-ஆசிரியர் குழு
தமிழர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அற்புதமான தமிழ் இலக்கிய ஞானக் கருவூலங்களிலிருந்து அரிய சான்றுகளை எடுத்து, இனிய மாலை போலத் தொடுத்திருக்கிறார் நூலாசிரியர் திரு. சேக்கிழான். இந்நூல் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், இடையறாத வன்மையையும், பரந்து விரிந்த தன்மையையும், செங்கோலின் நன்மையையும் வெளிப்படுத்துகிறது.

உலக நாடுகள் பலவற்றில் கற்கால நாகரிகத்துடன் மனிதத் திரள் வாழ்ந்த காலகட்டத்தில், பாரதம் பண்பாட்டில் உயர்ந்தோங்கி வளர்ந்திருந்தது. அதிலும் குறிப்பாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறத்துடன் கூடிய நல்லாட்சி நடத்திய மன்னர்களைக் கொண்டதாக தமிழ்நாடு விளங்கி இருக்கிறது. அதற்கான சான்றாவணங்களாக அக்காலத்தில் படைக்கப்பட்ட நூல்கள் விளங்குகின்றன.
மன்னர்களின் நல்லாட்சிக்கு, நடுநிலை பிறழாத செங்கோன்மைக்கு அடையாளமாக, அற்புதமான ஓர் அணிகலனாகப் படைக்கப்பட்டதே ‘செங்கோல்’ என்னும் இனிய உருவகம். தமிழக மன்னர்கள் நாட்டு மக்களைக் காக்க, ஒருகரத்தில் வாளும் மறுகரத்தில் செங்கோலும் ஏந்தி இருந்தனர். மறத்தின் சின்னமான வாளும் அறத்தின் சின்னமான செங்கோலும் தான் மன்னரின் அடையாளங்கள்.
நாட்டு மக்கள் நலம் பெற வேண்டுமாயின், நடுநிலைமை பேணும், நேர்மை மிகுந்த, அனைவரையும் சமமாகக் கருதக்கூடிய, மக்களை பகைவரிடமிருந்து காக்கும் திறன் பெற்ற, எளியவர்களின் துயர் துடைக்கக் கூடிய, தன்னலமற்ற நாயகன் ஒருவனது தலைமையில் நாடு இயங்கியாக வேண்டும். நாட்டின் ஆட்சித் தலைவனான அந்த நாயகனுக்கு என்றும் செங்கோன்மையை நினைவுறுத்தும் ஒரு அணிகலனே ‘செங்கோல்’.
உலகில் நாம் நல்லபடி வாழ சில முன்னுதாரணங்கள் தேவைப்படுகின்றன. அந்த முன்னுதாரணங்களைப் பின்பற்றி வாழும்போது, துன்பம் குறைந்து, இன்பம் மிகுந்து உலகம் சிறப்புறுகிறது. அந்த உதாரணங்களை இலக்கியம் தமது எழுத்துகளில் இறவாப்புகழுடன் பொதிந்து வைத்திருக்கிறது.
நமது தாய்த் தமிழ் மொழியின் தொன்மை போலவே, நாட்டு மக்களை ஓர் ஒழுங்கில் வாழ வைத்த நல்லாட்சியும் தொன்மை மிக்கது. பல சிற்றரசர்களும் பேரரசர்களும் இந்த மண்ணை ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் லட்சியக் கனவாகக் கொண்டிருந்தது, செங்கோல் ஏந்திய செங்கோன்மை ஆட்சியைத் தான். காலந்தோறும் படைக்கப்பட்ட பல்வேறு தமிழ் இலக்கியங்களில் பயின்று வரும் செங்கோல் குறித்த செய்திகள் கூறுவது இந்த உண்மையைத் தான்.
இது தொடர்பான ஓர் ஆய்வை நமது தளத்தில் பத்திரிகையாளர் திரு. சேக்கிழான் நிகழ்த்தினார். அந்த ஆய்வுத் தொடர், 21 அத்தியாயங்களாக ‘பொருள் புதிது’ தளத்தில் வெளியானது.
நமது தாய்நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாட்டு மக்களின் அதிகாரபீடமான நாடாளுமன்றத்திற்கு புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு, கடந்த 2023 மே 28ஆம் தேதியன்று திறக்கப்பட்டது. அந்தத் தொடக்க விழாவில், நல்லாட்சியின் சின்னமான செங்கோலை சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார் பாரதப் பிரதமர் நரேந்திர மோதி. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவிடம் நமது தமிழகத்தின் பாரம்பரிய சைவ மடமான திருவாவடுதுறை ஆதீனத்தின் துறவியால் நல்லாசியுடன் வழங்கப்பட்ட புனிதமான செங்கோலே அது.
அந்த நிகழ்வே, செங்கோல் குறித்து தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கும் பதிவுகள் அனைத்தையும் ஆராய்வதற்கான தூண்டுகோலாக அமைந்திருக்கிறது. அதன் தொடர் விளைவே இந்த இனிய நூல். தெய்வப்புலவர் திருவள்ளுவரில் தொடங்கும் இந்த ஆய்வு நூல், மகாகவி பாரதியின் லட்சிய நல்லரசுக் கனவுடன் நிறைவடைகிறது. சென்னையில் உள்ள விஜயபாரதம் பிரசுரம் இந்நூலை நேர்த்தியாக வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. கோவை ஓவியர் திரு. ஜீவாவின் அட்டைப்பட ஓவியம் நூலுக்கு அழகு சேர்க்கிறது. இன்று (விஜயதசமி- 24.10.2023) இந்நூல் முறைப்படி வெளியாகிறது.
தமிழர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அற்புதமான தமிழ் இலக்கிய ஞானக் கருவூலங்களிலிருந்து அரிய சான்றுகளை எடுத்து, இனிய மாலை போலத் தொடுத்திருக்கிறார் நூலாசிரியர் திரு. சேக்கிழான். இந்நூல் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், இடையறாத வன்மையையும், பரந்து விரிந்த தன்மையையும், செங்கோலின் நன்மையையும் வெளிப்படுத்துகிறது.
***
நூல் குறித்த விவரங்கள்:
தமிழ் இலக்கியத்தில் செங்கோல் ஆசிரியர்: சேக்கிழான் 160 பக்கங்கள், விலை: ரூ. 150- வெளியீடு: விஜயபாரதம் பிரசுரம், 12. எம்.வி.நாயுடு தெரு, பஞ்சவடி, சேத்துப்பட்டு, சென்னை- 600 031. தொடர்புக்கு: +91 89391 49466
$$$
One thought on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல்: நூல் அறிமுகம்”