-டேவிட் ஃபிராலே
அமெரிக்காவைச் சார்ந்த இந்தியாவின் தோழரும், ஹிந்துத்துவஇயலில் ஆராய்ச்சியாளருமான திரு. டேவிட் ஃப்ராலே இணையதளம் ஒன்றில் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இது...

சனாதன தர்மத்தையோ அல்லது ஹிந்து மதத்தையோ ஒரே பெயரில், ஒரே வார்த்தையில் அல்லது ஒரே அர்த்தத்தில் குறுக்கிவிட முடியாது. அது பல தளங்களை, பல பரிமாணங்களை, பலவிதமான வெளிப்பாடுகளை கொண்டது. பல்லாயிரம் ஆண்டுகளாக அதன் கலாச்சாரத்தில், மொழியில் பல மாறுதல்களைக் கண்டுள்ளது.
சனாதன தர்மம் என்பது, தர்மத்தின் சாரம். சனாதனம் என்பது நீடித்து இருக்கக் கூடியது; எப்பொழுதும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கக் கூடியது.
ஹிந்து மதம் / சனாதனத்தின் மீது அண்மையில் எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணியின் அரசியல் தாக்குதல், அந்த வார்த்தையின் தவறான மொழிபெயர்ப்பாக, அவதூறாக, அவமானப்படுத்தும் நோக்கத்துடன் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதாக உள்ளது. இது மனித இனத்தின் தொன்மையான, ஆழமான, உயிர் வகைகளைப் பற்றிய அறிவை மட்டுமன்றி பிரபஞ்சம் பற்றி இதுவரை நாம் அறிந்து உள்ளவற்றையும் மாற்றக்கூடிய வல்லமையை தன் பாரம்பரியமாகக் கொண்ட இந்திய நாகரிகத்தின் சாரமானதை அவமதிக்கும், அதளபாதாளத்தில் தள்ளும், அரக்கத் தனமாகச் சித்தரிக்கும் கீழ்த்தரமான செயலாகும்.
ஆயிரம் பெயர்களும் அதைவிட அதிகமும்
ஹிந்து மதத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஆயிரம் பெயர்கள் உண்டு. சிவ சஹஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் என்று உள்ளன. சிவனைப் பற்றி, விஷ்ணுவைப் பற்றி, அம்பாளைப் பற்றி ஆயிரம் பெயர்கள் அவை. அந்த தெய்வத்தின் ஆயிரம் பெயர்களைச் சொல்லி துதிப்பது சக்தி வாய்ந்தது. ஆனால் அந்த ஆயிரம் பெயர்களும் தனித்தனி தெய்வங்களைப் பற்றியது அல்ல. அதுபோலவே சனாதன தர்மம் அல்லது ஹிந்து மதம் என்பதையும் ஒற்றைச் சொல்லாக, அர்த்தமாக, பயன்பாடாகக் குறுக்கிவிட முடியாது. அதற்கு பல தளங்களும் பரிமாணங்களும் வெளிப்பாடுகளும் உள்ளன.
சனாதன தர்மம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ஒரே பொருளைத் தரும் வெவ்வேறு வார்த்தைகளையும் அந்த உயர்ந்த தர்மத்தை அவை எப்படி வரையறுக்கின்றன என்பதையும் பார்ப்போம்.
சத்ய தர்மம்: சாஸ்வதமான உண்மையைப் பற்றிய தர்மம். மாறக் கூடிய தகவல்களைப் பற்றியதோ அபிப்ராயங்களைப் பற்றியதோ அல்ல.
ஆத்ம தர்மம்: தன்னை அறியும், நம்முடைய அழியாத உண்மையான இயல்பைத் தெரிவிக்கும், நம் அனைவருள்ளும் இருக்கும் தெய்வீகத்தைப் பற்றிச் சொல்லும் தர்மம்.
பிரம்ம தர்மம்: பரப்பிரம்மம், எல்லையற்ற சத்-சித்-ஆனந்தம் பற்றி, அனைத்தையும் அறியும் விழிப்புணர்வு பற்றியும் விளக்கும் தர்மம்.
மோட்ச தர்மம்: நம்முடைய ஆசைகளில் இருந்து விடுவிப்பது மட்டுமல்ல, மரணத்திலிருந்து, சோகத்திலிருந்து, துயரத்திலிருந்து நம்மை விடுவிப்பது பற்றி கூறும் தர்மம்.
யோக தர்மம்: ஞான, கர்ம, பக்தி உட்பட அனைத்து விதமான யோக மார்க்கங்களைப் பற்றியும் மோட்ச தர்மத்திற்கான மரபான யோகப் பாதையையும் காட்டும் தர்மம்.
வேத தர்மம்: ரிஷிகள் தரிசித்த உயர்ந்த ஞானம், அதன் சாரமாய் இருக்கும் வேதாந்த தர்மம்.
விஸ்வ தர்மம்: உயிருள்ள அனைத்துக்கும் பொருந்தும் தர்மம். பெயரும் வடிவமும் உள்ள எல்லா பௌதீக உலகிற்கும், அதற்கு அப்பாற்பட்டு உயர்நிலையில் உள்ளவற்றைப் பற்றிய தர்மம்.
மானவ தர்மம்: எல்லா மனிதர்களைப் பற்றிய தர்மம். வெறும் ஒரு இனத்தைப் பற்றியது மட்டுமல்ல, ஒரே ஆன்மாவின் பல்வேறு தோற்றங்களைப் பற்றி பேசும் தர்மம்.
ஆர்ய தர்மம்: செழுமிய, உயர்ந்த உள்ளங்களைப் பற்றிய தர்மம். பௌத்த தர்மத்திற்கும் சமண தர்மத்திற்கும் இதே சொல்தான் பயன்படுத்தப்படுகிறது.
சமஸ்கிருத மொழியில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளிலும் சனாதன தர்மத்திற்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. உலகமெங்கிலும் ஹிந்து மதம் மற்றும் ஹிந்து தர்மம் என்று அறியப்படுவதற்கும், இதே சனாதன தர்மம் என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்படுகிறது.
செமிட்டிக் குறுகல்வாதம்
நவீன மேற்கத்திய மொழிகளுக்கு, குறிப்பாக ஆங்கில மொழிக்கு, சமஸ்கிருத மொழியை போல் பல தளங்களில் வெவ்வேறு பொருள் தரும் பன்முகத்தன்மை இல்லை. அம்மொழிகளில் உள்ள இந்த குறைபாட்டை நான் “செமிட்டிக் குறுகல்வாதம்” என்று அழைக்கிறேன். அதாவது, ஒரு பெயர் அல்லது வார்த்தைக்கு இதுதான் பொருள் என்று குறுக்கி இறுதி தீர்ப்பாக கூறும் போக்கு.
தொன்மையான நூல்களில் ஹிந்துயிஸம் என்ற வார்த்தை இல்லை என்பதால், தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதால் மேற்கத்திய அறிஞர்கள் இதை ஏற்க மறுக்கிறார்கள். அதாவது ஹிந்து மதத்தை சனாதன தர்மம், யோகா, வேதாந்தம் அல்லது இதைச் சார்ந்த எந்த மரபைக் குறிக்கும் சொல்லையோ கொண்டு குறிப்பிடப்படுவதை ஏற்க முடியாது என்கிறார்கள். மையமான விஷயமும் நடைமுறை விஷயமும் ஒன்றாக இருந்த போதிலும் பெயர் வெவ்வேறாக இருப்பதால் மறுக்கிறார்கள்.
பசுவை வணங்குவது தான் ஹிந்து மதம் என்றும், சமுதாயம் என்றால் ஜாதி என்றும் – யோகா, வேதாந்தம், பிரபஞ்ச தரிசனம் ஆகியவற்றை புறம்தள்ளி விட்டு – குறுகலாக புரிந்து கொள்வதையும் பார்க்கிறோம்.
அரசியல் குறுகல்வாதம்
இந்தக் குறுகல் வாதத்தின் விளைவாக ஒரே மாதிரியான, இது அல்லது அது என்று இரட்டை நிலைக்குள் வரையறுக்கும் தன்மையுடன் இழிபெயரிடும் போக்கு உருவாகிறது. இன்று தங்களை ஹிந்து என்று பெருமிதத்துடன் கருதும் பிரதமர் நரேந்திர மோடி உட்பட இந்தியத் தலைவர்களை இழிவுபடுத்தும் நோக்கத்துடன், ‘வலதுசாரிகள்’ என்றும், ‘சகிப்புத்தன்மையற்ற ஹிந்து தேசியவாதிகள்’ என்றும், இன்னும் சொல்லப்போனால் ‘பாசிஸ்டுகள்என்றும் முத்திரை குத்துகிறார்கள்.
முஸோலினியைப் பின்பற்றிய இத்தாலிய கத்தோலிக்கர்களைக் குறிப்பிட பயன்படுத்திய வார்த்தை பாஸிஸ்ட். அதை இன்று தங்கள் கருத்துகளை ஏற்காதவர்களை எல்லாம் அரக்கர்களாக சித்தரிக்கப் பயன்படுத்துகிறார்கள். தங்களுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களின் மனித உரிமையை மறுக்கவும் அவர்களை அழிக்கவும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். இடைக்கால வரலாற்றில் ‘சாத்தானின் பிள்ளைகள்’ என்ற வார்த்தையை இதேபோலப் பயன்படுத்தினார்கள். அதன்மூலம் சாத்தானை எரிப்பதாகக் கூறி மனிதர்களை உயிருடன் எரித்தார்கள்; எண்ணற்ற மதப் போர்களை நடத்தினார்கள்.
இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிக் கூட்டணியினர் எந்த அளவுக்கு கீழ்த்தரமாகிவிட்டார்கள் என்றால் தங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத செய்தியாளர்களை மதவாதி, பாசிஸ்ட், ஒருதலைப்பட்சமானவர் என்றெல்லாம் முத்திரை குத்தி அவர்களின் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கிறார்கள். அவர்களின் குரலைக் கேட்க விடாமல் நசுக்குகிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போதே கருத்து சுதந்திரத்தை மறுக்கும் இவர்கள், ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகாரப் போக்கைத் தான் மேற்கொள்வார்கள்.
சனாதனம் வென்று நிற்கும்
அரசியல் குறுகல்வாத சித்தாந்தங்களை – அது இடதோ வலதோ, தட்டையான கருத்துக்களை, தன்னை முன்னிறுத்தும் அரசியல் நிரல்களை, பிரசார ‘டூல்கிட்’களை மீறி சனாதனமும் அதன் உலகளாவிய கருத்துக்களும் உயர்ந்து நிற்கும். உடலில், ஐம்பொறிகளில், பொருளியல் உலகில் சிக்கிக் கொண்டுள்ள மனித இனம், அதைக் கடந்து செல்ல உத்வேகம் அளிக்கும் சனாதனத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். பாராட்டாமல் போகலாம்.
சனாதனத்தை ஒழிப்பது என்பது, இமயமலையை இல்லாமலாக்க முயற்சிப்பது போலத் தான். வரலாற்றின் தொடக்கக் காலத்தில் ஹிமாலயத்திலிருந்த ரிஷிகளின், யோகிகளின் போதனைகள் தான் சனாதன தர்மம். அது நம்மை சாஸ்வத்தை நோக்கி, வரமற்றதை நோக்கி அழைத்துச் செல்கிறது. அது மலைகளில், நீர் நிலைகளில், இயற்கையில் சுருக்கமாக சொன்னால் இந்த பூமியில் வேரூன்றி உள்ளது.
காலப்போக்கில் சனாதனத்தின் பல அம்சங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது உண்மை. மனித இயலாமையிலிருந்து அந்த பரந்து விரிந்த மரபைப் பாதுகாக்க தொடர்ந்து மாற்றங்களைச் செய்வது தேவையாகிறது. ஆனால் பல நூற்றாண்டுகள் அந்நிய அடக்குமுறை ஆட்சியில் கிடந்த பிறகு, சுவாமி விவேகானந்தர் வருகைக்கும் தேச விடுதலைக்கும் பிறகு சனாதன தர்மமும் அதன் தர்மப் பாரம்பரியமும் உலகமெங்கும் பரவியுள்ளன; இந்தியாவிலும் புத்துயிர் பெற்று வருகிறது. எல்லா உயிர்களையும் ஒரே குடும்பமாக ஒருங்கிணைக்க உதவி வருகிறது. சனாதன தர்மம் என்றால் உண்மையில் என்ன என்பதை, அதர்ம சக்திகளின் குறுகலான அரசியல் விவரிப்புகளை மீறி, அதன் பல்வேறு பரிமாணங்களோடு புரிந்து கொள்வோம்.
- திரு. டேவிட் ஃபிராலே, அமெரிக்காவைச் சார்ந்த, ஹிந்துத்துவ அறிஞர்.
- நன்றி: நியூஸ்18.காம் (23-09-23)
- தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
$$$