சர்தார் படேல்- சில தகவல்கள்

-திருநின்றவூர் ரவிகுமார்

அனைவராலும் 'சர்தார்' படேல் என்று அன்போடு அழைக்கப்படும் வல்லபபாய் படேல் 1950 டிசம்பர் 15 நாள் மும்பையில் மாரடைப்பால் காலமானார். அவரைப் பற்றிய சில தகவல்கள்...

சர்தார் வல்லப்பாய் படேல், சுதந்திர பாரதத்தின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் இருந்தார்.

ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு அவர்களது நேரடி ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளையும் 565 சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து ஒன்றுபட்ட பாரதத்தை உருவாக்கியதில் இவருக்கு அளப்பரிய பங்குண்டு. இதனால் இவர்  ‘இரும்பு மனிதர்’ என்று புகழப்படுகிறார்.

 2018 அக்டோபர் 31 அன்று உலகின் மிக உயரமான சிலையான ’ஒற்றுமை சிலை’ (சர்தார் படேலின் சிலை) அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இவரது பிறந்த நாளை  தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாட 2014 இல் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவெடுத்தது. அப்போதிருந்து அக்டோபர் 31 தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

 1991 இல் இவருக்கு (மரணத்துக்குப் பின்)  ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. இது பாரதத்தின் மிகவுயரிய விருதாகும்.

  1947 இல் தில்லியில் உள்ள மெட் கால்ப் அரங்கில் நிர்வாக சேவைகள் அதிகாரிகளாக  (ஐசிஎஸ்- பின்னர் இது இந்திய ஆட்சியாளர் பணி- ஐஏஎஸ்- என்று மாற்றம் செய்யப்பட்டது) தேர்வானவர்கள் இடையே படேல் உரையாற்றினார். அது முதல் கொண்டு ஒவ்வொர் ஆண்டும் அந்த நாள் (ஏப்ரல் 21) தேசிய சிவில் சர்வீஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

 காங்கிரஸினால் பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மகாத்மா காந்தியின் விருப்பத்திற்கு இணங்கி பண்டித ஜவஹர்லால் நேருவை பிரதமராக ஏற்றுக் கொண்டார்; மற்றவர்களையும் ஏற்கச் செய்தார்.

 இதற்கு முன்பு, 1937 காங்கிரஸின் தலைவர் பதவிக்கு ஒரு முக்கிய வேட்பாளராக இருந்தார். அப்போதும் மகாத்மா காந்தியின் அழுத்தத்தால் தன் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். அப்போது பண்டித ஜவஹர்லால் நேரு காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் போது (1942) இவர் அகமது நகரில் உள்ள கோட்டையில் கைது செய்யப்பட்டு 1942 முதல் 1945 வரை சிறையில் அடைக்கப்பட்டார்.

 1940 இல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்; கைது செய்யப்பட்டு ஒன்பது மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.

 1931 இல் காங்கிரஸின் கராச்சி மாநாட்டிற்கு இவர் தலைமை தாங்கினார்.

 1930 இல் நடந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் போது இவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

 1928 இல் வரி அதிகரிக்கப்பட்டதை எதிர்த்து  ‘பர்தோலி’ போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார். அதன் பிறகு அவருக்கு தலைவர் என்று பொருள்படும்  ‘சர்தார்’ என்று பட்டம் மக்களால் வழங்கலாயிற்று.

1924 முதல் 1928 வரை அகமதாபாத்தின் நகராட்சித் தலைவராகவும், 1917 முதல் 1924 வரை அகமதாபாத்தின் முதல் இந்திய முனிசிபல் கமிஷனராகவும் பணியாற்றினார்.

தனது முப்பதாவது வயதில், 1910 இல், சட்டம் படிக்க லண்டனுக்குச் சென்ற இவர் 36 மாதப் படிப்பை 30 மாதத்திலேயே வெற்றிகரமாக முடித்தார். 1913 இல் பாரதம் திரும்பி வந்து அகமதாபாத்தில் குற்றவியல் வழக்கறிஞரானார்.

 இவர் தன் பள்ளிப் படிப்பை முடிக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டார். தனது 22 வது வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு தேர்ச்சி பெற்றார்.

 பெட் லாட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலும் அதற்கு முன் கரம்சந்தில் உள்ள ஆரம்பப் பள்ளியிலும் படித்தார்.

 இவர் குஜராத்தில் உள்ள நாடியாட்-டில் 1875 அக்டோபர் 31 ஆம் தேதி பிறந்தார்.  இவரது முழு பெயர் வல்லபபாய் ஜாவர்பாய் படேல்.

 இவரது மனைவியின் பெயர் ஜாவெர்பா பென். இவரது மகளின் பெயர் மணி பென் பட்டேல் (1903). மகனின் பெயர் தஹ்யா பாய் பட்டேல்  (1905).

 இவரது தந்தையின் பெயர் ஜாவர்பாய் பட்டேல்;  தாயின் பெயர் லட்பாதேவி.

இவரது தமையனும் சுதந்திரப் போராட்ட வீரர். அவரது பெயர் வித்தல் பாய் படேல் (1873- 1933).

$$$

Leave a comment