வாழும் சனாதனம்! – 6

-ஆர்.என்.ரவி, சத்குரு ஜக்கி வாசுதேவ், கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா, கோவை ராதாகிருஷ்ணன், கே.ஜி.ஜவர்லால்

அண்மையில் பாரத மண்ணின் வேரான சனாதன தர்மம் தமிழகத்தில் சில தற்குறிகளால் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, இழிவு செய்யப்பட்டதை எதிர்த்து நாடே கொந்தளித்திருக்கிறது. இத்தருணத்தில் சனாதனம் என்னும் வாழையடி வாழையின் சிறப்புகளைப் பதிவு செய்வது நமது கடமை; சனாதனம் குறித்த தார்மிக குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன... இது ஆறாவது பதிவு...

21. தமிழகத்தில் தான் சனாதனம் பிறந்தது!

-ஆர்.என்.ரவி

இன்று தமிழ்நாடு என்று அழைக்கப்படும் இந்த நிலம் ஒரு புனித பூமி. இங்கிருந்து ஆயிரக்கணக்கான ரிஷிகள், ஞானிகள் உருவாகி மனிதகுல நன்மைக்காக உழைத்திருக்கிறார்கள். இந்த நிலத்தில்தான் சனாதன தர்மம் உருவாகியது. இந்த தர்மம் பாரதம் முழுவதும் பரவியது. பாரதம் என்றால் சனாதன தர்ம இலக்கியங்கள் என்று பொருள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களில் பாரதம் என்பது இருக்கிறது. பாரதம் என்றால் என்ன? நமது இந்திய அரசியலமைப்பு பிரிவு 1, பாரதம் என்றால் இந்தியா என்கிறது. இந்தியாவுக்கு அறிமுகம் தேவை; பாரதத்திற்கு தேவையில்லை. ஏனென்றால் பாரதம் நமது அன்றாட வாழ்வில் அனைவருடனும் கலந்தே இருக்கிறது.

இந்த மண் திருமூலர், ராமானுஜர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற பல ஞானிகளைத் தந்துள்ளது. அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சனாதன தர்மத்தைக் கடத்தி வந்திருக்கிறார்கள். அவர்களின் தொடர்ச்சியாக 400 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்தான் ஸ்ரீ ராகவேந்திரர்.

சனாதன தர்மம் நீண்ட தொடர்ச்சியாக இன்றுவரை நம்மிடம் இருந்து வருகிறது. இப்படியான நீண்ட பாரம்பரியத் தொடர்ச்சி உலகில் வேறு எங்கும் கிடையாது.

சிலர் தனது அறியாமையால் சனாதன தர்மம் பிரிவினையை, தீண்டாமையை போதிக்கிறது என்று கூறுகிறார்கள், ஒருபோதும் அப்படி இல்லை. மனிதர்களிடையே பாகுபாட்டை உண்டாக்குவது சனாதனம் இல்லை. சனாதன தர்மத்தில் தீண்டாமைக்கு இடமில்லை.

இந்த மண்ணில் சனாதனம் நீடித்து நிலைத்திருக்கிறது. இங்கிருந்து அந்த ஒளி நாடு முழுவதும் பரப்பப்பட்டிருக்கிறது. இந்த மண்ணில் இல்லாமல் வெளியில் பிறந்தவர்கள் கூட இங்கு வந்து அந்த ஒளியைக் கண்டடைந்திருக்கிறார்கள். நரேந்திரன் இங்கு வந்ததால் தான் சுவாமி விவேகானந்தர் ஆனார்.

‘பாரதமும் சனாதன தர்மமும் பிரிக்க முடியாதவை. சனாதன தர்மம் வளரும்போது பாரதமும் வளரும்; சனாதன தர்மம் வீழும்போது பாரதமும் வீச்சியடையும்’ என்று அரவிந்தர் கூறியிருக்கிறார்.

சனாதன தர்மம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதைப் பேசுகிறது. சனாதனத்தில் பிரிவுகள் இருக்கின்றன; ஆனால் வேறுபாடுகள் கிடையாது. இந்த உள்ளொளி உலகம் முழுவதும் பரப்பப்பட வேண்டும். அது பாரதத்தின் கடமை. அதற்கு பாரதம் வலிமை மிக்கதாக இருக்க வேண்டும்.

‘நீங்கள் பலவீனமாக இருக்கும்போது எதிரிகளால் சூழப்பட்டிருப்பீர்கள். பலமாக இருக்கும்போது நண்பர்கள் சூழ்ந்திருப்பார்கள்’ என்று சுக்கிர நீதி சொல்கிறது. இதுதான் பாரதத்தின் இலக்கு. இந்த நாடு முன்னெடுத்துச் செல்ல வேண்டிய இலக்கு. இதைத்தான் பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயித்துள்ளார். அவர் பாரதம் மற்றும் அதன் மக்களின் பலத்தை உணர்ந்திருக்கிறார். அவர் அமிர்த காலம் என்ற ஒன்றை ( 2022- 2047 ) நிர்ணயித்துள்ளார். அடுத்த 25 வருடங்களில் இந்தியா சனாதன ஒளியை உலகம் முழுவதும் பரப்பும் திறனுடையதாக இருக்கும்.

  • மேதகு ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநர்.
  • சென்னையில் 2023 ஜூலை 1இல் நடந்த ஸ்ரீ ராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்வில் மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி   கலந்துகொண்டு பேசினார். அந்த உரையின் சுருக்கமே இக்கட்டுரை.

$$$

22. சனாதன தர்மமே உண்மையானது!

-சத்குரு ஜக்கி வாசுதேவ்

சனாதனம் என்றால் மாறாதது. மாறாத ஒன்று எப்போதும் உண்மையானது.  இந்து சனாதன தர்மம் என்று எதுவும் இல்லை. அது வெறுமனே சனாதன தர்மம்.

சனாதன தர்மம் என்பது வாழ்வின் மாறாத பரிமாணமாக, நமது இருப்பின் அல்லது உயிரின் அடித்தளமாக இருக்கிறது. அது புழுவாக இருந்தாலும், பூச்சியாக இருந்தாலும், பறவையாக இருந்தாலும், விலங்காக இருந்தாலும், தாவரமாக இருந்தாலும், அவை அனைத்தும், அதனதன் இருப்பை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளான சனாதன தர்மத்தால் ஆளப்படுகின்றன. இது சமூகத்தின் கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான ஒற்றுமைக்காக, ஒருவருக்கொருவர் மனிதர்களால் விதிக்கப்பட்ட தண்டனைச் சட்டம் அல்ல. பரிவர்த்தனைச் சட்டங்கள் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு மாற வேண்டும். அது வேறொரு விஷயம். சனாதன தர்மம் ஒரு பரிவர்த்தனை தர்மம் அல்ல – இது ஒரு உயிரின் தர்மம்.

நீங்கள் இந்தியராக இருந்தாலும், இந்துவாக இருந்தாலும், இந்து அல்லாதவராக இருந்தாலும், என்னவாக இருந்தாலும், சனாதன தர்மம் அனைவருக்கும் பொருந்துகிறது.

ஒரு இந்து அல்லது ஒரு இந்திய நபர் அல்லது வேறெந்த நபருக்காவது சனாதன தர்மம் உரிமையானதா என்பது முக்கியமல்ல. நீங்கள் எங்கிருந்தாலும், இந்தியராக இருந்தாலும், இந்து மற்றும் இந்து அல்லாதவர் என்று நீங்கள் என்னவாக இருந்தாலும், சனாதன தர்மம் அனைவருக்கும் பொருந்துகிறது. ஏனென்றால் இவை வாழ்வின் அல்லது உயிரின் அடிப்படையான செயல்முறைக்கு வழிகாட்டும் விதிமுறைகள். வேறு எந்த கலாச்சாரமும் இதை இவ்வளவு ஆழமாகப் பார்க்கவில்லை. அந்தப் பெருமிதத்தின் காரணமாக,  ‘இது இந்து சனாதன தர்மம்’ என்று நாம் கூறலாம். ஆனால்  ‘இந்து’ என்ற வார்த்தையைச் சேர்ப்பதன் மூலம் சனாதன தர்மத்தின் சாத்தியத்தை நாம் குறைத்துவிடுகிறோம். இந்து என்பது ஒரு புவியியல் அடையாளம். இந்து என்பது இமயமலைக்கும், இந்து மகா சமுத்திரத்துக்கும் இடையில் உள்ள நிலப்பரப்பு. சனாதன தர்மம் ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் பொருந்துகிறது. இது இன்னமும் பிறந்திராதவர்கள், பிறந்துவிட்டவர்கள், பெரியவர்கள், இறந்துவிட்டவர்கள், வாழ்வின் வெவ்வேறு கட்டங்கள் மற்றும் வாழ்வின் அனைத்து பரிமாணங்கள் அனைத்தையும் எவ்வாறு கையாள்வது என்பது பற்றிப் பேசுகிறது. இது வாழ்வை மிகவும் ஆழமாக உற்று நோக்குவதற்கான ஒரு வழியாக இருக்கிறது.

ஸ்மிருதி மற்றும் ஸ்ருதி

நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்திருந்தால், வித்தியாசமாக உடையணிந்துகொண்டு, வேறெதையாவது செய்துகொண்டு இருந்திருப்பீர்கள். நீங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், மறுபடியும் வேறு ஏதாவது வித்தியாசமாகச் செய்துகொண்டு இருந்திருப்பீர்கள் – ஒருவேளை நீங்கள் ஒரு விவசாயியாக அல்லது ஒரு மீனவராக இருந்திருக்கலாம்.

கால மாற்றத்தினால் மாறக் கூடியவை

நாம் என்ன செய்கிறோம், எப்படி ஆடை அணிந்திருக்கிறோம், எப்படி பேசுகிறோம், எப்படிச் செயல்படுகிறோம் என்பது காலத்தின்பாற்பட்டது; அது மாறிக்கொண்டே இருக்கிறது. அடுத்த தலைமுறையினர் எப்படி நடந்துகொள்வார்கள், அவர்கள் எப்படி ஆடை அணிவார்கள், என்ன செய்வார்கள் என்பது தற்போது நாம் செய்யும் விதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இது வாழ்வின் ஒரு பரிமாணம் – இதனை நாம் ஸ்மிருதி என்று அழைக்கிறோம். ஸ்மிருதி என்ற சொல்லுக்கு “ஞாபகங்களிலிருந்து” என்ற மொழிபெயர்ப்பு உள்ளது. ஸ்மிருதி என்பது, ஞாபகத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது.

நம் பெற்றோரும், நமது கலாச்சாரமும் செய்த அதே செயலை நாம் செய்கிறோம், அல்லது எதிர்வினையாக, நாம் நேரெதிரான விஷயத்தைச் செய்கிறோம். ஆனால் இது இடையறாமல் மாறிக்கொண்டிருக்கும் ஒரு செயல்முறையாக இருக்கிறது. தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு மட்டுமல்ல, நம் சொந்த வாழ்க்கையிலேயே, ஒவ்வொரு சில வருடங்களுக்கும், நமது ஸ்மிருதிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. நமது தற்போதைய ஞாபகத்திலிருந்தே, நம் வாழ்வின் பல அம்சங்களை நாம் மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஸ்மிருதி என்பது, ஒவ்வொரு தலைமுறையும் மறுகண்டுபிடிப்பு அல்லது மறுதிருத்தம் செய்ய வேண்டிய ஒன்று. பரிணாமம் என்றால், முந்தைய தலைமுறையை விட சிறப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று அர்த்தமல்ல. அது என்னவென்றால், சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருப்பதால், அந்தந்தச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நாம் பரிணமிக்கிறோம். சூழ்நிலை சார்ந்த பரிவர்த்தனைகள் எப்போதும் மாற்றமும், பரிணாமமும் அடைய வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் எப்படி சாப்பிட்டார்களோ, அந்த விதமாக இன்று நாம் சாப்பிட விரும்புவதில்லை, ஏனென்றால் நம் தொழில் வழக்கங்கள் மாறிவிட்டன. நீங்கள் நிலத்தை உழுதுகொண்டிருந்தபோது, என்ன சாப்பிட்டீர்கள், எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்பதிலேயே பெருத்த வித்தியாசம் இருந்தது. நீங்கள் பலவற்றையும் எப்படிச் செய்கிறீர்கள் என்பது தொடர்ந்து திருத்தப்பட வேண்டும். அரசியலமைப்பில் கூட, முற்றிலும் கேள்விக்கு அப்பாற்பட்ட அடிப்படை உரிமைகள் உள்ளன – நீங்கள் அவற்றைத் தொட முடியாது. மற்ற அனைத்தையும் திருத்தங்களுக்கும், விரிவாக்கங்களுக்கும், அகற்றுதலுக்கும் உட்படுத்த முடியும்.

உங்கள் ஸ்மிருதியும், என் ஸ்மிருதியும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் ஸ்ருதி என்ற ஒன்று உள்ளது. இதைப் பல்வேறு வழிகளில் விளக்கலாம்; அதனுடைய ஒரு பரிமாணம் என்னவென்றால், அது உயிரின் அல்லது வாழ்வின் ராகமாக இருக்கிறது, இந்த ராகம் உங்களால் உருவாக்கப்படவில்லை – இது படைப்பின் ராகம்.

வாழ்வின் ஸ்ருதியை நீங்கள் புரிந்து கொண்டால் மட்டுமே, அதன் தாளத்தைக் கண்டுபிடிக்க முடியும்.  ‘பாரத’ என்பதற்கான பொருள் இதுதான். பா என்றால் பாவ அல்லது வாழ்வின் அனுபவம். ரா என்றால் ராகம், அதாவது வாழ்வின் ஸ்ருதி. த என்றால் தாளம். பாவ என்பது உங்களுக்கு நிகழ்வது – இது ஒரு அனுபவம். ஆனால் ராகம் அல்லது ஸ்ருதி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இப்போது உங்கள் அனுபவத்துக்கான சரியான தாளத்தை நீங்கள் கண்டுபிடிப்பதால் ஒரு அற்புதமான இசை போல வாழ்க்கை அழகாக நிகழ்கிறது. நீங்கள் தாளத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், வாழ்வை எளிதாக நிகழ்த்தும் அதே ஸ்ருதி, உங்களை நசுக்கிவிடும்.

ஸ்ருதி மாற்றமடைவதில்லை, ஏனென்றால் அது உங்களால் அமைக்கப்படவில்லை – அது படைப்பால் அமைக்கப்பட்டது. எனவே, உங்கள் வாழ்க்கையை நிர்வகிப்பது எது என்று புரிந்துகொண்டு, அதனால் நீங்கள் ஆழமான மற்றும் அழகான வாழ்க்கையை வாழ்வதே, சனாதன தர்மம் எனப்படுகிறது.

தனிமனித ஒழுக்கவிதிகள், கட்டளைகள், நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது, “இதைச் செய்தால் நீங்கள் சொர்க்கத்துக்குச் செல்வீர்கள். அதைச் செய்தால் நீங்கள் நரகத்திற்குச் செல்வீர்கள்”  என்று இந்தக் கலாச்சாரத்தில் யாரும் பேசுவதில்லை. நீங்கள் விதிமுறைகளுக்கு இசைவாக இருந்தால், உங்களுக்குத் தண்டனையும் தேவையில்லை, வெகுமதியும் தேவையில்லை என்ற இந்தப் பரிமாணத்தை மட்டும் மக்களுக்கு நாம் புகட்டிய காரணத்தினால், நன்னெறிக் கட்டளைகள் எதுவும் இல்லை. அதாவது, நீங்கள் போக்குவரத்து விதிகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப வாகனம் ஓட்டினால், உங்களுக்கு ஒரு போலீஸ்காரர் தேவையில்லை என்பதைப் போன்றதுதான் இது.

தற்போது, இந்த பூமிக் கிரகத்தில் கோடானுகோடி உயிர் வடிவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது, ஆனால் நீங்கள் இன்னமும் பார்க்காத பல கோடி உயிர் வடிவங்கள் உள்ளன என்றே நான் நினைக்கிறேன். ஒரு நுண்ணுயிரில் இருந்து ஒரு மனிதன் வரைக்கும் மற்றும் இரண்டுக்கும் இடைப்பட்ட அனைத்து உயிரினங்களும்கூட, ஒரே மண்ணிலிருந்துதான் வந்துள்ளனர். ஒரே மண்ணிலிருந்துதான், ஒரு மரம் அல்லது ஒரு கொடி வளர்கிறது. அதே மண்ணிலிருந்து, நீங்கள் சாப்பிட்டதன் விளைவாக, இந்த விதமான உடல் உங்களுக்கு வாய்த்திருக்கிறது. அதே மண்ணிலிருந்து நான் சாப்பிட்டிருக்கிறேன், எனக்கு வேறு விதமான உடல் இருக்கிறது.

சனாதன தர்மம் உங்களுக்கோ எனக்கோ சொந்தமில்லை –  அது படைப்பால் வகுக்கப்பட்டது.

நீங்கள் என்னதான் செய்தாலும் உங்களால் ஒரு மரமாக, ஒரு நாயாக, ஒரு பூனையாக, மாடு, யானை அல்லது புலியாக முடியாது. மூலம் ஒன்றுதான், ஆனால் அதன் பன்முக வெளிப்பாட்டைப் பாருங்கள். ஆகவே, அது என்னவாக இருந்தாலும், அதை நிர்வகிக்கக்கூடிய ஒரு விதிமுறை உள்ளது. அது ஒரு ரயில் பாதை போல நிர்ணயிக்கப்பட்டுள்ளது, நீங்கள் அதன் மீது செல்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு வேகமாக, எவ்வளவு தூரம் செல்வீர்கள்?. நாம் விதிமுறையை எவ்வளவு ஆழமாகப் புரிந்து உணர்கிறோம் என்பது மட்டுமல்லாமல் அதனுடன் நாம் எவ்வளவு ஒத்துப்போகிறோம்? என்பதுதான் நமக்கான ஒரே கேள்வி.

அடிப்படையில், ஒட்டுமொத்த யோக அறிவியலும் மற்ற உயிர்களுடன் முழுமையான ஒத்திசைவில் இருப்பதைப் பற்றியே இருக்கிறது. இதனால் உங்கள் வாழ்க்கை ஆனந்தமாகவும், உற்சாகமாகவும், அதன் முழுத் திறனுடனும் நிகழ்கிறது.. உங்கள் வாழ்க்கையில் தவறாகப் போகக்கூடிய ஒரே விஷயம் இதுதான்: உங்கள் உயிரின் முழு வெளிப்பாட்டையும் நீங்கள் காண்கிறீர்களா, இல்லையா? ஒரு மரத்தில் என்ன தவறு இருக்கலாம்? அது அதன் முழுத் திறனுக்கு வளருமா, அல்லது பாதியளவு வளர்ந்த மரமாகவே அது இறந்துபோகுமா? என்பதுதான் ஒரே கேள்வி. மனிதனுக்கும் இதே கேள்வி பொருந்துகிறது. நீங்கள் இயற்கையின் அல்லது பிரபஞ்சத்தின் அல்லது உயிரின் விதிமுறைகளுக்கு இசைவாக இருந்தால், உங்கள் முழு சாத்தியத்துக்கு வளருவீர்கள். இல்லையென்றால், ஏதோ ஒரு விதத்தில் நீங்கள் வளர்ச்சி குன்றியவர்களாகி விடுவீர்கள். மக்கள் இது குறித்த விழிப்புணர்வில் இல்லையென்றாலும்,. அடிப்படையில், இதில் மட்டும்தான் நாம் கவனம் செலுத்துகிறோம். அவர்களின் ஆசைகள், லட்சியங்கள் மற்றும் ஏக்கங்கள் அனைத்தும், ஒரு பூரணத்துவம் அடைந்த உயிராக அல்லது வாழ்க்கையாக மலரும் நோக்கத்தில்தான் இருக்கிறது. நீங்கள் ஒரு முழுமையான உயிராக மாற விரும்பினால், இந்த வாழ்க்கை யாருடைய அடிப்படையில் நிகழ்கிறதோ, அந்த விதிமுறைகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

சனாதன தர்மம் இன்று நீர்த்துப் போய்விட்டதா?

சனாதன தர்மம் உங்களுக்கோ எனக்கோ சொந்தமில்லை – அது படைப்பு வகுத்தது. அதனுடன் ஒத்திசைவில் இருப்பதுதான் உங்களுக்கும், எனக்கும் உரியது. இங்கே இந்தியாவில், நாம் அதைப் புரிந்துகொண்டு,சட்டங்களாக்கி, ஒரு குறிப்பிட்ட விதமாகத் தொகுத்தோம். உலகின் மற்ற பகுதிகளில், இதைப் பற்றி ஒருவரும் அறிந்திருக்கவில்லை என்று இதற்கு அர்த்தமல்ல. பல தனிப்பட்ட மக்கள் இது பற்றி அறிந்திருந்தனர். அவர்கள் அதை ஸ்ருதி மற்றும் ஸ்மிருதி என்று தொகுத்து எழுதாமல் இருந்திருக்கலாம். ஆனால் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மனிதர்கள் அதனுடன் ஒத்திசைவில் இருந்துள்ளனர், ஏனென்றால் எல்லா இடங்களிலும், மனிதர்கள் மலர்ந்து சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள்.

எனவே சனாதன தர்மம் இன்று நீர்த்துப் போய்விட்டதா? என்றால், அதை நீர்த்துப்போகச் செய்வது கூட நம் கைகளில் இல்லை. தனிப்பட்ட புரிதல் நீர்த்துப் போயிருக்கலாம். நபருக்கு நபர், புரிதலின் பரிமாணங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் நீங்கள் சனாதன தர்மத்தை நீர்த்துப்போகச் செய்ய முடியாது, ஏனென்றால் அது உயிரின் அடித்தளமாக இருக்கிறது. நீங்கள் அதை நீர்த்துப்போகச் செய்ய முடியாது, ஏனென்றால் அதனை நீங்கள் உருவாக்கவில்லை.

  • சத்குரு ஸ்ரீ ஜக்கி வாசுதேவ், கோவையிலுள்ள ஈஷா யோக மையத்தின் நிறுவனர்.
  • நன்றி: ஈஷா யோக மையம்.

$$$

23. சனாதன தர்மம் என்றால் என்ன?

-கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா

விநாயக வழிபாடு, முருக வழிபாடு, சக்தி வழிபாடு, சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, சூரிய வழிபாடு ஆகிய அறுவகை சமயங்கள் ஒன்றாக  ‘சனாதனம்’ என்று சொல்லப்படுகிறது.

எடுத்துக்காட்டாக திருமந்திரத்தின் முதல் பாடல் இந்த அறுவகை வழிபாடுகளில் அந்தந்த தெய்வமாக சிவனே நிற்கிறான் என்னும் பொருளில்  ‘ஆறென விரிந்தான்’ என்கிறது.

எனவே ஆதிகாலத்திலிருந்தே இந்த அறுவகை சமயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை, ஒன்றை ஒன்று ஒப்புக் கொள்பவை என்பது தெளிவாகிறது. இவற்றின் பொதுப்பெயராக  ‘சனாதன தர்மம்’ என்பது திகழ்ந்தது.

‘சனாதனம்’ என்பது வடமொழிச் சொல். இதனை தெய்வச் சேக்கிழார் தமிழில் ‘வேதநெறி’ என்கிறார். திருஞானசம்பந்தரின் அவதார நோக்கத்தை சொல்லும்போது  ‘வேதநெறி தழைத்தோங்க- மிகு சைவத் துறை விளங்க’ என்கிறார்.

இருபதாம் நூற்றாண்டில் மகாகவி பாரதி இதனை  ‘வேத வாழ்வு’ எனும் சொல்லால் குறிக்கிறார்:  ‘வியன் உலகு அனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்’.

தென்னாட்டில் செல்வாக்குப் பெற்று விளங்கும் சைவசமயம் வேதங்களை ஒப்புக்கொள்கிறது. வைணவமும் ஒப்புக்கொள்கிறது.

திருநாவுக்கரசர் சிவபெருமானை  ‘ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்’ என்கிறார். ‘வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்’ என்கிறார்.

வைணவத்தில்  ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்று நம்மாழ்வார் போற்றப்படுகிறார்.  சனாதனம் என்ற சொல் வேதநெறி என்று தமிழில் குறிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக வர்ணாசிரம தர்மம். முதலில் இதுகுறித்து வழங்கப்பட்டு வருகிற புனைவு ஒன்றைப் பார்ப்போம். அது, பிரம்மத்தின் தலையிலிருந்து பிராமணன் பிறந்தான். தோள்களில் இருந்து சத்திரியன் பிறந்தான். தொடையிலிருந்து வைசியன் பிறந்தான். கால்களிலிருந்து சூத்திரன் பிறந்தான் என்பதாகும்.

இந்த வர்ணாசிரமப் பார்வையின் அடிப்படையில் இந்தப் புனைவு பல தவறான புரிதல்களுக்கு உள்ளாகி ஜாதி வேற்றுமைக் கொடுமையில் போய் நின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்தப் புனைவை நன்றாகப் பார்ப்போம்.

பிரம்மம் பற்றிய இந்த கதை உருவகம் மட்டுமே. படைப்பின் மூலம் பிரம்மம் என்று சொல்லப்படுகிறது. அந்த ஒரே பிரம்மத்திலிருந்து தான் நான்கு வகை மனிதர்கள் உருவானார்கள் என்று சொல்லும் இடத்தில் உயர்வு- தாழ்வுக்கு இடம் இல்லை.

சமூகத்தின் அறிவார்ந்த ஆய்வுகளை – விவாதங்களை – மேற்கொண்டவர்கள் அந்தக் காலத்தில் பிராமணர்கள் என்பதால் அவர்கள் தலையில் இருந்து பிறந்ததாக உருவகம் செய்தார்கள். வல்லமை மிக்கவர்கள் சத்திரியர்கள் என்று காட்ட தோள்களில் இருந்து பிறந்ததாக உருவகம் செய்தார்கள். பொருள் வலிமையால் ஒரு சமூகத்தை தாங்கக் கூடியவர்கள் வணிகர்கள் என்பதால் தொடையிலிருந்து பிறந்ததாக உருவகம் செய்தார்கள். அடிப்படையான உழைப்புப் பணியை மேற்கொண்ட சூத்திரர்கள் கால்களில் இருந்து பிறந்ததாக உருவகம் செய்தார்கள்.

மீண்டும் சொல்கிறேன். தவறான புரிதல்கள் அல்லது உள்நோக்கம் உடைய கற்பித்தல்கள் காரணமாக காலப்போக்கில் வர்ணாசிரமத்தின் அடிப்படையில் சாதிக்கொடுமைகள் புகுந்தன. ஆனால் இந்தப் புனைவில் எந்தத் தவறும் கிடையாது.  இது ஓர் உருவகம் மட்டுமே.

ஒரே பிரம்மம் உருவாக்கியவர்கள் தான் நால்வரும் என்றால், அந்த அடிப்படை கருத்துருவாக்கம் எந்த பேதத்தையும் கற்பிக்கவில்லை.
கால் பகுதியில் பிறந்தவர்கள் இழிவானவர்கள் என்று பின்னாளில் கற்பிக்கப்பட்டது. ஆனால் கடவுளையோ குருவையோ பெரியவர்களையோ வணங்குகிறோம் என்றால், அவர்களின் கால்களைத் தொட்டுத் தான் வணங்குகிறோம்; தலையைத் தொட்டு வணங்குவதில்லை.

உழைப்பின் சின்னமாக கால்கள் கருதப்படுகின்றன. உழைப்பு என்பதற்கு திருவள்ளுவர் பயன்படுத்துகிற சொல் தாளாற்றல்.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு

-என்பது திருக்குறள் (212).

இதே திருவள்ளுவர்,  ‘பிறப்பால் அனைவரும் சமம். எனவே அவர்களுக்குள் பிறப்பில் பேதம் இல்லை. செய்தொழிலால் அவரவர்கள் வேறுபட்டு நிற்கிறார்கள். அந்த அடிப்படையில் ஒரே விதமான சிறப்பு நிலையை அவர்கள் பெறுவதில்லை’ என்கிறார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்- சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

-என்பது திருக்குறள் (972).

இதில்  ‘சிறப்பொவ்வா’ என்பதை சரியாகப் புரிந்து கொண்டால் அது தொழில் நிலை வேற்றுமை மட்டும்தானே தவிர, பிறப்பில் எவ்வித வேற்றுமையும் இல்லை என்பது தெளிவாகப் புரியும்.

அதையே தான் இந்த பிரம்மப் புனைவும் சொல்கிறது. ஆனால் திருக்குறள் போல் தெளிவாக உணர்த்தப்படாமல் திரித்து உணர்த்தப்பட்டது. எனவே வர்ணாசிரம தர்மம் என்பது சாதி வேற்றுமைகள் பேசும் அதர்மம் என உணரப்பட்டு விட்டது. ஆனால் அதனுடைய மூல தாத்பரியம் ஓர் அழகான உருவகம். வெவ்வேறு 4  பிரம்மாக்களிடமிருந்து நான்கு பேர் பிறந்தார்கள் என்று சொல்லி இருந்தால்தான் அது தவறு.

ஒரே பிரம்மாவிடம் தோன்றியவர்கள் மூல தாத்பரியத்தைப் பொறுத்த வரை ஒன்றாக உருவானவர்களே.

இதுவரை இரண்டு விஷயங்களைச் சிந்தித்தோம். சனாதனம் என்பது மொத்த இந்துக்களையும் குறிக்கும் வடமொழிச் சொல். தமிழில் அது வேத நெறி என வழங்கப்பட்டது. இரண்டு- வர்ணாசிரமம்.

மூன்றாவதாக மனுஸ்மிருதி பற்றிய பேச்சு. சுருதி என்றால் வேதம். ஸ்மிருதி என்றால் சட்டம். சட்டங்கள் அடிக்கடி மாறக்கூடியவை. நாட்டில் வழக்கத்தில் உள்ள சில வாழ்க்கை முறைகளின் தொகுப்பு  ‘ஸ்மிருதிகள்’ எனப்படும். இதை மனு ஸ்மிருதியின் இரண்டாம் அத்தியாயத்தில் பதினான்காவது சூத்திரம் சொல்கிறது .

வாழ்க்கை முறைகள் அடிக்கடி மாறக் கூடியவை. மனு ஸ்மிருதி மட்டுமல்ல பல ஸ்மிருதிகள் இருந்திருக்கின்றன. அவற்றுக்கு நிலையான முக்கியத்துவம் எப்போதுமே இருந்ததில்லை. இதை மகாகவி பாரதியார் மிகத் தெளிவாகச் சொல்லுகிறார்.

பின்னும் ஸ்மிருதிகள் செய்தார்- அதைப்
  பேணும் மனிதர் உலகினில் இல்லை.
மன்னும் இயல்பின அல்ல- அவை
  மாறிப் பயிலும் இயல்பின ஆகும்.

இதன்மூலம் நமக்கு என்ன தெரிகிறது என்றால்  ‘மன்னும் இயல்பின அல்ல’– அதாவது நிலையான தன்மை கொண்டவை அல்ல. ‘மாறிப் பயிலும் இயல்பின ஆகும்’ – மாறிக்கொண்டே இருக்கக் கூடியவை.

எனவே இவற்றை இந்து மதத்தின் அடையாளமாகக் கொள்ள வேண்டிய எந்த அடிப்படையும் இல்லை என்பது புலனாகிறது. அதனால்தான் நடப்பில் இல்லாத மனு என்று சொல்லப்படுகிறது.

தொகுத்துச் சொல்வதென்றால், சனாதனம் என்பது ஒட்டுமொத்த இந்து தர்மத்தின் பழைய பெயர். பிற்காலத்தில் இந்து என்கிற பெயர் வழக்கில் வந்தது.

வர்ணாசிரமம் என்பதன் மூல தாத்பரியம், தொழில்நிலை வேற்றுமைகளை மட்டுமே உருவகமாக உணர்த்தியது. ஆனால் அதை வசதியாகப் பயன்படுத்திக்கொண்டு உயர்வு தாழ்வுகள் பின்னர் கற்பிக்கப்பட்டன; நடைமுறைக்கும் வந்தன.

மனு ஸ்மிருதி என்பது ஒட்டுமொத்த இந்துக்களின் நூல் அல்ல. அதை இந்து சமயத்தின் ஒருமித்த அடையாளமாக இந்துக்களே ஏற்பதில்லை.

  • திரு. மரபின்மைந்தன் முத்தையா, கவிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர்.
  • தனது இணையதளத்தில் இவர் எழுதிய கட்டுரை இது…

$$$

24. குறைகளைக் களைவோம்!

-கோவை ராதாகிருஷ்ணன்

உதயநிதி பேசிய சனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்தியவர்கள் தமிழ்நாடு முற்போக்கு சங்க எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு அமைப்பு).  இவர்கள் மீதும் விமர்சனங்கள் வர வேண்டும்;  குறைந்தபட்சம் பதிலடியாக ஒரு கம்யூனிச ஒழிப்பு மாநாடாவது நடத்தப்பட வேண்டும்.

சனாதன எதிர்ப்பு என்ற சொல்லாடலை அரசியல் வழக்கில் கொண்டு வந்தவர் ரவிக்குமார்,  இவர் இந்த வார்த்தையை பயன்படுத்தினார், அதைத் தொடர்ந்து விசிக  ‘சனாதன எதிர்ப்பு’ என்று பேச ஆரம்பித்து, அதைத் தொடர்ந்து  ‘முற்போக்குத் தரப்பு’ இந்த வார்த்தையைப் பிடித்துக் கொண்டது.

உண்மையில் இவர்கள்  ‘சனாதனம்’ என சொல்வது மொத்த இந்து மதத்தை அல்ல, இந்து மதத்தில் இருக்கும் சாதியப் படிநிலை மனநிலையைத் தான்   சொல்கிறார்கள், மனுதர்மம் போன்றவற்றை  முன்னிறுத்தி. எனவே உதயநிதியோ, திருமா போன்றவர்களோ சனாதன எதிர்ப்பு என்று சொல்வதை நான் மொத்த இந்து மதத்தையும் சொல்வதாக எண்ணவில்லை, இவர்கள் அந்த வார்த்தையின் பொருளை தவறாகப் புரிந்துகொண்டு பேசுகிறார்கள் என்றே எண்ணுகிறேன்.

***

சனாதனம் என்ற வார்த்தையை சாதிய நோக்காகச் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் தரப்பு மட்டும்தான். நேரடியாக சாதியை எதிர்த்தால் இடைநிலை சாதிகளின் சாதி வெறியைச் சொல்வது போல ஆகிவிடும் என்பதால் பிராமணியம், பார்ப்பனியம் என்றார்கள்.  இப்போது  ‘சனாதனம்’ என்ற வார்த்தையை எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். இந்த வார்த்தையில் தாங்கள் விரும்பிய / சொல்லவந்த அர்த்தத்தை (சாதிய மனநிலை) ஏற்றுகிறார்கள்.

இப்போது உதயநிதியின் பேச்சால் பிரச்சினை வந்த பிறகு திணறுகிறார்கள். உண்மையில் உதயநிதிக்கு  ‘சனாதனம்’ என்றால் சாதிய மனநிலை என்று அர்த்தம் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிருக்கும்;  அதை அப்படியே சொல்கிறார்.  அவரது பேச்சைக் கவனித்த வரை அவர் சாதியத்தைத் தான் சனாதனம் என்று நினைக்கிறார்.  மொத்த இந்து மதத்தை அப்படிச் சொல்லவில்லை. இந்தப் பேச்சு தமிழகம் தாண்டி எடுபடாத காரணம், இங்கு இந்த வார்த்தைக்கு சாதியம் என்ற அர்த்தம் ஏற்றப்பட்டதைப் போல தமிழகத்திற்கு வெளியே ஏற்றப்படவில்லை என்பது.  அதனால்தான் இந்த வார்த்தையைச் சொன்னது இந்து மதத்தையே சொல்வதாக தமிழகத்திற்கு வெளியே புரிந்து கொள்கிறார்கள்.

உண்மையில் இந்த பிரச்சினையில் கிடைத்த நல்ல விஷயம் என்பது, சனாதனம் என்பது சாதியத்தைக் குறிப்பது அல்ல;  இந்து தர்மத்தைக் குறிப்பது என்ற பொதுக் கருத்து உருவானதுதான்.

***

உதயநிதி அல்லது தமுஎகச இவர்ளை விட்டுவிட்டு இவர்கள் சொல்லும் குற்றசாட்டுகளை மட்டும் பார்த்தால், இவர்கள் சொல்ல வருவது இந்து மதத்தில் சமத்துவம் இல்லை என்பது, ஏற்றத்தாழ்வுகளுக்கு பிறப்பு அடிப்படையிலான சாதி காரணமாக இருக்கிறது என்பது. இவர்களுக்கு இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேறு மறைமுகக் காரணங்கள் இருந்தாலும் இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானவை.

இந்தக் குறை, பிறப்பு அடிப்படையிலான ஏற்றத் தாழ்வு கொண்டு பார்க்கும் சாதிய மனநிலை, வலுவாக இப்போதும் இந்து மதத்தில் இருக்கிறது. ஆணவக் கொலைகள் அளவுக்கு போகும் அளவிற்கு, இந்தக் குறைகள் இருக்கும் வரை விமர்சனங்கள் இருக்கவே செய்யும். இவர்கள் இல்லை என்றால் வேறு யாராவது  வந்து சொல்லி கொண்டிருப்பார்கள். விமர்சனங்கள் நீங்க வேண்டும் எனில், இந்தக் குறைகளைக் களையப் படுவதே நிரந்தர வழி.

  • திரு. கோவை ராதாகிருஷ்ணன், முகநூல் பதிவுகளில் புதிய சிந்தனைகளைத் தேடும் இளைஞர்.
  • இவரது முகநூல் பதிவு இது…

$$$

25. பார்வைகள் மாறலாம்!

-கே.ஜி.ஜவர்லால்

“சனாதனம் என்றால் என்றும் மாறாததுன்னு அர்த்தம் சொல்றாங்க, மாறாதது எதுவும் இல்லை; மாறித்தான் ஆகணும், ஆகவே அதை ஒழிப்பேன்” என்பது ஒரு சப்பை ஸ்டேட்மென்ட்.

மாறாதது எதுவுமில்லை, எல்லாமே மாறக் கூடியவையே என்பது ஒரு பொதுவான கருத்து. இந்தக் கருத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ள சராசரிக்கு அதிகமான சிந்தனைத் திறன் அவசியம்.

ஒரு விஷயம் குறித்த நம் Perception தான் மாறிக்கொண்டே இருக்குமே ஒழிய, அந்த விஷயம் மாறுவதில்லை. உதாரணம் சொல்கிறேன்…

‘பூமி தட்டையானது’ என்றார்கள். அது மாறியது.  ‘உருண்டை’ என்றார்கள், அதுவும் மாறியது;  ‘கொஞ்சம் அமுக்கின உருண்டை’ என்றார்கள்.  ‘நெட்டுக்குத்தலாக இருக்கிறது’ என்றார்கள். அப்புறம்,  ‘இல்லை 23.5 டிகிரி சாய்ந்திருக்கிறது’ என்றார்கள்.  ‘பூமி சுற்றவில்லை, சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது’ என்றார்கள்.  ‘இல்லை, பூமி சுற்றுகிறது’ என்றார்கள். அப்புறம்  ‘பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுகிறது’ என்றார்கள்.

இவையெல்லாம் பூமியில் நிகழ்ந்த மாற்றங்களா?

இல்லை; பூமி குறித்த நம் Perception இல் நிகழ்ந்த மாற்றங்கள். பூமி ஆரம்பத்திலிருந்தே அது இருப்பது போலத்தான் இருக்கிறது.

இன்னொரு உதாரணம் பாருங்கள்…

ஒளி நேர்க்கோட்டில்தான் பரவுகிறது (Rectilinear Propagation of light) என்று நான் ஒன்பதாம் வகுப்பில் படித்தேன். ஆனால் Engineering படிக்கும்போது ஒளி அலைகளாகப் பரவுகிறது என்று மாற்றி விட்டார்கள். ஒளியா மாறிற்று? அது குறித்த நமது புரிந்துணர்வுதான் மாறிற்று.

இப்படி நீங்கள் எந்த மாற்றத்தை எடுத்துக் கொண்டாலும் அவை குறித்த நம் புரிந்துணர்வுதான் மாறி வந்திருக்கின்றனவே ஒழிய, அவை மாறுவதில்லை என்பது விளங்கும். இப்படி, இனி மாற Scope இல்லை என்கிற இடத்துக்கு வரும்போது அவை Profound Truth (ஆழ்ந்த உண்மைகள்) ஆகி விடுகின்றன.

‘சனாதன தர்மங்கள் என்றும் மாறாதவை’ என்றால் என்ன பொருள்?

ரிஷிகள் இந்த எல்லா Thought Process களும் முடித்து, Profound Truths என்கிற இடத்துக்கு வந்து விட்டார்கள். ஆகவே நாம் இனி Reinvention of wheel செய்ய வேண்டியதில்லை என்று அர்த்தம்.

சனாதனத்தை எதிர்க்கிறவர்களால் சர்வ சத்தியமாய் இவ்வளவு சிந்திக்க முடியாது. அவர்களின் சிந்தனைத் திறன் ஒரு கரப்பாம் பூச்சியின் சிந்தனைத் திறனை விடக் குறைவாகவே இருக்கிறது!

  • திரு. கே.ஜி.ஜவர்லால், இயந்திரவியல் பொறியாளர், எழுத்தாளர்.
  • இது இவரது முகநூல் பதிவு.

(தொடர்ந்து ஒலிக்கும் தார்மிகக் குரல்கள்!)

$$$

One thought on “வாழும் சனாதனம்! – 6

Leave a reply to ந.ஆதித்தன் Cancel reply