-ச. சண்முகநாதன்.

ராமனின் வடிவழகைப் பாடிய கம்பன் அவன் வில்லழகை எப்படியெல்லாம் பாடியிருக்கிறான் என்பதை இங்கு பார்ப்போம்.
தியாகராஜர் “ஒக்க மாடமு ஒக்க பாணமு, ஓக்க பத்தினி வ்ரதுடே” என்ற ஹரி காம்போஜி ராக கீர்த்தனையை அழகாக கம்பீரமாக பாடியிருக்கிறார். “ஒரு சொல், ஒரு வில், ஒரு பத்தினி என்ற கொள்கை கொண்டவன் ராமன், அவனை மறவாதே என்று”…
இருந்தாலும் வில்லுக்கு அர்ஜுனன் என்றே சொல்லப்படுகிறது. வில்லுக்கு ராமன் என்றிருந்தால் இன்னும் சௌக்கியமாக இருந்திருக்கும்.
ஒரு வாளி என்று அனைவரும் கொண்டாடும் ராமன் வில் – கம்பனின் தமிழில் எப்படி இருக்கும்? இதோ….
முதன்முதலில் வில்லை அறிமுகப்படுத்துவது தாடகை வதத்தில்.
விஸ்வாமித்திரர் தாடகையின் தீக்குணங்களை எடுத்துக் கூறி, ‘இவளிடம் இருந்து எங்களுக்கு விடுதலை வேண்டும். அதற்கு நீ ஆவண செய்ய வேண்டும்” என்கிறார்.
“ராவணனின் indian branch தாடகை. அவன் அங்கிருந்து நினைக்கும் தீச்செயலை இங்கிருந்து நடத்தி எங்கள் வேள்வியெல்லாம் நலிந்துபோய்ச் செய்கிறாள், அன்றைய ஹிந்து அறநிலையத்துறை தான் இந்தத் தாடகை” என்கிறார் விஷ்வாமித்திரர்.
“இலங்கை அரசன் பணி அமைந்து, ஒர் இடையூறா, விலங்கள் வலிகொண்டு, எனது வேள்வி நலிகின்றாள்”
“அது மட்டுமல்ல, எல்லா மனிதரையும் விழுங்கி விடுகிறாள். அன்று பிரம்மன் படைத்த உயிரெல்லாம் தன்னுடைய உணவென்று நினைத்து உண்டு விடும் cannibal இந்தத் தாடகை. இன்னும் சிறிது நாட்களில் எல்லா உயிர்களையும் தின்றுவிடுவாள். காத்தருள்” என்கிறார் விசுவாமித்திரர்.
“முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம் தன் உணவு எனக் கருது தன்மையினள்”
‘ஒரு சொல்’ ராமன், ஒரே கேள்வி கேட்கிறான். “எங்கு உறைவது, இத் தொழில் இயற்றுபவள்?” ராமன் முடிவு செய்துவிட்டான். இது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்று.
தாடகை அங்கே தோன்றி அரக்கத்தனம் காண்பிக்கிறாள். “இங்கே உள்ள எல்லா உயிர்களையும் தின்று விட்டேன், அதனால் சுவை மிகுந்த பிஞ்சுக்கறி கிடைக்கட்டும் என்று விதி கருதியதோ ஊழ்வினை உங்களை என் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது” என்று ராமனை சாப்பாடு என்று கருதி மகிழ்கிறாள்.
ராமன், இவ்வளவு அழிச்சாட்டியம் செய்தாலும் இவளும் ஒரு பெண். இவள் மீது கணை தொடுப்பது நல்லதல்ல என்று நினைக்கிறான்.
“பெண்' என மனத்திடை பெருந்தகை நினைந்தான்”.
விசுவாமித்திரர், “ராமா கனிமொழி பேசும் பெண் என்றாலும் அரக்கத்தனம் செய்பவர்கள் அளிக்கப்பட வேண்டியவர்களே. விஷ்ணுவும் இந்திரனும் பெண் அரக்கிகளை வாதம் செய்திருக்கின்றனர். You are not the first and you will not be the last” என்று அறிவுரை செய்கிறார்.
சண்டை தொடங்குகிறது. தாடகை சூலப்படையை ஏவுகிறாள். ராமன் தன்னுடைய வில்லைத் தொடுகிறான், முதன்முதலில். மின்னல் வேகத்தில் அவன் ஆற்றல். ராமன் பாணத்தைத் தொட்டதையும் வில் வளைத்ததையும் யாரும் காண முடியவில்லை. ஆனால் யமனிடம் இருந்து தாடகை பறித்து எறிந்த சூலம் பொடிப்பொடியாக கீழே விழுவது கண்டனர்.
மனதில் ஓரி நிமிடம் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தால் தெய்வாம்சம் தெரிகிறது.
“மாலும், அக் கணம் வாளியைத் தொட்டதும், கோல வில் கால் குனித்ததும், கண்டிலர்; காலனைப் பறித்து அக் கடியாள் விட்ட சூலம் அற்று வீழ் துண்டங்கள் கண்டனர்”
ராமனின் முதல் கணை இது.
இது தன் உணவென்று நினைத்தேன். ஆனால் இவன் தன் உயிர் மாய்த்துவிடுவான் போல என்றெண்ணியவள் மேலும் கொடிய ஆயுதங்களை எறிகிறாள் ராமன் மீது.
ராமன் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை தாடகையை முடிக்க. ஒரே பாணம், தாடகையை தரையில் வீழ்த்த.
ஒரே அம்பு அவள் கொடிய நெஞ்சு குடியிருக்கும் மார்பை நோக்கி.
“சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல், அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும்”
அவள் மார்பை துளைத்துக்கொண்டு போகிறது, கொடியவள் நிலத்தில் வீழ்கிறாள். ஒரு நொடி கூட ராமனின் அம்பு அவள் மார்பினில் தங்கவில்லை. நல்லவர்கள் சொல்லும் அறிவுரை எப்படி பொல்லாதவர்கள் மனதில் நிற்காதோ அப்படி, ஒரு கணம் கூட நிறக்காமல் அவள் மார்பை ஊடுருவி புறம் போயிற்று ஒருவன் வாளி.
“கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று, கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே!”
ஒவ்வொரு வில் வீச்சுக்கும் “கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே!” போன்ற உவமைகளை அடுக்கிக்கொண்டே போகிறான் கம்பன்.
$$$