இது ஒரு தவம்

-அ.போ.இருங்கோவேள்

சென்னை, சங்கர நேத்ராலயா மருத்துவக் குழுமத்தின் நிறுவனரும், பிரபல கண் மருத்துவ நிபுணருமான, பத்ம பூஷண் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் 21.11.2023 அன்று காலமானார். அவருக்கு நமது கண்ணீர் அஞ்சலி. இக்கட்டுரை, அவரது சீடரும் மருத்துவ சமூக சேவகருமான திரு. அ.போ.இருங்கோவேளால்  எழுதப்பட்டது....

டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத்
(1940, பிப். 24 – 2023 நவ. 21)

‘தி ஹிந்து’ நாளிதழில்  செப்டம்பர் 2, 1992 அன்று வெளிவந்திருந்த வேலைவாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து,  குறிப்பிட்டிருந்த தகுதிகளும் அனுபவமும் இருந்த காரணத்தால்  விண்ணப்பித்தேன். வந்திருந்த விண்ணப்பங்களில் 12 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து, நேர்முகத் தேர்வில் டாக்டர் வசந்தி பத்ரிநாத், டாக்டர் எச்.என்.மாதவன், டாக்டர் ஜ்யோதிர்மயி பிஸ்வாஸ், பொது மேலாளர் திரு. எஸ்.ஆர்.சந்திரன், எச்.ஆர். மேனேஜர் திருமதி நகினா அஹமத்,  எனக்கு முன்பு பணியிலிருந்த திருமதி இந்துமதி  ஆகியோர் தேர்ந்தெடுத்த ஒரு மருத்துவ சமூக சேவகராக இருங்கோவேள் ஆகிய நான் அக்டோபர் 16, 1992 அன்று சங்கர நேத்ராலயாவில் இணைந்தேன். 

அதற்கு முன்பு அங்கே யாரையுமே எனக்குத் தெரியாது. ஏன், நேர்முகத் தேர்வுக்குத் தான் முதல் முறையாக சங்கர நேத்ராலயா வளாகத்திற்குள்ளேயே காலடி எடுத்து வைத்தேன்.

அப்போது எனக்குத் தெரியாது, இன்றைய தேதிப்படி என் வாழ்வின் பாதிக்கு மேற்பட்ட  நாட்களை நான் இங்கே தான் கழிக்கப்போகிறேன் என்று. 

பொது மேலாளர் திரு. எஸ்.ஆர்.சந்திரனிடம் அழைத்துச் சென்றார்கள். அவர் வாழ்த்துச் சொல்லிவிட்டு, “டாக்டர் பத்ரிநாத்தின் செக்ரட்டரியிடம் ஒரு அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டு, டாக்டர் பத்ரிநாத் அவர்களைச் சந்தியுங்கள்” என்றவர் என்னை அவரிடம் அழைத்து வந்த எச்.ஆர். செக்ரட்டரி பத்மாவதியிடம், “இவரை இந்துமதியிடம் அழைத்துச் செல்லுங்கள், டாக்டர் பிரேமா பத்மநாபனிடமும் அறிமுகம் செய்து வையுங்கள்” என்றார்.

வேலையில் சேர்ந்த மூன்றாம் நாளே அக்டோபர் 19, 1992 அன்று அதிகாலை 8.00 மணிக்கு ஹோட்டல் அடையாறு பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் ஒரு ரோட்டரி கான்ஃபரன்ஸ். 

மீட்டிங் ஆரம்பிக்கும் முன், ஒரு போஸ்டர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், அதனைச் செய்து கொண்டிருந்த போது,  அந்த பேனலை தரையில் வைத்து, தரையில் முழங்காலிட்டு ஃபோட்டோக்களை வரிசையாக அடுக்கி பின் செய்த பின்னர், அவற்றை நிறைவாக ஒரு முறை சரிபார்த்துக் கொண்டிருந்தேன். என் அருகே ஆஜானுபாகுவாக,  சஃபாரி சூட்டுடன், ஒருவர் தானும் என்னுடன் முழங்காலிட்டு அமர்ந்துகொண்டு பார்த்தார். நான் இடையில் ஒரு போஸ்டர் ஃபோட்டோவை அகற்றிய போது,  “ஏன்?” என்று கேட்டார்.   “எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்க்கலாமே? நேர்மறையாக கண்தானம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவோமே?”  என்றேன்.

“சபாஷ்” –  என்று தோளில் தட்டிக்கொடுத்தார்.

 “நன்றி” சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தேன்.  யாரென்று தெரியவில்லை.

எழுந்து நின்று “நான் இருங்கோவேள். மெடிக்கல் சோஷியல் ஒர்க்கர்” – என்றேன்.

“ஐ அம் டாக்டர் பத்ரிநாத்” –  என்றார்.

ஒருகணம் அதிர்ந்தேன்.

“உங்களைச் சந்திப்பதற்கு, உங்கள் செக்ரட்டரி திருமதி அம்பிகா திலீப்குமார் நாளைக்குத் தான் எனக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருக்கிறார். அதனால் உங்களை அலுவலகத்தில் நான் நேரில் சந்தித்து அறிமுகம் செய்து கொள்ள முடியாமல் போய்விட்டது” –  என்றேன்.

”உங்க அப்பாயின்ட்மென்ட்டை கடவுள் ப்ரீஃபோன் பண்ணிவிட்டார்” என்றவர் தொடர்ந்து,

“மை ஹார்ட்டி வெல்கம் டு யூ மிஸ்டர் இருங்கோவேள். ஹார்டி வெல்கம் டு சங்கர நேத்ராலயா ஃபேமிலி. விஷ் யூ ஆல் த பெஸ்ட் ஃபார் யுவர் பெர்சனல் அண்ட் ப்ரொஃபஷனல் எண்டேவோர்ஸ். மே காட் ப்ளெஸ் யூ ஃபார் எ வெரி ஹாப்பி அண்ட் ப்ராஸ்பெரஸ் ஃப்யூச்சர்” என்று வாழ்த்தினார்.

”நன்றி”   சொல்லிவிட்டு அந்த பேனலை நிமிர்த்தி வைத்தபோது, அவரும் கை கொடுத்தார். 

“சார், சார்.., நான் பார்த்துக் கொள்கிறேன்”  என்றபோது அதனைக் கண்டு கொள்ளாமல் அவரும் கைகொடுத்து அந்த பேனலை நிறுத்தி வைக்க உதவினார்.

அது ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3230 உடன் இணைந்து, ரோட்டரி ஐ டொனேஷன் ப்ராஜக்ட் ஆரம்ப விழா. 19.10.1992 அன்று ஆரம்பமானது. அந்நாளைய ரோட்டரி மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் ராமகிருஷ்ணன் அவர்கள் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். திட்டத்தின் சேர்மன் ஆக ரோட்டேரியன் எஸ்.என்.ஸ்ரீகாந்த் செயல்பட்டார். அப்போது சென்னையில் மொத்தம் 54 ரோட்டரி சங்கங்களே இருந்தன. அனைத்து சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட சுமார் 200 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சி.

நிகழ்ச்சியில் டாக்டர் பத்ரிநாத் என்னை அனைத்து ரோட்டரி சங்க தலைவர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

எனது பணி புரிய ஆரம்பித்தது.

மறுநாள் டாக்டர் பத்ரிநாத் அவர்களை மருத்துவமனையில் சந்தித்த போது, என் பெயருக்கான விளக்கத்தைக் கேட்டார். தொடர்ந்து என்னை ஒரு மெடிக்கல் சோஷியல் ஒர்க்கர் ஆக, சங்கர நேத்ராலயாவின் கண் வங்கி, கிராமப்புற இலவச கண் சிகிச்சை முகாம்கள், மற்றும் பார்வை ஆராய்ச்சிகளுக்கான ஆலோசகர் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். தினசரி காலையில் தன்னைச் சந்திக்கும்படியும் அறிவுறுத்தினார். டாக்டர் பிரேமா பத்மநாபன் – கார்னியா துறைத் தலைவர், டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர் அறிவியல் துறைத் தலைவர், டாக்டர் எச்.என்.மாதவன் – நுண்ணுயிரியல் துறைத் தலைவர், டாக்டர் அமிதவா பிஸ்வாஸ் – ஆகியோருடன் இணைந்து என் பணிகளைத் தொடரும்படி அறிவுறுத்தினார்.

எனது பயணம் ஆரம்பமானது.

சங்கர நேத்ராலயாவில் ஒருவர் ஏதேனும் தவறு செய்து விட்டால் அந்தச் செய்தி எப்படியாவது டாக்டர் பத்ரிநாத் அவர்களிடம் சென்றுவிடும்.

அவர் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து விசாரிப்பார்.

இது போன்ற அழைப்புகள் அவரது தனிச்செயலர் திருமதி அம்பிகா திலீப்குமார் அவர்கள் மூலமே வரும். 

அதனை அவர் நமக்குச் சொல்லும் விதமே, சற்று வயிற்றைக் கலக்கும்.

“இருங்கோவேள், போய் சீஃப்பைப் பாருங்கோ!”

தவறு செய்தவர்களை விசாரிக்கும்போது, நாம் எதிரே நின்றாலும் டாக்டர் பத்ரிநாத் ஒரு ஐந்து நிமிடம் மௌனமாக நாம் எதிரே நிற்பதைக் கவனிக்காதவர் போல, தனது வேலைகளைச் செய்து கொண்டிருப்பார். 

பல நேரங்களில் அந்த மௌனம் 10 அல்லது 15 நிமிடங்கள் வரை கூடத் தொடரும். அது கோபமல்ல, அவரது வேதனை என்பதை சில நாட்களிலேயே புரிந்து கொண்டேன்.

அப்போதெல்லாம், சங்கர நேத்ராலயாவில் முக்கிய பதவிகளுக்கு வேலைக்குச் சேருபவர்களைப் பற்றி ஒரு செக்யூரிட்டி ஏஜென்சி மூலம் அவர்கள் சொந்த ஊர், பெற்றோர், படித்த கல்லூரிகளில், முன்பு வேலை பார்த்த இடங்களில் – விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கும் விவரங்கள் சரியானவையா என்று விசாரிப்பார்கள். அதனை Antecedent Verification என்பார்கள். நான் வேலைக்குச் சேர்ந்த பிறகு அந்த விசாரணை நடைபெற்றது. அப்படி அவர்கள் விசாரிப்பது எனக்கு தெரியாது.

அப்படி சரிபார்த்தபோது, நான் எம்.ஏ. சமூகவியல், எம்.ஏ. சோஷியல் ஒர்க், உளவியலில் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ படித்ததை மட்டும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தேன். எம்.ஏ. சமூகப்பணி, எம்.ஃபில் சமூகப்பணி, எம்.ஏ. தமிழ் இலக்கியம் படித்திருந்ததைக் குறிப்பிடவில்லை. அதனை அந்த செக்யூரிட்டி ஏஜென்சி தெரிந்துகொண்டு தங்களுடைய அறிக்கையில் தெரிவித்து விட்டார்கள்.

அந்த அறிக்கை டாக்டர் பத்ரிநாத் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைப் படித்த பிறகுதான் அவர் என்னை அழைத்தார்.

இந்த விவரம் எனக்கு பின்னரே புரிய வந்தது.

“உங்களுடைய கல்வித் தகுதி என்ன என்று உண்மையைச் சொல்வதற்குக்கூட வெட்கமா இருங்கோவேள்?”

எனக்கு முதலில் புரியவில்லை.

அவர் அந்த அறிக்கையை என்னிடம் காண்பித்தார்.

“ஸாரி சார், எனக்குப் புரியவில்லை. என்னைப் பற்றிய விசாரணை அறிக்கையில் தவறாக ஏதுமில்லையே?” 

“ஏன் நீங்கள் எம்.ஏ., எம்.ஃபில்., சோஷியல் ஒர்க், எம்.ஏதமிழ் இலக்கியம் படித்திருப்பதை எல்லாம் உங்கள் அப்ளிகேஷனில் சொல்லவில்லை?”

“சார், ஹிந்து பேப்பர் அட்வர்டைஸ்மென்ட்டில் இந்தப் பதவிக்கான தகுதி எம்.ஏ. சோஷியாலஜி அல்லது எம்.ஏ. சோஷியல் ஒர்க் என்று குறிப்பிட்டிருந்தது. எனவே அதனை மட்டும் குறிப்பிட்டிருந்தேன்”

“ஏன் எம்.ஃபில். மற்றும் எம்.ஏ. தமிழ் இலக்கியம் படித்திருப்பதைக் குறிப்பிடவில்லை?”

“சார் பல நிறுவனங்களில் கல்வித் தகுதியையும், அதீத ஆர்வத்தின் காரணமாக படித்த கல்வித் தகுதிகளையும், உபரி கல்வித் தகுதிகளையும் அவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளையும் புரிந்து கொள்வதில்லை. பல நிறுவனங்களில் மிகையான தகுதி என்று வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு என் அனுபவத்தைச் சொல்கிறேன். அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில் எங்கள் துறையில் அதிக கல்வித் தகுதி காரணமாகவே எனது பணி ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. காரணம் தான் அழைத்துக்கொண்டு வந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய்விடுமோ என்று எனது பணி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது.”

“டாக்டர் சாந்தாவா அப்படிச் செய்தார்?”

”இல்லை. எனது துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒரு டாக்டர், டாக்டர் சாந்தா ஊரில் இல்லாதபோது அப்படி செய்தார்.”

அவர் அப்போது சொன்ன வார்த்தைகள் இன்றும் நினைவில் நிற்கிறது.

“தாமிரபரணிக் கரையில் பிறந்து, வைகைக் கரையில் படித்து, வளர்ந்து வந்திருக்கீங்க. அந்தக் கல்விக்கும் பெற்ற அறிவுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டாமா? Irungovel, be proud of your academic qualification. This is god’s grace. உட்காருங்கோ” –  என்று அவருக்கு பக்கவாட்டில் இருந்த நாற்காலியைக் காட்டினார்.”

எனது விசிட்டிங் கார்டிலும் அனைத்து கல்வித்தகுதிகளையும் கண்டிப்பாக்க் குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நான் அவர் எதிரே உட்கார நான் தயங்கினேன்.

“நீங்க உட்காரவில்லை என்றால் உங்க கூடப் பேச மாட்டேன்”

இதுவும் அவரது குணம்.

உடனே உட்கார்ந்து விட்டேன். 

“நிறைய பத்திரிகைகளில் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் போல?”

“ஆமாம் சார்”.

Cataract – Patient Information  என்ற ஆங்கிலப் பிரசுரத்தை கொடுத்து, “Cataract” – தமிழில் என்ன சொல்வீர்கள்?”

“கண் புரை என்று பொதுவாகச் சொன்னால் எல்லோருக்கும் புரியும். அதனை தமிழில் அழகாகச் சொன்னால் யாருக்கும் புரியாது.”

“அது என்ன சொல்?”

“நீர்வீழ்ச்சிப் பார்வை” 

ஒரு கணம் கையில் இருந்த பென்சிலை டேபிளில் வைத்து விட்டு நிமிர்ந்தார். பொதுவாக டாக்டர்கள், எக்ஸிக்யூட்டிவ்கள் அனுப்பிய அறிக்கைகளை, கடிதங்களை அவர் பென்சிலில் தான் திருத்துவார். அந்த பென்சிலை வைத்துவிட்டு, இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை தமிழில்  ‘கலைமகள்’ பத்திரிகையில் வந்திருக்கிறது. படித்திருக்கிறீர்களா?”

“ஆமாம் சார் பத்து வருடங்களுக்கு முன்னால் வந்திருக்கிறது. தொடர்ந்து இன்ட்ரா – ஆக்குலர் லென்ஸ் பற்றி –  ‘கண்ணுக்குள் பொருத்தும் குவி ஆடி’, க்ளக்மோமா பற்றி   ‘ஊடு குழாய் பார்வை’ – என்று வந்திருக்கிறது. அப்போது நான் கல்லூரி மாணவன், அந்தக் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து எழுதியது நான்தான். அதற்க்காக கி.வா.ஜ.சார் 30 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பியிருந்தார்”.

“ஹேய்ய்.”

எனது தோள்பட்டையை தட்டிக் கொடுத்தவர், இன்டர்காமில் அம்பிகா மேடத்தை அழைத்து, ”கேண்டீன்லே இருந்து ரெண்டு காஃபி அனுப்பச் சொல்லுங்கம்மா”. 

என்று சொல்லிவிட்டு  ‘அப்டேட் ஆஃப்தால்மாலஜி’ என்ற புத்தகம் ஒன்றைக் கொடுத்து,  “இந்தப் புத்தகத்தைப் படியுங்கோ, நாளைக்கு எனக்கு ஆபரேஷன் தியேட்டர் டியூட்டி. நீங்களும் வந்து ஆபரேஷனை அப்சர்வ் பண்ணுங்கோ” என்றவர், “மயக்கம் போட்டு விழுந்துட மாட்டீங்களே?” என்று விளையாட்டாக கேட்டார்.

“கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் தியேட்டரில் கேன்சர் ஆபரேஷன் எல்லாம் பார்த்திருக்கிறேன் சார்” – என்றேன்.

காபி குடித்த பிறகு, “ ஓ.கே. சீ யூ டுமாரோ இன் ஓ.டி” என்று வழியனுப்பினார்.

அம்பிகாவின் டேபிளுக்கு வந்த போது,  “என்ன இருங்கோவேள், டோஸ் வாங்கப் போனவர், சீஃப் போட காபி குடிச்சுட்டு வரீங்க?” என்று கிண்டலடித்தார்.

“ நாளைக்கும் டோஸ் வாங்காதீங்க, சீஃப் காலை ஏழு மணிக்கு ஓ.டி.க்குப் போய் விடுவார். அவருக்கு முன்னே நீங்க ஆபரேஷன் தியேட்டருக்குப் போய் விடுங்கோ. உள்ளே போனவுடனே முதல் கேள்வியாக இருங்கோவேள் வந்துட்டாரான்னு கேட்பார். லேட் பண்ணினீங்க, ஒட்டுமொத்த தியேட்டர் ஸ்டாஃப்க்கும் டோஸ் விழும்” – என்றார்.

மறுநாள், ஆபரேஷன் தியேட்டரில் அவர் ஒரு கேட்டராக்ட் ஆபரேஷன் செய்வதை நேரடியாகப் பார்த்தேன். ஒவ்வொன்றாக விளக்கிச் சொன்னார். அசட்டுத்தனமாக சில கேள்விகள் கேட்டேன். பொறுமையாகச் சொன்னார். அவற்றையெல்லாம் பின்னாளில் பல கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன்.

பின்னர் வந்த நாட்களில் அவரிடம் நிறையவே  ‘ஆசீர்வாதங்களும்’ வாங்கியிருக்கிறேன்.

“என் மூஞ்சியிலே முழிக்காதீங்க, எங்கேயாவது போய்த் தொலைக்கோ” –  இது தான் அந்த ஆசீர்வாதம்.

இது சங்கர நேத்ராலயாவில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் கிடைக்கும் ஆசீர்வாதம்.

காரணம்?

நமது தவறுகளால் நோயாளிகளுக்கு ஒரு பிரச்னை வந்துவிடக் கூடாது என்கிற ஆதங்கம். 

நாம் செய்வது வேலை அல்ல; ஆராதனை. நாம் பணியாற்றும் இடம் ஒரு ஆலயம். அங்கே அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு நமது சேவை தொடர வேண்டும். உடலிலும் மனதிலும் வலியோடு வரும் நோயாளிக்கு நல்ல சேவை செய்து அந்த வலியைப் போக்கி, அவர் முகத்தில் மட்டுமல்ல, கண்களிலும் சிரிப்பைக் கொண்டுவர வேண்டும் என்ற ஆதங்கம்.

புரிந்தவர்கள் அவரோடு என்னைப் போல 32 வருடங்கள் அல்ல, 40 வருடங்களைக் கடந்தும் சங்கர நேத்ராலயாவில் சேவை செய்து வருகிறார்கள்.

அடுத்த வருடம் என் தங்கைக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்க்காக குஜராத்தில் வார்தாவில் ஒரு மாப்பிள்ளையை நேரில் பார்த்து விசாரிப்பதற்காகச் செல்ல வேண்டி இருந்தது. 

வார்தாவுக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று சொன்னதோடு, அங்கே காந்தி ஆஸ்ரமத்திற்கு ஒரு கடிதமும் கொடுத்தார். அந்த மாப்பிள்ளையைப் பார்த்து விட்டு வந்த பின்னர், அவரை எனக்குப் பிடிக்கவில்லை. காரணம் அவர் சிகரெட் பிடிக்கிறார். மதுவும் அருந்துவார் போல தெரிகிறது என்றபோது குருநாதர் சிரித்தார்.

பின்னர் தங்கையின் திருமண அழைப்பிதழைக் கொடுத்தபோது, திருமணம் மதுரையில் நடைபெறுகிறது.  ‘சென்னையில் என்றால் வந்து விடுவேன். எனது ஆசிகள் உங்கள் தங்கைக்கும் அத்தானுக்கும் உண்டு’ என்றவர், திருமணத்தன்று ஒரு வாழ்த்து தந்தியும் அனுப்பி வைத்தார்.

1994 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் தமிழ் வருடப் பிறப்பு அன்று விடுமுறை நாள். ஆனால் அன்றைய தினம் மட்டும் நான் 13 இடங்களில் பல்வேறு அமைப்புகளில் ஒரே நாளில் ‘கண் தானம்’  பற்றிய விழிப்புணர்வுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினேன். அன்று நாள் முழுவதும் என்னுடன் அத்தனை இடங்களுக்கும் அழைத்துச் சென்ற சங்கர நேத்ராலயாவின் கார் ஓட்டுநர் திரு. எத்திராஜ் என்பவர். காலை 7.00  மணிக்கு கிண்டி, ஐ.ஐ.டி. வளாகத்தில் என்.சி.சி. அணிவகுப்பு மீட்டிங்கில் ஆரம்பித்து, இரவு 10.00  மணிக்கு ஹோட்டல் சவேராவில் ஒரு ரோட்டரி சங்கத்தின் டின்னர் மீட்டிங்கில் நிறைவு பெற்றது.

பொதுவாக கார் டிரைவர்களிடம் மட்டுமல்ல, எல்லோரிடமுமே விடுமுறை நாளை எப்படிக் கழித்தீர்கள் என்றெல்லாம், குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றியெல்லாம் அக்கறையாக விசாரிப்பார் டாக்டர் பத்ரிநாத்.

அடுத்த நாள் திரு. எத்திராஜ், டாக்டர் பத்ரிநாத் அவர்களுக்கு காரோட்டிய போது எதேச்சையாக 13 இடங்களில் நான் கண் தானம் சொற்பொழிவு நிகழ்த்தியதை சொல்லிவிட்டார்.

சங்கர நேத்ராலயாவுக்கு வந்தவுடன், திருமதி அம்பிகா மூலம் அழைப்பு வந்தது. அழைப்பு அவர் மூலம் வந்ததால் சற்று பதற்றத்துடன் டாக்டர் பத்ரிநாத்தை சந்திக்கப் போனேன். உட்கார பயம். நின்று கொண்டிருந்தேன்.

ஐந்து நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.

“ம்… சொல்லுங்கோ”

“அம்பிகா மேடம், உங்களைப் பார்க்கச் சொன்னாங்க”.

அவர் நேருக்கு நேர் எனது கண்களைப் பார்த்தார். கோபம் இல்லை. ஓரு தகப்பனின் வேதனை அந்த கண்களில் தெரிந்தது.

“I am more concern on Health of Sankara Nethralaya Employees. This is not nice to heard that you addressed in 13 public awareness programs in a single day. Don’t try to please me…” 

“Sir I don’t want to loose the opportunity, so I accepted all the Invitations”.

“Stop it” – He raised his voice.

“OK Sir, henceforth I will be more planned in nature to accept the Invitations.”

“உம்” என்றவர் ஃப்ரிட்ஜைத் திறந்து, இரண்டு மாம்பழங்களை எடுத்து என்னிடம் கொடுத்து, “தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று கைகுலுக்கினார். 

எனது எழுத்துத் திறமை அவருக்கு மிகவும் பிடிக்கும். எனவே சங்கர நேத்ராலயாவின் ஊழியர் இதழான  ‘அகம்’, மருத்துவ விழிப்புணர்வு இதழான  ‘தர்ஷன்’ இதழ்களின் ஆசிரியர் பொறுப்புகளையும் அளித்தார்.  ‘ஐ லைட்ஸ்’ என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கும் சில பொறுப்புகளை வழங்கினார்.

ஒரு ஸ்வயம்சேவகனாகவே வளர்ந்து கொண்டிருந்த என்னை, டாக்டர் வசந்தி பத்ரிநாத் அவர்கள்தாம்,  “திருமணம் என்பதுதான் ஒரு மனிதனை முழுமையடையச் செய்யும். இனிமே ஒருத்தி உங்களுக்காகப் பிறந்து வரப் போறதில்லே. எங்கேயோ பிறந்து வளர்ந்திருப்பா. சீக்கிரம் கல்யாணம் நடக்க வாழ்த்துகிறேன்” – என்று 1993 ஆம் வருடம் காஞ்சி பெரியவர்கள் இருவரும் சங்கர நேத்ராலயாவுக்கு வந்தபோது என்னை ஆசீர்வதித்து அறிவுரை கூறினார்.

அடுத்து 1995 ஆம் வருடம் ஜனவரி 1 ஆம் தேதி, சிருங்கேரி சாரதா மடத்திலிருந்து ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் சங்கர நேத்ராலயாவுக்கு விஜயம் செய்தபோதும் அவ்வாறே ஆசீர்வதித்தார். அப்போது எனது முகத்தைப் பார்த்தவர், “ஹே Have you met your girl?” என்று கேட்டார்.

அப்போது என் வருங்கால மனைவியைப் பற்றி சொன்னேன்.  “சீக்கிரம் கல்யாணம் முடியுங்கோ”  என்று ஆசீர்வதித்தார். திருமணத்தில் சில பிரச்சினைகள் வந்த போது, ஒரு பெற்றோர் ஸ்தானத்திலிருந்து இருவரும் அறிவுரை கூறி வழிநடத்தினார்கள். 

எங்கள் திருமணத்திற்கும் அவர்கள் வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் எனது மகனின் முதல் பிறந்த நாள் ஆயுஷ்ஹோமம் நடைபேற்றபோது, இருவரும் தம்பதி சமேதராக வந்திருந்து ஆசீர்வதித்தார்கள்.

தொடர்ந்து என்னை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், தி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மெடிக்கல் யுனிவர்சிட்டி, லயோலா கல்லூர், கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னை விவேகானந்தா கல்விக்கழகம் போன்ற நிறுவனங்கள், பல கௌரவ பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள அழைத்தபோது,  “இவை எல்லாம் சங்கர நேத்ராலயாவுக்கு கௌரவம். நீ கண்டிப்பாக இந்த பொறுப்புகளை எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று ஊக்குவித்தார்.

என் மகள் பிறந்த செய்தியை முதலில் டாக்டர் பத்ரிநாத் அவர்களுக்குத் தான் தெரிவித்தேன். உடனே சங்கர நேத்ராலயாவில் எல்லோருக்கும் இ-மெயில் மூலம் “Irungovel is blessed with a princess, both his princess and Maharani are doing well ” என்று தனது மகிழ்ச்சியையும் ஆசியையும் வெளிப்படுத்தினார்.

இன்றும் சங்கர நேத்ராலயாவில் ஊழியர்களுக்கு குழந்தைகள் பிறந்தால் எச்.ஆர்.டி. (மனிதவள மேம்பாட்டுத் துறை) மூலம் மகிழ்ச்சியைத் தெரிவிப்பது தொடர்கிறது. 

2006 சென்னையில்,  பணி முடிந்து பின் மாலை நேரம் அண்ணா நகரில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது ஒரு விபத்து. நல்ல வேளையாக பின் சீட்டில் அமர்ந்திருந்த எனது மனைவிக்கு பிரச்னை ஏதுமின்றி கடவுள் அருளால் தப்பித்தார். ஆனால் எனக்கு வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு. சென்னை சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலை தப்பியது.

மறுநாள் காலை ஆபரேஷன் என்று முடிவானது.

தகவல் தெரிந்து டாக்டர் பத்ரிநாத் அந்த மருத்துவமனைக்கு போன் செய்து, யார் எனக்கு ஆபரேஷன் செய்யப் போகிறார்கள் என்று தெரிந்து, அவருடனும் தொலைபேசியில் பேசி, மயக்க மருந்தியல் நிபுணர்  உள்பட பலரிடமும் பேசி ஒரு அன்புக் கலவரம் செய்து விட்டார். 

மறுநாள் அதிகாலை ஆபரேஷன்.

ஆபரேஷன் முடிந்து மயக்கம் ஓரளவு தணிந்து என்னை வார்டுக்கு அழைத்து வந்தபோது, எனது கரங்களை ஒரு கரம் மெதுவாக தொட்டது;   “இருங்கோவேள்” – குரல் ஒலித்தது.

மிகவும் பரிச்சயமான குரலாக இருக்கிறதே என்று லேசாக்க் கண்களைத் திறந்தேன்.

“டாக்டர் பத்ரிநாத் வந்திருக்கிறேன்” –  என் கரங்களில் தன் கரத்தை வைத்திருந்தது டாக்டர் பத்ரிநாத்.

என் கண்களில் கண்ணீர் பெருகியது. உடன், ஜெனரல் மேனேஜர் திரு. ஏ.கிருஷ்ணன், சி.இ.ஓ. டாக்டர் கே.ரவிஷங்கர், எச்.ஆர்.டி. மேனேஜர் திருமதி ராஜேஸ்வரி, செக்யூரிட்டி ஆபீசர் திரு. சுரேஷ் என்று பலரும் வந்திருந்தார்கள். 

தோள்களைத் தட்டிக் கொடுத்து  “ரிலாக்ஸ் ரிலாக்ஸ்.”

“நீங்க கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கணும்னு கடவுள் ஆசைப்பட்டிருக்கிறார். பயப்படாதீங்க. தைரியமாக இருங்க”.

“நிறைய கம்மிட்மெண்ட் இருக்கு சார்”

“டோண்ட் ஒர்ரி. எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்”   என்றவர், அந்த மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் அர்ஜுன் ராஜகோபால் மற்றும் டிரஸ்டியைப் பார்த்து “ஐ ஹேவ் நோ டௌட், யூ வில் டேக் கேர் ஆஃப் ஹிம்” – என்று சொல்லிவிட்டு சற்று நேரம் என்னோடு இருந்து விட்டுக் கிளம்பினார்.

இரண்டு நாள் கழித்து டாக்டர் வசந்தி பத்ரிநாத் உடன் வந்து மீண்டும் பார்த்து தைரியம் சொல்லி சுமார் ஒரு மணி நேரம் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். எனக்கு மட்டுமல்ல, பல ஊழியர்களின் சுக துக்கங்களிலும் பகிர்ந்து கொண்டு ஒரு காட்ஃபாதராக இருந்தவர் டாக்டர் பத்ரிநாத்.

பின்னொரு நாள் நிர்வாகத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால், ஒரு தேன்கூட்டின் தேனீக்களைப் போல இருந்த எங்களில் குறிப்பாக துறைத் தலைவர்களிடையே ஒரு பிளவு வந்தது.

டாக்டர்கள் உட்பட சிலர் வேலையை ராஜினாமா செய்து விட்டுச் சென்றார்கள்.

அந்த வேதனை தாங்க முடியாமல், நான் வேலையை ராஜினாமா செய்தேன். டாக்டர் பத்ரிநாத் எத்தனையோ அறிவுரைகள் சொன்னார். நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பிடிவாதமாக என்னை விடுவிக்கச் சொன்னேன்.  எங்கே போகிறேன் என்பதையும் சொன்னேன். “அங்கே எல்லாம் உங்களால் இருக்க முடியாது இருங்கோவேள். அங்கே உங்களுக்கு வேலை செய்யப் பிடிக்காது” என்றார். 

நான் பிடிவாதம் பிடித்தேன்.

வேதனையோடு என்னை விடுவித்தார்.

சென்னையில் வேறொரு மருத்துமனையில் இணைந்தேன். அங்கே வேலையில் சேர்ந்த ஒரு மணி நேரத்திலேயே குருநாதரின் அறிவுரையை மறுத்தது தவறென்று புரிந்தது. 

நான்காவது நாள் குருநாதர் எதற்கோ என்னைத் தேட, நான் இல்லை என்று தெரிந்து,   “சரி, அவரை போனில் கூப்பிடுங்கோ” என்றிருக்கிறார்.

“ஹலோ இருங்கோவேள், நான் டாக்டர் பத்ரிநாத் பேசுகிறேன். எப்படி இருக்கிறீங்க?”

“ஃபைன் தாங்க்யூ சார்” – என்று பொய் சொல்லத் தயக்கம். 

சங்கர நேத்ராலயாவில் அவரை நினைத்தாலே எங்களில் பலருக்கும் வாயில் பொய் வராது. ஏதேனும் தவறு செய்திருந்தால் கூட அதையும் நேரிலேயே சொல்லி, இனி அந்தத் தவறைச் செய்ய மாட்டோம் என்று சொல்லி வளர்ந்தவர்கள் நாங்கள்.

நான் மௌனமாக இருந்தேன்.

“ஹலோ”

“நமஸ்காரம் சார்”

“ஹௌ ஆர் யூ?”

“ஸாரி சார், தப்பு பண்ணிட்டேன்”

“ஏன் என்ன ஆச்சு?”

“ஐ அம் நாட் ஓ.கே. சார்”.

“ஃப்ரீயாக இருந்தால் வரேளா?”

ஓடி வந்து விட்டேன்.

“யூ ஆர் எ சோஷியல் ஒர்க்கர். உங்களுக்கெல்லாம் கார்ப்பொரேட் ஹாஸ்பிடல் எல்லாம் சரிவராது. பேசாமே. இங்கேயே இருங்கோ”

மீண்டும் இணைந்தேன்.

2007 ஆம் வருடம் மதுரையில் என் தந்தை காலமானார். தகவல் சொன்ன போது, தனது காரோட்டி மூலம் ஒரு கார் ஏற்பாடு செய்து நான் குடும்பத்துடன் மதுரை சென்று தந்தைக்குச் செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் செய்து விட்டு அடுத்த நாளே பணியில் சேர்ந்த போது, என் கண்களை ஏறிட்டார். 

“எங்க அப்பா தன்னோட சென்ட்ரல் கவர்ன்மெண்ட் சர்வீஸ்ல தேவைக்கு மேல் லீவ் எடுக்க மாட்டார் சார். நானும் அதை ஃபாலோ பண்ணுகிறேன் சார்”.

மௌனமாக தலையசைத்தவர், “Irungovel joined back duty in a day after completion of final rites to his father. Off course he donated his father’s eyes to Madurai  Aravind Eye Hospital. He fulfilled his social commitment too” –  என்று எல்லோருக்கும் இ-மெயில் அனுப்பினார்.

கண் வங்கி துறையோடு டெலிமெடிசின் துறையையும் சில காலம் சேர்த்து பார்த்துக் கொண்டேன்.

டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் உடன் கட்டுரையாளர் அ.போ.இருங்கோவேள்

சங்கர நேத்ராலயாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும், அடுத்த தலைமுறையை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்ற புதிய சிந்தனை உருவானபோது, உயர் அதிகாரிகளிடையே இருந்த ஈகோ  காரணமாக மீண்டும் பிரச்னை வந்த போது, நமக்குள் இருக்கும் நமக்கே தெரியாத திறமைகளை வெளிக்கொணரும் முகமாக நோயாளிகள் கல்வி மற்றும் ஆலோசனைப் பொறுப்புகளை என்னிடம் அளித்தார். 2010 முதல் நூற்றுக் கணக்கான மருத்துவக் கட்டுரைகள், கண் நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், டெலிமெடிசின் துறையில் சில காலம் இருந்த காரணத்தால் டெலி கவுன்செலிங், அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும் வகையில் கல்லூரியில் பேராசிரியர் வாய்ப்பு என என்னையே எனக்கு காட்டிய பெருந்தகை என் குருநாதர் டாக்டர் பத்ரிநாத். 

தி ஹிந்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், கல்கி, கலைமகள், அமுதசுரபி, குமுதம், தினமணி உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து இதழ்களிலும் சுமார் 800க்கும் மேற்பட்ட மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதிவிட்டேன்.

1992 முதல் 2019 இல் பணி ஓய்வு பெற்ற பிறகும் என்னை தொடர்ந்து ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் ஆலயம் சங்கர நேத்ராலயா.

இங்கே வாழ்ந்த ஒவ்வொரு நாளும் ஒரு தவமே! இங்கே வாழும் ஒவ்வொரு நாளும் ஒரு தவமே! 

இன்று (2023, நவ. 21) காலை விடைபெற்று விட்டார். 

என்ன இனி, டாக்டர் அரூபமாக இருந்து ஆசீர்வதிப்பார்.

.

குறிப்பு:

திரு. அ.போ.இருங்கோவேள், மருத்துவ சமூகசேவகர். சங்கர நேத்ராலயாவின் நிறுவனர்  டாக்டர் திரு. எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்களின் ஆசி பெற்ற சீடர்; மருத்துவக் கட்டுரை எழுத்தாளர். இது, இவரது முகநூல் பதிவு...

$$$

சங்கர நேத்ராலயா, சென்னை

(பத்திரிகைச் செய்தி)

சங்கர நேத்ராலயா நிறுவனர்

டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமானார்

சென்னை, நவ. 21: சங்கர நேத்ராலயா மருத்துவக் குழுமத்தின் நிறுவனரும், பிரபல கண் மருத்துவ நிபுணருமான டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் (83) சென்னையில் செவ்வாய்க்கிழமை (நவ. 21) காலமானார்.

கண் மருத்துவத்தில் புரட்சியை ஏற்படுத்திய அவர், ஏழை மக்களுக்கு அதி நவீன சிகிச்சைகள் கிடைப்பதை சாத்தியமாக்கியவர். அவரது மருத்துவ சேவையைப் பாராட்டும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விருதுகளை அவருக்கு வழங்கி கெüரவித்தன. பத்மஸ்ரீ, பத்ம பூஷண், டாக்டர் பி.சி.ராய் விருதுகள் அவற்றில் முக்கியமானவை.

‘செங்கமேடு சீனிவாச பத்ரிநாத்’ என்ற டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத், கடந்த 1940, பிப். 24- சென்னை, திருவல்லிக்கேணியில் பிறந்தவர். பெற்றோர்:  செ.வி. சீனிவாச ராவ்- லட்சுமி தேவி. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அவர், சிறுவயதில் ஏற்பட்ட நோயின் காரணமாக காலதாமதமாக பள்ளிப் படிப்பைத் தொடங்கினார்.

மருத்துவக் கல்வியின் மீது இருந்த தீரா ஆர்வம் காரணமாக,  கடந்த 1962-ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்தார். அப்போதே தேர்வில் சிறப்பிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். மேற்படிப்பைத் தொடருவதற்கு பணம் இல்லாத நிலையிலும், நண்பர்களின் வழிகாட்டுதலுடன் அமெரிக்காவில் கண் மருத்துவம் பயில தேர்வு எழுதி அங்கு சென்று பல்வேறு பட்டங்களைப் பெற்றார்.

அமெரிக்காவில் கிராஸ்லேண்ட்ஸ் மருத்துவமனை, நியூயார்க் பல்கலைக்கழக முதுநிலை மருத்துவப் பள்ளி மற்றும் புரூக்ளின் கண் மற்றும் காது மருத்துவமனை ஆகியவற்றில் கண் மருத்துவத்தில் தனது பட்டப் படிப்பை நிறைவு செய்த டாக்டர் பத்ரிநாத்,   ‘விழித்திரை மருத்துவத்தின் தந்தை’ எனப்படும் டாக்டர் சார்லஸ் எல். ஷீஃப்ஃபென்ஸின் கீழ் பாஸ்டனில் உள்ள மாசசூசெட்ஸ் கண் மற்றும் காது மருத்துவமனையின் விழித்திரை மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெற்றார்.

அதைத் தொடர்ந்து ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் (கனடா) மற்றும் கண் மருத்துவத்தில் அமெரிக்க வாரியத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அப்போது அமெரிக்காவில் பணியாற்ற பல்வேறு வாய்ப்புகள் வந்தபோதிலும், அதனைத் தவிர்த்து இந்தியாவுக்கு வந்து மருத்துவ சேவையாற்றினார்.

விஹெச்எஸ் மருத்துவமனை, விஜயா மருத்துவமனையில் விழித்திரை (விட்ரோ ரெட்டினல்) அறுவை சிகிச்சைகளை முதன்முறையாக மேற்கொண்ட டாக்டர் பத்ரிநாத், காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளுக்கு (பரமாசாரியர்) கண் அறுவை சிகிச்சை செய்யும் வாய்ப்பை பெற்றார்.

பிறகு அவருடைய அறிவுரையை ஏற்று லாப நோக்கமற்ற மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கில் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையை அவர் தொடங்கினார். அதிலிருந்து கடந்த 1978-இல் உதயமானதுதான் ‘சங்கர நேத்ரலாயா’ கண் மருத்துவக் குழுமம். அதன் கீழ் ஏழை மக்களுக்கு முழுமையாக இலவசமாக கண் மருத்துவ சேவைகளும், அறுவை சிகிச்சைகளையும் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் வழங்கினார். மற்றவர்களுக்கு சர்வதேசத் தரத்தில் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்க வித்திட்டார்.

ஏறத்தாழ 45 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் சங்கர நேத்ராலயா மருத்துவமனையை, இந்தியாவின் சிறந்த கண் மருத்துவமனைகளில் ஒன்றாக உருவெடுக்க வைத்ததில் டாக்டர் பத்ரிநாத்தின் பங்கு அளப்பரியது.

சென்னை, மந்தைவெளியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத், முதுமை சார்ந்த உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்து வந்தார். அதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (நவ. 21) அதிகாலை 2.45 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

மறைந்த டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத்துக்கு, டாக்டர் வசந்தி பத்ரிநாத் என்ற மனைவியும், சேஷு, ஆனந்த் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். டாக்டர் பத்ரிநாத்தின் இறுதிச் சடங்குகள் பெசன்ட் நகர் மின் மயானத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடைபெற்றன.

எளிமையான வாழ்க்கையையும், ஏழைகளுக்கு உதவும் எண்ணத்தையும் கொண்டிருந்த டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத்தின் மறைவுக்கு மருத்துவத் துறையினர், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி:  தொலைநோக்குப் பார்வை கொண்ட டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத்தின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. கண் பிரச்னைகளுக்கான சிகிச்சையில் அவரின் பங்களிப்பும் சமூகத்துக்கு அவரின் இடைவிடாத சேவையும் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்துள்ளன. அவரின் பணிகள் தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்கள், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: அசாதாரணப் பார்வை, தன்னலமற்ற சேவை, இரக்கத்தின் உருவகமாக இருந்த அவர், சங்கர நேத்ராலயா மூலம் கோடிக்கணக்கான ஏழை எளியோரின் வாழ்வைத் தொட்டார். அவரின் குடும்பத்தினருக்கும் அவரை பின்பற்றுவோருக்கும் அனுதாபங்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமெரிக்காவில் உயர் படிப்புகளை முடித்து, இந்தியாவில் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற சேவை நோக்குடன் சங்கர நேத்ராலயா மருத்துவமனையைத் தொடங்கினார் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத். அவர் தொடங்கிய மருத்துவமனை பல்கிப் பெருகி நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.  எண்ணற்ற மக்களுக்குக் கண்ணொளி பாய்ச்சிய டாக்டர் பத்ரிநாத்தின் மறைவு, மருத்துவத் துறைக்குப் பேரிழப்பு.

$$$

Leave a comment