இருமையின் இறைவன்

-திருநின்றவூர் ரவிகுமார்

இன்பமும் துன்பமும் இறைவன் தருவது. அவனது நினைவே அமைதி அளிக்கிறது. திருவாய்மொழியில் நம்மாழ்வார் கூறுவதும் இது தானே?
நல்குரவும், செல்வும், நரகும், சுவர்க்கமுமாய்
வெல்பகையும், நட்பும், விடமும், அமுதமுமாய்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை,
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே. 

     -நம்மாழ்வார் (திருவாய்மொழி)

பொருள் விளக்கம்: நல்குரவு – வறுமை; செல்வு – செல்வச் செழிப்பு; வெல் – வெல்லும் ஆற்றலுடைய; மல்கு – நிறைந்திருக்கின்ற; திருவிண்ணகர் – ஒப்பிலியப்பன் /உப்பிலியப்பன் சன்னிதி

சொல்ல முடியாத வறுமைத் தன்மை- அதற்கு எதிரான செல்வச் செழிப்பு, வாழ முடியாத நரகம் – அதற்கு எதிராக அனுபவித்து வாழ்கின்ற சுவர்க்கம், வெல்ல முடியாத பகை- அதற்கு மாறான நட்பு, கொல்லும் சக்தி வாய்ந்த நஞ்சு- அதற்கு எதிர்மறையான சாவா மருந்தாகிய தேவ அமிர்தம், இத்தகைய பலதரப்பட்ட எல்லாப் பொருள்களிலும், இடங்களிலும், நிலைகளிலும், வியாபித்து விளங்குகின்றவன் எம்பெருமான்.

அவன்தான் என்னை ஆட்கொண்டு அடிமையாகக் கொண்டவன். அவனை நான் எங்கு கண்டு கொண்டேன் தெரியுமா? செல்வச் செழிப்பு மிகுந்து விளங்குகின்ற குடிமக்களைக் கொண்டுள்ள திருவிண்ணகர் என்னும் ஒப்பிலியப்பன்/ உப்பிலியப்பன் கோவில் சன்னிதியில் தான் கண்ணாரக் கண்டு களித்தேன்.

Divinity is where contradiction coexist.

***

புண்ணியம், பாவம், புணர்ச்சி பிரிவு என்று இவையாய்,
எண்ணமாய், மறப்பாய், உண்மையாய், இன்மையாய், அல்லனாய்,
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த பிரான்,
கண்ணன் இன்அருளே கண்டு கொள்மின்கள் கைதவமே?

     -நம்மாழ்வார் (திருவாய்மொழி)

பொருள் விளக்கம்: புணர்ச்சி – கலவி; பிரிவு – புலவி; எண்ணம் – நினைப்பு; இன்மை – பொய்ம்மை.

முற்பிறப்பில் நாம் செய்த நல்வினையின் பயனால் விளையும் புண்ணியமும், தீவினையால் விளையும் பாவமும் அவனால் உண்டாக்கப்படுபவையே. அது போல கலவியினால் ஏற்படும் இன்பத்திற்கும், பிரிவினால் ஏற்படும் துன்பமாகிய புலவிக்கும் அவனே காரண கர்த்தா. நம்முடைய எல்லா நினைவுகளுக்கும், அவற்றுக்கு எதிரான நினைவின்மை – மறதிக்கும் கூட அவனே பொறுப்பாகிறான். நாம் செய்யும் காரியங்களில் உண்மையாய்த் திகழ்பவனும் அதற்கு மாறான பொய்மையாய்த் திகழ்பவனும் அவனே.

இவை எல்லாவற்றிலும் அந்தர்யாமியாய்  அவன் திகழ்ந்தாலும் அவற்றுக்கு வசப்படாதவனாக தாமரையிலைத் தண்ணீர் போல் இருந்து உலகை இயக்குபவன் அவன்தான். பிரளய காலத்தில் அழியாத, உறுதியான மாடமாளிகைகளாலும், கூட கோபுரங்களாலும் சூழப்பட்டிருக்கின்ற திருவிண்ணகர் என்ற திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற எம்பெருமான் கண்ணபிரானின் இன்னருள் கிட்டும்படி அவனை ஆராதியுங்கள். நான் கூறுவதெல்லாம் உண்மை, பொய்யல்ல. இதில் எதுவும் வஞ்சகமோ சூழ்ச்சியோ அல்ல. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் நாரணனே.

$$$

Leave a comment