் தீர்ப்பால் கூட்டாட்சி முறைக்கு பலத்த அடி விழுந்துள்ளதாகக் கூறுகின்றனர். முதலாவதாக ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டாட்சி என்று இந்திய அரசியல் சாசனத்தில் எங்குமே குறிப்பிடப்படவில்லை. பி.ஆர்.அம்பேத்கர் அரசியல் சாசன சபையில், இந்தியா ‘ஐக்கியமே’யன்றி (Union) ‘கூட்டரசு’  (Federation) இல்லை என்று தெளிவாகச் சொல்லியுள்ளார். அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கூட்டாட்சிக் கொள்கையின்படி அமைந்தவை. ஆனால் இந்திய அரசியல் சாசனத்தை இயற்றியவர்கள் அமெரிக்க்க் கூட்டாட்சி அல்லது ஐரோப்பிய கூட்டாட்சி முறையைத் தவிர்த்து விட்டு ‘இருகூறு ஆட்சி’ முறையை உருவாக்கினார்கள்.

ஒரு நாட்டில் இரண்டு அரசியல் சாசனம் நடைமுறையில் இருக்க முடியாது என்றும், 370வது சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு முரணானது என்றும் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியபோது, காங்கிரஸ் கட்சியில் உள்ள சில அறிவாளிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசியல் சாசனங்களைக் கொண்ட பல நாடுகளைப் பட்டியலிட்டனர்.

அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அது போன்ற இன்னும் சில நாடுகளில் கூட்டரசுக் கொள்கை நடைமுறையில் உள்ளது. அங்கெல்லாம் மத்தியில் மட்டுமன்றி மாநிலங்களும் கூட தனித்தனியாக அரசியல் சாசனங்களைக் கொண்டுள்ளன.

அமெரிக்காவில் உள்ள மாநிலங்கள் தங்களுக்கென்று தனியான சாசனத்தை வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் தங்கள் குடிமக்களுக்கு மட்டுமென சிறப்புக் குடியுரிமைகளை அளிக்கின்றன. அமெரிக்கா கூட்டாட்சி சாசனம் 14 பிரிவின்படி எந்த மாநிலத்திலும் குடிமக்களுக்கான எந்த உரிமையும் மறுக்கக் கூடாது என்று சொல்லியுள்ள போதிலும், மாநில சாசனங்கள் வேலை வாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் அனுமதி போன்ற சில விஷயங்களில் தங்கள் மாநில மக்களுக்கு முன்னுரிமை தருவதாக, ஒரு விதமான பாகுபாட்டை ஏற்படுத்துவதாக அமைத்துள்ளன. இந்திய ஐக்கியத்தில் அது போன்ற இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்க முடியாது என்பதில் அம்பேத்கர் தெளிவாக இருந்தார்.

 ‘இந்திய அரசியல் சாசனம் ஒற்றைக் குடியுரிமையையும், இருகூறான ஆட்சி முறையையும் முன்வைக்கிறது. இந்தியா முழுமைக்கும் ஒரு குடியுரிமைதான். அது இந்தியக் குடியுரிமை. மாநிலங்களுக்கென தனிக் குடியுரிமை கிடையாது. ஒவ்வொரு இந்தியருக்கும், அவர் எந்த மாநிலத்தில் வசித்தாலும், ஒரே மாதிரியான சமமான குடியுரிமை தான் உள்ளது’ என்று அம்பேத்கர் அரசியல் சாசன சபையில் கூறியுள்ளார்.

அம்பேத்கர் மேலும் விளக்கமாக கூறும்போது,  ‘அமெரிக்காவில் பல மாநிலங்கள் ஒன்று சேர்ந்து கூட்டரசை ஏற்படுத்தி உள்ளன. அதேவேளையில் கூட்டரசின் சாசனமும் மாநிலங்களின் சாதனங்களும் தளர்வான முறையில் இணைந்துள்ளன. நம்முடைய விஷயத்திலோ ஐக்கிய சாசனமும் மாநில சாசனமும் ஒரே சட்டகத்துக்குள் அமைந்துள்ளன. அந்த வரம்பிலிருந்து தனியாக யாரும் வெளியேற முடியாது. அதற்குள்ளே தான் அவை இயங்க வேண்டும்’ என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

எனவே கூட்டாட்சி என வாதிப்பதும் அதற்காக பல சாசனங்களைக் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடுவதும் தவறாக திசை திருப்புவதாகும். இந்திய சாசன அமைப்பை அம்பேத்கர் ‘நெகிழ்வான கூட்டரசு’  என்று அன்று சொன்னார். உச்ச நீதிமன்றம் இப்போது அதை   ‘சட்டப்பிரிவு 370 என்பது சமச்சீரற்ற கூட்டாட்சியின் அம்சமே தவிர இறையாண்மை அல்ல’  என்று தெளிவாகச் சொல்லியுள்ளது.

என்னுடைய பழைய கட்டுரை ஒன்றில் 306 A சட்டப்பிரிவு (அதுதான் பின்னர் 370 சட்ட பிரிவானது) பல்வேறு தளங்களில் இருந்து எதிர்க்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டி இருந்தேன். அரசியல் சாசன சபையின் இறுதிக் கட்டத்தில்தான் – அக்டோபர் 1949 – அது  முன்மொழியப்பட்டது. அவசர அவசரமாக நெருக்கித் தள்ளப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் குறுக்கீடு செய்தவர் மௌலானா ஹஸ்ரத் மோகனி.

‘ஏன் இந்த பாகுபாடு?’  என்று அவர் கேள்வி எழுப்பினார். அந்த சட்டப்பிரிவை முன்மொழிந்த கோபால்சாமி ஐயங்கார் அவரது கேள்விக்கு பதில் அளிக்கும் போது,  ‘காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டுள்ளது’ என்று கூறியதுடன், அதே மூச்சில் வேகவேகமாக,  ‘இங்குள்ள எல்லோரும் மற்ற மாநிலங்களைப் போல காலப்போக்கில் ஜம்மு காஷ்மீரும் பக்குவமாய் இணைக்கப்படும் என்று நம்பலாம்’ என்றார். அரசியல் சாசன விவாதங்களைப் பற்றிய ஆவணத்தில் ஐயங்காரின் இந்த அறிக்கையை உறுப்பினர்கள்  ‘ஆரவாரத்துடன் வரவேற்றார்கள்’ என்று பதிவாகியுள்ளது.

ஐயங்கார் அந்த சட்டப்பிரிவை மேலும் விளக்கும் போது,  ‘மாநில அரசியல் சாசன சபை அந்த மாநில சாசனம் பற்றியும் அந்த மாநிலத்தின் மீது மத்திய அரசின் அதிகாரம் எந்த வகையில் செயல்படும் என்ற இரண்டு விஷயங்களைப் பற்றியும் முடிவெடுத்துள்ளது. அரசியல் சாசன சபையின் அறிவுரையின்படி ஜனாதிபதியின் ஆணையால் இந்த 306 A சட்டப்பிரிவு நடைமுறையில் செல்லாததாக்க முடியும். அல்லது ஜனாதிபதி குறிப்பிடுகின்ற அம்சங்களில் மட்டும் விதிவிலக்கோ அல்லது மாற்றத்துக்குட்பட்டோ நடைமுறைப் படுத்தப்படும்’ என்று கூறினார்.

தற்காலிக ஏற்பாடாக வந்த அந்த அரசியல் பிரிவு, ஜம்மு காஷ்மீர் மாநில சாசன சபையின் ஆயுள் முடிவுற்றதுடன் சேர்ந்து முடிவுக்கு வந்திருக்க வேண்டும். 370வது சட்டப்பிரிவு ஒட்டுமொத்த முடிவு என்று காங்கிரஸ் கட்சியின் வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் அது  ‘தற்காலிகமான  ஏற்பாடு’ என்பதைத் தான் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் மாநில சாசன சபை முடிவுற்ற பிறகும் பல பத்தாண்டுகள் அதை நீடித்ததற்கு யார் பொறுப்பு?  ஜவஹர்லால் நேரு 1952இல் தில்லி ஒப்பந்தம் என்ற பெயரில் ஷேக் அப்துல்லாவுடன் செய்த பாதகச் செயலே அதற்குக் காரணம்.

தில்லி ஒப்பந்தம் பல அபாயகரமான விஷயங்களுக்கு முன்மாதிரியாக அமைந்தது. இணைப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிடாத  ‘எல்லா விஷயங்களிளும்’ முடிவெடுக்கும் அதிகாரம்  மாநிலத்திற்கே உண்டு’ என்ற அவமானகரமான விளக்கம் அளிக்கப்பட்டது.  ‘சமமாக பகிரப்பட்ட இறையாண்மை /அரசு அதிகாரம்’  என்ற வாதத்தை அம்மாநிலத்தின் தலைவர்கள் முழுமையாக தங்கள் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டதுடன் அதை தங்கள் தரப்பு வாதமாகவும் உச்ச நீதிமன்றத்தில் முன் வைத்தனர்.

அம்மாநில மக்களுக்கென தனி குடியுரிமையை  ‘மாநிலக் குடிமகன்’ என்ற பெயரில் வழங்கப்படுவதற்கும் நேரு – ஷேக் அப்துல்லா போட்ட தில்லி ஒப்பந்தம் வழி வகுத்தது. குடியுரிமை ஒன்றே என்று கூறிய அம்பேத்கர் வடிவமைத்த சாசனத்திற்கு முரணானது அது. மாநிலத்துக்கென தனிக்கொடி, தனி சாசனம், மாநில அரசின் தலைவரை முதல்வர் என்பதற்குப் பதிலாக பிரதமர் என்று அழைப்பதற்கு தில்லி ஒப்பந்தம் வழி வகுத்தது.

மோடி அரசு 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது பற்றிய வழக்கில், மேற்சொன்ன திரிபுகளை எல்லாம் சரி செய்தது உச்ச நீதிமன்றம். உண்மையைச் சொல்லப்போனால், அது ஒரு படி மேலே சென்று, எந்த வகையிலும் அந்த ஷரத்து (370 சட்டப்பிரிவு) எதிர்காலத்தில் மீண்டும் வரமுடியாதபடி செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, தனி சாசனம், தனிக்கொடி போன்றவை கடந்து போன வரலாறாக ஆகி விட்டதற்காக நாம் மகிழ்ச்சி அடையலாம். இருந்தாலும் நாம் ஒரு முக்கியமான விஷயத்திற்காக ஜம்மு காஷ்மீர் சாசனத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது.

இந்திய சாசனத்தின் முதல் பிரிவின்படி,  ‘இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பிருந்த பகுதியை மாநிலப் பரப்பாக’ வரையறை செய்கிறது. இப்பொழுது நடைமுறையில் இருந்து நீக்கப்பட்ட மாநில சாசனம் மிகத் தெளிவாக,  “1947 ஆகஸ்ட் 15 தேதியின்போது மன்னராட்சிக்கு உட்பட்டிருந்த இறையாண்மை மிக்க பகுதிகள் எல்லாம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு உட்பட்ட பகுதிகளாகும்” என்று வரையறை செய்துள்ளது. அதாவது தேச விடுதலைக்குப் பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகளும் காஷ்மீர் மாநில வரம்புக்கு உட்பட்டதென்று உறுதியாகக் கூறுகிறது.

திரு. ராம் மாதவ்,  ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர்; ’இந்தியா ஃபவுண்டேஷன்’ அமைப்பின் தலைவர். இந்தக் கட்டுரை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் இவர் எழுதிய  ‘India is a Union, not a Federation’  என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்

நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (16.12.2023)

$$$

Leave a comment